Friday, March 28, 2025

#*இன்றைய அரசியல்* #*சித்தாந்தம் கொள்கை* #*மரபுகள் நடைமுறைகள்*

#*இன்றைய அரசியல்* 
#*சித்தாந்தம் கொள்கை* 
#*மரபுகள் நடைமுறைகள்*
———————————
தியாகிகள் நிறைந்த கம்யூனிஸ்ட் கட்சிகளைபொறுத்தவரை அதில் பதவி வகிக்கும் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. விஞ்ஞானபூர்வமான சித்தாந்தம் மற்றும் கொள்கை அதன் நடைமுறை என்பது தான் அங்கே முக்கியம்.

அப்படிப்பட்ட தலைவர்களுக்கு அல்லது அந்த கட்சிக்கு இந்தியாவில் மக்கள் அதிகம் வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் இதுவரை அமர வைக்க வில்லை.




என்றாலும் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் இ எம் எஸ் நம்பூதிரி பாட் அவர்களின் காலத்தில் 1950 களில் கேரளாவில் அமைந்தது! அதன் பிறகு மேற்கு வங்கம் திரிபுரா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சி அமைத்ததும் வரலாறு. இன்றைய நிலையில் பார்க்கும் பொழுது மேற்குவங்கம் திரிபுரா போன்ற மாநிலங்களில் எல்லாம்  கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் வாய்ப்புகளை இழந்து அது இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் மட்டுமே இன்றளவும் தொடர்ந்து இருக்கிறது.




இதை எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் இன்றைய கம்யூனிஸ்ட்கள்  மத்தியில் பாசிசம் மற்றும் நவ பாசிசம்  விவாதம் பரவி வருவது குறித்த கவனத்தைக் கோருகிறார்கள். அது குறித்து அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது மதுரை மாநாட்டில் மேற்சொன்னதை  குறித்து விவாதிக்க இருக்கிறது.

அப்படியான கொள்கை விவாதங்களை  இந்தியாவின் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.

அது ஒருபுறம் இருக்க இன்றைய சிபிஎம் கட்சியின் இந்தியத் தலைவர் பிரகாஷ் காரத் அடிப்படையில் காங்கிரசுக்கு எதிரானவர். மறைந்த சீதாராம் எச்சூரி அவர்கள் எப்போதும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து அதனிடம் கை குலுக்கி கொண்டே இருப்பார். வாழ்நாள் முழுக்க காங்கிரஸின் தோழனாக அதைத் தாங்கி பிடித்து நடந்து கொண்டார். இந்தக் கருத்து  பரவலானது தான் என்றாலும் கூட அது குறித்து நமக்கு முழுமையாக தெரியவில்லை.

இன்றைய சூழ்நிலையில் பாசிசம், நவ பாசிசம் என்று கம்யூனிஸ்டுகள் குறிப்பிடுவது பாஜகவை விமர்சிப்பதாகத்தான் குறிப்பாக  எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் தான் அவர்களது கட்சிகளுக்குள் விவாதம் நடந்து வருகிறது. இது எதை நோக்கிச் செல்லும் என்றும் இப்போதைக்குச் சொல்ல இயலவில்லை.

இந்திரா அம்மையாரின் அவசர நிலைப் பிரகடனத்தை ஆர் எஸ் எஸ்  போன்ற அமைப்புகளும் அன்றைக்கு இருந்த பாஜக போன்றவையும் கடுமையாக எதிர்த்தவை.  சிபிஎம் இவர்களுடன் இணைந்து எதிர்த்து போராடியத்து.ஆனால் அப்படிப்பட்ட எமர்ஜென்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டாங்கே தலைமையில் 
ஆதரித்தது என்பதையும்  நாம்மறந்து விடக்கூடாது. அப்போது தானே பாசிசத்தின் மூலக்கருத்து உண்டானது இல்லையா? 

மாற்றுக்கருத்துக்களுடன் திமுக காங்கிரஸ் கூட்டணி என்றும் ஒரு திட்டம் இருக்கிறது மற்றும் சோசியலிஸ்ட் கட்சிகள் அதாவது இன்றைக்கு காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்கும் முலாயம் (அகிலேஷ் யாதவும்) இன்றைய லல்லு பிரசாத் யாதவும்  சோசியலிஸ்ட் கட்சியில் இருக்கும் போது எமர்ஜென்சியை எதிர்த்து இந்திராவுடன் கடுமையாக மோதினவர்கள்தான்!. அதேபோல் காஷ்மீர் தேசிய மாநில கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லாவும் 
எமர்ஜென்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்தான். ஆனால் காலங்கள் மாறுகின்ற போது சித்தாந்தங்களும் மாறுகிறது என்கிற கணக்கில் அவரவர் பிராந்தியங்களின் அணுகுமுறையும் மாறுகிறது எனும் அடிப்படையில் இந்திய அரசியலின் முகமே மாறிக் கொண்டிருக்கிறது!

தேச நலன்களுக்குரிய சித்தாந்தங்களே முக்கியம் என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சாரியார் நரேந்திர தேவ், லோகியா, போன்றவர்கள் எல்லாம் 
கூறுவார்கள். ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட லல்லுபிரசாத்யாதவ் முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள் இன்று மாறிக் கொண்டார்கள். இப்படியான நிலை தான் இன்று இருக்கிறது. 

