சொலவடைகள்
-----------------------
கிராமத்தில் தங்கியபோது சில பழமொழி
களும், சொலவடைகளும் விரும்பி சேகரம் பண்ணியதில் கிடைத்த சொலவடைகள் தான் இவை.
இவன் ஏன் இந்த வேலையெல்லாம் பார்க்கிறான் என்று நினைக்கலாம். சென்னை – கிராமம் என்று ஓடிக்கொண்டிருக்கும் எனக்கு சாஸ்வதம் கிராமியம் தானே. பிறப்பையும், எதிர் வருகின்ற இறுதி காலங்களையும் அந்த மண் தானே தாங்கும்.
உலகமயமாக்கலில் நம்முடைய கலாச்சாரமும், பண்பாடும், நாட்டுப்புற வழக்காடுதலையும் சிறிது சிறிதாக மறக்கிறோம். சற்று மீள்பார்வைக்கு தான் சில சொலவடைகள். கிராமத்து மந்தைகளிலும், பிள்ளையார் கோவில் அரசமரங்கள், ஆலமரங்கள் ஆகியவற்றின் நிழலிலே, பஞ்சாயத்து கட்டிடங்களிலும் அவ்வப்போது கிராமத்து வெள்ளந்தி மனிதர்களால் சொல்லப்பட்ட சொலவடைகள் சில.
• கடல் மீனுக்கு நுழையான் இட்டதே பெயர்.
• கடுங்காத்து மழை கூட்டும்; கடும் நேசம் பகை கூட்டும்
• கடைந்தெடுத்த மோரிலும் குடைந்து எடுப்பாள் வெண்ணெய், கலப்புல்த் தின்றாலும் காடை காட்டுலெ.
• கலையும் மேகத்தைக் கண்டு, கட்டியிருந்த விதையை வட்டிக்கு விட்டானாம்.
• கழுதை உழவுக்கு வந்தால் காடு ஏன் தரிசாய்க் கிடக்கு?
• காஞ்சமாடு கம்புல விழுந்த மாதிரி
• காணாத கழுதை கஞ்சியைக் கண்டதாம், ஓயாம ஓயாம ஊத்திக் குடிச்சதாம்
• காணாது கண்ட கம்மங்கஞ்சியை சிந்தாமல்க் குடியடி சில்லுமூக்கி
• கார்த்திகை மாசம் கடுமழை பெய்தால், கல்லின் மேலிருக்கும் புல்லும் கதிர்விடும்
• கார்த்திகை மாத்த முருங்கை காம்பெல்லாம் இனிக்கும்
• கார்த்திகை மாதக்கீரையைக் கணவனுக்குக் கூடக் கொடுக்கமாட்டாள்
• காலுல ஒட்டுன கரிசக்காட்டு மண்ணா? சேலையில ஒட்டுன செவக்காட்டு மண்ணா?
• ஆக்கங்கெட்ட பொம்பளை சந்தைக்கு வந்தாளாம், அங்கேயும் ஆம்பளைக்கு பஞ்சமா போச்சுதாம்
• கிழவி செத்த்துல பாரமில்ல இழவு கொடுத்த முடியலை
• குடப்பால் கறந்தாலும், கூரைபிடுங்கிற மாடு வேண்டாம்
• குப்பமேனி பூப்பூத்துக் கொண்டைக்கு ஆகாது. கூத்தியா பிள்ளை பெத்துக் காணிக்கு ஆகாது
• கூத்தாடிக்குக் கீழே கண், கூலிக்காரனுக்கு மேலே கண்
• கூழுசுட்டா சுண்டைக்காயிக்குக் கேடு
• கூறுகெட்டமாடு ஏழுகெட்டு வைக்கல் திண்ணதாம்
• கெட்டிக்காரன் புஞ்சையிலதான் எட்டுப்பாதை
• கொடுக்காதவன் சினை ஆட்டைக் காமிச்ச மாதிரி
• கோப்பைய நாயக்கருக்கு என்ன பகுத்து? கோழிப் பகுத்து, குஞ்சிப் பகுத்து
• கோவணத்தில் ஒரு துட்டு முடிந்திருந்தால் கோழி கூப்பிட ஒரு பாட்டு வருமாம்
• சாண் உழவு முழஎருவுக்குச் சமம்
• சுள்ளுண்ணிச்சாம் மிளகுதண்ணி, சுருக்கிக்கிச்சாம் வரகம் பருக்கை
• செட்டிக்கும் பயிருக்கும் சென்மப் பகை
• செல்வத்துல பிறந்த வாரியக் கொண்டைக்கு வண்டியிலே வருதாம் வரை ஓடு
• தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை
• தம்பி தலையெடுத்தான், வெள்ளாட்டுக்கு ஆள் தேவையில்லை
• தனக்குண்ணு ஒரு பொண்டாட்டி இருந்தால் அபக்கென்று ஒரு அடி அடித்துக் கொள்ளலாம்
• தனக்கு தனக்கென்றால் தாச்சலும் பதக்குக் கொள்ளும்
• தான்திண்ணி பிள்ளைவளக்காது, தவிடுதிண்ணி கோழி வளக்காது
• தைமாத மழை தவிட்டுக்கும் உதவாது
• தையில் முளைக்காத புல்லுமில்லை, மாசியில் விளையாத மரமுமில்லை
• தோட்டக்காரனும் கள்ளாளியும் சேர்ந்து கொண்டால் விடிய விடியக் களவாங்கலாம்
• நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல பொண்ணுக்கு ஒரு வார்த்தை
• நல்ல மாடுண்ணாத்தான் உள்ளூருலயே விலை போகுமே
• பங்குனி என்று பருப்பதமில்லை, சித்திரையென்று சிறுப்பதும் இல்லை
• பட்டம் தவறினால் நட்டம்
• படப்போடு திங்கற மாட்டுக்குப் பிடுங்கிப் போட்டால் காணுமா?
