#அரசியலில்நமதுபணியால்அங்கிகாரம்…
————————————————————————-
எனது அரசியல் வாழ்க்கையானது பாளையங்கோட்டை திருநெல்வேலியில் நான் கல்லூரியில் படித்த காலத்திலிருந்து துவங்கியது. 1972 இல் தொடங்கிய எனது அரசியல் பயணம் இந்த 2025-ல் 53 வருடங்களைத் தொட்டிருக்கின்றது. அக்காலங்களில் நெடுமாறனுடன் இணைந்து காமராஜருடன் பயணித்த காலங்கள் மிகவும் அற்புதமானது. ஸ்தாபன காங்கிரஸ் மற்றும் நெடுமாறனை மைடியர் சன் என அழைத்த இந்திரா காந்தி முரண்பாடுகளுக்கு இடையே பிறகு
அங்கிருந்து வெளியேறி நெடுமாறனுடன் சிறிது காலம் அரசியல் தீவிரத்துடன் பயணித்து அதன் பிறகு திமுக மதிமுக என்று நான் பணியாற்றிய காலங்களில் கூட எனது அரசியல் நிலைமை கவலைக்கிடமாகத் தான் இருந்தது என்பதுதான் உண்மை!. நான் பொருனை சிறப்பாக அதன் தொன்மையோடு மனம் கொள்ளும் தமிழ் கண்டதோர் வையை, பொருநை நதி கரையில் இருக்கும் வண்ணாரப்பேட்டை- திருநெல்வேலி சர்க்யூட் ஹவுஸில் 1972ல் காமராஜரோடு துவங்கிய எனது அன்றைய அரசியல் வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் போலவே இன்று அதன் அருகாமையில் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பாரதிய ஜனதாவின் பெருமை மிக்க தலைவர்களில் ஒருவரும் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஆற்றல்மிக்கத் தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் உரையாற்றும் திடலில் மீண்டும் புத்துணர்ச்சியோடு அவர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தேன். அந்தச் சிறப்புமிக்க மேடையில் அவருக்கு நான் பொன்னாடை போர்த்த முயன்ற போது அவர் புன்னகையுடன்மறுத்து அதே பொன்னாடையை எனக்குப் போர்த்தி என்னைத் தோளோடு அரவணைத்துக் கொண்டார். அச்சமயம் என் கைகளை பிடித்துக் கொண்டு ஹேப்பி ஹேப்பி என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் உற்சாகப்படுத்தி என்னை வரவேற்றுக் கொண்டார். நான் நினைத்துப் பார்க்கிறேன்.அருமை நண்பர் தமிழ்நாட்டின் பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவராக மதிப்பிற்குரிய நண்பர் அண்ணாமலை அவர்கள் இருந்தபோது அவர் மூலம் எனது கிராமத்தில் கிராஃபைட் தொழிற்சாலைக்காக நிலத்தை அகழ்கிற திட்டம் வந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாக நான் அவர்களை ஒருங்கிணைத்து இந்த திட்டம் இங்கே வாழக்கூடிய பூர்வீக விவசாய மக்களைப் பாதிக்கும் என்று விவரமாக எடுத்துச் சொல்லி அமித்ஷா அவர்களிடம் அந்த விண்ணப்பத்தை கொண்டு போய்ச் சமர்ப்பித்த போது அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்த அவர் அத்திட்டத்தை திரும்ப பெற்று ஆறுதல் படுத்தினார். அதன் மூலம் கிட்டத்தட்ட 15 கிராமங்கள் சங்கரன்கோவில் திருவேங்கடம் கோவில்பட்டி வட்ட கிராமங்கள் அத்தகைய பாதிப்பிலிருந்து தப்பித்தன.,
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் கூட வெறும் 10 கிராமங்கள் தான் ஆனால் எங்கள் பகுதியில் 25 கிராமங்கள் அழிவிலிருந்து தப்பித்தன. இதற்காக ஓர் இரண்டு முறை அவரை சந்தித்து இருக்கிறேன் அதன் பிறகு அத்தகைய அன்போடு இன்று அவர் மேடையில் என்னை அரவணைத்துக் கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நான் யாரையும் குறை சொல்லவில்லை. இந்த அரசியல் வாழ்க்கையில் நான் பட்ட காயங்களும் அது ஊமைக்காயங்கள் என்று தான் சொல்ல வேண்டும் அதன் வலி எனக்கு மட்டும்தான் தெரியும். அதைச் சொல்லிப் பயன் ஏதுமில்லை! மீறிச் சொன்னால் ஏதோ புலம்புகிறார் என்று சொல்வார்கள்.
இப்போது நிம்மதியாக இருக்கலாம் ஒரு குடும்பத்திற்கோ அதன் அதிகாரத் தலைமைகளுக்கோ அடி படிய வேண்டிய அடிமை வாழ்க்கை கிடையாது. நான் அரசியல் பணி புரிந்த இடங்களில் தகுதியே தடை என்று அடிக்கடிச் சொல்லுவேன். இனி எனக்கு அந்தத் தடை கிடையாது. எனது தனிப்பட்ட சுயமரியாதையோடும் தேர்வுகளுடன் அதற்குரிய சரியாகச் சொன்னால் தன்மானத்துடனும் மரியாதையுடனும் இருக்கலாம். 54 வருடங்களில் 38 வருடங்கள் முள்ளின் மேல் நான் நடந்த பயணம்.