இந்திய மார்க்சிஸ்ட்களிடம் குறிப்பாக இம்மாதிரியான பாசிசம் நவ பாசிசம் போன்ற விவாதங்கள் இதுவரை வந்ததில்லை. அவர்களுடைய கொள்கைகள் அடிப்படையில் பார்த்தால் ஒரு காலத்திலும் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸை ஆதரிக்க முடியாது!

காங்கிரஸின் கடந்த காலங்களில் இருந்து அவர்கள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை! காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்த போது 1950 களில் போராடும் கம்யூனிஸ்டுகளைக் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள்! கேரள மாநிலக் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைத்தார்கள். எமர்ஜென்சி காலத்தில் ஜெயபிரகாஷ்  நாராயணன் உட்பட எத்தனை மூத்த கம்யூனிஸ்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட முடியாது. இதுதான் கடந்த கால வரலாற்றின் எதார்த்தம்! இன்றைக்கு அரசியலில் தனி நபர்களின் புகழ் பாடத் தொடங்கி விட்டநிலையில் அதன் கொள்கைகள் நாளடைவில் காலாவதி ஆகிவிடும் என்பதற்கான சமூக அவலங்கள் தொடங்கி இருக்கின்றன. பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்!

ஆனால் இங்கே தமிழ்நாட்டில் கட்சிகளின் பொதுக்குழுக் கூட்டங்களைப் பார்த்தால் அல்லது அதனுடைய மாநாடுகளைப் பார்த்தால் மாநாட்டுக்கு வரும் 2500 பேர்களுக்கு இன்னின்ன உணவுகள் வழங்கப்படும் என்று  மெனுப் பட்டியல்களை பிரச்சாரத் தட்டிகளாக அவர்களே ஊடகங்கள் தோறும் வைக்கிறார்கள். இதை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. அல்லது மக்களைத் தொண்டர்களை என்னவாக கணிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
 பொதுக்குழுவில் என்ன கொள்கைகள் என்ன திட்டங்கள் என்ன எதிர்கால உண்மையான நடைமுறைகள்  என்பதுபற்றி எதுவுமே இவர்கள் சொல்வதும் இல்லை! அவற்றை முன் பெரியாக செயல் திட்டங்கள் வைப்பதும் இல்லை! இது வெறும் சம்பிரதாயம்தான். பதிலாக நீங்கள் பொதுக் குழுவிற்கு வந்தால் என்னென்ன வகை உணவுகள் கிடைக்கும்  என்று பட்டியலைப் போட்டு மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் 10 15 ஆண்டுகளாக கட்சிப் பொதுக்குழு மாநாடுகளில் நடந்து வருகிறது!

கோட்பாடுகளைப் புறம் தள்ளிவிட்டு 
குடும்ப வாரிசுகளின் அரசியலுக்கு தோதாக இதை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதன்றி வேறென்ன! தலைவர்களை மட்டுமே முன்னிறுத்தி ஹீரோ ஒர்ஷிப்பாக எக்காளமாக கிளர்ச்சியாக மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி மயக்கமூட்டும் இந்திய அரசியல் இப்படியாகத்தான் அதன் வழியில் போய்க் கொண்டிருக்கிறது! அதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு பிறந்த வாரிசுகளுக்குமான அரசியலாகவும் இது தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை மன்னராட்சி என்று சொல்லாமல் வேறு என்ன வகையில் வகைப்படுத்துவது. இதெல்லாம் இன்றைக்கு மிக முக்கியமாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட  வேண்டிய அல்லது இத்தகைய போக்குகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டிய  நடைமுறையாகவும் அதற்கான புதிய அரசியல் மாற்றங்களும் தேவையாக இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

தீர்மானங்களை எப்படி வடித்து நிறைவேற்ற வேண்டும் என் தெரியாமல் இங்கு கட்சிகள் உள்ளன. இரங்கல் தீர்மானம் ஒரே தீர்மானம் தனியாக முதலில் வாசித்து விட்டு சில எல்லோரும் எழுந்து நின்று அமைதி சில நொடிகள் அமைதி காக்க வேண்டும். பின் பொது தீர்மானங்களை முன் மொழிந்து பின் வழி மொழிய வேண்டும். இது மரபு. இவை 
எல்லாம் இன்றைய புதிய கட்சிகளுக்கு தெரிய வில்லை. இப்படி ஆலோசகர்கள், நிர்வாகிகள் அங்கு உள்ளனர்.

#இன்றையஅரசியல்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-3-2025.


No comments:

Post a Comment

#வடக்கெல்லை மீட்பு #தமிழகத்தில் திருத்தணி இணைப்பு #இதே நாளில் ஏப்1,1960

#வடக்கெல்லை மீட்பு  #தமிழகத்தில் திருத்தணி இணைப்பு #இதே நாளில் ஏப்1,1960 ——————————————————— 1956 வது வருடம் நவம்பர் ஒன்றாம் தேதி கன்னியாகும...