Monday, March 21, 2022

வேலு பிள்ளை பிரபாகரன் தங்கியிருந்த நிகழ்வுகள், அண்ணன் பழ நெடுமாறன்னேடும், என்னோடும் இருந்து நாட்கள்

இன்றைக்கு தினமணி கதிரில், அன்பு நண்பர் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் "பிரணாப்தா" என்ற தொடரில், இந்த வாரம் சென்னையில் வேலு பிள்ளை பிரபாகரன் தங்கியிருந்த நிகழ்வுகள், அண்ணன் பழ நெடுமாறன்னேடும், என்னோடும் இருந்து நாட்கள், தமிழகத்துக்கும், வெளி உலகத்துக்கும் தெரிய வர அவர் சில நிகழ்வுகளை எழுதியுள்ளார் மற்றும் பாண்டி பஜார் சம்பவம் குறித்தெல்லாம் எழுதியுள்ளார்.
#ksrpost
20-3-2022.

https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2022/mar/20/the-magic-word-pranabta---80-3810851.html
••••••••••
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 80
—————-
கண் விழித்துப் பார்த்தபோது, ஐந்தாறு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் மூத்த அதிகாரி என்பது பார்த்தவுடன் தெரிந்தது. அரக்கப் பரக்க எழுந்து உட்கார்ந்த என்னை, அவர் நட்புறவுடன் சிரித்தபடி கைகுலுக்க முற்பட்டபோது, எனது பதற்றம் சற்று தணிந்தது.

""நாங்கள் சற்று நேரம் கழித்து வருகிறோம். நீங்கள் சாவதானமாகப் பல் தேய்த்து, முகம் கழுவித் தயாராகுங்கள். சாயா அனுப்பித் தரச் சொல்கிறேன்'' என்று சொன்னபோது, நான் ஓரளவு நிதானத்துக்கு வந்தேன்.

அடுத்த 15 நிமிடங்களில் காலைக் கடன்களைக் கழித்துவிட்டுத் தயாராகிவிட்ட என்னை, சுமார் அரை மணி நேரம் காத்திருக்க வைத்தார்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை சாயா தரப்பட்டது.

அவ்வப்போது, யாரோ ஒருவர் நான் என்ன செய்கிறேன் என்பதைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

அதிகாரி ஒருவர் வந்து என்னை இன்னோர் அறைக்கு அழைத்துச் சென்றார். மேலதிகாரியின் அந்த அறையில், என்னை விசாரணை செய்த ஏனைய அதிகாரிகளும் இருந்தனர். மேலதிகாரியின் மேஜைக்கு எதிரில் என்னை அமரச் சொன்னார்கள். இப்போது விசாரணையைத் தொடங்கியவர் அந்த மேலதிகாரி.

""அநேகமாக எல்லோருமே அவரை மறந்துவிட்டார்கள். அப்படி இருக்கும்போது, வரதராஜ பெருமாளைப் பேட்டி எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் வந்தது?''

என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ராஜஸ்தான் ஆளுநர்தான் அவரைப் பேட்டி எடுக்கும்படி என்னிடம் சொன்னார் என்று தெரிவித்தால் அதை இவர்கள் நம்ப மாட்டார்கள்.

""பத்திரிகையாளர் என்கிற முறையில் இதுபோலப் பேட்டிகளை எடுப்பது எங்களைப் பொருத்தவரை பெரிய மரியாதையை ஏற்படுத்தும். இலங்கைப் பிரச்னை குறித்தும், ராஜீவ் காந்தி படுகொலை குறித்தும் வரதராஜ பெருமாள் என்ன நினைக்கிறார் என்கிற ஆர்வம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதைத் தவிர, எனக்கு எந்தவித உள்நோக்கமோ, திட்டமிடலோ கிடையாது.''

""உங்களுக்கு உள்நோக்கம் இருக்காது என்பது தெரியும். அதே நேரத்தில், உங்களைக் கருவியாக வைத்து வரதராஜ பெருமாளை யாராவது குறி வைக்கிறார்களோ என்று நாங்கள் ஏன் சந்தேகப்படக் கூடாது?''

""உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். ஆனால், அப்படி எந்தப் பின்னணியும் எனது சந்திப்புக்கு கிடையாது. அவரை நான் சந்திக்கக் கூடாது, முடியாது என்று சொன்னால் விட்டுவிடுகிறேன். அதற்காக என்னை இப்படியெல்லாம் நீங்கள் பாடுபடுத்த வேண்டாம்.''

""உங்களுக்கு சிரமம் தருவதற்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை. வரதராஜ பெருமாள் இந்திய அரசின் பாதுகாப்பில் இருக்கும், இந்தியாவைத் தஞ்சமடைந்திருக்கும் வெளிநாட்டுத் தலைவர். அவரது உயிருக்குப் பாதுகாப்பு வழங்குவது எங்கள் கடமை. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.''

நான் தலையசைத்தேன்.

""இப்போது சொல்லுங்கள். இத்தனைக்குப் பிறகும் நீங்கள் வரதராஜ பெருமாளைப் பார்க்க வேண்டும், பேட்டி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?''

""அதிலென்ன சந்தேகம்? அவரை சந்தித்துப் பேட்டி எடுக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருக்கிறேன். அனுமதி கிடைத்தால் சந்திப்பதிலும், பேட்டி எடுப்பதிலும் எனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது. நீங்கள் யாராவது பேட்டியின்போது உடன் இருப்பதிலும் எனக்கு ஆட்சேபணை  எதுவும் இல்லை. அதற்கு அனுமதி தர முடியாது என்று நீங்கள் தெரிவித்தால், அதிலும் எனக்கு எந்தவித வருத்தமும் கிடையாது.''

""அவரை சந்தித்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்கிறீர்கள், அப்படித்தானே?''

""எத்தனையோ பிரமுகர்களைப் பேட்டிக்காக அணுகுவது உண்டு. அவர்களில் சிலர் பேட்டி தரவோ, சந்திக்கவோ மறுப்பதும் உண்டு. பேட்டிக்கு நேரம் கேட்க எனக்கு இருக்கும் அதே உரிமை, பேட்டி தர மறுப்பதற்கு அவர்களுக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்தவன் நான். பேட்டி எடுத்தே தீர வேண்டும் என்கிற பிடிவாதம் எல்லாம் எனக்கு இல்லை.''

""சரி, தொலைபேசியில் பேட்டி தருகிறாரா என்று கேட்கட்டுமா? அது போதுமா?''

""தொலைபேசிப் பேட்டி என்றால் வேண்டாம். அரசியல்வாதிகளிடம் கருத்துக் கேட்பதற்கு வேண்டுமானால் தொலைபேசிப் பேட்டி சரியாக இருக்கும். நேரில் சந்தித்துப் பேட்டி எடுக்க முடியாவிட்டால், விட்டு விடுவோம். எனக்கு அதில் ஆர்வமில்லை.''

எல்லோரும் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள். அந்த மேலதிகாரி எழுந்து வந்து என்னிடம் கைகுலுக்கினார்.

""உங்களை சிரமப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.  உள்துறை அமைச்சகத்துக்கு நாங்கள் அறிக்கை அனுப்புவோம். அவர்கள்தான் இதில் முடிவெடுப்பார்கள். அவர்கள் ஒப்புதல் தந்தால் மட்டும் போதாது. வரதராஜ பெருமாள் உங்களை சந்திப்பதற்கு சம்மதிக்க வேண்டும். உங்களை எங்கே இருந்து அழைத்து வந்தோமோ, அங்கேயே கொண்டு விட்டு விடுகிறோம். எங்களுடன் ஒத்துழைத்ததற்கு நன்றி'' என்று சிரித்தபடி விடை கொடுத்தார்.

கன்னாட் பிளேஸில் இருந்த எனது "நியூஸ்கிரைப்' அலுவலகத்தில் என்னை இறக்கிவிட்டுச் சென்றது அம்பாசிடர் கார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து நான் மீண்டு வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் பிடித்தன. நான்காவது நாள்,  எண்.10 அக்பர் சாலையில் இருந்த மத்திய உள்துறை இணையமைச்சர் ராஜேஷ் பைலட்டை சந்திக்கச் சென்றேன். நான் வருவதற்காக அவர் காத்திருந்தது, வரவேற்பிலிருந்து தெரிந்தது.

