Sunday, March 9, 2025

#*நம்ப முடியாத எனது நாட் குறிப்பிலிருந்து*…. *நான் கடந்து வந்த வாழ்க்கை பயணம் தமிழ் இந்து இணைய ஏட்டில் தொடர்-2*

#*நம்ப முடியாத எனது நாட் குறிப்பிலிருந்து*…. 

*நான் கடந்து வந்த வாழ்க்கை பயணம் தமிழ் இந்து இணைய ஏட்டில் தொடர்-2*

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
9-3-2025. 
••••
நம்ப முடியாத நாட்குறிப்பிலிருந்து... - 2

#தமிழக_மாநிலஎல்லைகள்வரையறை #கோரிக்கைகள்_போராட்டங்கள்

நாட்டின் இரண்டாவது பொதுத் தேர்தல் 1957-ல் நடந்து முடிந்தது.
அப்போதெல்லாம், நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடைபெறுவது வழக்கம். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஜவஹர்லால் நேரு மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.  
குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை குடியரசுத் தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணனும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வானார்.
சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அரசாங்கம் இ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் தலைமையில் கேரளத்தில் ஆட்சி அமைத்தது.
தமிழகத்தில் பொதுத் தேர்தல் முடிந்து 13.4.1957-ல் முதல்வராக காமராஜர் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ஏ.ஜே.ஜான் பதவிப்பிரமாணம் செய்துவைக்க, அமைச்சர்கள் பதவியேற்றனர்.
காமராஜர் தலைமையில் அமைந்த அந்த அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக எம்.பக்தவத்சலம், நிதித்துறை அமைச்சராக சி.சுப்பிரமணியம், வருவாய்த்துறை அமைச்சராக எம்.ஏ.மணிக்கவேலு, தொழில்துறை அமைச்சராக ஆர்.வெங்கட்ராமன், பொதுப்பணித்துறை அமைச்சராக பி.கக்கன், மின்சாரத் துறை அமைச்சராக வி.ராமய்யா,  உள்ளாட்சித் துறை அமைச்சராக லூர்தம்மாள் சைமன் ஆகியோரும் பதவி ஏற்றார்கள்.
இன்னொரு தகவலையும் தெரிந்து கொள்வோம்.
முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு ராஜாஜி தலைமையில் 10.4.1952-ல் அமைந்த அமைச்சரவையில், ஏ.பி.செட்டி, சி.சுப்பிரமணியம், கே.வெங்கடசுவாமி நாயுடு, என்.ரெங்கா ரெட்டி, எம்.வி.கிருஷ்ணாராவ், வி.சி.பழனிசாமி கவுண்டர், டாக்டர் யு.கிருஷ்ணா ராவ், டாக்டர் ஆர்.நாகண கவுடா, எஸ்.சங்கரா ரெட்டி, எம்.ஏ. மாணிக்கவேலு, கே.பி.குட்டி கிருஷ்ண நாயர், சண்முக ராஜேஸ்வர சேதுபதி (ராம்நாடு சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்), பட்டாபி ராமாராவ், டாக்டர் சஞ்சீவய்யா (பிற்காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்) ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். எம்.பக்தவத்சலம், கே.ராஜாராம், ஜோதி வெங்கடாச்சலம் போன்றவர்கள் பிற்காலத்தில் பதவியேற்றார்கள்.
இதற்கு முன்பு நாடு சுதந்திரம் பெற்றவுடன் 15.9.1947-ல் அமைந்த முதல் அமைச்சரவையில், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தலைமையில் டாக்டர் பி.சுப்பராயன், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பக்தவத்சலம், பி.கோபால் ரெட்டி, டேனியல் தாமஸ், சீதாராம ரெட்டி, சந்திரமெளலி, அவினாசி லிங்கம் செட்டியார், கே.மாதவ மேனன், காளா வெங்கடராவ், ஏ.பி.செட்டி, வெமுலா குருமய்யா போன்றவர்கள் அங்கம் வகித்தனர்.
இந்த காலத்தில் ஓமந்தூரார் பரிந்துரையில், அவினாசி லிங்கம் செட்டியார் முயற்சியில் பெரியசாமி தூரன் தலைமையில் ‘தமிழ் கலைக்களஞ்சியம் தொகுப்புகள்’ வெளியிட திட்டமிடப்பட்டது.
