Saturday, April 5, 2025

*இலங்கைக்குபயணம்செய்தஇந்திய_பிரதமர்களும், கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை*

*இலங்கைக்குபயணம்செய்தஇந்திய_பிரதமர்களும், கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை*

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை இலங்கைக்குச் செல்ல உள்ளார். இது அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணமாகும்.

தாய்லாந்து பயணத்தைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மோதி இலங்கைக்கு செல்ல உள்ளார்.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார் இந்தியப் பிரதமர் மோதி.

ஜனாதிபதி அநுர பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு தனது முதல் அரசு பயணத்தை மேற்கொண்டார்.

இந்தியா - இலங்கை உறவுகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வரலாற்று ரீதியான பிணைப்பு உள்ளது.

இலங்கைக்கு பௌத்தம் அறிமுகமாவதற்கு முன்பே, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே மத மற்றும் கலாசார ரீதியிலான உறவுகள் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

சமீபத்திய வரலாற்றைக் கருத்தில் கொண்டால், 1960 களில் இருந்து 65 ஆண்டுகளில் 8 இந்தியப் பிரதமர்கள் இந்தத் தீவுக்குப் பயணம் செய்துள்ளனர்.

1962 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இலங்கைக்குப் பயணம் செய்தார். பின்னர் 1973 ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையிலான சிறந்த உறவுக்கு வரலாறு சாட்சியாக உள்ளது.

கச்சத்தீவின் உரிமை தொடர்பான பிரச்னை தீர்க்கப்பட்ட விதம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி இலங்கையின் பிரதமராக இருந்த பண்டாரநாயக்கவுக்கும் , இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவின் உரிமையை இலங்கை பெற்றது.

1979 ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் மொராஜி தேசாயும்,பின்னர் 1987 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கைக்குப் பயணம் செய்தனர்.

ராணுவ அணிவகுப்பின் போது நடந்த தாக்குதல் சம்பவம், ராஜீவ் காந்தியின் இலங்கைப் பயணம் வரலாற்றில் இடம்பெறக் காரணமானது.

1991 இல் - நரசிம்ம ராவ், 6வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும், 1998 இல், இந்தியப் பிரதமர் வாஜ்பாய்10வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும் இலங்கைக்குப் பயணம் செய்தனர்.

பின்னர் 2008 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 15வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கு பயணம் செய்தார்.

அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு பயணம் செய்தார்.

நான்கு இந்தியப் பிரதமர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதிவுகளின்படி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள்:

நேரு - கொத்தலாவல ஒப்பந்தம் - 1954.

இந்திய அரசியலமைப்புப் பிரிவு 8 இன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட தேதியில் (ஜனவரி 26, 1950) இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமையைப் பெற அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள இந்திய தூதரகங்களில் இந்தப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அந்த நேரத்தில் இலங்கையில் வாழ்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களை தங்க வைப்பதற்கு போதிய இடம் இல்லை

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு குறுகியதாக இருந்ததால், 1949 ஆம் ஆண்டின் 03 ஆம் எண் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களுக்கான காலக்கெடுவை பூர்த்தி செய்யத் தவறிய இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இந்த விஷயத்தில் தீர்வு பெறுவதற்காக தொடர்ந்து காத்திருக்க வேண்டியிருந்தது.

இது ஒரு பெரிய சிக்கலாகத் தொடர்ந்தது. இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ குடியுரிமை இல்லாமல் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து இலங்கையில் தங்கியிருந்தனர்.

அந்தப் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில், 1954 அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஒரு மாநாடு நடைபெற்றது.

குடியுரிமைக்காக காத்திருந்த மக்கள் இலங்கை குடிமக்களாக அங்கீகரிக்கப்படும் வரை இந்திய குடிமக்களாகவே இருப்பார்கள் என்று இலங்கை தூதுக்குழு கருதியது.

இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் விரும்பினால் இந்திய குடிமக்களாகப் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக இந்தியக் குழு ஒப்புக்கொண்டது.

இலங்கைக் குழுவிற்கு அப்போதைய பிரதமர் சர் ஜான் கொத்தலாவல தலைமை தாங்கினார்.

இந்தியக் குழுவிற்கு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார்.

இரு பிரதமர்களும் 1954 அக்டோபர் 10 அன்று டெல்லியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் நேரு-கொத்தலாவல ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தம் பிரச்னையை முழுமையாக தீர்க்கவில்லை.

 
கச்சத்தீவு ஒப்பந்தம்:

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவுகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இலங்கை பிரதமர் பண்டாரநாயக்க - இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே ஜூன் 26, 1974 அன்று கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவின் உரிமையை இலங்கை பெற்றது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லை பிரிக்கப்படும்போது அங்குள்ள கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டு இந்திய-இலங்கைத் தலைவர்கள் கையெழுத்திட்ட மற்றொரு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவைச் சுற்றி மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்:

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இலங்கைக்குள் சுதந்திரமாக நுழைந்த இந்தியர்களின் எண்ணிக்கை, அதில் சட்டவிரோதமாக நுழைந்து உள்ளூர் மக்களுடன் இணைந்தவர்களுடன் சேர்த்து, லட்சக்கணக்கானதாக இருந்தது.

இந்த தேசிய சிக்கல் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

1964 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டதாக குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, 1964 அக்டோபர் 30 ஆம் தேதி முடிவடைந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் நாடற்றவர்களின் எண்ணிக்கை 30.10.1964 நிலவரப்படி, 975,000 என மதிப்பிடப்பட்டது.

பின்னர் 300,000 நபர்களுக்கு இலங்கை குடியுரிமையும் 525,000 நபர்களுக்கு இந்திய குடியுரிமையும் வழங்க இருதரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டது.

1974 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில் , மீதமுள்ள 150,000 மக்களை இரு நாடுகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இலங்கைக்கான எண்ணிக்கை 375,000 ஆகவும், இந்தியாவிற்கான எண்ணிக்கை 600,000 ஆகவும் மாற்றப்பட்டது.

1987 ஆம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம்:

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1987 ஜூலை 29 அன்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில், நாட்டில் எதிர்ப்பு கிளம்பியதற்கு மத்தியிலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கை உள்நாட்டுப் போரின் ஒரு திருப்புமுனையாக இது கருதப்பட்டது.

அனைத்து மிதவாத, ஆயுத குழு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீதும் விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமற்ற தடையை அறிவித்து அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட சூழலில், அமிர்தலிங்கம், சிவசித்தம்பரம் மற்றும் சம்பந்தன் போன்ற மிதவாத தமிழ்த் தலைவர்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில், அதிகரித்து வரும் ராணுவ சூழலை முடிவுக்கு கொண்டு வந்து, இந்தியாவின் ஆதரவுடன் இலங்கையில் தமிழ் தேசியப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வை எட்டுவதே அமிர்தலிங்கம் மற்றும் சம்பந்தன் போன்ற தலைவர்களின் முக்கிய முயற்சியாக இருந்தது.

இதற்கிடையில், பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனா கையெழுத்திட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் போர் நிறுத்தம் தொடங்கியது. போர்நிறுத்த அடையாளமாக புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்ததன் மூலம், நாட்டிற்கு வெளியே இருந்த தமிழ் தலைவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.

மேலும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரதமர் மோதியின் ஆட்சிக்காலம்
சமீபத்தில், 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் கீழ் செயல்படும் பிரதமர் மோதியின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளன.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் போது இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கிய முதல் நாடாக இந்தியா விளங்கியது.

பின்னர், 2022-ஆம் ஆண்டில், இலங்கை அதன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, அதற்குத் தேவையான எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவைப் பெற இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் மதிப்புடைய உதவியை வழங்கியது.

ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கைக்கு பிரதமர் மோதி பயணம் செய்தார். தாக்குதலுக்கு பிறகு, இலங்கைக்கு முதல் பயணம் மேற்கொண்ட ஒரு நாட்டின் தலைவராக மோதி விளங்கினார்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண அறிவுரைகளை வெளியிட்டிருந்த சூழலில், இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் பெற்றது.

2017 சர்வதேச வெசாக் விழாவின் விருந்தினர்
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார்.

மார்ச் 14, 2015 அன்று, நரேந்திர மோதி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மிக நெருக்கமான தொடர்பு பௌத்தம் என்று கூறிய இந்தியப் பிரதமர், இந்திய அரசு மற்றும் சமூகத்தின் இன்றியமையாத பகுதியாக பௌத்தம் மாறிவிட்டது என்றும், அது சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஹட்டன் நோர்வூட் பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட டிக்கோயா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.

நரேந்திர மோதியின் முதல் இலங்கைப் பயணம் ஏன் சிறப்பு வாய்ந்தது?

மோதி இந்தியப் பிரதமாக தேர்வான பிறகு, 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார். இந்தியப் பிரதமர் ஒருவர் கடைசியாக இலங்கைக்கு பயணம் செய்தது சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு.

1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மீதான தாக்குதலுக்குப் பிறகு, இந்தியத் தலைவர்கள் குறைவாகவே இலங்கைக்குப் பயணம் செய்தனர்.

முன்னதாக, 2008 ஆம் ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மட்டுமே இலங்கைக்குச் சென்றார்.

2015 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் செய்த இந்தியப் பிரதமர் மோதி, அனுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மகா போதியையும் வழிபட்டார்.

இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு முதல் முறையாக பயணம் செய்தார் என்ற வரலாற்றுப் பெருமையும் கிடைத்தது.

யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுடன் கட்டப்பட்ட வீடுகளை இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு ஒப்படைக்கும் விழாவில், அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து கலந்து கொண்டார்.

- பிபிசி
#KSR post
5-4-2025


Friday, April 4, 2025

கச்சத்தீவு குறித்த சில அறியாத விஷயங்கள்!

#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! 
———————————————————-
கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இலங்கையை ஆண்ட போது  1921 வது வருட காலங்களிலேயே கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்று சொல்லிவிட்டார்கள். அது குறிப்பாக ராமநாதபுர அரசருக்குச் சொந்தமானது என்பதில் ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கான ரெக்கார்டுகள் இருக்கின்றன. அன்றைய இலங்கையின் வரைபடத்திலும் கட்சத்தீவு இந்தியாவின் பகுதியாகவே தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்திலும் கட்சத்தீவு சேர்க்கப்பட்டிருந்தது! கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே இவையெல்லாம் பேசி முடிவு செய்யப்பட்டவைதான்!
பிறகு ஒரு காலகட்டத்தில் அரசு குடியரசு தின விழாஒன்றை டெல்லியில் மத்திய அரசு   ஶ்ரீமாவோ பண்டாரநாயக வை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார்கள். பண்டாரநாயக கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு திரும்ப இரண்டு மூன்று நாட்கள் தாமதமாகிவிட்டது! பிரதமர் இந்திராகாந்தி கூட அதிகாரிகளை அழைத்து என்ன ஶ்ரீமாவோ பண்டாரநாயக இந்தியாவைச் சுற்றிப் பார்க்கிறாரா சிங்களராக இருப்பதால் புத்தகயாவை சென்று பார்த்துவிட்டுத் திரும்புகிறாரா?  இல்லை உடல்நிலை ஏதும் சரி இல்லையா?ஏன் இன்னும் இலங்கைக்கு திரும்பவில்லை என்றெல்லாம் கேட்டிருக்கிறார்!