• பனிக்கண் திற்ந்தால் மழைக்கண் திறக்கும்
• பெருமைக்கு மாவிடிச்சாக் குலுக்கப் புல்லுக்குச் சேதம்
• பொக்குப் புல்லைக் கண்டானாம்-பய தக்குப் புக்குண்ணு குதிச்சானாம்
• மாடு முக்கி வர வீடு நக்கிவர
• முன்னத்தேர் கோணினால் பின்னத்தேர் என்ன செய்யும்
• மேனி மினுக்கியைக் கட்டினவன் கெட்டான், மேட்டுப்புஞ்சையை உழுதவனும் கெட்டான்
• வஞ்சகமில்லாத மகராசனுக்கு வறுத்த காணமும் முளைக்கும்
• வடக்கே பிறைசாய்ந்தால் வரப்பெல்லாம் நெல், தெற்கே பிறைசாய்ந்தால் தெருவெல்லாம் பெட்டி
• வந்தட்டிக் காக்கா வரப்புல, காணிக்காக்கா கரையில
• வளமைக் கொத்தமல்லி வறுக்கப் போயிருக்கு, சீமைக் கொத்தமல்லி சிமிட்டவந்திருக்கு
• வித்தாக்ள்ளி விறகொடிக்கப் போனாளாம், கத்தாளைமுள்ளு கொத்தோட தச்சுதாம்
• வித்துச் சுரைக்காய் பிஞ்சுல தெரியும்
• விளக்கிட மழை கிழக்கிட
• வெங்கம் பயலுக்கு ஒரு மாடு, அதைப்பிடிச்சுக் கட்ட ரெண்டு ஆளு
• வெங்கணுக்கு வங்கணம் வாச்சதைப் பாரு, வீடு கட்டித் தாரேண்ணு ஏச்சதப்பாரு
• வெறும் காதுக்கு ஓலைக் காது மேல்
• வெறு வாக்கலங் கெட்டவன் விறகுக்குப் போனால் விறகு சிக்குனாலும் கொடி சிக்காது
பழமொழிகள்
----------------------
• விடிந்தால் கல்யாணம், பிடிங்கடா வெற்றிலையை
• ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணலாம்
• வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்
• கொண்டானும் கொடுத்தானும் கூட கூட
• அசைப்போட்டுத் தின்பது மாடு, அசையாமல் தின்பது வீடு
• வீடு போ போ என்கிறது, காடு வா வா என்கிறது
• எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினது மாதிரி
• காலுக்கேற்ற செருப்பும் கூலிக்கேற்ற உழைப்பும்
• படபடத்த வேலைப் பாழ் ஆகும்
• ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
• ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
• சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்
• சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது
• தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேற
• அழுதாலும் அவளே பிள்ளை பெற வேண்டும்
• அப்பன் அருமை அப்பான் ஆண்டால் தெரியும்; உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்
• அப்பனுக்கு குறிமுண்ட செம்பருந்து தூக்கிக்கிட்டு போக மகள் இந்துராணி பட்டுக்கு அழுகிறாள்
• அடித்தாலும் புருசன் அணைத்தாலும் புருசன்
• கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்
• கை நிறைட்நத பொன்னைப் பார்க்கிலும் கண் நிறைந்த கணவன் மேல்
• பானை ஒட்டினாலும் ஒட்டும் மாமியார் ஒட்டாள்
• மகன் செத்தாலும் சாகட்டும் மருமகள் போதும்
• மாமியார் உடைத்தால் மண்குடம் – மருமகள் உடைத்தால் பொன்குடம்
• வரவர மாமியார் கழுதை போலானாளாம்
• வேலையற்ற ராமன் கழுதையைப் போட்டு சிரைத்தானாம்
• ஆணை அடித்து வளர் பெண்ணை போற்றி வளர்
• உள்ளூர் பெண்ணும் அயலூர் மண்ணும் ஆகாது
• பாத்திரமறிந்து பிச்சையிடு; கோத்திரமறிந்து பொண்ணைக் கொடு
• பெண் என்றால் பேயும் இறங்கும்
• அயல் வீட்டுப்பிள்ளை ஆபத்துக்கு உதவுமா?
