இன்றைய தினமணியில்(19-12-2024) கூட்டு குடும்பங்கள் குறித்த எனது நடுப்பக்க கட்டுரை
#அன்றையகூட்டுகுடும்பங்கள்….
- வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன்
——————————————————
இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.
கிராமங்களில் ஒரு காலத்தில் அதாவது 1975 வரை எனக்குத் தெரிந்து பிள்ளைகள் கூடி ஓடி விளையாடத் தெருக்கள் மந்தைகள் மைதானங்கள் இருந்தன!. எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் வந்து விட்டால் செம்பு நிறைய நீர் மோர் மற்றும் கேழ்வரகு கம்பு சோளம் நிலக்கடலை கருப்பட்டி போன்றவற்றில் தயாரித்த தின்பண்டங்களைக் கொடுத்து கவனமாக விளையாடுங்கள் என்று சொல்லி அனுப்புவார்கள்.
பருவ கால விவசாயம் நடந்து கொண்டிருக்க, தை
பொங்கல், தீபாவளி, ஊர்த் திருவிழாக்கள் என நிறைந்து நிலங்களும் மனிதர்களும் செழிப்பாக- வளமையாக இருந்த காலமும் கூட!.
ஒரு வீடு என்று சராசரியாக எடுத்துக் கொண்டால் தவறாமல் தாத்தா பாட்டி அம்மா அப்பா சில நேரம் அத்தைகள் சித்தப்பா பெரியப்பா அண்ணன் தம்பி தங்கைகள் அக்காக்கள் என பல உறவுகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பார்கள்.
வீட்டு சமையல் அறையில் எல்லோருக்குமான உணவு எப்பவும் இருந்து கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் என்றால் கேட்கவே வேண்டாம். காலை ஆடு மாடுகளின் சாணங்களை அள்ளி எருக் குழியில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு முந்தைய நாள் நீராகாரத்தோடு பழைய கஞ்சி பழைய குழம்புகளை சாப்பிட்டு விட்டு வயல்வெளிக்குச் சென்று விடுவார்கள்.
கால்நடைக்கு பிண்ணாக்கு, பருத்தி விதை ஆட்டி காலையி்ல அதற்கு அந்த தண்ணீரை காட்டுவது… கறவை மாடுகளின் பராமரிப்பு: கறவை மாடுகளுக்குத் தீவனம்மிக முக்கியம். அதற்கு நிறைய பசுந்தீவனம், உலர் தீவனம்அல்லது வைக்கோல் அளிக்கலாம். தீவனம்குறைந்தால் உடனே பால் அளவு குறையும். எனவே, 2.5 லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2 லிட்டருக்கும் ஒரு கிலோ கலப்புத் தீவனம் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். பால் கறந்து, மோரை கடைந்து வெண்னெய் எடுக்கும் பல பணிகள்…
எல்லோருக்கும் ஏதேனும் ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். மூதாட்டிகள் கூட தானியங்களை உலர்த்துவது உலர்ந்த தானியங்களைப் புடைப்பது அவற்றைத் திருகையில் விட்டுத் திரிப்பது ஆடு கோழிகளுக்கு தீனி இடுவது குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் செய்வது என்று பலவேலைகளைச் செய்து கொண்டே இருப்பார்கள். முதிய ஆண்களாக இருந்தால் நொச்சிக்கூடைகளை முடைவது. நாற்றுகளுக்காக விதை நெல்களை ஊறவைப்பது. கோணிப் பைகளை வெயிலில் உலர்த்திச் சுருட்டி வைப்பது. சணல் நூல் திரிப்பது என ஏதாவது ஒரு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பார்கள்.
அக்காலத்தில் பல்வேறு கைத்தொழில்கள் இருந்தன! நெசவு நெய்தல், கயிறு திரித்தல், விவசாய உழு கருவிகளைச் செய்தல் ,செப்பனிடுதல் ,மீன் பிடித்தல், மற்றும் ,மரத்தச்சு வேலைகள் என்று மனிதர்கள் பல்வேறு திறன்களைத் தொழிலாகப் பெற்றிருந்தார்கள்.