இல்லை ஏதோ உங்களிடம் பேச வேண்டும் என்று காத்திருக்கிறார் ஆனால் தயக்கத்துடன் இருக்கிறார் என்பதாக அவரிடம் சொல்லப்பட்டது.
உடனே இந்திரா அம்மையார் அவரை தனது வீட்டிற்கு அழைத்து வீட்டின் பின் வாரண்டாவில் அமர வைத்துப் பேசுகிறார்.அவரது உடல்நிலை பற்றியும் இந்தியாவைச் சுற்றி பார்க்கிறீர்களா என்றெல்லாம் ஆதுரமாக விசாரிக்கிறார்! பண்டார நாயகா ஏதும் பேசாமல் மௌனமாய் இருக்கிறார்!

ஆனால் அவருடன் வந்த இலங்கை வெளி விவகாரத் துறை செயலார் விசயத்தைப் போட்டு உடைக்கிறார்! நாங்கள் கசசத் தீவை எங்களுக்குத் தருமாறு கேட்டு வந்திருக்கிறோம் என்று சொல்கிறார்!

 உடனே இந்திரா அம்மையார் அதை எப்படிக் கொடுக்க முடியும்? அது தமிழ்நாட்டின் சொந்தமானது அதை உங்களுக்குக் கொடுப்பது  மிகுந்த சிரமமானது என்று சொல்லுகிறார்!
பிறகு ஏதோ சமாதானமாக பேசி  இருங்கள் பார்க்கலாம் என்றுவிட்ட பிறகு இந்த தகவல் சென்னையில்  முதல்வர் கலைஞருக்கு உடனே தெரிவிக்கப்பட்டது! கலைஞர் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை! பிறகு கேவல்சிங்கும் சட்ட நிபுணர் டி கே பாஸும் டெல்லியில் இருந்து வந்து கலைஞரைச் சென்னைக் கோட்டையில் சந்திக்கிறார்கள்.!
அவ்வாறு சந்திக்கும்போது இலங்கை கச்சத்தீவை தங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறது! அதுக்கு பதிலாக இரண்டு வெற்று மணல் பரப்புள்ள சிறு கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள்! என்று சொல்ல….

முதலில் அது எப்படி முடியும்? என்று கேட்ட கலைஞர் கவனமாக யோசித்து இந்த பிரச்சனையை ஒரு இரண்டு வருடம் தள்ளிப் போடுங்கள் என்று சொல்லுகிறார்! சட்டபூர்வமாக இப்பொழுது முடியாது வேண்டுமானால் அமைதியாக அதை வைத்துக் கொண்டிருங்கள் என்றும் சொல்கிறார்.

அதன் பிறகு கலைஞர் இது குறித்துக் கட்சி கூட்டங்களையும் செயற்குழுவையும் கூட்டி ஆலோசிக்கிறார்! அது பெரும்பாலும் கச்சத்தீவை கொடுக்க கூடாது என்கிற முடிவை எட்டி இருந்தாலும்  கலைஞருக்கு அது சொல்லப்பட்டு  விட்டது என்பதனால் அதன் நிர்பந்தம் தெரிந்தே இருக்கிறது.

பிறகு 1974 இல் கச்சதீவை இலங்கைக்கு கொடுப்பதற்கான ஒப்பந்தம் கலைஞரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தம் 1976-ல் போடப்பட்ட போது கலைஞர் ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். ஆக இரண்டாவது ஒப்பந்தமும் முடிந்தது !இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஒப்பந்தமானது இரண்டு நாட்டு பிரதமர்களும் அருகருகே அமர்ந்து கையெழுத்து போட்டு நடக்கவில்லை.

இந்திரா காந்தி அம்மையார் டெல்லியில் கையெழுத்துப் போட்டு அனுப்புகிறார்! அந்த ஒப்பந்தத்தில் பண்டாரநாயக இலங்கையில் இருந்து கையெழுத்துப் போடுகிறார். இந்த  ஏற்பாடுகள் எல்லாம் இருநாட்டு வெளி விவகாரத் துறை செயலாளர்கள் கடினமூலமாகவே நடந்தது!

எம்ஜிஆர் எப்படி சட்ட  மேலவை தீர்மானம் இல்லாமல் சட்டமேல் சபையைக் மத்திய அரசுக்கு கடிதங்கள் மூலம் கலைத்தாரோ அது போலவும் இதுவும் நடந்தது!

அன்றைய ஜன சங்கத்தின் தமிழ்நாடு தலைவராக இருந்த  மதுரை ஜனா கிருஷ்ணமூர்த்தி இதை எதிர்த்து வழக்கு போட வேண்டும் என்று சொன்னார். இது சம்பந்தமாக நானும் நெடுமாறனும் கூட தீவிரமாக இதை மறுக்க வேண்டும் என்றெல்லாம் பேசினோம். குறிப்பாகச் சொன்னால் அந்த வழக்கிறாக நான் ஜனா கிருஷ்ணமூர்த்திக்கு அதிகம் உதவிகள் செய்தேன்! உயர் நீதிமன்றத்தில் இந்த எதிர் வழக்கு ரிட் பெட்டிஷன் ஒரு எண்ணாகக் கூடப் பதிவு செய்ய மறுக்கப்பட்டது. ரிஜிஸ்டாரைக் கேட்டு தலைமை நீதிபதி பேசிய பிறகுதான் அது வழக்கு எண்ணாகப் பதியப்பட்டது அப்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி அவர்கள் தான் தலைமை நீதிபதியாக இருந்தார்! அவர் நம்பர் பண்ணுங்கள் என்று சொல்லி ஒத்துக் கொண்டார். அதன் பிறகு தான் வழக்கு பதிவானது! எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட போது அதற்கு வாதாடிய அவர் வாரிசான குருசாமி நாயக்கரை ஒரு தந்தியடித்து நாங்கள் காப்பாற்றினோமோ அதுபோலத்தான் இந்த கட்சி விவகாரத்தில் இந்த வழக்கைப் பதிவதற்கு அவ்வளவு சிரமப்பட்டோம். இப்படிக் கச்சத்தீவு விவகாரத்தில் பல நுணுக்கமான இன்றைக்கு உள்ள சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் யாருக்குமே தெரியாத பல விஷயங்கள் அடங்கியுள்ளன. இவற்றையெல்லாம் இன்று யாரும் இந்த வரலாற்று செய்திகளை பேச மாட்டார்கள்.

வெறுமனே கட்சத்தீவை மீட்போம் மீட்போம் என்று இப்போது வாய்ச்சவடால் அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது!

நிரந்தரத் தீர்வு தேவை!

கடலில் அத்துமீறி தங்கள் எல்லைக்குள் புகுவதாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடர்கிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மீனவர்கள் கைது பிரச்னைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.
கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்தபோது இரண்டு விசைப்படகுகளுடன் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் கடந்த 2024,அக். 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த அக். 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
நிகழாண்டில் மட்டும் இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் 30-ஆக அதிகரித்துள்ளது எனவும், 140 மீனவர்களுடன் 200 மீன்பிடிப் படகுகளும் இலங்கை அரசு வசம் உள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை ( 2024-நவ.10) கைது செய்துள்ளனர். நிகழாண்டில் மட்டும் 350-க்கும் அதிகமான மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடித்துள்ளது. இவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண இரு நாடுகளின் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று கூட்டுப் பணிக்குழுவின் 6-ஆவது கூட்டம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் கொழும்பில் கடந்த 2024,அக். 29-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக மீனவர்களுக்கு எதிராக படை பலத்தை தவிர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இதற்கு முன்பு, கைது செய்யப்படும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்; இந்திய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்படுவார்கள். இப்போது இந்த நடைமுறை தொடர்ந்தாலும் தமிழக மீனவர்கள் புதுவிதமான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். கைது செய்யப்படும் மீனவர்களுக்கு பல மாதங்கள் சிறைத் தண்டனையும் கடுமையான அபராதமும் விதிக்கப்படுகின்றன.
கடந்த ஜூலையில் மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு இலங்கை பண மதிப்பில் தலா ரூ. 42 லட்சமும், 10 பேருக்கு தலா ரூ. 35 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று, கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 35 லட்சமும், 23 பேருக்கு தலா ரூ. 10 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அந்த நாட்டு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்தப் படகுகளை மீட்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. படகுகள் பல மாதங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதால் தொழில் ரீதியாக மீனவர்கள் கடும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள படகுகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுகின்றன.
இது ஒருபுறம் இருக்க, தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன்வளம் குறைந்து தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை வடக்குப் பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்ற போக்கை போக்கி இரு தரப்பில் பேசி தீர்வு ஏற்படவேண்டும். கச்சத்தீவு அருகில் சீனா காரர்கள் இருப்பு வேறு இருக்கிறது . சீனா காற்றாடி மின உற்பத்தி செய்ய இந்த தீவுகளை இரமேஸ்வரம் 14 கிமீ தொலைவில் குத்தகைக்கு எடுத்துள்ளன. இலங்கையை சுற்றி இந்து மகாசமுத்திரம், வங்க கடலில் சீனாவின் நடமாட்டம் இந்திய பாதுகாப்புக்கு நல்லது அல்ல.

#கச்சத்தீவு
#kathatheevu
#ChinaSriLanka
#இலங்கை_சீனா
#இந்துமகாசமுத்திரம்
#indianocean

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-4-2025.


Tuesday, April 1, 2025

#வடக்கெல்லை மீட்பு #தமிழகத்தில் திருத்தணி இணைப்பு #இதே நாளில் ஏப்1,1960

#வடக்கெல்லை மீட்பு 
#தமிழகத்தில் திருத்தணி இணைப்பு #இதே நாளில் ஏப்1,1960
———————————————————
1956 வது வருடம் நவம்பர் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி-செங்கோட்டை கேரளாவில் இருந்து விடுபட்டு நம்முடன் இணைந்தது. திருத்தணி அப்போது ஆந்திராவை விட்டு நம்மோடு இணையவில்லை.

ம பொசி, மங்கலக்கிழார், விநாயகம் போன்ற பல்வேறு ஆளுமைகளும் அவ்விதமான அரசியல் நோக்காளர்களும்  தீவிரமாகப் போராடித்தான் திருத்தணியைப் பெற்று தந்தனர். அத்துடன் ஆந்திராவில் இருந்து நம்மோடு வரவேண்டிய சித்தூர் நெல்லூர் திருப்பதி காளகஸ்தி போன்ற இடங்களையும் இழந்தோம் என்பதையும் மறந்து விடக்கூடாது.. இதே ஏப்ரல் 1ஆம் தேதி தான் திருத்தணி 1960 இல் நம்முடன் இணைந்தது. இந்த வரலாற்றின் மேல் எந்த அக்கறையும் இல்லாதவர்கள் தான் இப்போது தெரியாமல் இருக்கிறார்கள்! மட்டுமல்ல அவற்றின் மீது ஒரு நாட்டமும் அவர்களுக்கு இல்லை! இந்த நாள் குறித்த எந்த மனப்பதிவும் இல்லாதவர்கள் தான் இப்போது அரசியலில் வாழ்கிறார்கள்! வரலாற்றைத் திரும்பப் பார்ப்பதன் மூலமாகத்தான் நிகழ்காலத்தை எதிர்காலத்தை சரி செய்ய முடியும் என்பதை உணர்ந்த எங்களைப் போன்றவர்கள் தான் இந்த விஷயங்களை மறுபடியும் நினைவு படுத்த வேண்டி இருக்கிறது!

