Friday, October 5, 2018

இலங்கை பயணம் குறித்து கழகத்தலைவர் எம்.கே.எஸ் அவர்களுடன் சந்திப்பு.*

*இலங்கை பயணம் குறித்து கழகத்தலைவர் எம்.கே.எஸ் அவர்களுடன் சந்திப்பு.*
-------------------------------------

இன்று கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்களை சந்தித்து எனது ஆறு நாள் இலங்கை பயணம் குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். அதை அக்கறையும் ஆர்வமுமாகக் கேட்டறிந்தார். கடந்த 2-10-2018 அன்று  சென்னை வந்தடைந்தவுடன் அவருக்கு சில முக்கிய பணிகள்,பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் இன்று தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இலங்கை எதிர்கட்சித் தலைவர் திரு. சம்மந்தன் அவர்களை திரிகோணமலையிலும், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களை யாழ்ப்பாணத்திலும் சந்தித்த போது அவர்கள் தெரிவித்த கருத்துகளை அவரிடம் எடுத்துக் கூறினேன். 

இலங்கையில் இன்றைக்கு முக்கியமாக செய்ய வேண்டியது தமிழர்களை குடியமர்த்துவதும், அவர்களுடைய விவசாய காணி நிலங்களை சிங்களவரிகளிடமிருந்து தமிழ் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும், இறுதிப் போரில் கைதானவர்களை சிறையில் இருந்து விடுவிக்கவும், போரின் போது காணாமல் போனவர்களை கண்டறியவும், போரில் மரணமடைந்தவர்களின் மனைவிகள் இன்றைக்கு விதவைகளாக உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு பேணவும் போன்ற முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தான் திமுகவின், டெசோவின் நிலைப்பாடாகும். அத்தோடு இறுதிப் போரில் இன அழிப்பு நடந்ததையும், அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறலையும் குறித்தும் பன்னாட்டு சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தவும், இலங்கை தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு நடத்தவும் நம்முடைய நிலைப்பாடுகள் இதுதானே என்றேன். இந்த இரண்டும் ஐ.நா.வின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். இந்த பிரச்சனைகளில் எல்லாம் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திரிகோணமலை ஆகிய இடங்களில் நடந்த கூட்டங்களில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணக்குழு உறுப்பினர்கள், உள்ளூராட்சிக் உறுப்பினர்கள் ஆகியோர் மத்தியில் நான் பேசினேன். தலைவர் கலைஞர் அவர்களுடைய முயற்சியில் தாங்கள் ஐ.நா. மன்றத்திற்கும், ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலும், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தாங்கள் உரையாற்றியதையும் எடுத்துரைத்தேன். 

இதையெல்லாம் கேட்டுவிட்டு கழகத்தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் இன்றைக்கு கூட இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனே போரில் கைப்பற்றப்பட்ட நிலங்களில் சில ஏக்கர்களை தமிழர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது தினமணியில் படித்ததாக என கூறினார். அவர்இந்த பிரச்சனையில் இவ்வளவு ஆர்வமாக அக்கறையோடு இருப்பதை கண்டு வியந்தேன். 

இன்றைக்கு ஈழப்பகுதியில் அங்குள்ள தமிழர்கள், நீங்களும், கழகமும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததால் தான் தங்களுக்கு ஏதாவது பரிகாரம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளனர் எனவும் அவரிடம் குறிப்பிட்டேன்.இதைக்குறித்து தங்களிடம் கூறும்படியும் என்னிடம் அவர்கள் சொன்னார்கள். 
திரும்பவும் ராஜபக்சே ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற அச்சமும் உள்ளது என்று சொன்னேன். அப்படி வந்தால் தமிழகத்திற்கு கேடாகிவிடுமே என்றார் எம்.கே.எஸ். இந்து மகா சமுத்திரத்தின் பாதுகாப்பையும் இந்திய அரசு கவனிக்க வேண்டும் என்று கூறியதையும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னை வரும்போது தங்களை சந்திக்க விரும்புவதையும் அவரிடம் கூறியபோது, வரட்டும். கண்டிப்பாக சந்திக்கிறேன் என்றார். மேலும் கொழும்பு நகரில் தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் நானும், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனுடன் கலந்து கொண்டதையும் தெரியப்படுத்தினேன். 

இப்படி ஈழப்பயணத்தை குறித்து பல செய்திகளை சொன்ன போது பொறுமையோடு கழகத்தலைவர்  கேட்டு உள்வாங்கிக் கொண்டார். 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-10-2018

#எம்_கே_எஸ்
#ஸ்டாலினுடன்_சந்திப்பு
#இலங்கை_பயணம்
#Srilankan Visit
#KSRPostings
#KSRadhakrishnanPostings


No comments:

Post a Comment

#*மர்ம மரணங்கள்*

#*மர்ம மரணங்கள்* —————————-  இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே.ஜெயக்குமார் தனசிங் (60) மர்ம மரணம் தொடர...