தலித் மக்களுக்கான ஆலயப்பிரவேசம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் அரசு சின்னம், தமிழ் பயிற்சிமொழி, முதல் சமூக நீதி உத்தரவு, பாரதியின் பாட்டுக்கள் நாட்டுடைமை என்பதெல்லாம் ஓமந்தூரார் தலைமையிலான அமைச்சரவையில் நடந்தவை. எனவே ஓமந்தூராரை ‘சமூக நீதிக்காவலர்’, ‘முதல்வர்களின் முதல்வர்’, ‘விவசாயிகளின் முதல்வர்’, ‘கல்வியின் முதல்வர்’ என்று பாராட்டினர்.
அதன் பின் அமைச்சரவை மாற்றங்கள் 20.1.1948-ல் நடந்தது. அதில் எஸ்.குருபாதம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அதற்கடுத்து, 6.4.1949-ல் முதல்வராக பி.எஸ்.குமாரசாமி ராஜா, மற்றும் அமைச்சர்களாக திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் - பொது சுகாதாரம், எம்.பக்தவத்சலம் - பொதுப் பணிகள், பி.கோபால் ரெட்டி - நிதித்துறை, எச்.சீதாராம ரெட்டி - நில வருவாய், கே.சந்திரமெளலி - உள்ளாட்சி, மாதவ மேனன் - கல்வி, ஏ.பி.செட்டி - விவசாயம், பி.பரமேஸ்வரன் - கிராமப்புற வளர்ச்சி, நீலம் சஞ்சீவரெட்டி - மதுவிலக்குத் துறை (பிற்காலத்தில் இந்திய குடியரசுத் தலைவரானார்), சி.பெருமாள்சாமி ரெட்டி - தொழில்,  தூத்துக்குடி ஜே.எல்.பி.ரோச் விக்டோரியா - உணவுத் துறை என துறைகள் ஒதுக்கப்பட்டு பணியாற்றினர்.
இதற்கிடையே இரண்டு மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்க கமிஷன்கள் அமைக்கப்பட்டன. முதலாவதாக  1948-ல் தார் கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், ஆந்திரப் பிரதிநிதியாக ராமகிருஷ்ண ராஜூ மற்றும் கேரளப் பிரதிநிதியும் இருந்தனர். அடுத்து, 1954-ல் பசல் அலி கமிஷன் அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் பிரதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை. கேரளப் பிரதிநிதி கே.கே.பணிக்கர் மட்டும் இடம்பெற்றதனால் நமக்கு சேரவேண்டிய பகுதிகள் எல்லாம் கேரளத்துக்கு சென்று விட்டன. கே.கே.பணிக்கர் மற்றும் மலையாள லாபிகள் பிரதமர் நேரு அலுவலகத்தில் இருந்ததால் தமிழகத்துக்கு பசல் அலி குழுவினால் அநீதிதான் நிகழ்ந்தது.
இதற்கிடையே தனி ஆந்திரம் வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமுலு 65 நாள் சென்னை மயிலாப்பூரில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அதைப்போன்றே விருதுநகரில் சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுமாறு கோரி உண்ணாவிரதம்  இருந்து உயிர் நீத்தார்.
1.11.1956-ல் சென்னை ராஜதானியாக வடக்கே இன்றைய ஒரிசா வரையுள்ள ஆந்திரப் பிரதேசம், தென் கர்நாடகம், கேரளத்தில் மலபார், தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் இருந்தன. எல்லை வரையறை குழுவின் பரிந்துரையின் பேரில் திருத்தணி, கன்னியாகுமரி, இன்றைய தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையை நம்மோடு இணைத்து இன்றைய தமிழ்நாடு எல்லைகளாக அமைந்தன. இது முடிந்து 69 ஆண்டுகளாகின்றன.
அந்த சமயத்தில் சென்னை மாநகரம், தமிழகத்தில்தான் சேர வேண்டும் என்று போராடிப் பெற்றோம். ராஜாஜியும் இதற்கு ஆதரவாக இருந்தார். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் நம்மோடு இணைவதற்கு மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி, ரசாக், குஞ்சன் நாடார் போன்ற பலர் பெரும் தியாகம் செய்தார்கள்.
மார்த்தாண்டம் புதுக்கடையில் 11.8.1954-ல் நடந்த துப்பாக்கி சூட்டில் 16  பேர் உயிர் தியாகம் செய்தனர். வட எல்லையை மீட்க, ம.பொ.சி., மங்களகிழார், சட்டமன்ற உறுப்பினராக இருந்த விநாயகம், கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பெரும் போராட்டம், தியாகங்களைச் செய்தனர். திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர், நெல்லூர், அனந்தபூரில் சில பகுதிகள் நம்மோடு வந்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை.