 1956 இல்  இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமானால் நில அடிப்படையில் வட வேங்கடம் தொட்டுத் தென்பகுதி குமரி வரை ஆதித் தமிழகம் இருந்தது  என்ற கூற்றுக்கு இணங்க தமிழகத்தின் தமிழ் பேசும் தாயகப் பகுதியான  திருப்பதியையும் திருத்தணியையும்  மொழிவாரி மாநிலத்திட்டத்தால் ஆந்திராவிடம் இழந்து மக்கள் தவித்தனர். 1957ஆம் ஆண்டு எல்லை ஆணையராக இருந்த எச்வி படாஸ்கர் தமிழகப் பகுதிகளாக விளங்கிய திருத்தணி திருவாலங்காடு வள்ளி மலை போன்றவை தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று தன் ஆணையில் குறிப்பிட்டு இருந்தார். அது தமிழக மக்களுக்கு ஆறுதலாக இருந்த வேலையில் அன்றைய பிரதமர் நேரு அந்த இணைப்பைச் செய்ய விடாமல் தாமதப்படுத்தினார்! பல முட்டுக்கட்டைகளுக்கிடையே தமிழகத்தின் வடக்கு எல்லை பாதுகாவலராக இருந்த மபொ சி  மிக வன்மையாக அதைக் கண்டித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
  அதன் அடிப்படையில் பின்வாங்காத பல போராட்டங்களையும் நடத்தினார்.

அதன் பிறகு 1960 நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்த போது எவ்விதத் திருத்தமும் இன்றி திருத்தணி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அதற்கான மசோதா சட்டமாகவும் ஆக்கப்பட்டது.

தமிழகத்துடன் திருத்தணி இணைந்த இந்த நாளில் (01-04-1960)
திருத்தணி மீட்புக்காக போராடிய
 ம பொ சி  மங்கலக்கிழார் விநாயகம் போன்ற தியாகிகளை தமிழ் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்!

“திருத்தமிழ்க்கு உயர்திசைச் சிறப்புடைத் திருத்தணிகை” என்று -அருணகிரி நாதர்(திருப்புகழ்)

விசால ஆந்திரம் கேட்டு 1953ஆம் ஆண்டு தீவிரமாக போரடிய போது சித்தூர் மாவட்டத்தில் ஆறு பகுதிகளை  ஆந்திர மாநிலத்தில் சேர்ந்து விட்டது.அதில் மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் அடங்கும்.

1946ஆம் ஆண்டிலிருந்து-

“வேங்கடத்தை விட மாட்டோம்,
வேங்கடமே தமிழகத்தின் எல்லை,
தணிகை தமிழருக்கே”
- தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி
அப்போது தமிழ்நாட்டில் திராவிடநாடு முழக்கத்தை பெரியார், அண்ணா போன்றவர்கள் எழுப்பினர்

ஆந்திரர்கள் தலைநகரான சென்னையைக் கூட உரிமை கொண்டாடி கேட்க முடிந்தது. ஆனால் ராஜாஜி, ம.பொ.சிவஞானம் கடுமையாக இதை எதிர்ப்பு தெரிவித்தனர்.

நல்ல வேளையாக சென்னை மீட்புப் போரிலும், “தலையிட்டு தலையைக் கொடுத்தேனும் தலை நகரை காப்பேன்” என்று ம.பொ.சி. முழக்கமிட்டார். அந்த முழக்கத்திற்கு நல்ல பலனும் கிடைத்தது.

சென்னையை அரசியல் தளமாகக் கொண்டு இயங்கிய தமிழகக் கட்சிகள் எல்லாம் வேறு வழியின்றி சென்னை மீட்புக் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டன. முதல்வர் இராஜாஜி துணையோடு சென்னை தமிழர் வசமானது. ஆனால், சென்னையை மீட்க ஒத்துழைத்த பேராய, பொதுவுடைமை, திராவிட இயக்கக் கட்சிகளெல்லாம் வட வேங்கட மீட்புக் கிளர்ச்சிக்கு ம.பொ.சி. அழைத்த போது ஒதுங்கியே நின்று வேடிக்கை பார்த்தன.
ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டக்குழுவை உருவாக்கி சித்தூர், புத்தூர்,திருத்தணி ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பும், தொடர் வண்டி முன்பும் மறியல் போராட்டங்களை நடத்தி வந்தார். இவருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தது. அவர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக 3.7.1953இல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பகுதிகள் குறித்து ஆராய எல்லை ஆணையம் அமைக்க நேரு ஒப்புக் கொண்டார். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நேரு ஒப்புக் கொண்டபடி எல்லை ஆணையம் அமைக்க வில்லை.

ஒவ்வொரு ஆண்டும் சூலை 3ஆம் நாள் வடக்கெல்லை பாதுகாப்பு குழு சார்பாக எல்லை ஆணைய நாள் கொண்டாடப் பட்டது. நேரு அரசாங்கம் இதையெல்லாம் பொருட்படுத்த மறுத்தது.

இதற்கிடையில், 1.11.1954இல் தமிழில் கூட்ட நடவடிக்கைகளை நடத்தியதாகக் கூறி தமிழர்களால் ஆளப்பட்டு வந்த திருத்தணிகை பஞ்சாயத்து சபையை ஆந்திர அரசு கலைத்தது.

ம.பொ.சி. தலைமையில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு மீண்டும் கூடியது. அது மீண்டும் வடக்கெல்லைப் போராட்டத்தின் இரண்டாம் கட்டப் போரை தொடங்கப் போவதாக அறிவித்தது. போராட்டத் தளபதியாக விநாயகம் அறிவிக்கப்பட்டார்.

15.10.1956இல் தமிழகமெங்கும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அதுபோல் ரயில் வண்டி சங்கிலியை இழுத்து தொடர்வண்டி நிறுத்தப் போராட்டம் நடத்தியதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பி.கோவிந்தசாமி இராஜ முந்திரி சிறையிலும், மாணிக்கம் பழனி சிறையிலும் மாண்டனர். போராட்டத்தைக் கண்டு அச்சமுற்ற தமிழக காங்கிரசு அரசும், ஆந்திர அரசும் தங்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.

இதனையே காரணமாக காட்டி எல்லை ஆணையம் அமைக்க முடியாது என்று நேரு அரசு கைவிரித்தது. பேச்சு வார்த்தை நாடகம் தோல்வியுற்ற நிலையில் 1956ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படாஸ்கர் என்பவர் தலைமையில் எல்லை ஆணையம் அமைக்கப்படுவதாக நேரு அறிவித்தார்.

1957ஆம் ஆண்டு வெளிவந்த படாஸ்கர் ஆணையத் தீர்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டு திருத்தணிகையை தமிழகத்தோடு இணைப்பதற்கு நேரு அரசு வழக்கப் போல் காலம் கடத்தியது.

நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கு/சட்டம் ஆக்குவதற்கு திருத்தணிகை அன்றைய சபாநாயகர் அனந்த சயனம் அய்யங்கார், வட நாட்டு  நாடாளுமன்ற  உறுப்பினர் பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியோர் திருத்தணி இணைப்பு மசோதாவை தடுக்க முற்பட்டனர்.

1959ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட இணைப்பு மசோதா நவம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதைக் கண்டித்து திருத்தணிகை பஞ்சாயத்து சபை கண்டன தீர்மானம் நிறைவேற்றியது. ம.பொ.சி. மத்திய அரசை வன்மையாகக் கண்டித்து கடிதம் எழுதினார். அதன் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 1.4.1960இல் நடைபெற்றது. அப்போது எவ்வித திருத்தமும் இன்றி திருத்தணி இணைப்பு மசோதா சட்டமாக்கப்பட்டது.

வடக்கெல்லை மீட்புக்காக போராடிய மங்கலகிழார், ம.பொ.சி., தளபதி விநாயகம், மேயர் செங்கல்வராயன், கோல்டன் ந.சுப்பிரமணியம், திருத்தணிகை பஞ்சாயத்து தலைவர் சரவணய்யா, என்.ஏ.ரசீது மற்றும் சிறை சென்ற போராளிகளை இன்று நினைவு கூறுவோம்!

#வடக்கெல்லைமீட்பு 
#தமிழகத்தில்திருத்தணிஇணைப்பு 

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
1-4-2025


Sunday, March 30, 2025

#ஆனந்தரங்கம்பிள்ளை #பிரெஞ்ச்டூப்ளே #ராபர்ட்கிளைவ் #வரலாறு

#ஆனந்தரங்கம்பிள்ளை #பிரெஞ்ச்டூப்ளே
#ராபர்ட்கிளைவ்
#வரலாறு 
————————————
அன்று மொகலாயருக்கு அடிமையாக இருந்த கதையினையும், அந்த மொகலாயருக்கு முன் யார் யார் தமிழகத்தை ஆட்சி செய்தார்கள் என்பதையும் சொல்கின்றது

ஆற்காடு நவாப் மொகபாய பிரதிநிதியாக இருந்ததையும், அவுரங்கசீப்புக்கு பின் பலமிழந்த, மராட்டியரால் நொறுக்கபட்ட மொகலாயத்தால் மொத்த இந்தியாவினையும் ஆளமுடியாமல் போக, அங்கே ஆற்காடு நவாப் இனி தமிழகம் தன் சுல்தானியம் என அமர்ந்ததையும், மொகலாயமே இல்லை உனக்கேன் வரி என தமிழக நாயக்கர்களும் இந்து மன்னர்களும் எழுந்த வரலாற்றை சொல்கின்றது







இனி இந்தியாவில் மொகலாய ஆட்சி இல்லை இனி இந்துக்கள் ஆட்சி என்ற நிலை வந்தபோது தமிழக கடற்கரையில் அன்று கோவா பக்கம் வீரசிவாஜியால் ஒடுக்கபட்ட தனி கிறிஸ்தவ ராஜ்ஜியம் இனி தமிழக கடற்கரையில் சாத்தியம் என திட்டமிட்ட பிரெஞ்ச் டூப்ளே காலத்து கதையினை சொல்கின்றது

ஆம், ஆனந்தரங்கம் பிள்ளையின் நூல் வரலற்று சாட்சி

17ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பெரும் போர் ஐரோப்பியரால் நிகழ்த்தபட்டன, காரணம் அவர்களா என்றால் இல்லை

இங்கிருந்த ஆப்கானியரான ஆற்காடு நவாபின் குடும்பம் வாரிசு சண்டையில் ஐரோப்பிய கம்பெனியார் உதவியினை கேட்க ராபர்ட் கிளைவும் டுப்ளெவும் ஆளுக்கொரு பக்கம் குதித்தனர்

பிரிட்டிசாருக்கு சென்னையிலும்  கடலூரிலும் கோட்டைகள் இருந்தன, ப்ரெஞ்சுகாரருக்கு பாண்டிச்சேரியில் கோட்டை இருந்தது

முதலில் கிளைவும் டுப்ளெவும் ஆற்காடு நவாபின் வாரிசுகளுக்கு ஆதரவாக மோதினாலும், ஒரு கட்டத்தில் நவாபினை தள்ளிவிட்டு இவர்கள் இருவரும் பகிரங்கமாக மோதினார்கள்

இதில் சென்னை கோட்டையே சில நேரம் டூப்ளேவால் கைபற்றபபட்டது, இறுதியில் ராபர்ட் கிளைவின் அடி முன்னால் நிற்க முடியாது ஓடிய பிரான்ஸ் படை அன்று பிரான்சில் நடந்த குழப்பங்களாலும் தன் எல்லையினை பாண்டிச்சேரியோடு சுருக்கிற்று

இன்றும் பாண்டிச்சேரியில் டூப்ளே சிலை உண்டு , இந்த டூப்ளேதான் முதலில் ஐரோப்பிய அரசை தமிழகத்தில் பரிசீலித்து பார்த்தவன்

அவர் ஒரு கம்பெனியின் கவர்னர் என்பதால் அவன் திட்டம் சரியாக இருந்தது , பலவீனமான குழப்பமான தமிழக பக்கம் ஒரு அரசு சாத்திய்ம் என எண்ணினான்

ஆனால் களத்தில் அவனால் சாதிக்கமுடியவில்லை தந்திரசாலி சிப்பாயாக இருந்த பிரிட்டிஷின் ராபர்ட் கிளைவ் அதை சாதித்தான்

இந்த ஐரோப்பிய காலணியாக்கத்தை நமக்கு யார் வரலாறாக கொடுத்தவர் என்றால் டூப்ளேவின் மொழிபெயர்ப்பாளராக இருந்த சில தமிழர்கள்

அவர்கள் அன்றாடம் நடந்த நிகழ்வுகளை எழுதி வைத்திருக்கின்றார்கள்

இதனால்தான் எப்படி ஆங்கிலேயன் காலூன்றினான், எப்படி பிரென்ஞ்படை பின் வாங்கியது? ஏன் ஆங்கில ஆட்சி ஏற்பட்டது பிரென்ஞ் ஆட்சி ஏன் இந்தியாவில் மலரவில்லை என பல கேள்விகளுக்கு விடை கிடைக்கின்றது

அன்றைய டெல்லி சுல்தான், நவாப், தமிழக பாளையத்தார் என பல வரலாறுகளை அது வெளிச்சம் போட்டு காட்டுகின்றது

மாவீரன் மருதநாயகம் பற்றிய குறிப்புகளை இவர்கள்தான் எழுதி வைத்தார்கள்

அவர்களில் ஒருவர் ஆனந்தரங்கம் பிள்ளை,

அன்றே சில மொழிகள் படித்தவர். சொந்தமாக கப்பல் இருந்த வியாபாரியும் கூட, இதனால் ஐரோப்பியர் பழக்கம் உருவாகி அப்படியே சென்னை கோட்டையில் திவானாக இருந்தவர்.