உண்ணும் உணவிற்கு ஏதேனும் ஒரு வேலை செய்ய வேண்டும் என்கிற எதார்த்தம் நிறைந்த மனிதர்கள் அவர்கள். யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது
என்பதோடல்லாமல் விளையாடும் சிறுவர் சிறுமியரை அழைத்து தங்கள் சிறிய கைச்சேமிப்பில் இருந்து சில்லரைகளைக் கொடுத்து மகிழ்வார்கள். சில பெரியவர்கள் அந்தக் காலத்தில் தங்களது அரைஞான் கயிற்றில் ஓட்டைக் காலணா என்று சொல்லக்கூடிய செம்பு நாணயங்களைக் கோர்த்து வைத்திருப்பார்கள். பத்து ஊருக்கு ஒரு சந்தை என்று பொருட்களை மலிவு விலையில் வாங்குவதற்கான கடை விரிப்புகள் ஊர்கள் தோறும் இருந்தன. மாட்டு வண்டி செல்லும் மண் தடங்கள் எல்லாம் இன்று தார்ச்சாலை ஆகிவிட்டபின் மனித வாழ்க்கை அதிகப் பொருட்ச் செலவு மிகுந்ததாக ஆகிவிட்டது.
உண்மையில் ஒரு வீடு அது எதனால் கட்டப்பட்டிருந்தாலும் சரி காரை மெத்தை வீடு, கொல்லம் ஓடு,குடிசை மண் சுவர் வைத்து இருந்தாலும் கூட
அதற்குள் பாசமான ஒரு கூட்டுக் குடும்பம் பல உறவுகளோடு புழங்கிக் கொண்டே இருக்கும். சரியாகச் சொன்னால் அந்த கிராமம் முழுக்கவே ஒரு கூட்டு குடும்பம் போல ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டும் நல்லது கெட்டதில் தலையிட்டும் வாழ்ந்தார்கள்.
இடையில் பல்வேறு காரணங்களுக்காக சண்டை சச்சரவுகள் இருந்தாலும் கூட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எப்படியாவது உணவு கொடுத்து விட வேண்டும் என்கிற முறையில் தான் அங்கு நடக்கிற அத்தனை உற்பத்திகளும் வாழ்க்கை முறைகளும் இருக்கும்.
உள்ளூரில் திருமணம் செய்து வரும் வெளியூர் பெண்களும் வெளியூருக்குத் திருமணமாகி போகும் உள்ளூர்ப் பெண்களுமாய் அந்த கிராமங்களும் சிற்றூர்களும் உற்றார் உறவினர் என இயங்கிக் கொண்டிருந்த ஒரு காலம்.
வருடம் தோறும் சித்திரை, தை,ஆடி புராட்டசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் சிறு வீட்டு அம்மன்கள் எனக் கொடை விழாக்களும் ஆங்காங்கே நடக்கும்! சின்னஞ் சிறு கோயில்களில் கூடப் படையல்களும் விருந்தும் கறிச் சோறும் திருவிழாவாக மலர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தும்.
அந்த ஊரை விட்டு எங்கே அவர்கள் சென்றிருந்தாலும் கூட இந்த குலதெய்வ வழிபாட்டுத் திருவிழாக்களில் அவர்கள் அனைவரும் வந்து ஒருங்கிணைந்து அங்கே ஒருவருக்கொருவர் முகம் பார்த்து மகிழ்வார்கள்.
அதுபோலத்தான் வயல் வேலைகள் முடிந்து வந்ததும் இரவு நேரம் சுடச்சுட சோறு சமைத்து சாப்பாட்டின் போது வானத்து நிலவு மினுங்க வாசல் புறத்தில் கூட்டாக அமர்ந்து உணவு உண்பார்கள். அக்கம் பக்கம் பசுக்கள் எருமைகள் ஆடுகளின் கனைப்பொலி இருந்து கொண்டே இருக்கும். மாலை சரியாக 7:00மணி அளவில் ஊர் உறங்க தொடங்கிவிடும். யார் எங்கே உறங்கி கிடப்பார்கள் என்று தெரியாவிட்டாலும் பொழுது விடிந்தவுடன் மறுபடியும் அவர்கள் வேலையைத் தொடங்குவார்கள். அந்த கால பிலிப்ஸ், மர்பி ரேடியோக்களில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி ரேடியோ நிலையங்கள் சொல்லும் செய்திகள் , கொழும்பு கூட்டுஸ்தாபன ரேடியோ நிலையம் திரை கானங்கள் என தெருக்கள் தோறும் யார் வீட்டிலாவது ஒலித்துக் கொண்டிருக்கும். இன்றைய கானாப் பாட்டுகள் போன்று அக்காலப் பாடல்கள் இல்லை. மைசூர் சந்தன சோப்பு, முக பவுடர் என்பது ஆடம்பரம்.
