#பொதுத்தேர்தல்1967இல்திமுகவுக்குகைகொடுத்த_எம்ஜிஆர்போஸ்டர்
——————————————————-
1967இல் திமுக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்றதற்கு காரணம் எம்ஜிஆர் குண்டடிப்பட்டு வைத்தியம் செய்து கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட இந்த சுவரொட்டிக் காட்சி தான் முக்கியமானதாக இருந்தது. அப்போதெல்லாம் இப்போது மாதிரியான சமூக ஊடகங்களோ டெலிவிஷன் பெட்டிகளோ கிடையாது. ரேடியோ அலைவரிசைதான் இருந்தது. அது கூட ஒரு ஊரில் இரண்டு மூன்று வீடுகளில் தான் ரேடியோ பெட்டி இருக்கும். இந்தச் சுவரொட்டி திருத்தணியில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் ஆங்காங்கே ஒட்டப்பட்டு மக்களை சிந்திக்க வைத்து அண்ணாவின் வெற்றிக்கு மிக தூண்டுகோலாக வாக்களிக்க வைத்து அவரின் ஆட்சி அமைய பெரும் பின்புலமாக அமைந்தது. அது மட்டுமல்ல மிகப் பலமான கூட்டணியையும் அண்ணா அந்த தேர்தலில் அமைத்திருந்தார். குல்லுகப்பட்டர் என்று அவராலே வர்ணிக்கப்பட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சியையும் மேல் சாதி ஓட்டுக்கள் வேண்டுமென்ற பார்வையில் தன்னுடன் இணைத்துக் கொண்டார். அதே சுதந்திராக் கட்சிக்கு எதிரணியாக இருந்த சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சியையும் தொழிலாளர்களின் ஓட்டுக்காக இணைத்துக் கொண்டார். சிறுபான்மை ஓட்டுகளைக் கவனத்தில் கொண்டு காயிதே மில்லத் அவர்களின் கட்சியையும் சேர்த்துக் கொண்டார். தென் மாவட்டங்களை சேர்ந்த
முக்குலத்தோர்களின் ஓட்டுகளைப் பெற பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் மூக்கையா தேவரையும் இணைத்துக் கொண்டார். அது மட்டுமல்ல சோசிலிஸ்ட் கட்சிகள் பி எஸ் பி எஸ் எஸ் பி இன்னும் சில உதிரிக் கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தார். அதுவே ஒரு வலுவான கூட்டணியாக அமைந்து அண்ணாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தது. அது மட்டுமில்லாமல் தேர்தல் வாக்குறுதியாக ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசியை சென்னையிலும் கோவையிலும் தருவோம்!என்று உறுதி கூறினார்!.
ஏற்கனவே இருந்த காங்கிரஸ் கட்சியில் பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்திஎதிர்ப்பு போராட்டம் மற்றும் ரேஷன் கடைகளில் அரிசி பற்றாக்குறை போன்ற நெருக்கடிகள் இருந்தது. காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தியும் கடுமையான கோப தாபங்களும் இருந்து வந்த சூழலில்தான் கூட்டணி வியூகத்தால் அண்ணா ஆட்சியைப் பிடித்தார். குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆரின் இந்த புகைப்படம் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அன்றைக்கு அண்ணா ஜெயித்து இருக்க முடியாது. எம்ஜிஆரின் மீது தீவிரமான அன்பு கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டம் அவர் மீதான அனுதாபத்தால் தான் திமுகவிற்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்தாபன காங்கிரஸ் காமராஜர் காங்கிரஸ் என்று பிளவுபடாத அந்த நேரத்தில் ஒரே காங்கிரஸ் ஆக இருந்து ஏர் உழவு காளை மாட்டுச் சின்னத்தில் தனியாக நின்று எந்த கட்சியையும் கூட்டணி சேர்க்காமல் போட்டியிட்டார்கள். அப்படி இருந்தும் காங்கிரஸ் திமுகவின் கூட்டணியை விட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று இருந்தது. ஆனால் அவர்கள் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆட்சியை இழந்தார்கள். என்ன செய்வது காலத்தின் கோலம் அப்போது இந்த காரில் உள்ள போஸ்டர் தான் திமுகவைக் காப்பாற்றியது அதை யாரும் மறுக்க முடியாது . இந்த போஸ்டர்தான் அண்ணாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது. அதேபோல அண்ணா மறைந்ததும் கலைஞரை முதலமைச்சராகியதும் எம்ஜிஆர் தான். தொடர்ந்து 1971 தேர்தலின் போது திமுகவிற்காக எம்ஜிஆர் தான் மறுபடியும் தேர்தல் பிரச்சாரத்திற்குச்
சென்றார். சட்டமன்றத் தொகுதியில் 180 இடங்களைப் பிடித்து திமுக வென்றது. அப்போது கலைஞரின் கோபாலபுரம் வீடு கடனில் சிக்கி ஜப்தி அடையும்சூழலில் இருந்த போது முரசொலி மாறன் வேண்டுகோளுக்காக எங்கள் தங்கம் என்ற திரைப்படத்தில் அஞ்சுகம் பிக்சர்ஸ்க் காக எம்ஜிஆர் ஒரு பைசா கூட வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்தார். அந்தக் காலம் இப்படித்தான் இருந்தது
இப்படியாக எம்ஜிஆர் கலைஞருக்கு முழு சப்போர்ட் செய்து அவர் முதலமைச்சர் ஆவதற்கு வழி வகுத்தார். அதைத் திறமையாக பயன்படுத்திக் கொண்டு கலைஞர் மேலே சென்று விட்டார். நெடுஞ்செழியன் அத்தனை திறமையும் சீனியாரிட்டியும் இருந்தும் அவரால் இப்படியான தந்திரங்களைப் பயன்படுத்தி கடைசி வரை முதலமைச்சர் வாய்ப்பைப்பெற முடியவில்லை. இது ஊழ் என்பதா? விதி என்பதா? என்னத்தைச் சொல்ல?
அன்று 1967 இல் இப்படித்தான் standard motor carகள் அதிகம். Ambassador mark two மிக குறைவாகதான் இருக்கும்.
#mgr_dmk
#dmk
#Elections1967
#anna
#kalignar
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
No comments:
Post a Comment