அப்பொழுது அங்கு வந்தவனே ராபர்ட் கிளைவ்

இவர் மூலமே தமிழக நிலவரத்தை அறிந்தான் கிளைவ்

சென்னை கோட்டையினை பிரென்ஞ்படை பிடித்தபொழுது பிரென்ஞ் பக்கம் சென்றார், அம்மொழியும் அவருக்கு தெரிந்திருக்கின்றது. அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்

அன்றைய அரசுபணிக்கு அது அவசியமாகவும் இருந்தது.

1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார் என்பதுதான் இவரின் சாதனை

அவர் கடமைக்காக எழுதினாலும் பின்னாளில் அது பெரும் வரலாற்று பெட்டகம் ஆனது

அந்த காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் பெரும் கல்வெட்டாக அவரின் நாட்குறிப்பு நிற்கின்றது

இந்தியா ஆங்கில அடிமையான அந்த தொடக்க காலங்கள் சுவாரஸ்யமானவை, துரோகம், அவமானம், வீரம் என எல்லாம் கலந்த கலவை

நாமும் பழைய வரலாறுகளை ஊன்றி படிக்கின்றோம், அரசர்களின் ராஜ வாழ்க்கை மிக கொண்டாட்டமாய் இருந்திருக்கின்றது

சாதி என்பது அரசனை பாதுகாக்கவே வகுக்கபட்டிருகின்றது, அவனுக்கே எல்லோரும் பணியாளாய் இருந்திருக்கின்றனர்

அக்கால அரசவைகள் அப்படி இருந்திருகின்றன, இந்தியா என்றெல்ல ரஷ்ய ஜார் மன்னனின் அரசு வரை அப்படித்தான் இருந்திருக்கின்றது, சுல்தான்கள் அவையிலும் இந்த பேதம் இருந்திருக்கின்றது

அதில் பிரிட்டிசார் வந்த காலம், அவன் ஆட்சி இங்கு துளிர்விட்ட காலம் எல்லாம் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம்

அந்த சரித்திரத்தை நமக்கு பதிந்து தந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை.இன்று அவருக்கு பிறந்தநாள்.



பிரெஞ்சு அரசின் துவிபாஷ்
அதாவது இரு மொழிகள் அறிந்த மொழிபெயர்ப்பாளராக கவர்னர் டூயூப்ளெக்சிடம் பணிபுரிந்தவரும் 
பீரங்கி என்ற போர்த்துக்கீசியச் சொல்லைத் தீக்குடுக்கை என்று தமிழில் ஆக்கியவரும் 
பதினெட்டாம் நூற்றாண்டு தமிழக பிரெஞ்சு ஆங்கிலேய அரசுகளுக்கிடையே நடைபெற்ற அதிகாரச் சண்டைகள், கடிதப் போக்குவரத்துகள், போர்கள், தளவாடப் பரிமாற்றங்கள், சமூகப் பழக்க வழக்கங்கள், குற்றங்களுக்கான தண்டனைகள், அதிகாரப் படிநிலைகள் குறித்து விரிவாகப் பதிவு செய்திருப்பவரும் 
பன்மொழி வித்தகரும்
நவீன தமிழ் இலக்கியத்தில் நாட்குறிப்பு இலக்கிய வகைமையின் முன்னோடியுமான 
ஆனந்தரங்கம் 
( 1709 மார்ச் 30 - 1761 ஜனவரி 10 )
பிறந்தநாள் இன்று.

#நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள் #அத்தியாயம்8

#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் 
—————————————
‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’  என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்…….

#நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்
#அத்தியாயம்8

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-3-2025 
@kovilpatti1876 
•••• நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்
அத்தியாயம் - 8

மாடுகளில் பல வகை உண்டு. நிறம், கொம்பு, சுழி ஆகியவற்றைக் கொண்டு வகை பிரிப்பார்கள். பார்ப்பதற்கு ஒன்றுபோல் நமக்குத் தெரியும்.  ஆனால் அவற்றின் வித்தியாசங்கள் விவசாயிகள், மாடு வியாபாரிகளுக்கு அத்துப்படி. மாட்டு சுழிகளையே 10 வகையாகச் சொல்வார்கள். 
அதேபோல் மாட்டின் வயதையும் விவசாயிகள் சரியாகக் கணித்து விடுவார்கள். ‘பல்ப் போட்டுருச்சா?’ என்று கேட்பார்கள். இது மாட்டின் பிராயத்தைக் குறிப்பது. கீழ்வாயில் பால் பற்கள் உதிர்ந்து இரண்டு பற்கள் முளைக்கும். இதைத்தான் ‘பல்ப்’ என்றார்கள். வருஷத்துக்கு இரண்டு இரண்டு பற்கள் முளைக்கும். 4 வருடங்களில் 8 பற்கள் போட்டு விடும். இதை ‘கடைத்தேர்ச்சி’  அதாவது ‘கடைசி பல் போடுதல்’ என்பார்கள். 
மாட்டுத்தாவணியில் மாடுகளை விற்போரும் வாங்குவோரும் தரகர்களை வைத்துக் கொண்டு கையில் துண்டைப் போட்டு விலை பேசுவார்கள். ஒவ்வொரு விரலைப் பிடிப்பதற்கும் ஒவ்வொரு விலை உண்டு.  ஐந்து விரலை கூட்டிப் பிடித்தால் 500 ரூபாய் என்று அர்த்தம். அதை ஒரு குலுக்கு குலுக்கினால் 1000 ரூபாய்.
விரல்களில் உள்ள ஒவ்வொரு வரையை அழுத்தினால் 10 ரூபாய் கூடுதல் என அர்த்தம். இந்த முறைகளைப் பின்பற்றித்தான் மாடுகள் விலை பேசப்படும். 
நாட்டுக் கோழிகளும் ஏறத்தாழ 10 வகை உண்டு. ஆடுகளைப் பொறுத்தவரை வெள்ளாடு, கருப்பு ஆடு மட்டுமல்ல... அவற்றிலும் கிட்டத்தட்ட 25 வகைகள் உள்ளன.
கடிகாரம் இல்லாத  காலத்தில் கிராமங்களில்  விடியல் பொழுதுகளை பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள்.  ஒரு கண்ணுக்கு உறங்கி, சாம ஏமத்திலே, சாமக்கோழி கூப்பிட, தலைக்கோழி கூப்பிட என்பார்கள். வெள்ளி முளைக்க, முத்தம் தெளிக்கிற நேரம் - இது காலை 6 மணியை குறிக்கும் சொற்கள்.
காலம்பற, நிலங்கரை, விடிஞ்சி இது  8 மணிக்கான சொற்கள். பொழுது புறப்பட, முந்திக் கற்காலை இது மாலை 4 - 5 மணியை குறிக்கும் வார்த்தைகள். கருக்கால, மம்மல்ல என்பது இரவு 7 மணியைச் சொல்கின்ற வார்த்தைகள். அதேபோல் சாயங்காலம், ஊரடங்க, இரவை, நிலாப் புறப்பட, நடுச் சாமம், அர்த்த ராத்திரி என்றெல்லாம் சொல்வதுண்டு.
கிராம மக்களின் உரையாடல்களில் சொலவடைகள் சரளமாக இருக்கும். அவை ஆயிரக்கணக்கில் உண்டு. அர்த்தமுள்ளதாக அவை இருக்கும்.
கரிசல் மானாவரியில் விளைவிக்கப்படும் நவதானியம் என்பது நெல் மட்டுமல்ல, கம்பு,  குதிரைவாலி, கேழ்வரகு, சாமை, செஞ்சோளம், திணை, நாத்துச் சோளம், மாப்பிள்ளை மினுக்கி சோளம், வரகு என பல வகைகள் உள்ளன. சில தானியங்கள், நாம் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தெரியும். ஆனால், விவசாயிகள் அதை பல்வேறு வகையில்  பிரித்து வைத்திருந்தார்கள்.
நதிநீர் இணைப்பு கோரி வழக்கு
எங்கள் ஊர் பக்கம் அதாவது திருவேங்கடம் அருகே  இருபுறமும் வடாறில், வைப்பாறு, நிட்சேவ நதி என இரண்டு நதிகள் கலக்கின்றன. காந்தியார் விரும்பிய வண்ணம், அவரது அஸ்தி எங்கள் பகுதியில் உள்ள கரிவலம்வந்தநல்லூரில்  நிட்சேவ நதியில் கரைக்கப்பட்டது ஒரு முக்கியமான வரலாற்று செய்தியாகும்.  காந்தியாரின் அஸ்தி கரைக்கப்பட்ட 7 நதிகளில் இந்த நதியும் ஒன்று.
திருவேங்கடத்தைத் தாண்டி, ஒரு தரைப்பாலம் உண்டு. மழைக்காலங்களில் இரண்டு நதிகளும் சேர்ந்து பெருக்கெடுத்து, வெம்பக்கோட்டை அணை பக்கமாகச் சென்று, சாத்தூரில் வைப்பாறாக இணைந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வங்கக் கடலில் கலக்கின்றது. 
தேசிய நதி நீர் இணைப்பில்  கங்கை மற்றும் வடபுல நதிகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை, பாலாறு, காவிரி, வைகையை அடுத்து இந்த வைப்பாறு உள்ளது. வைப்பாறைத் தாண்டி தாமிரபரணி, குமரி மாவட்ட நெய்யாற்றோடு கலக்க வேண்டும்  என்று நான் வழக்கு  (WP. No. 6207/1983) தொடுத்தேன். அந்த வழக்கு  உச்ச நீதிமன்றத்தில் இறுதியாக  2012 பிப்ரவரியில் நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 38 - 39 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்தது. இந்த வழக்கு தொடர்ந்ததற்கான முக்கியமான காரணம், வடக்கே உள்ள ஜீவநதியான கங்கை, தென் குமரியைத் தொட வேண்டும் என்பதுதான்.

