கடந்த
27/09/2018 அன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சென்றோம். இந்த நூலகம் 1981இல் எரிக்கப்பட்ட
நிலையில் 1985 காலக்கட்டத்தில் நான் அங்கு சென்ற போது அவலமான நிலையில் காட்சியளித்தது.
அதனுடைய படமும் இத்துடன் உள்ளது. ஈழத்திற்கு 1985, 87, 88 ஆகிய மூன்று காலக்கட்டங்கில்
செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு போகும் போதெல்லாம் அந்த நூலகத்தை பற்றியான வேதனையானகள்
தான் மனதில் படும்.
கடந்த
1982இல் தமிழகத்தில் உள்ள அனைத்து பதிப்பகங்களிலிருந்து இலவசமாக வாங்கி யாழ்ப்பாணம்
நூலகத்திற்கு அனுப்பம் நிகழ்ச்சியில் நெடுமாறனோடு இணைந்து செய்தேன். இந்த நிகழ்ச்சியை
மயிலாப்பூரில் நடத்திய போது மறைந்த குன்றக்குடி அடிகளார், அன்றைய பேரவைத் தலைவர் க.
இராஜாராம், அ. அமிர்த்தலிங்கம், யாழ்ப்பாணம் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்,
திமுகவைச் சேர்ந்த விருதுநகர் பெ.சீனிவாசன், ஜனார்த்தனம் எம். எல். சி ஆகியோருடன் அடியேன் கலந்து
கொண்ட நிகழ்ச்சி நெடுமாறன் தலைமையில் நடந்து
அந்த புத்தகங்களையும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தோம். இந்த நினைவுகளோடு யாழ்ப்பாணம்
பொது நூலகத்திற்கு சென்ற போது நல்ல விதமாக சேவை மனப்பான்மையோடு சேவை செய்வதை பார்ப்பதற்கு
மகிழ்ச்சியாக இருந்தது. யாழ்ப்பாண மக்கள் தங்களின் காலணிகளை வெளியே விட்டுவிட்டுதான்
நூலகத்திற்குள் நுழைகின்றனர். ஏன் என்று காரணம் கேட்டால், எங்களுக்கு ஞானம் வழங்குகின்ற
கோவில். யாழ்ப்பாணத்தின் அடையாளம் என்று பெருமைபோடு சொல்வதை கேட்க முடிந்தது.
இந்த யாழ் நூலகம் 1933 ஆம்
ஆண்டில் கட்டப்பட்டது. முதலில்
சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக
விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல
இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக
நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில்
வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில்
வைக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு
திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நூலகம் எரிப்பு இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு
முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள
வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது.
இது 20ம்
நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும்
வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது
நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன்
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத்
திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில்
இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் பலர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடிய நிகழ்வு ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் ஆறா ரணத்தை ஏற்படுத்தியது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10/10/2018.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
#Jaffna_Library
#யாழ்ப்பாணம்_நூலகம்
No comments:
Post a Comment