அன்று ஒரு சில வீடுகளில் மட்டும
மேஜை மின் விசிறி அல்லது
ஒர் சீலிங் பேன் இருக்கும்.
மாவு அரைக்க கிரைண்டர்-
மிக்சி இல்லை. ஆட்டு உரல், அம்மி கல்தான் இருக்கும். முறுக்கு, சீடை, பணியாரம், முந்திரிக் கொத்து, சுசியம், அதிரசம் எனப் பல தின் பண்டங்கள்.கிணற்றுக் குடி நீர், பம்பு செட் குளியல் என அன்றாடத்தோடு இணைந்த தட்பவெட்பமான
வாழ்க்கை நிலை!.சனி , புதன் எண்னெய் குளியல் தவறாமல் இருக்கும். இப்படியான பற்பல
தரவுகள் ஞாபகத்தில் உண்டு . அவற்றைச் சொல்ல இந்தப் பத்திகள் போதாது.
இளவட்ட கல், கபடி, சில்லாங் குச்சி, கோலி- தெள்லு விளையாட்டு, பம்பரம், கபடி, வாலிபால் என பல வித விளையாட்டுகள்…..
சினிமா கொட்டகை, ஶ்ரீ மகள் திரைப் பாடல் புத்தகங்கள் மற்றும் கல்கி
ஆனந்த விகடன்,தினமணி கதிர், கலைமகள், மஞ்சரி,
பேசும்படம் என இதன் தீபாவளி மலர்கள்…..
தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் - மதுரை பதிப்பு, தினமலர் - திருநெல்வேலி காலை எட்டு மணிக்கு வரும் . ஆங்கில இந்து கோவில்பட்டி வந்து பிற்பகல் பஸ் மூலம் ஊர்களுக்குள் வரும்.
மதுரை நேவி பேனா….நடராஜ் பென்சில்,
மதுரை ராம விலாஸ் பதிப்பித்த எழுதும் நோட்டுகள்…..
திருநெல்வேலி எஸ்ஆர்எஸ், மெட்ராஸ் பிடி பெல், திருவேனி பதிப்பக பாடப் புத்தகங்கள் என எத்தனையோ பிராயகாலப் பள்ளி நினைவுகள்…
இப்படியாகத்தான் என் சிறு வயது கிராமங்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். தன் வாழ்நாள் முழுக்க செல்லும் இடங்களில் எல்லாம் கால்நடையாகக் கிராமங்கள்தோறும் சுற்றி பார்த்த உத்தமர் காந்தியும் இந்த உற்பத்தி உறவைத்தான் இந்திய மக்களின் உயிர் வாழ்வின் நம்பிக்கையாக
பரிந்துரைத்தார்! இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில்தான் இருக்கிறது என்றும் சொன்னார்.
அப்படியான வாழ்க்கை ஏன் பின்னாளில் சிதையத் துவங்கியது என்பதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக நகர்மயப் போக்கு அதிகரித்து விட்ட 1990களுக்கு பிறகு கூட்டுக் குடும்பங்களில் இருந்து தனிக் குடும்பங்கள் உருவாகின.
கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றிற்காகவும் கூட்டு குடும்பங்களில் பாகப்பிரிவினை போன்ற விஷயங்கள் கோர்ட் வழக்கு வாய்தா என்று அண்ணன் தம்பி பங்காளி உறவுகளுக்குள் நிகழ்ந்த மாற்றங்களால் கூட்டு குடும்பத்தின் பரிமாணம் சரியத் தொடங்கியது.
மூதாதையரும் பெற்றோர்களும் இறந்த பின்னர் உண்டாகும் பாகப்பிரிவினைதான்
சொந்தங்களின் ஒற்றுமை குலைய மிக முக்கியக் காரணியாக இருந்தது என சொல்லலாம். குறிப்பாகச் சொத்து பிரச்சனை!. இந்த சொத்துக்களை பங்கிடும்போது உடன் பிறந்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்து அடுத்தடுத்த சந்ததியில் அவர்களுக்குள் உறவு நீடிப்பதும் உறவு கெட்டு போய் ஒருவருக்கொருவர் எதிரியாகித் தன் வாழ்நாள் முழுவதும் பங்காளியைப் பழி வாங்குவதற்காகவே திட்டங்கள் தீட்டுவதும் தன் பிள்ளைகளுக்கு அதன் தொடர் வன்மத்தை கற்றுத் தருவதும் வாழையடி வாழையாக பல குடும்பங்களில் இப்போதும் கூடத் தொடர்கிறது.
19ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முன் வாழ்ந்த மக்கள் சொத்துப் பிரச்சினை இல்லாமல் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை ஆய்வு செய்தபோது நமக்கு மிகுந்த ஆச்சரியமும் ஆனந்தமும் ஏற்படுகிறது.
அன்றைய காலகட்டத்தில் நமது குடும்பங்களில் பெண்கள் தான் நிர்வாகம் செய்திருக்கிறார்கள் தனக்கு 10 முதல் 11க்கு மேலும் ஆண் பிள்ளைகள் இருந்தாலும் எந்த பிள்ளை கெட்டிக்காரன் எந்தப் பிள்ளை சவலை எந்தப்பிள்ளை ஏமாளி என்பதையெல்லாம் சரியாகக் கணித்து யாருக்கு எப்படிப் பாகம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் செயலைக் குடும்பத் தலைவி ஏற்று இருந்தார்.
இன்னும் விளங்கச் சொல்ல வேண்டுமானால் திறமையான குடும்பத்தோடு கடுமையாக உழைத்த பிள்ளைகளுக்கு குறைந்த பாகமும் குடும்பத்தில் சோம்பேறியாக வேலை வெட்டி செய்யாமல் சும்மா இருந்த பிள்ளைகளுக்கு அல்லது விவரம் இல்லாத பிள்ளைகளுக்கு அதிக அளவிலான பாகமும் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்குள் தான் கூட்டு குடும்பத்தின் தர்மம் அடங்கி இருந்தது.
அந்த நாட்களில் என் தந்தையார் கிராம முனிசீப்பாக இருந்தார்! அவரின் கீழ் தலையாரி, வெட்டியான் என இருவர் இருப்பார்கள்.ஒரு.
பஞ்சாயத்து தலைவரும் இருப்பார். ஜமாபாந்தியில்
தாலுகா ஆபிஸ்சில் வைத்து பல கிராமப் பிரச்சனைகள் பேசப்படும்
கிராமத்தில் பாகப்பிரிவினை நடக்கும் போது ஊர் பஞ்சாயத்தின்
கட்டளைகளுக்கு ஏற்ப நிலம் வீடு பண்ட பாத்திரம் சுவர் வரை இரண்டாக மூன்றாக நான்காக பிரிப்பார்கள்.அப்பிடிக்கிடைத்த சிறிய நிலத்துண்டுகளைக்
கொண்டு ஒரு நிலைத்த உயிர் வாழ்வை அங்கு அவர்களால் வாழ முடியவில்லை. வாழ்ந்த வீட்டை நிலங்களை உறவுகளை விட்டுப் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
இப்படியான பாகப்பிரிவினை போன்றவற்றால் பாரம்பரியமாக வைத்திருந்த சிறு சிறு நிலங்களைக் கூட விற்றுவிட்டு நகரத்திற்கு குடிபோன மக்கள் அன்று அதிகமாகப் பெருக தொடங்கினார்கள். அப்படி நகர் மயமான சிலர் தங்களது சகோதரர்கள் கிராமத்தில் விவசாயத்தை நம்பி மட்டுமே இருப்பதினால் நிலத்தை அவர்களிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லி விட்டு நகரத்திலேயே தங்கி செட்டில் ஆனவர்களும் உண்டு .
பலரும் நகரத்திற்கு சென்று ஏதேனும் ஒரு வேலை செய்து கொள்ளலாம் என்று
புறப்பட்ட கதை தான் நகர்மயமாதல்.
“பட்டணம்தான் போகலாமடி பணம் காசு சேர்க்கலாமடி” என்று சினிமாவில் பாட்டு கூட வந்தது.
பட்டிக்காடா பட்டணமா என்று நகரத்திற்கும் கிராமத்திற்கும் ஆன கலாச்சார சாதிய வெளியேற்றங்கள் 1990 களுக்குப் பிறகு தான் அதிகம் நிகழ்ந்தது.
இத்தகைய நகர் மயமாதல் மட்டுமல்லாமல் வயதானவர்களைப் பேண முடியாமை தன் குழந்தை தன் மனைவி தன் கணவன் தன்பிள்ளைகள் என்ற சுயநலப் போக்கு மிகுந்த போது கூட்டுக்குடும்பங்கள் கண்ணீர் விட்டுக்கொண்டு பிரிந்து போயின.