கிராமங்களில் ஒருகாலத்தில்  ‘புரத வண்ணார்கள்’ என்று அழைக்கப்பட்ட  ஒரு பிரிவினர் மீது கட்டுப்பாட்டை விதித்து ஒதுக்கி வைத்தார்கள். அவர்களின் தனிமனித உரிமையை மீறக் கூடிய வகையில் பகலில் அவர்கள் வெளியே வரக் கூடாது; இரவில்தான் நடமாட வேண்டும் என்ற அவலமான நிலை இருந்தது. அதேபோல், ராக்கூத்தாடிகள்,  ராப்பிச்சைக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் என இரவில் உலா வருபவர்களும் இருந்தார்கள். ‘நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது’ என்று கூறியபடி நடுச் சாமத்தில் குடுகுடுப்பைக்காரர்கள் தெருக்களில் செல்வார்கள்.  சிறு வயதில் உள்ளவர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று கொண்டு குறி சொல்வார்கள்.  மறுநாள் காலையில் வீடுகளுக்கு வந்து  நெல் மற்றும் தானியங்கள்  பெற்றுக் கொள்வார்கள். அதேபோல், பகலில் பூம்பூம் மாட்டுக்காரர்கள், அலங்கரிக்கப்பட்ட காளையுடன் வருவார்கள். அவர்களின் சொற்படி காளை தலையாட்டும். 
பத்தமடை பாய், அம்பையில் மரக்கடைசல், காருக்குறிச்சியில் கலை நுணுக்கத்துடன் செய்யப்படும் பொருட்கள், வாகைகுளம் குத்துவிளக்குகள் என்பதெல்லாம் பிரசித்தி பெற்றவை.
ஆழ்வார்திருநகரில்  அவதரித்தவர் நம்மாழ்வார். பிறப்பெடுத்த நாள் முதலே பேசாமல் இருந்தார். பின்னர்   திருக்குருகூர் நம்பி கோயிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் 16 ஆண்டுகள் தவம் செய்து வந்தார். அதைத்தொடர்ந்து, இறை அருளால் பல்வேறு பாசுரங்களை இயற்றி, பாடினார். அவரைப்போன்று, ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபரர்  சைவத்தில் முக்கியமான ஆளுமையாக இருந்தார்.
புளிய விருட்சத்தின் அடியில் தவமிருந்து இறைஞானம் பெற்றவர் நம்மாழ்வார் என்பதால்தான், வைணவர்கள் புளியோதரையை பெரிதும் விரும்புகிறார்கள் என்றும்கூட சொல்வார்கள்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் நாயக்கர் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள் உன்னதமான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றன. ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள சிலையைத் தட்டினால், இனிய சுர ஒலிகள் வெளிவரும். இத்தகைய சிறப்புகளுடன் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. 
குறத்தி ஒருவள், தன் அழகால்  ஒரு அரச குமாரனை மயக்கி கவர்ந்து செல்வது, நடன நங்கை, ரதி தேவி, வீரபுத்திரன் போன்ற சிற்பங்கள் அழகிய கலைநயத்தோடு வடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் சிறப்புகளை வரலாற்று அறிஞர் ஆனந்த குமாரசாமி  விரிவாக விளக்கியுள்ளார்.
முற்போக்கு எழுத்தாளரான கோமல் சுவாமிநாதனின்  நாடகமான ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படமாக வெளியானது.  கரிசல் மண்ணின் எட்டையபுரத்தின் தெற்கே உள்ள ஏழுப்பட்டி கிராமத்தில்  அந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. தண்ணீர் பிரச்சினை அந்த அளவுக்கு அங்கே தலைவிரித்தாடியது.  
திருநெல்வேலி சதி வழக்கில் பொதுவுடைமைவாதி நல்லகண்ணுவுடன் கைதான வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் சொல்வார், ‘‘கரிசல் பூமியில் குடி தண்ணீருக்கு கூப்பாடு உண்டு. ஆனால் அதுக்குன்னு ஒரு பெருமை உண்டு. உப்புத் தண்ணி எங்க ஊரில் பிரசித்தம். நெறைய இறவைக் கிணறு இருக்கும். எல்லாவற்றிலும்  உவர் தண்ணீர்தான். குளத்துக்குள் ஊத்து தோண்டி ஊற ஊற தண்ணீர் எடுத்து குடிப்போம். கண்ணீர் மாதிரி சொட்டு சொட்டாக அங்கே தண்ணீர் சுரக்கும். அதை சிரட்டையில் வழிச்சு, மண் குடத்தில் ஊத்துறது தனிக் கலை. கரிசல் மண்ணுக்கு தனி மணம் உண்டு. ஆண்டுக்கு 3 மழை பெய்தாலும் வானம் பார்த்த பூமிதான். அந்த மழையும் பெய்யாட்டா வனாந்தர பூமி. எந்த நதியும் எங்களுக்கு இல்லை. உவர்  தண்ணிக்கு மிளகாய் நல்லா காய்க்கும். எள்ளுச் செடியும் துள்ள வரும். எங்க மொழியே தனி. என்னலே, என்னவே... எப்படி இருக்கீங்க... இப்படி பேச்சு வழக்கும் கொச்சையாகத்தான் இருக்கும். ஆனால் எங்களுக்குள் இருக்கிற நாட்டுப்புற இலக்கியம் கொஞ்சி விளையாடும்’’ என்று கரிசல் மண்ணின் சிறப்பைக்  குறிப்பிடுகிறார்.
கடந்த காலத்தில் கிராமத்தில் விவசாயத் தொழில்தான் பிரதானமாக இருந்தது. பின்னர்  தீப்பெட்டி தொழிலிலும் பரவலாக ஈடுபட்டார்கள். இப்போது விவசாயம் தேய்பிறையாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. 100 நாள் வேலை என்று அலுவலகத்துக்கு செல்வதுபோல இன்றைக்கு கிராம  மக்கள் அந்த வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதனால் கிராமத்தில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது.
தற்போது பெரும்பாலான விவசாயப் பணிகளில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  முன்பெல்லாம் நெற்கதிர் அறுக்க 20 - 25 பேர் வருவார்கள். கதிர் அறுத்து கட்டு கட்டி தலைச்சுமையாக  களத்து மேட்டுக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் கதிர் அடித்து, முறத்தால் வீசி பதர்களை நீக்கி,   மலைபோல் நெல்லை குவிப்பார்கள்.  அதை அளந்து மூட்டைகளில் கட்டுவார்கள். இதற்கெல்லாம் 2 - 3 நாட்களாகும். ஆனால் இப்போது  கதிர் அறுக்கும் இயந்திரத்தைக் கொண்டு ஒருசில மணி நேரங்களில் நெல் வேறு, வைக்கோல் வேறு என பிரித்து எடுத்து விடுகிறார்கள்.
அந்தக் காலத்தில் கட்டைப் பேனாவை க்விங்க் மையில் தொட்டு, காகிதங்களில்  எழுதுவதை நான் பார்த்துள்ளேன். அதற்குப் பிறகு சாத்தூரில் செய்யப்பட்ட நிப்புகள் கொண்ட பேனாக்கள் பயன்படுத்தப்பட்டன. பேனாவில் மையை நிரப்பி எழுத வேண்டும்.  பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகளையும் அந்த பேனாவில்தான் எழுத வேண்டும். தற்போது, பால்பாயின்ட், ஜெல் பேனாக்கள் என வந்து விட்டன. 

அப்போதெல்லாம் நெல்லையில் கூட்டம் நடத்த வேண்டும் என்றால் தாமிரபரணி ஆற்றின் கரையில்தான் நடத்துவார்கள்.  அங்கு, காந்தி, வ.உ.சி, பாரதியார், ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் தேவர், காயிதே மில்லத், காமராஜர் போன்ற பெரிய ஆளுமைகள் எல்லாம் பேசியதுண்டு.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலைஞர்  கைதாகி பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது, அண்ணா அவரைப் பார்த்துவிட்டு, இதே தாமிரபரணி கரையில்தான் பேசினார்.  
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுடப்பட்டு கொல்லப்பட்ட நெல்லை மாவட்ட கலெக்டர் ஆஷ் துரையின்  கல்லறை பாளையங்கோட்டையில் உள்ளது. கால்டுவெல் போப்பின் கல்லறை இடையான்குடியில் உள்ளது. அவரது கல்லறையில் ‘இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று எழுதப்பட்டுள்ளது. 
திருநெல்வேலி கலெக்டராக இ.பி.தாமஸ் இருந்தபோது, 800 அடி நீளத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பாலம் கட்டப்பட்டது. இப்போது சுலோச்சனா முதலியார் பாலம் என்று  அழைக்கப்படுகிறது. இந்த பாலம் திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கின்றது.
இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 175 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதுவரை எந்தவித பழுதும் இல்லாமல் ஸ்திரமாக உள்ளது. லண்டன் தேம்ஸ் நதியில் கட்டப்பட்டுள்ள வாட்டர்லூ பாலம் போன்ற உருவ அமைப்பை அப்படியே கொண்டு இந்தப் பாலம் கட்டப்பட்டது. 
டி.கே.சி.யின் ‘வட்டத்தொட்டி’
திருநெல்வேலி மாவட்டத்தில் இலக்கிய கர்த்தாக்கள் பலர் தோன்றி. தங்களது அரும்பெரும் பணிகளால் தமிழுக்கும், கலை, பண்பாட்டுக்கும் பெருமை சேர்த்தார்கள்.
அந்த வகையில், ‘டி.கே.சி.’ என்று அன்புடன் அழைக்கப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார், வழக்கறிஞராக நெல்லையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1924-ம் ஆண்டில் ‘இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கினார். இதில் அவருடைய நண்பர்கள் பலரும் இணைந்தார்கள். வண்ணாரப்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் ஒன்று கூடுவார்கள். 
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாரம்பரியமான வீடுகளில் பெரும்பாலும் உள்முற்றம் இருக்கும். சூரிய வெளிச்சத்துக்கும், காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முற்றங்கள் அமைக்கப்படும்.  இந்த முற்றத்தைச் சுற்றி வட்டமாக அமர்ந்து நடைபெறும் இந்த சந்திப்பு நிகழ்ச்சி ‘வட்டத்தொட்டி’ என்று அழைக்கப்பட்டது.  இந்த இலக்கிய அமைப்பு 1924 முதல் 1927 வரை தொடர்ந்து நடைபெற்றது. அதற்குப் பிறகு 1935 முதல் 1939 வரை சென்னை, திருநெல்வேலி மற்றும் தென்காசியிலும் நடைபெற்றது.
திருநெல்வேலியில் நடைபெற்ற வட்டத்தொட்டி நிகழ்வில், இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, சக்கரபாணி நம்பியார், மு.அருணாசலம் , வித்வான் கு.அருணாசலக் கவுண்டர்,  பி.ஸ்ரீ.ஆச்சார்யா, மீ.ப.சோமு, தொ.மு. பாஸ்கர தொண்டைமான் , அ.சீனிவாசராகவன் போன்றவர்கள்  தொடர்ந்து பங்கெடுத்து வந்தனர். 
அதேபோல், ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெ.நா.அப்புசாமி , பாலசுப்பிரமணிய ஐயர் போன்றவர்கள்  அவ்வப்போது வந்து  கலந்து கொள்வார்கள். பிற்காலத்தில் படைப்பாளிகளான கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
மாணவர்களின் வேடந்தாங்கல் மரியா கேண்டீன்
பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் நான் படித்தபோது, மாலையில் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தும் மரியா கேண்டீன் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தது. கிட்டத்தட்ட  30 ஆண்டுகளுக்கு முன் அந்த கேண்டீனை இடித்து விட்டு, வேறு கட்டிடம் கட்டி விட்டார்கள். இந்த மரியா கேண்டீன்  ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஏராளமான மாணவர்கள் தங்கள் தோழர்களோடு சந்தித்து மகிழும் வேடந்தாங்கலாக விளங்கியது. அன்றைக்கு மாணவர்களாக இருந்தவர்கள் பிற்காலத்தில் அரசியல் தலைவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், தமிழ் அறிஞர்களாகவும், பல்வேறு ஆளுமைகளாகவும் உயர்ந்தார்கள்.
இந்த கேண்டீனில் அமர்ந்து, உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை  மாணவர்கள் அலசுவார்கள். தமிழக, இந்திய அரசியல்  சூழ்நிலைகள், தலைவர்களின் செயல்பாடுகள் விரிவாகப் பேசப்படும். அதேபோல், குடும்பச் சூழ்நிலைகள், எதிர்காலக் கனவு என தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் மாணவ, மாணவிகள் பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில் சில மாணவ - மாணவிகளிடையே ஏற்பட்ட அன்பு, காதலாக மலர்வதும் உண்டு. அந்த காதல், திருமண பந்தத்தில் இணைவதற்காக நிச்சயிக்கப்பட்ட தருணங்களும் இந்த மரியா கேண்டீனில் நடைபெற்றன.
சில திருமணங்களுக்கு நானே சாட்சி கையெழுத்திட்டதும், இதனால், அவர்களின் குடும்பத்தினர் என்னை துரத்தியதும், அவர்களிடம் இருந்து தப்பி ஒளிந்து கொண்டதும் உண்டு. இன்றைக்கும் அந்த தம்பதிகள் பேரக் குழந்தைகளோடு வயதான காலத்திலும் காதல் ஜோடியாக ஏகாந்தமாக சுற்றி வருகின்றனர். 
காவல் துறையினரின் தடியடியால் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிரிழந்த லூர்து நாதன் என்ற கல்லூரி மாணவரின் சிலை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ளது. அந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர்  காமராஜர், நெடுமாறன், செல்லப்பாண்டியன், சுதந்திரா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பெப்பின் பெர்னாண்டோ, எஸ்.கே.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டது இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த இடங்களாக மரியா கேண்டீனும், பாளையங்கோட்டை தெற்கு பஜாரும் விளங்கின.
(தொடர்வோம்...)