தமிழகத்தின் எல்லையாக திருத்தணி அமைய ம.பொ.சி.யினுடைய தியாகம் அதிகம். இந்த போராட்டத்தில் ம.பொ.சிக்கு ராஜாஜி ஆதரவாக இருந்தார்.
செங்கோட்டையைச் சேர்ந்த சட்டநாத கரையாளருடைய பெரும் போராட்டத்தின் விளைவாக தென்காசி பக்கத்தில் செங்கோட்டை இணைந்தது.
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழா, 1956-ல் நாகர்கோவிலில் நடந்தபோது, காமராஜர் அதற்குத் தலைமை தாங்கினார். ஆனால், மேடையில் பி.எஸ்.மணிக்கு இடமில்லை. அதைத்தொடர்ந்து, இரண்டு நாள் கழித்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீண்டும் விழா எடுத்தார். அதில் பி.எஸ்.மணி பாராட்டப்பட்டார்.
செங்கோட்டை நம்மோடு இணைந்தபோது, இன்றைக்கு செங்கோட்டையில் நடுநாயகமாக உள்ள பூங்காவில், அமைச்சர் சி.சுப்பிரமணியம் தலைமையில் இணைப்பு விழா நடந்தது. அந்த விழாவில் அமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் பேச்சு அருமையாக இருந்தது.
இன்றைய தமிழகத்தின் எல்லைகளுக்காக அன்று நடத்தப்பட்ட போராட்டங்கள், தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாகும்.  அப்போராட்டங்கள்  உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றன. அதைப்பற்றி  சற்று விரிவாக பார்ப்போம்...
கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்  தமிழக - ஆந்திர எல்லையிலும் மற்றும் கேரள எல்லையிலுள்ள கிராமங்களைப் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தன. குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அணைமுகம் கிராமம் தமிழகத்தைச் சார்ந்தது. இந்த கிராமத்தில் ரப்பர் தோட்டங்கள் அதிகம். வருவாய்த் துறையின் ஆவணங்களின்படி தமிழக அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ள கிராமம். இந்த கிராமம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டது. இங்குள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச டி.வி.யும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த கிராமத்துக்குஅடுத்துள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த அம்பூரி உள்ளாட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள வீடுகளில் அடையாள பணிகளை மலையாளத்தில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்.
அதுபோலவே ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டைக்குப்பம் கிராமத்தில் உள்ள பிமலவாரிப்பாளையம் எல்லையில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஒகேனக்கல் பிரச்சினையை திடீரென கர்நாடகம் எழுப்பியுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த அந்த இடம் தங்களுக்கே சொந்தமென்று தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது. இதனால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் தாமதமாகிறது.
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’ என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்துக் கூறுகிறது.
‘வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று’  புலவர் காக்கைபாடினியாரின் பாடல் கூறுகிறது.
இவைதான் தமிழகத்தின் நான்கு எல்லை என்று பண்டையத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று புரிந்து, தமிழகத்தின் எல்லைகளாக ஆதியில் இருந்தவற்றுள், ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி போன்ற பகுதிகளை இழந்தோம். இதனால்தான்  பாலாற்றில் கணேசபுரத்தில் தமிழகத்துக்கு நீர் வரத்து வராமல் தடுப்பணைகளும் கட்டப்படுகின்றன. பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்சினைகளை இன்றைக்கும் தீர்க்க முடியாமல் இருக்கின்றன.