நகரத்தில் வேலை வாய்ப்பு இருந்தாலும் கூட கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தகைய குடும்பங்களும் கடனில் சிக்கித் தவித்தன. சிறு தொழில்கள் வணிகங்கள் வேலை வாய்ப்புகள் என்று இருந்தாலும் கூட ஒரு நீண்ட கால தன்மையைப் பெற்று அவை எங்கு குடியேறினாலும்
நிலைபெற முடியவில்லை. இதற்கிடையில் இளைஞர்கள் பலர் அன்னிய நாடுகளுக்கு வேலைக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் ஏற்பட்டது.
நாளடைவில் கூட்டுக் குடும்பங்களை இழந்ததன் விளைவுகள் தனிக் குடும்பங்களில் விகாரமாக வெளியே தெரிய ஆரம்பித்தன. அதில் பிரதான பிரச்சனை விவாகரத்து. இவர்களை இணைத்து வைக்க எந்தவித அனுபவம் வாய்ந்த முன்னோர்களின் அறிவுரையோ அவர்களைப் பராமரித்து ஆறுதல் சொல்லி அன்பு செலுத்தக்கூடிய அக்கம்பக்க உறவுகளோ இல்லாத போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே முரண்பாடுகள் பெரிதாகி ஒருவர் ஒருவர் பிரிந்து இன்று தனிப் பெற்றோர் என்கிற நிலையில் சிலர் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனிமையில் வாழ்வதைப் பார்க்க முடிகிறது.
இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் எல்லாம் தனி மனிதர்களையும் பேராசை உள்ளவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது. நவீன உணவுகள் பொருட்கள் ஆடைகள் உடையும் பொருட்கள் எனப் பலவற்றையும் வாங்கி வீடுகளுக்குள் அடைத்து வைத்து உறங்கக் கூட இடமில்லாமல் சிலர் தவிக்கிறார்கள்.
அக்காலத்தில் கிராமப்புறங்களில் இருந்த கை வைத்தியங்கள் முழுவதும் மறக்கடிக்கப்பட்டு விட்டன. வீட்டில் பெரியவர்கள் இருக்கும் போது அதற்கான கை வைத்தியத்தை உடனே எளிதாக செய்து குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். நூற்றுக்கு மேலான கை வைத்தியங்கள் பாட்டி வைத்தியங்கள் இருந்த காலம் போய்விட்டது!இன்று கல்வியும் மருத்துவமும் பெரும் வணிக நிறுவனங்களாக மாறிவிட்ட பிறகு அதற்கான பணத்தை ஈட்டும் வழியை அறிய முடியாமல் பலரும் தடுமாறுகிறார்கள்.
மறைந்த எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களின் கோபல்ல புரம் நாவலில் ரத்தமும் சதையுமான மனித உறவுகள் மிக நுட்பமாக விவரிக்கப்பட்டு இருப்பது போல அக்காலக்கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஒருவர் நிலம் விவசாயங்களைப் பராமரித்துக் கொள்வார். இன்னொருவர் விவசாய விளை பொருட்கள்
கணக்கு வழக்குகள் விற்பனைகளைப் பார்த்துக் கொள்வார். மற்றவர் உற்றார் உறவினர் வீட்டு நல்லது பொல்லதுக்கு செல்ல நேரம் சரியாக இருக்கும்.
மற்றொருவர் கால்நடைகளைப் பராமரிப்பார். மற்றொருவர் குழந்தைகளுக்கான எதிர்கால நலன்களை யோசித்து அவர்களை சரியான முறையில் வளர்க்கத் துணையாக இருப்பார்.
யாருக்கும் தனிமை என்பது இல்லை
பகிர்ந்தளித்து பழக்கப்பட்ட அந்த வேலை திட்டம் அக்கால குடும்ப உறவுகளுக்குள் இணக்கத்தையும் பாசத்தையும் உண்டாக்கியது என்றால் மிகை இல்லை.
கிராமப்புறத்தை மிகவும் மேம்பட்ட அமைதியான, நிம்மதியான வாழ்க்கை என்று சொல்வதற்காக இவற்றை எழுதவில்லை. அங்கும் சில முரண்பாடுகள் வக்கிரங்கள் போட்டிகள் பொறாமைகள் சாதிய விலக்கங்கள் இருந்தன என்றாலும் அவை அனைத்தும் ஒரு வகையாக நிலத்தின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட்டது தான் கடந்த கால நூற்றாண்டுகளின் வரலாறாக இருக்கிறது.
ஒருவகையில் நகர மனிதர்கள் தனி குடும்பங்கள் இத்தகைய உற்பத்தி உறவின் வரலாற்றை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய அடையாளச் சிக்கல்கள் இருக்கின்றன.