• அழுத பிள்ளை பால் குடிக்கும்
• ஆசைக்கொரு பெண்ணும், ஆஸ்திக்கொரு பிள்ளையும்
• சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை இருக்க வேண்டும்
• கனவில் கண்ட பொருள் கைக்கு எட்டுமா?
• திரைகடலோடியும் திரவியம் தேடு
• வட்டிக்கு ஆசை முதலுக்கு கேடு
• ஈட்டி எட்டு முழம் பாயும்; பணம் பாதாளம் வரை பாயும்
• ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
• கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
• காசு கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கலோகம்
• சேரசேர பணத்தாசை, பெறப் பெறப் பிள்ளை ஆசை
• இரவில் சீலையை நம்பி இடப்புக் கந்தையை எறிந்தாளாம்
• குடல் கூழுக்கு அழுகிறது, கொண்டை பூவுக்கு அழுகிறது
• ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
• பேராசை பெரு நஷ்டம்
• முடவன் கொம்புத் தேனக்கு ஆசைப்பட்டால் கிடைக்குமா?
• தருமம் தலைகாக்கும்
• தனக்கு மிஞ்சினது தான் தானமும் தருமமும்
• கடும் உறவு கண்ணைக் கெடுக்கும்
• உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணலாமா?
• ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இருக்காது
• உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூடமுடியாது
• தீப்புண் ஆறும் வாய்ப்புண் ஆறாது
• கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை
• வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
• வாய்க் கொழுப்பு சீலையில் வடிகிறது
• வார்வதும் கெடுவதும் வாயாலே
• பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்
• கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?
• விரலுக்குத்தக்க வீக்கம்
• அஞ்சி நடக்கிறவனுக்கு காலம் இல்லை
• தலைகீழாக தவம் செய்தாலும் கூடுகிற காலம் வந்தால்தான் கூடும்
• பொங்கும் காலம் புளி காய்க்கும் மங்குகிற காலம் மாங்காய் காய்க்கும்
• யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
• பொல்லாத காலம் சொல்லாமல் வரும்
• ஏழைச் சொல் அம்பலம் ஏறாது
• நல்ல பெண்ணுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டிற்கு ஒரு சூடு
• எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு
• தன் குற்றம் தனக்குத் தெரியாது
• தன் கையே தனக்கு உதவி
• தன் பல்லைக்குத்தி சந்தையில் நாறுவது போல்
• தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும
• பதறிய காரியம் சிதறும்
• வேசி உறவு காசிலும் பணத்திலும் தான்
• எபதிய விதி அழுதால் தீருமா?
• கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
• நித்தம் சாவார்க்கு அழுவாருண்டா?
• அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
• ஆனை அசைந்து தின்னும் வீடு அசையாமல் தின்னும்
• ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்
• ஈசல் பறப்பது மழை வருவதற்கு அறிகுறி
• உயர உயரப் பறந்தாலும் ஊர்குருவி பருந்து ஆகுமா?
• எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
• கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
• கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
• இழவு உடுப்பானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடையில்லை
• ஊரெல்லாம் உறவு ஒரு வாய்ச்சோறில்லை
• உண்டு ருசி கண்டவனும் பெண்டு ரசி கண்டவனும் விடான்
• எட்டி பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன?
• கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கஞ்சலாமா?
• தாரமும் குருவும் தலைவிதிப்படி
• தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்
• பொறுத்தார் பூமி ஆள்வார்
• சாது மிரண்டால் காடு இடங்கொடாது
• நண்டு கொழுத்தால் வளைவில் இருக்காது
• குளம் வெட்ட பூதம் புறப்பட்டது போல
• குண்டி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
• அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
17/10/2018
No comments:
Post a Comment