இது இனி இருக்காது. மிகுந்த அமைதியான ஒரு அரசியல்ப் பயணமாக எனது நிலைப்பாடுகள் நீடிக்கும். அத்தகைய நல்லுறவும் மரியாதையும் கொண்ட தலைவர்களைப் பெற்றது நல் வாய்ப்புகள் தான்.அத்துடன் எங்கள் மண்ணின் மைந்தர் தமிழக. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்களுக்கும் பாஜகவின் முன்னோடிகள் திரு அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அருமைச் சகோதரர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும்,அன்பிற்குரிய எச். ராஜா அவர்களுக்கும்,ஒரு காலத்தில் காங்கிரஸில் குமரி அனந்தனோடு அரசியல் நடத்திய பிறகு அவருடைய மகள் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுடனும் இன்று அரசியல் வாழ்வில் இணைந்து தொடரக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள், சகோதரத்துவத்தோடு என்னை எப்பொழுதும் அன்பு பாராட்டும் வானதி சீனிவாசன் அவர்களுக்கும் யாவும் மிக முக்கியமானவை என்று கருதுகிறேன் இவர்கள் எல்லோரும் என்னை வரவேற்று வாழ்த்தினார்கள் அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் அன்புச் சகோதரர் சக்கரவர்த்தி மத்திய ராஜாங்க அமைச்சர் முருகன் அவர்களுக்கும் அன்பும் நன்றியும்.!இவர்களுக்கு இணையாகவும் அதற்கு மேலும் எனது நண்பர்கள் அரவிந்தமேனனும் சுதாகர் ரெட்டியும் காட்டிய அன்புமும் பாசமும் மறக்க முடியாதது. மற்றும் ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபால்சாமி அவர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். இப்படி பாஜகவின் முக்கியமான ஆளுமைகள் என்னை பாராட்டியது வரவேற்றது அனைத்தும் ஒரு ஊக்கம் கொடுத்தாற் போல எனக்குள் புதிய சக்தி கிடைத்தது போல உணர வைத்தது. நினைத்துப் பார்க்கிறேன் அன்று நெல்லையில் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுடன் இணைந்து நடத்திய போராட்டங்கள் மற்றும்1972 இல் செயின்ஸ் சேவியர் கல்லூரி மாணவர் லூர்து நாதனை பொருநை நதி கொக்கிரகுளம் பாலத்தில் அடித்துக் கொன்ற சம்பவத்தில் நீதி கேட்டு நடத்திய போராட்டங்கள்.இன்றைக்கு அவர் தெற்கு பஜாரில் சிலை வடிவத்தில் நிற்கிறார். அந்தச் சிலையை திறந்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் செல்லப்பாண்டியன் பழ நெடுமாறன் சுதந்திரா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பெப்பின் பெர்னான்டோ இவர்களுடன் நானும் இணைந்து நின்ற அந்த நினைவுகள் இப்பொழுதும் ஞாபகத்தில் நிற்கின்றன. எப்படி கோவில்பட்டியோ அதேபோல திருநெல்வேலி நிலமும் மக்களும் அவர்களுடன் இணைந்த போராட்டங்களும் என் அரசியல் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்று. அத்தகைய நினைவுகளுக்காகவே நான் நிமிரவைக்கும் நெல்லை என்ற ஒரு நூலை எழுதி அது இதுவரை ஐந்து பதிப்புகள் வெளிவந்து அதிகம் கொண்டாடப்பட்ட நூலாகவும் விளங்கியது.இப்பொழுது மேலும் நெல்லையின் சமீப அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து இரண்டு தொகுப்பாக அதே தலைப்பில் அந்நூற்கள் விரைவில் வெளிவர இருக்கின்றது.. என்னை அரவணைத்து ஆதரவு தந்த அத்தனை பாஜக சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த அன்பும் நன்றியும். அந்த வகையில் எனது அரசியல் பணி எப்போதும் போல் எந்தத் தொய்வு இல்லாமலும் இனி தொடர்ந்து இயங்கும். பதவிகள், பொறுப்புகள் கேட்கவு இல்லை. அது தேவை என்ற நிலையில் இல்லை. அரசியலில் நமது பணியால் அங்கிகாரம்… நமது பதவிகள் வைத்து அல்ல
அரசியல் வியாபாரம் இல்லை! ஜனநாயகத்தின் சீரழிவு ஊழல்,வாரிசு அரசியல், ஓட்டுக்கள் விற்பனை !!
நாளை இந்தக் குளத்தில்
நீர் வந்து விடும்
இதன் ஊடே
ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும்
வண்டித் தடங்களை
இனி காண முடியாது
இன்று புல்லைத்
தின்று கொண்டிருக்கும்
ஆடு, நாளை
அந்த இடத்தை
வெறுமையுடன்
சந்திக்கும்
மேலே பறக்கும்
கழுகின் நிழல்
கீழே
கட்டாந்தரையில்
பறப்பதை
நாளை பார்க்க முடியாது
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்து விடும்
என்று எனது பொருனை மண்ணின் கவிஞர் கலாப்பிரியா Tk Kalapria சொல்லுவார். அந்த நம்பிக்கை தான் வாழ்க்கை. பிறகு கண்ணதாசன் சொல்வது போல யாரைஎங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியவில்லை. என்கிற பாடல் தான் இத்தனை அரசியல் வாழ்க்கையிலும் எனக்கு அடிக்கடி ஞாபகத்தில் வரும் தத்துவம்.
காலமும் காட்சிகளும் மாறும் வரை இயங்குவது தான் எனது அரசியல் பணி.
No comments:
Post a Comment