#மார்கழிபாவைநோன்பு
#திருப்பாவை
#மார்கழி 1/29
#ஆண்டாள்தமிழைஆண்டாள்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் !
———————————————————-
மார்கழி பாவை நோன்பு இது ஆண்டுதோறும் மார்கழித் திங்களில் இந்துக் கன்னிப் பெண்கள் கடைபிடிக்கும் நோன்பு ஆகும். அக்காலங்களில் எங்களது கரிசல் பூமியில் இந்த மார்கழி மாத பனி நேரத்தில் அதிகாலை எழுந்து பெண்கள்நீராடி வாசல் தெளித்து கோலம் இட்டு பசுஞ்சாணக் குவியலில் பூசணி பூ வைத்து தூய்மையான ஆடை அணிந்து ஈரக் கூந்தலுடன் அவரவருக்கு விருப்பமான கோவிலிற்குச் சென்று இறை வழிபாடு செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
பெண்ணை பாவை என்று வர்ணிப்பார்கள் கவிஞர்கள்.ஆனால் பாவை என்பது பொம்மை.. சுரூபம் ஆகவே பாவை பாடல் பாவை விரதம் எல்லாம் பெண் பொம்மைகளை வைத்து கொண்டாடும் அற்புதமான ஒரு மரபாகும்.
ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்
மார்கழி மாதத்தில் சிவ பெருமானை வணங்குபவர்கள் திருவெம்பாவை பாடுவார்கள். பெருமாளை வணங்கும் வைணவர்கள் திருப்பாவை பாடுவார்கள். மார்கழியில் நோன்பிருப்பது சிறப்பு. அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு நீராடி பூஜை அறையில் விளக்கேற்றி திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடுவது மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினார். அதுவே திருப்பாவை ஆயிற்று. திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவைஎன்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று.
வடமாநிலத்தில் விஷ்ணுவைப் பாடிய பஜன் அரசி மீரா வை போல
நம் தென் தமிழகத்தில் கண்ணனைக் கோவிந்தனை பாடிய ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் தெய்வம் சூடிக்கொடுத்த அழகி நமது ஆண்டாள் பாடிய பாசுரம் உலகப் பிரசித்தி பெற்றது.
அந்தகைய பாடல் மரபு இன்றைய தமிழ் நவீனக் கவிதைகளிலும் கூட பிரதிபலிக்கிறது. இன்றைய பெண்களின் காதற் பாடல்களின் இடையே ஆன்மீக இழைகளாக ஆண்டாளுடைய கவிதைக்கூறுகள் இருப்பதை நாம் காணலாம்.
“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்றன மற்றகாதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக்
குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்”
இத்தகைய பாடல் மரபு இன்றைய தமிழ் நவீனக் கவிதைகளிலும் கூட பிரதிபலிக்கிறது. இன்றைய பெண்களின் காதற் பாடல்களின் இடையே ஆன்மீக இழைகளாக ஆண்டாளுடைய கவிதைக்கூறுகள் இருப்பதை நாம் காணலாம். தமிழில் பக்தி இலக்கியம் 9 நூற்றாண்டுகளாக கோலோச்சியது!.இன்றைய பின் நவீன காலத்திலும் கூட ஆண்டாள் பாசுரங்களில் தென்படும் வியக்கத்தக்க மொழிதல்களை அந்த இயற்கையை திணையை காலத்தை பொழுதை இப்போது உள்ளவர்களால் எழுத முடியுமா
என்பதே ஒரு சவால்.
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
இந்தக் கவிதைகளைப் படித்ததும் எனக்கு யவனிகா ஸ்ரீராமின் டிசம்பர் மாத குளிர்காலக் கவிதை ஒன்று ஞாபகத்தில் வந்தது.
இரண்டாம் ஜாமம்
அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்க
பல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றன
கருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன்
முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தை
அது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும்
கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்தால்
ஒரு நீண்ட பகல் பொழுதை மகிழ்ச்சியுடன்
அதற்கு ஒப்புக்கொடுப்பேன்
ஒரு லாரி டிரைவரின் வெகுதூரங்களுக்கும்
அணைகளில் வளர்ப்பு மீன்களுக்கு வலை வீசுபவரின்
துள்ளும் புலர்காலைக்கும்
பள்ளிக்குச்செல்லும் சிறார்கள் விடியும் வரை
மூங்கில் கூடைகளில் பூப்பறிக்க
தலை சும்மாட்டில் கட்டிய டார்ச் ஒளி மங்கும் பொழுது
இரவுஷிப்ட் முடிந்து நூற்பாலைப் பேருந்துகள்
பெண்களை ஊருக்குள் இறக்க வரும் தலைகலைந்த வேளையில்
பால் வேகன்கள் ஹார்ன் ஒலிக்க
பத்திரிக்கைக் கட்டுகளைப்பிரித்தனுப்பும் இடத்தில்
இரையும் ஒரு தேனிர் பாய்லர் முன்பு பற்கள்
நடுங்கக் கதகதப்புடன் இந்த மார்கழி குளிர்காலத்திற்கு முகமன் சொல்வேன்.
ஆண்டாள் காலத்து நித்திய கடமைகள் திணை ஒழுங்குகள் ஒருபுறம் இருக்க இந்த நவீன கவிதையில் இன்றைய குளிர் கால காட்சிகள் ஆண்டாள் பாசுரங்களில் வருகிற மாதிரியே நித்ய கடமைகளாக மாறிக் காட்சியளிக்கின்றன.
இன்னும் பல வகையான பெண்கள் கவிதைகளில் ஆண்டாளின் தாக்கங்கள் மொழி வழியான பக்தி இலக்கியத்தின் தொடர்ச்சியாக இருப்பதை ஆழ்ந்த புலமை உள்ளவர்கள் அறிவார்கள்.
அக்காலத்திலேயே இந்த மார்கழித் திங்களை மகிமை செய்த எங்கள் மண்ணின் கன்னியர் குல தெய்வம்
ஆண்டாள் அவதரித்த இந் நன்னாளில் மக்கள் யாவரும் சீரும் சிறப்பு பெற்று செல்வ வளம் அடைந்து உடல் நலமும் பெற்று உயர்வடைய வேண்டி வாழ்த்துகிறேன். Today marks the beginning of the sacred Tamil month of Margazhi, dedicated to Andal, the only woman among the twelve Alvar saints of the Vaishnava tradition.
#மார்கழி1
#திருப்பாவை
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-12-2024.
No comments:
Post a Comment