""உங்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் போலிருக்கிறதே. ஐ ஆம் வெரி ஸாரி. அதைத் தவிர்க்க முடியாது. எனக்கு அறிக்கை வந்திருக்கிறது.''

""எனக்கு அது புதிய அனுபவம். ரொம்பவும் சிரமப்படுத்தி விட்டார்கள்.''

""வரதராஜ பெருமாளுக்குத் தகவல் அனுப்பி இருக்கிறோம். அவரது சம்மதம் கிடைத்தால், நான் உங்கள் சந்திப்புக்கு அனுமதி அளித்துப் பேட்டிக்கு உதவுகிறேன். ராஜீவ்ஜி படுகொலைக்குப் பிறகு நாங்கள் சற்று எச்சரிக்கையாகவே இருக்கிறோம். எதற்காக நீங்கள் இந்த "ரிஸ்க்' எடுக்கிறீர்கள்? வரதராஜ பெருமாளை சந்திப்பதால் உங்களுக்கே கூட ஆபத்து வரலாம்.''

""அப்படி நான் நினைக்கவில்லை. வரதராஜ பெருமாளை இதுவரை யாரும் சந்திக்கவில்லை. அதனால், இந்தப் பேட்டி வெளிவந்தால், எனது செய்தி நிறுவனத்திற்கு ஏற்படும் மரியாதையே தனியாக இருக்கும்.''

சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்துவிட்டு ராஜேஷ் பைலட், இரண்டு கைகளையும் மேலே தூக்கியபடி கலகலவென்று சிரித்தார்.

வரதராஜ பெருமாளைச் சந்தித்து பேட்டி எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எனது நீண்டநாள் நண்பர். ஈழப் பிரச்னை குறித்தும், விடுதலைப் போராளிகள் குறித்தும் எனக்கிருக்கும் புரிதல் அனைத்துமே அவரை அவ்வப்போது சந்தித்து உரையாடுவதிலிருந்து கிடைத்தவை.

அதனால், ஈழத் தமிழர் பிரச்னையுடன் தொடர்புள்ள இன்னொரு செய்தியை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழகத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே அறிமுகமானவர்கள் இரண்டு பேர்தான். முதலாமவர் பழ. நெடுமாறன். இன்னொருவர், காங்கிரஸ் கட்சி காலத்தில் இருந்து பழ. நெடுமாறனின் அணுக்கத் தொண்டராக அவருடன் இருந்த வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

இலங்கையில் நடந்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தைத் தஞ்சம் அடைந்தனர். பிரபாகரன் உள்ளிட்ட சிலர் முதலில் ராயபுரத்திலும், அதற்குப் பிறகு மயிலாப்பூர் கச்சேரி சாலையில் இருந்த செட்டி என்பவருடனும் தங்கி இருந்தனர்.

அமிர்தலிங்கம் - இந்திரா காந்தி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் பழ. நெடுமாறன். அப்போதிருந்தே பிரபாகரனுக்கு பழ. நெடுமாறனைத் தெரியும். மயிலாப்பூர் சாலைத் தெருவில் குடியிருந்த பழ. நெடுமாறன், அருகிலிருந்த சுந்தரேசர் கோயில் தெருவுக்குக் குடி பெயர்ந்தபோது, வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சாலைத் தெருவில் இருந்த  அவரது வீட்டில்  குடியேறினார். அப்போது அவருடன் பிரபாகரனும் அந்த வீட்டில் தங்கியிருந்தார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குத் தமிழகத்தில் முதலில் அறிமுகமானவர் பழ. நெடுமாறன் என்றால், அவரை முதல்வர் எம்ஜிஆரிடம் அழைத்துச் சென்றவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணனுடன் பிரபாகரன் சாலைத் தெருவில் தங்கி இருந்தபோது, அறிமுகமானவர்கள்தான் கவிஞர் புலமைப்பித்தனும், விருதுநகர் பெ. சீனிவாசனும்.
அப்போது டெலோ, ஈரோஸ், இ.பி.ஆர்.எல்.எஃப் உள்ளிட்ட பல தமிழீழ போராட்டக் குழுக்கள் இருந்தன. அவை எல்லாமே தமிழகத்தில் இருந்து செயல்பட்டு வந்தன. டி.இ.ஏ. என்கிற "தமிழ் ஈழம் ஆர்மி' என்கிற அமைப்புதான் சென்னை விமான நிலைய குண்டு வெடிப்பில் தொடர்புள்ளது. அந்தக் குழுக்கள் எல்லாமே இந்தியாவின் ஆதரவைத் தேடவும், ஆயுதப் பயிற்சி பெறவும்தான் இங்கே வந்தன.