Saturday, March 29, 2025

‘அத்தியாயம்7 நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்…

#நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள் #எனது  பயணங்கள் 
——————————————————-
‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’  என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்…….

#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள்
#அத்தியாயம்7

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
29-3-2025 
••••  

நம்பமுடியாத எனது நாட்குறிப்புகள்
அத்தியாயம் - 7

இன்றைக்கு போக்குவரத்துக் கழகம் அரசுடமையாக்கப்பட்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் பேருந்து போக்குவரத்து தனியார் கைகளில் இருந்தது. அன்றைக்கு  மிகவும் பிரபலமாக இருந்த டிவிஎஸ், அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ், லயன், ஏவிஆர்எம், சந்திரா பேருந்துகள், மோட்டார் யூனியன் பேருந்துகள் போன்றவை எங்கள் பகுதியில் இயக்கப்பட்டன. குறிப்பாக டிவிஎஸ் பேருந்துகள் நேரம் தவறாமல் இயக்கப்பட்டதாகக் கூறுவார்கள். அந்தப் பேருந்து வருகையைக் கொண்டே நேரத்தை கணித்ததும் உண்டு.
பேருந்து வசதி இல்லாத காலத்தில், வசதி படைத்தவர்கள் வில் வண்டியில் பிரயாணம் மேற்கொள்வார்கள்.  கூண்டு கட்டப்பட்ட வில் வண்டியில் வைக்கோலை பரப்பி, அதன்மேல் ஜமுக்காளம் விரித்து  அதில் அமர்ந்து செல்வார்கள்.  குடிப்பதற்கு திருகு செம்பில் தண்ணீர், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம் பொட்டலம், வடகம், மோர் மிளகாய், நார்த்தங்காய் ஊறுகாய் மற்றும் சீடை, முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்கள் சகிதமாகப்  புறப்படுவார்கள். இரவு நேரப் பயணத்தின்போது வண்டியின் கீழ் பகுதியில் மண்ணெண்ணெய் அரிகேன் விளக்கு எரியும். ஒருசிலர் நீண்ட டார்ச் லைட்டை எடுத்துச் செல்வார்கள். அதில் 8 முதல் 10 எண்ணிக்கையிலான அன்றைக்கிருந்த எவரெடி பேட்டரிகள் போடப்பட்டிருக்கும். இத்தகைய பயணங்கள் எல்லாம் பேருந்து போக்குவரத்து வந்ததும் படிப்படியாக காணாமல் போய்விட்டன.
அந்தக் காலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான தின்பண்டங்கள் பிரபலமாக இருந்தன.  அந்தந்தப் பகுதிகளின் தண்ணீர், மண்ணின் வளத்தைப் பொருத்து அவற்றின் சுவை தனித்துவமாக இருக்கும். 
அந்த வகையில்,  தூத்துக்குடி மக்ரூன் பிஸ்கெட், திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா, சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள நவநீதகிருஷ்ணன் லாலா கடை அல்வா, மைசூர்பா, தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரே பஜாரில் உள்ள ஸ்ரீகிருஷ்ண விலாஸ் புராதன லாலா கடை அல்வா,  குற்றாலம் - செங்கோட்டை பார்டர் கடை  புரோட்டா  பிரபலமாக இருந்தன.
கடலை மிட்டாய்க்கு கோவில்பட்டி பேர்போனது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், கடம்பூர் போளி, கழுகுமலை பட்டறை சேவு, சாத்தூர், செவல்பட்டி சேவு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, அருப்புக்கோட்டையில் தமிழ்மணி தியேட்டர் அருகே உள்ள லாலா கடையில் கிடைக்கும் ஓமப்பொடி, திருவேங்கடத்தில் சீனி மற்றும் கருப்பட்டி மிட்டாய், முட்டைக்கோஸ் போன்றவை  பிரசித்தம். ராஜபாளையத்தில் ஆனந்தா கடையில் லட்டு, பூந்தி, மிக்சர் சுவையாக இருக்கும்.
திருநெல்வேலியில் சந்திர விலாஸ், துவாரகா லாட்ஜில் இருந்த சைவ ஓட்டல், ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே  நியாஸ் அசைவை ஓட்டல், திமுகவைச் சேர்ந்த சூர்யநாராயணன் மற்றும் நம்பி நடத்திய உணவு விடுதிகள் இவையெல்லாம் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்தது நினைவில் உள்ளது. 
கோவில்பட்டியில் அன்றைக்கு  பாலமுருகன் என்ற ஓட்டலும், விடுதியும் இருந்தது. மற்றொரு ஓட்டலான சரஸ்வதி, பேருந்து நிலையம் எதிரில் இருந்தது. இன்றைக்கு உள்ள கோவில்பட்டி பேருந்து நிலையம் ஒரு காலத்தில், பழைய பாலமுருகன் ஓட்டலுக்கு எதிரில்தான் அமைந்திருந்தது.
இந்த பாலமுருகன் ஓட்டலில் குறிப்பாக திமுக கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பெரும்பாலும் தங்குவதுண்டு. அதேபோல் கல்யாணி லாட்ஜில் சுதந்திரா கட்சி, காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் தங்குவார்கள்.
சங்கரன் கோவிலில் போத்தி ஓட்டல், நாடார் ஓட்டல், சுல்தான் பிரியாணி கடை முக்கியமாக இருந்தன. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு ஐயங்கார்  உணவு விடுதி ஒன்று பிரபலமாக இருந்தது. அதன் பெயர் எனக்கு சரியாக நினைவில் இல்லை. விருதுநகரில் நாடார் ஓட்டல்,   பர்மா ஓட்டல் அசைவ உணவுக்கு அன்றைக்கு பிரபலம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அடையாளங்களில் ஒன்றாக,  ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட பென்னிங்டன் லைப்ரரி விளங்கியது. அங்கு ஏராளமான அரிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
எங்கள் பகுதியில் பெண்களுக்கென்று ஸ்ரீவில்லிபுத்தூர் கிறித்துவ போர்டிங் பள்ளி இருந்தது. அதேபோல்,  பாளையங்கோட்டை இக்னீசியஸ் கான்வென்டும் இருந்தது. அங்கு பெண்கள் தங்கிப் படிப்பார்கள்.
ரசிகமணி டி.கே.சி.க்கு தொடர்பு உள்ள ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த இலக்கியவாதி ஜஸ்டிஸ் மகாராஜனும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றினார்.  
வீரமாமுனிவரும், தேவநேயப் பாவாணரும் இந்த பகுதியில் உலவியவர்கள். கோவில்பட்டியில் குருமலை சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார். குருமலையில் மூலிகை கலந்த காற்று தவழ்ந்து வரும். இந்தக் காற்றை சுவாசிப்பதால் காசநோய் குணமாகும் என்று அன்றைக்கு சொல்வார்கள். 
கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி போன்றவை தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்கும், அச்சுத் தொழிலுக்கும் பெயர் பெற்றவை. சிவகாசியில் தீப்பெட்டி தொழிலுக்கு முன்னோடியாக விளங்கியவர் தொழிலதிபர்  அய்ய நாடார் ஆவார். அவர் கல்கத்தா வரை சென்று தீப்பெட்டி தொழிலைப் பற்றி அறிந்து வந்து சிவகாசியில் தொழிற்சாலையை நிறுவினார். கோவில்பட்டியில் காதிரியா மேட்ச் ஃபேக்டரி, கோபாலகிருஷ்ண யாதவ், எவரெஸ்ட் மேட்ச் ஃபேக்டரி என்று பல தீப்பெட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பிரபலமாக இருந்தன. 
சிவகாசி,  ஆயிரக்கணக்கான பட்டாசு, அச்சு தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியதால், அதை ‘குட்டி ஜப்பான்’ என்பார்கள்.
எங்கள் பகுதி கரிசல் நிலப்பகுதி என்பதால் பருத்தி அதிகமாக விளையும். பருத்தியை அரவை செய்யும் ஜின்னிங் ஆலைகள் விளாத்திகுளம், எட்டையபுரம், கடம்பூர், கயத்தாறு, கோவில்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை பந்தல்குடி போன்ற பகுதிகளில்  அதிகமாக இருந்தன.
இந்த ஆலைகளில் இருந்து, துணிகளை உற்பத்தி  செய்யும் கோவை லட்சுமி மில்ஸ், மதுரை, தூத்துக்குடி, அம்பாசமுத்திரத்தில் செயல்பட்ட  மதுரா கோட்ஸ், கருமுத்து தியாகராஜர் குடும்பத்தைச் சேர்ந்த லாயல் மில்ஸ், கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் போன்ற ஆலைகளுக்கு பஞ்சு அனுப்பப்படும். இந்த ஆலை நிர்வாகத்தினர் ஆந்திராவில் உள்ள ராயலசீமாவிலும் பஞ்சு வாங்குவார்கள்.
அதுமட்டுமின்றி, பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர்  பக்கிங்காமில் உள்ள துணி உற்பத்தி ஆலைகளுக்கும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக பஞ்சு மூட்டைகள் அனுப்பப்பட்டன. பஞ்சு மூட்டைகளைக் கொண்டு செல்வதற்காகவே தூத்துக்குடியில் சாலை அமைக்கப்பட்டது. அதற்கு ‘கிரேட் காட்டன் சாலை’ என்று பெயர்.
ஒன்றிரண்டு நாட்கள் காத்திருந்துதான் பஞ்சு மூட்டைகளை கப்பலில் அனுப்ப முடியும். இதற்காக தூத்துக்குடியில் மட்டக்கடை பகுதியில் வண்டிகளை நிறுத்தி விட்டு தங்குவார்கள்.  அவர்களுக்காகவே சிறுசிறு சாப்பாடு கிளப்புகள் அங்கு திறக்கப்பட்டன.
இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கூட, அன்றைக்கு இங்கிருந்து பஞ்சு மூட்டைகள் அனுப்பப்பட்டது என்பதெல்லாம் செய்திகள்.
கிராமங்களில் விஸ்வகர்மா பணிகள் செய்வதற்காக இரண்டு வகையினர் இருந்தனர். ஒருவர் தச்சு ஆசாரி, மற்றொருவர் கொல்லாசாரி.
தச்சு ஆசாரி என்பவர்கள் வீடு, கட்டிடங்களுக்கான மரவேலைகள் செய்வார்கள். சுத்தியல், ரம்பம், உளி, கொட்டாப்புளி போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மரக்கட்டைகளை இழைத்து,  ஜன்னல், கதவுகள், கட்டில், அலமாரி போன்றவற்றை செய்வார்கள்.
கொல்லாசாரி என்பவர்கள் மாட்டுக்கு லாடம் கட்டுவது, ஏர் கலப்பைகளில் ஏர் கொழுவு, வெட்டரிவாள், பன்னரிவாள், கோடாரி, அரிவாள்மனை, கத்தி போன்றவற்றை செய்வார்கள். இவர்கள் பட்டறை அமைத்து இருப்பார்கள்.  இதற்கு கொல்லுப்பட்டறை என்று பெயர். அங்கு ஒரு சிறிய குழியில் மரக்கரியைப் போட்டு நெருப்பு மூட்டுவார்கள். அந்தக் குழியில் இருந்து ஒரு குழாயை மண்ணில் பதித்து மறுமுனையில் ரப்பரால் ஆன ஒரு பையுடன் இணைத்திருப்பார்கள். அந்த பையின் வாய் பகுதி கைபிடியுடன் இருக்கும். இதை விட்டு விட்டு அழுத்தும்போது குழாய் வழியாக காற்று உள்ளே புகுந்து குழியில் இருக்கும் தீக்கங்குகளை பிரகாசமாக்கும். அதன் மேல் இரும்பு துண்டுகளை வைத்து பழுக்கக் காய்ச்சி, பின்னர் சுத்தியலால் அடித்து தேவையான கருவிகளைச் செய்வார்கள். இப்போதெல்லாம் இவை மின்சார மயமாகி விட்டன.
எனக்குத் தெரிந்தவரையில் எங்கள் ஊரில் தச்சாரியாக காந்தாரி, கோதண்டராமன் ஆகியோரும், கொல்லாசாரியாக கருப்பையாவும் இருந்தனர். 
அதேபோல் எங்கள் ஊரில் பொன்னு டெய்லர் மற்றும் அவரது மகன் கருப்பையா ஆகியோர் தையல் கடைகள் வைத்திருந்தனர். தீபாவளி, பொங்கல் நேரத்தில் புது துணிகள் எடுத்து ஆடைகள் தைக்க வேண்டும் என்றால் இவர்களிடம்தான் செல்ல வேண்டும். பொன்னு டெய்லர் துணிகளை வேகமாக தைப்பார். ஆனால் அவரது மகன் கருப்பையா சோம்பேறி. அன்றைக்கு  அவர் என்னுடைய வயதுதான். தீபாவளியன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பழைய ஆடையைக் கட்டிக் கொண்டு, புது ஆடையை வாங்குவதற்காக ரேஷன் கடையில் வரிசையில் நிற்பது போல, டெய்லர் கடை முன்னே நின்றதெல்லாம் இன்றும் நினைவில் இருக்கிறது.
‘இதோ தைத்துவிட்டேன், காஜா வைக்க வேண்டும்... பட்டன் வைக்க வேண்டும்’ என்று கூறுவார்கள். ஆனால் வெட்டிய துணி தைக்கப்படாமல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்.  ஒருமுறை எனக்கு கோபம் வந்து விட்டது. வீட்டில் இருந்த சட்டைக் கம்பை எடுத்துப் போய் அவரை வெளு வெளுவென் று வெளுத்து விட்டேன். ஆனாலும் அவர் கோபப்படாமல் சிரித்துக் கொண்டே இருப்பார். இத்தனைக்கும் அவர் எனக்கு நல்ல நண்பர்.
‘பராசக்தி’ படத்தில் சிவாஜிகணேசன் பேசிய வசனங்களை அப்படியே பேசி ஒப்பிப்பார். நான் அவரைப் பார்த்து,  ‘‘கருப்பையா... இப்படி வசனம் பேசியே வீணாகப் போய்விடாதே... உன் குடும்பத்தைக் கவனி’’ என்று சத்தம் போடுவேன். அப்போது நான் காங்கிரஸில் இருந்தேன்.
ஒருமுறை, தென்னை மரத்தில் இருந்து தேங்காயை தெரியாமல் பறித்து விட்டதற்காக கருப்பையாவை ஊரை விட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். பின்னர் கலிங்கப்பட்டி ஊரில் தையல் கடை வைத்து அங்கேயே தங்கிவிட்டார்.  பின்னாளில் வைகோவின் அதிதீவிர பக்தராக மாறிவிட்டார்.
விடுமுறை காலங்களில்  நான் சொந்த கிராமத்துக்குச் செல்லும்போது திருவேங்கடத்தில் என்னை வந்து பார்ப்பார். என்னிடம் ஏதாவது பணம் வாங்கிச் செல்வார். அப்போதுதான் அவருக்கு திருப்தியாக இருக்கும்.

எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. ஒருமுறை கோவில்பட்டியில் இரவு இரண்டாம் காட்சி சினிமா பார்த்துக் கொண்டிருந்தோம். படம் முடிய இன்னும் கொஞ்ச நேரம் இருந்தது. திடீரென்று ஒரு சிலேடு போட்டார்கள். அதில், ‘‘கடம்பூர் குருமலை பக்கம் போகிறவர்களுக்கு ஓர் அறிவிப்பு. கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு மதுரை பாசஞ்சர் ரயில் வந்துவிட்டது. அந்த ரயிலில் செல்ல இருப்பவர்கள் உடனே செல்லுங்கள்’’ என்று எழுதியிருந்தார்கள். இது வித்தியாசமாக இருந்தது.
அப்போதெல்லாம் இரவுக் காட்சி சினிமா  நள்ளிரவைத் தாண்டியும் ஓடிக் கொண்டிருக்கும். பெரிய படங்கள் என்றால் இன்னும் தாமதமாகி விடும். கடம்பூர் செல்பவர்கள் மதுரை பாசஞ்சர் ரயிலில்தான் செல்ல முடியும். ஏனென்றால் அப்போதெல்லாம் அந்த நேரத்தில் பஸ் வசதி கிடையாது. அதற்காக படம் முடிவதற்குள்ளேயே எழுந்து அவசரம் அவசரமாக ஓடுவார்கள்.
இரண்டாம் காட்சி படத்துக்கு செல்வதென்றால் மாலை 4 மணிக்கு கடம்பூரில் இருந்து புறப்படும் பாசஞ்சர் ரயிலில் கோவில்பட்டி வருவார்கள். அங்கு பிச்சைக்கனி கடையில் புரோட்டாவையும், மட்டன் சுக்காவையும் ஒரு பிடி பிடித்துவிட்டு  படம் பார்க்கச் செல்வார்கள்.  
 ‘தினத்தந்தி’ நாளிதழின் தலைமை ஆசிரியராக தற்போது இருக்கும் சுகுமாரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்தான். 
கோடங்கால் கிருஷ்ணசாமி நாயக்கர் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார்.  எனக்கு மிகவும் நெருங்கியவர்.  ஜீவா, எம்.கல்யாணசுந்தரம், சோ.அழகிரிசாமி, நல்லகண்ணு, தா.பாண்டியன், எஸ்.எஸ்.தியாகராஜனுக்கு உற்ற தோழராக இருந்தார். எந்நேரமும் கையில் ‘ஜனசக்தி’ பேப்பரை வைத்திருப்பார்.
ஒருமுறை பகலில் பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பதற்காக அவசர அவசரமாக சைக்கிளில் சென்றவர் தவறி கீழே விழுந்துவிட்டார்.  பின்னர் அவரை,  கோவில்பட்டியில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று கட்டு போட்டு அனுப்பி வைத்தோம்.  அந்த மருத்துவமனை நாகர்கோவிலைச் சேர்ந்த  ஜான் பான் என்ற டாக்டருடையது. 
கிருஷ்ணசாமி நாயக்கரிடம், ‘‘ஏங்க மெதுவா போயிருக்கலாமே? ஏன் இந்த அவசரம்?’’ என்றேன்.  அதற்கு அவர்,  ‘‘என்ன செய்யுறது? நான்  அந்த ரயிலைப் பிடிக்கவில்லை என்றால், மறுநாள் காலையில் பஸ் ஏறி கயத்தாறு இறங்கிப் போகணும். அதனால்தான் அவசரமாகப் போனேன். தவறி கீழே விழுந்துவிட்டேன்’’ என்றார். அந்த அளவுக்கு அப்போது பேருந்து வசதிகள் இல்லாமல் இருந்தது.
மதுரை பாசஞ்சரைப் பற்றி  சொல்லும்போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது.
 1950 - 60களில் கு.அழகிரிசாமி எழுதிய ‘குருமலை ரயில் நிலையம்’ என்ற சிறுகதை மிகவும் பிரபலமாகி அதிகம் வாசிக்கப்பட்டது. இது ஆங்கிலத்திலும், ரஷ்ய,  சீன, பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. கரிசல் வட்டாரம் தொடர்பான  கதை. ஒரு கிராமத்து மாணவன் தன்னுடைய கிராமத்தில் படித்துவிட்டு, அடுத்த வகுப்புகளுக்காக கோவில்பட்டி வ.உ.சி. கழக உயர் நிலைப்பள்ளிக்கு செல்லும்போது,  அந்த மாணவனுக்கும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் நடந்த  உரையாடலாக இந்த சிறுகதை விரியும். ஆனால், இவர்தான் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்று அந்த மாணவனுக்கும், தந்தைக்கும் தெரியாது. பள்ளிக்குச் சென்றபின், ‘ஆஹா... இவர்தான் தலைமையாசிரியரா?’ என்று வியப்புடன் மாணவரும் தந்தையும் பேசிக் கொள்வார்கள். இந்தக் கதை எல்லோராலும் பாராட்டப்பட்டது.
அந்தக் காலத்தில் முதன்முதலாக தனிச்  சிற்றிதழ்களாக ‘தமிழன்’,  ‘ஊஞ்சல்’ என்ற இரண்டு இதழ்களை கி.ரா. தொடங்கினார். புதுவை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த வேங்கட சுப்பிரமணியம், ‘தினத்தந்தி’ செளந்தர பாண்டியன் போன்றவர்கள் எல்லாம் இதை விரும்பிப் படித்ததுண்டு.
இந்த ‘ஊஞ்சல்’ சிற்றிதழ் தயாராகும் விதமே சுவாரஸ்யமானது.
ஒரு கொயர் நோட்டில் முதலில் கி.ரா. சில பக்கங்களை எழுதி, கு.அழகிரிசாமிக்கு தபாலில் அனுப்புவார். அவர்  சில பக்கங்கள் எழுதிய பின்னர் சுற்றுக்கு விடுவார்.  முதலில் நா.பார்த்தசாரதிக்கு செல்லும். அடுத்து தி.க.சிவசங்கரனுக்குச் செல்லும். தொடர்ந்து சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், கிருஷ்ணன் நம்பி, டிகேசியின் பேரன் தீப நடராசனிடம் செல்லும்.  சில சமயம் கவிஞர் நகுலனும் பங்கு பெறுவார். ஒவ்வொருவரும் தங்களது படைப்புகளை எழுதிய பின் இறுதியாக கி.ரா.வுக்கு வரும்.  அவரிடம் வந்தவுடன்  இதழ் முழுமை அடைந்து விடும். 
பின்னர், மேற்குறிப்பிட்ட அனைவரின் கைகளுக்கும் சென்று சேரும். இவ்வாறு ‘ஊஞ்சல்’ சிற்றிதழ் தயாராக  3 மாதங்களாகி விடும்.  இது கையால் எழுதப்பட்ட காலாண்டு தனிச்சுற்று இதழாகும். முதலில் ‘தமிழன்’  என ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ‘ஊஞ்சல்’ என்று நிலைத்து விட்டது. இது ஒரு வித்தியாசமான தனிச்சுற்று.
இது ‘சரசுவதி’ மற்றும் ‘கிராம ஊழியன்’ இதழ்கள் காலத்துக்குப் பின்னும் ‘கணையாழி’, ‘கசடதபற’ காலத்துக்கு முன்னும் வெளிவந்தது. இந்த ‘ஊஞ்சல்’ சிற்றிதழை  மணிக்கொடி சீனிவாசன் வெகுவாகப் பாராட்டியது உண்டு.
இவரைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.
அந்த காலகட்டத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளராக மணிக்கொடி சீனிவாசனை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அப்போது அவர், ‘‘நான் கும்பகோணத்துக்காரன்... இந்த திருநெல்வேலி மாவட்டத் தொகுதியில் எப்படி போட்டியிட முடியும்?’’ என்று கூறி பின்வாங்கிவிட்டார்.
அதைத்தொடர்ந்து சினிமா தணிக்கைக்குழு  தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். இவர்தான், கலைஞர் வசனம் எழுதி, சிவாஜி கணேசன் நடித்த ‘பராசக்தி’ படத்தை தணிக்கை செய்தவர். இதற்காக சென்னை பாரகன் தியேட்டரில் (கலைவாணர் அரங்குக்கு எதிரில்) 3 நாட்கள்  தணிக்கை செய்தார். அப்போதெல்லாம் 3 நாள் தணிக்கை என்பது அரிதானது. திரைப்படத்தில் பல காட்சிகளை வெட்டுவதற்குப் பரிந்துரைத்தார். அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ‘பராசக்தி’ படம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