இன்றைய மேலை ஐரோப்பிய நாகரிகங்கள் அல்லது குடும்பங்கள் இந்த இழப்பை மறு பரிசீலனை செய்கின்றன. தங்களின் இருப்பை எப்படி வைத்துக் கொண்டு வெளியே பயணம் செய்வது குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி வேலைக்கு போவது குழந்தைகளின் வளர்ச்சிப்போக்கில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் போன்றவற்றால் மனம் உடைந்து போன அவர்கள் மீண்டும் கூட்டு குடும்ப வாழ்வின் கதகதப்பிற்கு ஏங்குகிறார்கள். முதியவர்களும் குழந்தைகளும் இயங்கும் வெளியும் வீடும் ஒருவித மலர்ச்சிக்கும் ஆன்மீக நிலையில் மனிதர்கள் வீடு பேறு காண்பதற்கும் வாய்ப்பாக இருக்கிறது. அது இல்லாமல் எத்தனை நவீன வாழ்வை அவர்கள் மேற்கொண்டாலும் அவர்களது ஆன்மா துயரத்தில் தான் முடிகிறது என்பதை இன்றைய மனித வள ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இன்றைய பொருளாதார மண்டலங்கள் பெரும்பாலும் மனிதத்தன்மை இழந்து பெரும் கேளிக்கையாகவும் ஆடம்பரமாகவும் தங்களை மிகைப் படுத்திக் கொண்டு போவதால் அவை எளிய மனிதரின் வாழ்வை வெளியே தள்ளி விடுகின்றன. வளரும் குழந்தைகள் அவர்களின் மாணவப்பருவம் கல்லூரி பருவம் இன்னும் குடும்பத்திற்குள் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்கும் முன்பு போதை பொருட்களுக்கும் மதுவுக்கும் அடிமையாதல் பொது இடங்களில் சச்சரவு செய்தல் பெண்களை தவறாக புரிந்து கொள்ளுதல்
கைபேசிகளை வைத்துக்கொண்டு கற்பனை செய்தல் என்று அவர்கள் பொது வெளியில் சிதறடிக்கப்படுகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளும் கூட கொரானா நோய்த் தொற்றுக்குப் பிறகு தங்கள் குடும்பங்களை சிறப்பாகக் கட்டமைக்க முயற்சிக்கின்றன. குறிப்பாக தங்கள் வாழ் நிலத்தின் பிராந்தியத்தின் பாரம்பரியமான நினைவுகளை பயிர் செய்யும் முறைகளை சிறு சிறு தொழில்களை கற்றுக் கொள்ளும் பொருட்டு குழந்தைகளுக்கு மனவளமான அவர்களின் கலாச்சார பெருமைகளைச் சொல்லிக் கொடுக்கக் கூட்டுக் குடும்பம் தான் ஏதுவாக இருக்கிறது. அப்படியான நாடுகள் தான் இன்றைக்குச் சுதந்திரச் சிந்தனைகளுடன் இருக்கின்றன.
பாழடைந்த வீட்டின்
ஒன்றும் பாதியுமான எணகளோடு
ஊசலாடிக் கொண்டுருக்கும்
ஒடிசல் கதவில்
ஒட்டியிருக்கும் கைரேகை
கூட்டுக் குடும்பத்தின்
உறவுக் கணக்கு சொல்கிறது…..
- கரிசல் கவிஞர் கனகா பாலன்.
பழைய வடிவங்களில் கூட்டுக் குடும்பங்கள் இருக்க வேண்டும் என்பதை விட இன்றைய நவீன போக்கிற்கு ஏற்ப மீண்டும் கூட்டுக் குடும்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் பழைய நிலையின் விழுமியங்களைக் கைவிட்டு விடாமல் சமகாலத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்! காலத்திற்கு ஏற்ற வடிவில் ஒரு பாதுகாப்பான முறையில் உறவுகளை காக்க - பேண குடும்பக் கல்வி முறைகள் பரவலாக்கப்பட வேண்டும். நாடு இயற்கை மனித நாகரீக வாழ்வு அதனிடைய கலைப் பண்புகளுடன் தேசியப் பற்றுள்ள நடத்தைகள் நம்பிக்கைகள் யாவற்றையும் கொண்டு சட்ட வடிவமற்ற நிலையில் நமக்கு நாமே அனைத்தையும் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
-அரசியலார்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
19-12-2024.