1982 பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன்னர், பிரபாகரன் வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனுடன் தங்கியிருந்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அங்கே அவரை சந்தித்ததில்லை. பாண்டிபஜார் சம்பவத்தில் பிரபாகரன் கைது செய்யப்பட்டபோது, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து மதுரையிலுள்ள நெடுமாறன் வீட்டில் தங்கி இருந்தார்.

அது மட்டுமல்ல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அழைத்துச் சென்றவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணனின் திருமணத்திற்குப் பிரபாகரன் வந்திருந்தார் என்பது பலருக்கும் தெரியாது.

 இப்போது யார் யாரெல்லாமோ பிரபாகரனைப் பற்றிப் பேசுகிறார்கள், நெருக்கம் கொண்டாடுகிறார்கள். ஆனால், கே.எஸ். ராதாகிருஷ்ணன் இதுநாள் வரை அது குறித்து தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. அன்றைய நிகழ்வுகளுக்கு நேரடி சாட்சியாக இருந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன், அந்த சம்பவங்கள் குறித்துப் பதிவு செய்வதுதான் உண்மையான வரலாற்று ஆவணமாக இருக்கும்.

ஒரு வாரம் கழித்துத்தான் உள்துறை அமைச்சகத்திலிருந்து எனக்குத் தகவல் வந்தது. வரதராஜ பெருமாள் என்னை சந்திக்க மறுப்புத் தெரிவிக்கவில்லை என்கிற செய்தியை மட்டும் தெரிவித்தார்கள். எப்போது, எங்கே சந்திப்பது என்பது குறித்துப் பிறகு தெரிவிப்பதாகச் சொன்னார்கள். மேலும், பத்து நாட்கள் கடந்தன. எந்தத் தகவலும் இல்லை.

ஜெய்ப்பூருக்குப் போய் காத்திருக்கும்படியும் அங்கிருந்து வரதராஜ பெருமாளைச் சந்திக்க அழைத்துப் போவதாகவும் சொன்னார்கள். தங்குவதற்கு எனக்கு ஏற்பாடும் செய்து தந்திருந்தனர். இரண்டு நாள்கள் ஜெய்ப்பூரில் இருந்த பிறகு, அங்கிருந்து நான் காரில் அழைத்துச் செல்லப்பட்டேன்.

முதலில் அஜ்மீர் போனோம். அங்கே என்னை அஜ்மீர் தர்காவுக்கு அழைத்துச் சென்றார்கள். வரதராஜ பெருமாள் புண்ணியத்தில், "அஜ்மீர் ஷெரீப்' என்று அழைக்கப்படும் ஹஸ்ரத் க்வாஜா கரீப் நவாஸ் தர்கா தரிசனம் எனக்குக் கிட்டியது. 13-ஆம் நூற்றாண்டு சூஃபி துறவி மொய்னுதீன் சிஷ்டியின் ஜீவசமாதி அமைந்த அந்த தர்காவை தரிசிக்க உலகெங்கிலிருந்தும் வருவார்கள்.

உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தர்காவுக்கு வெளியே காத்திருந்தார்கள். அவர்கள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து, நாங்கள் உதய்பூரை நோக்கிப் பயணித்தோம். அங்கேதான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.

உதய்பூர் அழகழகான அரண்மனைகளின் நகரம். அந்த அரண்மனைகளுக்கு மகுடமாகத் திகழ்வது உதய்பூர் "லேக் பேலஸ்'. மிகப் பெரிய ஏரிக்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் "ஜக் விலாஸ்' என்கிற "லேக் பேலஸ்' அரண்மனை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டிருக்கிறது. மோட்டார் போட்டில் அந்த லேக் பேலஸூக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

 அங்கே ஓர் அறையில் வரதராஜ பெருமாளுடனான எனது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனக்கு முன்பே அங்கே வந்து காத்திருந்தார் வரதராஜ பெருமாள்.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...