தீந்தமிழின் தொட்டில் தாமிரபரணி
தாமிரபரணியை வணங்குகின்றோம். தாமிரபரணி பற்றி என்ன செய்திகளை சொல்ல, எதைவிட என்று தெரியவில்லை. தாமிரபரணியுடைய வரலாறு நெடிய வரலாறு. அதன் வரலாற்றை எளிதாகவும், விரைவாகவும் சொல்லிவிட இயலாது. இந்த பொருநையின் பெருமை மக்களை எல்லாம், ஒரு காலத்தில் மானுஇனம் இங்கே இருந்து தொடங்கியது என்றால் அந்த மக்கள் கூட்டத்தை மீண்டும் இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கக் கூடியதை பொருநை நல்லாள் தாமிரவருணி தாய் செய்திருக்கிறாள். வரணி என்று சொல்வதைப் போல் வாருணி என்ற பெயரும் உண்டு. வருணனின் மகளுக்கு வாருணி என்று பெயர். வருணன் நீருக்கு மழைக்கு தலைவன் என்றால், நீர் எங்கே ஜீவநதியாக பிரவாகமாக பெருக்கெடுக்கிறதோ அந்த இடத்துக்கு வாருணி என்றும், வருணி என்றும் பெயர் சொல்வது பொருத்தம்.
தமிழ் இலக்கியத்தில் வாருணி என்றால் தேன் போன்றவள். இந்த நதி தேனாக, அமுதமாக பாய்கிறது என்ற போதிலும், தாமிரவருணி என்று பெயர் வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இந்த தாமிரவருணியை தமிழின் ஊற்று என்பார்கள். இது தமிழின் ஊற்று மட்டுமல்ல அவர்களின் முகவரியும் ஆகும. தாமிரவருணி நல்லாள் புனிதங்களை எல்லாம் தன்னிடத்தில் அரவணைத்துக் கொண்டாள். புனிதங்களை எல்லாம் தன்னிடத்தில் இருந்து பெருக்கிக் கொடுக்கிறாள். அப்படி அவள் பெருக்கிக் கொடுத்த புனிதங்களில் புனிதமாகிய புனிதம் தான் வேதம் செய்த தமிழ் மாறன். வைணவப் பாசுரங்கள் நமக்களித்த நம்மாழ்வாருக்கு வழங்கப்பட்ட புனிதப் பெயரே.
தாமிரபரணி குறித்தான பல்வேறு தரவுகள் ஏட்டுச் சுவடிகடிளிலும், 200 ஆண்டுகளுள்கு முன் எழுதப்பட்ட நூல்களிலும் அதனுடைய மகிமைகளையும் காணலாம்.
இன்னொரு சிறப்பு செய்தி என்னவென்றால், தாமிரபரணி நெல்லையில் மட்டுமல்லாமல் குமரியிலும் அதே பெயரில் ஒரு நதி இருக்கிறது. அது தாமிரபரணியின் மருவிய நதியாகவும் இருக்கலாம். நமது திருநெல்வேலியிலிருந்து நேரடியாக நூல் பிடித்தால் வங்கக் கடலிலிருந்து இலங்கைத் தீவிலுள்ள திரிகோணமலைக்கு அந்த நூல் சென்றடையும். அந்த திரிகோணமலையிலும் தாமிரபரணி என்ற நீர்வரத்து தீரங்களும் உள்ளன. திருநெல்வேலி என்று அழைக்கப்படுகின்ற ஊரும் ஈழத்தில் உள்ளது.
தமிழை வளர்த்தது தாமிர பரணி - செந்
தமிழ்ச் செம்மல்கள் பாடிய பரணி
தமிழர் மரபைக் காத்தது பரணி -அருந்
தவமுனி வர்கள் போற்றிய பரணி
தாமிரபரணியை சொல்லும்போது, அருகேயுள்ள தைப்பூச மண்டபத்தையும் சிலாகிக்க வேண்டியுள்ளது. படத்தில் காணப்படும் இந்த மண்டபத்தில் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, இராஜாஜி, சேலம் வரதராஜலு நாயுடு போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் வந்து சென்ற இடம். இதன் மாடிக்கு செல்ல இரும்பு ஏணியும் அதை பிடித்துக்கொள்ள தரை வரை உள்ள பெரிய கொச்சக் கயிறும் கீழேயுள்ள கல்மண்டபத்தோடு படத்தில் உள்ளபடி இணைக்கப்பட்டிருக்கும். இந்த கொச்சக் கயிறை பிடித்துக் கொண்டு வ.உ.சி மேலே சென்று சுதந்திர போராட்ட உரையை நிகழ்த்தி உள்ளதெல்லாம் வரலாற்று செய்திகள். எனவே நெல்லை தைப்பூச மண்டபம் முக்கிய அடையாளமாக திகழ்கின்றது.
தாமிரபரணி குறித்து கடந்த காலத்தில் நான் எழுதியுள்ள மீள்பதிவுகள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24/10/2018
No comments:
Post a Comment