பாரதியின் பாஞ்சாலி சபதம்
————————————————
மகா பாரதத்தில் சூதாட்டக் கதை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதை பாரதி பாஞ்சாலி சபதம் என்ற பெயரில் புதுமை காவியம் படைத்தார். அதில், சூதாட்டத்தில் நாடு, நகரம் எல்லாவற்றையும் இழந்த தருமன் தனது தம்பிமார்களையும் பணயம் வைத்துத் தோற்கிறான். இறுதியில் தன்னையும் பணயமாக வைத்து இழக்கிறான். அப்போது சகுனி வஞ்சக வலையை விரிக்கிறான். தருமனிடம் பின்வருமாறு சகுனி கூறுவதாகப் பாரதி பாடியிருக்கிறான்.
இன்னும் பணயம் வைத்தாடுவோம்; - வெற்றி
இன்னு ம்இ வர்பெற லாகுங்காண்,
பொன்னுங் குடிகளுந் தேசமும் - பெற்றுப்
பொற்பொடு போதற் கிடமுண்டாம்; - ஒளி
மின்னு மமுதமும் போன்றவள் - இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால், அவள்
துன்னு மதிட்ட முடையவள் - இவர்
தோற்ற தனைத்தையு மீட்டலாம்.
என்றந்த மாம னுரைப்பவே - வளர்
இன்பம் மனத்தி லுடையனாய் - மிக
நன்றுநன் றென்று சுயோதனன் - சிறு
நாயொன்று தேன்கல சத்தினை - எண்ணித்
துன்று முவகையில் வெற்றுநா - வினைத்
தோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல் - அவன்
ஒன்றுரை யாம லிருந்திட்டான் - அழி
வுற்ற துலகத் தறமெலாம்.
சகுனியின் சூது அறியாமல் தருமனும், அதற்கிசைந்து பாஞ்சாலியை பணயம் வைத்து ஆட முன் வருகிறான். அதைக் கண்ட துரியோதனன் தேன் கலத்தினை நக்குவது போல் எண்ணி வெறும் நாக்கினைச் சுவைத்து மகிழும் நாயைப்போன்று மகிழ்ந்தான் எனப் பாரதி சுவைபடக் கூறுகிறான்.
சூதாட்டத்தில் பாஞ்சாலியைத் தருமன் பணயம் வைத்ததை பாரதி கூறுவது நமது உள்ளத்தை உருக்கும்.
பாவியர் சபைதனி லே - புகழ்ப்
பாஞ்சால நா ட்டினர் - தவப்பய னை
ஆவியி லினியவளை - உயிர்த்
தணிசுமந் துலவிடு செய்யமு தை,
ஓவிய நிகர்த்தவ ளை - அரு
ளொளியினைக் கற்பனைக் குயிரத னைத்
தேவியை, நிலத்திரு வை, - எங்குந்
தேடினுங் கிடைப்பருந் திரவியத் தை,
படிமிசை யிசையுற வே - நடை
பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடி யைக்
கடிகமழ் மின்னுரு வை - ஒரு
கமனியக் கனவினைக் காதலினை,
வடிவுறு பேரழகை - இன்ப
வளத்தினைச் சூதினிற் பணயமென்றே
கொடியவ ரவைக்களத் தில் - அறக்
கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான்.
தருமனும் பாஞ்சாலியைப் பணயம் வைத்துச் சூதாடிச் சகுனியிடம் தோற்கிறான். அதைப் பாரதி கூறும் விதம் அற்புதமானது. எண்ணி எண்ணி சுவைக்கதக்கது.
வேள்விப் பொருளினை யே - புலைநாயின்முன்
மென்றிட வைப்பவர் போல்,
நீள்விட்டப் பொன்மாளி கை - கட்டிப் பேயினை
நேர்ந்து குடியேற்றல் போல்,
ஆள்விற்றுப் பொன்வாங்கி யே - செய்த பூணையோர்
ஆந்தைக்குப் பூட்டுதல் போல்,
கேள்விக் கொருவரில்லை - உயிர்த்தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கி னான்.
