Wednesday, March 5, 2025

சொல்லின்செல்வர்அண்ணன் ஈ. வே.கே.சம்பத்

#சொல்லின்செல்வர்அண்ணன்சம்பத்அவர்களின்95வதுபிறந்ததினம்இன்று . 
*****
சொல்லின் செல்வர் சம்பத் இயல்பாகவே சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றக் கூடியவர். அதற்கு முன் பேச வாய்ப்புக் கேட்டு அவைத்தலைவர் அனந்தசயனத்தோடு மோதியிருக்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே ஒரு பெரிய சாதனைக்கு அவர் வழிகாண முற்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆங்கிலம், இந்தி, உருது, வங்காளி போன்ற மொழிகளுக்கு ஒரே நேரத்தில் மொழியாக்கம் செய்யும் வசதி இருந்தது. ஆனால் தமிழுக்கு அத்தகுதி தரப்படவில்லை.

இந்தி மட்டுமே தெரிந்த உறுப்பினர் ஆங்கில உரையைக் கேட்கிறபோது தமது இருக்கை முன் அமைக்கப்பட்டுள்ள "இந்தி பொத்தானை' அழுத்தினால் போதும். அவர் காதுக்கு அந்த ஆங்கில உரையின் இந்தி மொழியாக்கம் ஒலிக்கும். இத்தகைய வசதி தமிழுக்கும் தரப்பட வேண்டும் என்பதை நிலைநாட்ட எடுத்த எடுப்பில் சம்பத் அவருக்கேயுரிய ஆவேசத்தோடு திடீரென்று முன்னறிவிப்பில்லாமல் தொடங்கினார்.

இந்தி வெறியர்கள் அதிர்ந்தெழுந்து எதிர்ப்புக் கூச்சலிட்டனர். பெரும் கூச்சலுக்கிடையே சம்பத் தொடர்ந்தார். லோகியா, கோவிந்ததாஸ் சேட், மணிராம் பக்கிரி போன்ற அழுத்தமான இந்தி ஆதரவாளர்கள் சம்பத் ஆற்றிய தமிழுரைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

சம்பத் சமர்புரிபவராயிற்றே. விவாத மண்டபங்களில் பகை மிரள முழக்கிடும் பீரங்கிப் பேச்சாளராயிற்றே கூச்சல் குழப்பத்திற்கிடையே அந்த ஆவேசக்குரல் அழுத்தம் திருத்தமாகக் கணீரென' ஒலித்தது.

" அச்சுறுத்தியோ, இச்சகம் பேசியோ எங்கள் மீது இந்தியைத் திணிக்க முடியாது. இன்பத் தமிழுக்கு ஆபத்து என்றால் பெரும் பூகம்பத்தையே நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். மொழி காக்க உயிர் காத்த எங்கள் வீரத்தியாகிகள் தாளமுத்து நடராசன் கல்லறைகளை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்....''

என்றெல்லாம் வெடித்தார் சம்பத், அவையே இரு கூறாகியது. கட்சிக் கோடுகளைக் கடந்து இந்தி பேசும் உறுப்பினர்கள் இந்தி பேசாத உறுப்பினர்கள் என்று அவை இரு பிரிவாகக் காட்சியளித்தது. இந்தி வெறியர்கள் "பேசாதே' என்று கூச்சலிட்டனர். அமளி விளைவித்தனர்.

பிரதமர் நேரு தமிழறியாதவர். சம்பத் என்ன சொல்லுகிறார் என்பதை உன்னிப்பாகக் கேட்கிறார். சம்பத்தை நோக்கி, ""உங்களுக்குத்தான் ஆங்கிலம் தெரியுமே, ஆங்கிலத்தில் பேசுங்கள்'' என்கிறார். அப்போது சம்பத் ஆங்கிலத்தில் மறுமொழி உரைக்கிறார். அவையில் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆங்கிலத்தில் முழக்கத்தைத் தொடர்கிறார்.

சம்பத் முயற்சியால்தான் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பேச்சை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கவும், அதே நேரத்தில் மற்ற மொழிப் பேச்சுகளை தமிழில் தரவும் வசதி செய்து தரப்பட்டது. இதனால்தான் பிற வடமொழிகளே அறியாத லட்சுமணன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் துணை அவைத்தலைவராகப் பணியாற்ற முடிந்தது.

இன்று நாடாளுமன்றத்தில் தமிழ் மட்டுமே தெரிந்த உறுப்பினர்கள் துணிச்சலாக எழுந்து தமிழில் பேச முடிகிறதென்றால் அந்த வாய்ப்பை, வசதியை ஏற்படுத்தித் தந்த பெருமை சம்பத்துக்கே உண்டு. இமயமலையில் சேரன் செங்குட்டுவன் தமிழ்க் கொடி நாட்டினான் என்பார்கள். அது உண்மையோ பொய்யோ டெல்லி நாடாளுமன்றத்தில் தமிழுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தியவர் சம்பத் என்பது உண்மை.

முதல் முழக்கத்தை முடித்து பெரிய விளைவுகளை ஏற்படுத்தி சென்னை திரும்பிய சம்பத், அண்ணாவின் பெரும் பாராட்டினைப் பெற்றார்.!

#சொல்லின்செல்வர் ' அண்ணன் சம்பத்
அவர்களின் 95 வது பிறந்த தினம் இன்று . 5-3-2025


No comments:

Post a Comment

Stress, anxiety and depression are caused when you are living to please others*.

*Stress, anxiety and depression are caused when you are living to please others*. Stop worrying about other people understanding you. Believ...