வரலாற்றில் ஆதி தமிழ் மண் குறித்த செய்திகள் வருமாறு:
இன்று, திருப்பதி என அழைக்கப்படும் திருமலைதான் வடவேங்கடம் ஆகும். சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையவன் மூலம் திருவேங்கடவர் திருக்கோலத்தை வர்ணிக்கிறார் இளங்கோ அடிகள். வைணவ ஆழ்வார்கள் தமிழில் இயற்றி உள்ள பாசுரங்களில், திருமலைபுரம், வேங்கடவர் தலமும் கூறப்பட்டு உள்ளன. பிள்ளைப் பெருமான் அய்யங்கார் பாடியுள்ள அஷ்டப் பிரபந்தத்தில் உள்ள திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி ஆகிய பிரபந்தங்கள் திருப்பதியைப் பற்றியவையாகும்.
இதுபோல், திருப்பதி கோவிலைப் பற்றித் தெலுங்கில் அதிக அளவில் இலக்கியம் இல்லை. ‘தமிழகத்தின் எல்லை கிருஷ்ணா நதி’ என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது என உ.வே.சா. உரையில் தெரிய வருகிறது.
பெங்களூர், பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து, ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூர் தமிழ்நாட்டின் பகுதியாகவே இருந்து வந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. 10-ம் நூற்றாண்டிலேயே பெங்களூர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. கி.பி.997-ஆம் ஆண்டில் ஒசக்கோட்டை போன்ற இம்மாவட்டப் பகுதிகள், சோழ அரசனால் கைப்பற்றப்பட்டன.
பெங்களூர் மாவட்டத்தில் உள்ள மாகடிபட்டணத்தை நிறுவியவர்களே சோழர்கள்தான்! பெங்களுர் மாவட்டத்தில் இருக்கின்ற பழங்கோயில்கள் பெருமளவு பல்லவர்களாலும், சோழர்களாலும்  கட்டப்பட்டவை. பேளூரில் இருக்கின்ற நாகதாதேசுவர் கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டது. 1537-ஆம் ஆண்டில் பெங்களூர்ப் பட்டணத்தை நிறுவிய கெம்பே கவுடாவின் முன்னோர்கள், காஞ்சியைச் சார்ந்த முரசு ஒக்கலு வேளாளர் குடியினரின் வழியில் வந்தவர்கள் ஆவர்.
குடகுப் பகுதியும் பழந்தமிழர் பகுதியாகும். இவை நம்மை விட்டுச் சென்றதால், காவிரி, தென்பெண்ணையாறு, ஒகேனக்கல் நதி தீரங்களுக்கு தமிழகத்துக்கு தீர்வு கிடைக்காமல் சிக்கலுக்கு ஆட்பட்டுள்ளோம்.
தென்குமரி
சங்க காலத்தில் இருந்து பாண்டிய அரசின் கீழ் நாடு திகழ்ந்தது. திவாகரம் எனும் நூல் பாண்டிய மன்னனை ‘குமரி சேர்ப்பன்’ என்று குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் மதுரைக் காஞ்சியில் அவனைக் குமரியோடு இணைத்துக் கூறுகிறது. பிற்காலச் சோழர்களான முதலாம் இராஜராஜன், வீர இராஜேந்திரன், முதல் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் ஆகியோரின் பெயர்கள் நாஞ்சில் நாட்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழக - கேரளத் தொடர்புகள் குறித்து அடுத்து பார்ப்போம்....

https://www.hindutamil.in/news/opinion/columns/1353622-history-of-tamil-nadu-state-formation-explained-in-k-s-radhakrishnan-series.html?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1i0UDuHnR9RE7RUov_3LXf3ZROqVbfujrkZj8mHK17VFL939z1tPt-Vhs_aem_6rz1C02hC8ZRFPBSTqYJyA

No comments:

Post a Comment

Stress, anxiety and depression are caused when you are living to please others*.

*Stress, anxiety and depression are caused when you are living to please others*. Stop worrying about other people understanding you. Believ...