மாமன் சகுனி மூலம் சூதாட்டத்தில் வெற்றி பெற்ற துரியோதனன் பாஞ்சாலியை இழுத்துவர விதுரனுக்கு ஆணையிடுகிறான். அவன் மறுக்கவே தேர்ப் பாகனை அனுப்புகிறான். அவன் சென்று பாஞ்சாலியிடம் அரசனின் ஆணையைப் பணிந்து கூறுகிறான். அப்போது பாஞ்சாலி பின்வருமாறு பதிலுரைக்கிறாள்.
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா? யார்பணியால்
என்னை யழைக்கின்றாய்? என்றாள். அதற்கவனும்
மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால் என்றிட்டான்.
நல்லது நீ சென்று நடந்தகதை கேட்டு வா,
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
என்னை முன்னே கூறி யிழந்தாரா? தம்மையே
முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?
சென்று சபையில்இச் செய்தி தெரிந்துவா"
சூதாட்டத்தில் தன்னை வைத்துத் தோற்றப்பின் தருமன் என்னை வைத்துத் தோற்றானா? என்னை வைத்து தோற்றப்பின், அவன் தன்னை வைத்து தோற்றானா? என்ற கேள்வியினைப் பாஞ்சாலி எழுப்புகிறாள். பாகனும் அதை அப்படியே போய் துரியோதனனிடம் கூறுகிறான். வெகுண்டெழுந்த துரியோதனன் அவனைச் சினந்து மீண்டும் பாஞ்சாலியை அழைத்து வரச் சொல்கிறான். அவ்வாறே அவனும் போய் அழைத்தபோது பாஞ்சாலி
"நாயகர் தாந்தம்மைத் தோற்ற பின் - என்னை
நல்கு முரிமை அவர்க்கில்லை - புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின் என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட் டார்? அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்; - புவி
தாங்குந் துருபதன் கன்னி நான் - நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால் - பின்பு
தார முடைமை யவர்க்குண்டோ!
என்ற கேள்வியை எழுப்புகிறாள். பதில் கூற முடியாத பாகன் மறுபடியும் துரியோதனனிடம் போய்ப் பாஞ்சாலியின் கேள்வியைக் கூறுகிறான். அதைக் கண்டு சினந்த அவன் தன் தம்பி துச்சாதனனை அழைத்துப் பாஞ்சாலியை இழுத்துவரச் செய்கிறான். வீட்டிற்கு விலக்காகி ஒற்றை ஆடையுடன் இருந்த பாஞ்சாலியின் கூந்தலினைப் பிடித்து இழுத்துச் செல்கிறான். வழிநெடுக நின்றவர்கள்-
"என்ன கொடுமையிது" வென்று பார்த்திருந்தார்,
ஊரவர்தங் கீழ்மை யுரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள், விலங்கா மிளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவ ளந்தப் புரத்தினிலே, சேர்க்காமல்,
நெட்டை, மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலு மங்கேபோய்க் 'கோ' வென் றலறினாள்.
பீஷ்மன் உட்பட பல பெருமக்கள் வீற்றிருந்த அந்த அவையில் அவளுக்கு நீதி கிடைக்கவில்லை. "பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என அவள் கூறுவதாக பாரதி எழுதுகிறான். மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான். ஆடை குலைவுற்று அவள் அழுது துடிக்கிறாள். அதன் விளைவாக பீமனும், அர்ச்சுனனும் அந்த அவையில் சூளுரைக்கிறார்கள். பிற்காலத்தில் மூண்டெழுந்த பாரதப் போரில் கவுரவர்களின் உயிர்களைப் பறித்து தங்களின் சபதத்தை நிறை வேற்றுகிறார்கள் என்பது பாரதக் கதை.
பாஞ்சாலியின் துகிலுரிந்து அவை நடுவில் மானம் பறித்த துச்சாதனனை துரியோதனன் மட்டுமே பாராட்டினான். ஆனால், இறுதியில் பாரதப் போரில் பீமனால் துடிதுடிக்கக் கொல்லப்பட்டான்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-10-2018
#பாஞ்சாலி_சபதம்
#Panchali_Sabatham
#KSRPostings
#KSRadhakrishnanPostings
No comments:
Post a Comment