திருநெல்வேலியில் பிரபலமான ம.தி.தா. இந்துக் கல்லூரி ஒருசமயம் நிதிப்பற்றாக்குறையினால் திணறியது. கல்லூரியைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிர்வாகத்தினர் மிகவும்  சிரமப்பட்டனர். கல்லூரியின் முதல்வராக அலெக்சாண்டர் ஞானமுத்து இருந்தார். அவர் திருநெல்வேலி ஜங்ஷன், டவுன் பகுதிகளில் தன்னுடைய தொப்பியை கையில் ஏந்தி பொதுமக்களிடம் நன்கொடைகள் பெற்றார். அதோடு, மதுரை திரவிய தாயுமானவர் அறக்கட்டளையின் உதவியோடு இந்துக் கல்லூரியை நிதி சிக்கலில் இருந்து மீட்டார்.
வரலாற்று அறிஞர் பத்மபூஷண் நீலகண்ட சாஸ்திரியும், தமிழறிஞர்கள் வெங்கடராஜூலு, சிதம்பரம், ராமலிங்கம் போன்றவர்கள் இந்துக் கல்லூரியில் பணியாற்றிய முக்கிய ஆளுமைகளாகும்.  அன்னி பெசன்ட் அம்மையார் உரையாற்றிய பெருமை பெற்றது இந்துக் கல்லூரி.
தமிழ்நாட்டிலேயே முதல் பெண்கள் கல்லூரி நாசரேத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் அது பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டு இன்றைக்கு இருக்கின்ற சாராள் டக்கர் பெண்கள் கல்லூரியாக அமைந்தது.  பாளையங்கோட்டை செயின்ட் ஜோன்ஸ் கல்லூரியின் முதல்வர் வேதசிரோன்மணி கல்லூரி முதல்வராக மட்டுமல்லாமல், மாணவர்களின் முதல்வராகவும் விளங்கினார். அவர் பேன்ட், முழுக்கை சட்டை, டை கட்டிக் கொண்டு எளிமையாக சைக்கிளில்தான் கல்லூரிக்கு வருவார். அதேபோல் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பணியாற்றிய  ஃபாதர்ஸ், பிரதர்ஸ் லாட்ஜ்களுக்கு சென்றால் அருமையான வெளிநாட்டு சாக்லெட்கள் கொடுப்பார்கள். வெள்ளை அங்கியோடு ஜெபமாலையை உருட்டிக் கொண்டும் பைபிள் படித்துக்  கொண்டும் இருப்பார்கள்.
1972 காலகட்டத்தில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே வந்தேபோது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் விழுந்து, பி.காம். மாணவன் லூர்து நாதன் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி ஃபாதர்ஸ் தங்கியிருந்த அறைகள் சூறையாடப்பட்டன. அப்போது நடந்த ஒருசில விஷயங்களையெல்லாம் வெளியே சொல்ல முடியாது. பொருட்களை எல்லாம் வெளியே எடுத்துப் போடும்போது சஞ்சிகைகளை எல்லாம் பார்க்க முடிந்தது.

முதல் உலகப் போரின்போது கோவில்பட்டி, கயத்தாறு, சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் சோழாபுரத்தில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவையெல்லாம் இன்றைக்குப் பயன்பாடில்லாமல் உள்ளன. இவற்றைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கலாம்.
1940களில் இந்த மாதிரியான விமான நிலையம் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி அருகேயும் இருந்தது. அங்கு விமானம் இறங்கப் போகிறது என்ற தகவல் வந்தவுடன் நெல்லை நகர் மக்கள் கூடி விட்டனர்.
இன்றைக்கு திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள இடம்  இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு தனவானுடையது. முதல்வர் காமராஜர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெருந்தன்மையாடு அந்த இடத்தை இலவசமாகக்   கொடுத்தார். இன்றைக்கு அது விரிந்து பரந்த மருத்துவமனையாகத் திகழ்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
அன்றைக்கு எல்லாம் அப்பகுதி காடுபோல் இருக்கும். கலெக்டர் பங்களா, மாவட்ட நீதிபதி பங்களா மட்டுமே அங்கு இருந்தன.
இந்த மாவட்டத்தினுடைய இலக்கிய கர்த்தாக்கள் அனைவரையும் குறித்து  என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’ நூலில் பதிவு செய்துள்ளேன். சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள், கல்வியாளர்கள், இலக்கிய படைப்பாளிகள், தமிழறிஞர்கள், புலவர்கள் என 500-க்கும் மேற்பட்ட ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. அனைத்தையும் இங்கு எழுதுவது சற்று கடினம்.
அதேபோல், அந்த காலத்து ஆண்டாள், நம்மாழ்வார் முதல் இன்றைக்குள்ள நவீன எழுத்தாளர்கள்  வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆளுமைகள் உள்ளனர். அத்தனை பேரும் தமிழுக்கும், கல்விக்கும் இலக்கியத்துக்கும் தங்களை அர்ப்பணித்த பெருமக்கள். இந்த  கட்டுரை நூல் வடிவமாக வந்தால் இந்த விவரங்களை நிச்சயம் இணைப்பேன்.
இசையிலும் நெல்லை மாவட்டம் முன்னோடியாக இருந்தது.
எஸ்.ஜி. சுப்பையா அய்யர், செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா), பாடல்கள் எழுதிய சுப்பையா நாயுடு, முத்தையா பாகவதர், விளாத்திகுளம் சுவாமிகள், அருகேசநல்லூர் பாகவதர், நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாச்சலம் என்று இசை வரிசையிலும்  நீண்ட பட்டியல் உண்டு. 
 எட்டையபுரம் அரசருடைய ஆதரவோடு முத்துசாமி தீட்சிதர் எட்டையபுரத்தில் வசித்து வந்தார். அவருக்கு தற்போது ஒரு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
நடிகமணி டி.வி.நாராயணசாமி எட்டையபுரம் அருகே உள்ள துரைசாமிபுரத்தில் பிறந்தவர். இவர்தான் எம்ஜிஆரை அண்ணாவுக்கு அறிமுகம் செய்தவர். கலைஞர் நாடகம் நடத்துவதற்கும் இவர்தான் உதவி செய்தார். ஆலோசனைகளையும் வழங்கினார்.
திரைப்படத் துறையில் இருந்த எஸ்.டி.சுப்புலட்சுமி, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த அந்த காலத்து பிரபலமான நடிகை. ‘பவளக்கொடி’ படத்தில் நடித்தவர். நடிகர் டி.எஸ்.பாலையா, சந்திரபாபுவும் (தூத்துக்குடி) இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். 
அப்போதெல்லாம் கிராமங்களில் திருவிழாக் காலங்களில் பாவைக் கூத்துகள் நடத்துவதுண்டு.  ஒன்றுபட்ட தென் ஆற்காடு,  வடஆற்காடு மாவட்டத்தில்  நடத்தப்படும் பாவைக்கூத்து நிகழ்ச்சிகளுக்கும், நெல்லை மாவட்டத்தில் நடத்துகின்ற பாவைக் கூத்து நிகழ்ச்சிகளுக்கும் வேறுபாடு உண்டு.
அதேபோல் தேவராட்டம், வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வகையறாக்கள் ஆடுவார்கள். கலைமாமணி குமாரராமன், அப்பண்ண சாமி போன்றவர்கள் ஒயிலாட்டம், தேவராட்டத்தில் சிறந்து விளங்கினார்கள். 
சோழவந்தானில் பிறந்து, எங்கள் ஊர் பக்கம் திருவேங்கடத்தில் இடதுசாரி ஆதரவு பாடல்களை கிராமியக் கலைஞர் முத்துமாரி, கனத்த குரலோடு பாடுவார். அந்த வட்டாரத்தில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 
அதேபோல் பிரபல ஓவியர் கொண்டையராஜு கோவில்பட்டியில் வாழ்ந்து  புகழ் பெற்றவர். 
(தொடர்வோம்)

Friday, March 28, 2025

#*இன்றைய அரசியல்* #*சித்தாந்தம் கொள்கை* #*மரபுகள் நடைமுறைகள்*

#*இன்றைய அரசியல்* 
#*சித்தாந்தம் கொள்கை* 
#*மரபுகள் நடைமுறைகள்*
———————————
தியாகிகள் நிறைந்த கம்யூனிஸ்ட் கட்சிகளைபொறுத்தவரை அதில் பதவி வகிக்கும் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. விஞ்ஞானபூர்வமான சித்தாந்தம் மற்றும் கொள்கை அதன் நடைமுறை என்பது தான் அங்கே முக்கியம்.

அப்படிப்பட்ட தலைவர்களுக்கு அல்லது அந்த கட்சிக்கு இந்தியாவில் மக்கள் அதிகம் வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் இதுவரை அமர வைக்க வில்லை.




என்றாலும் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் இ எம் எஸ் நம்பூதிரி பாட் அவர்களின் காலத்தில் 1950 களில் கேரளாவில் அமைந்தது! அதன் பிறகு மேற்கு வங்கம் திரிபுரா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சி அமைத்ததும் வரலாறு. இன்றைய நிலையில் பார்க்கும் பொழுது மேற்குவங்கம் திரிபுரா போன்ற மாநிலங்களில் எல்லாம்  கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் வாய்ப்புகளை இழந்து அது இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் மட்டுமே இன்றளவும் தொடர்ந்து இருக்கிறது.




இதை எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் இன்றைய கம்யூனிஸ்ட்கள்  மத்தியில் பாசிசம் மற்றும் நவ பாசிசம்  விவாதம் பரவி வருவது குறித்த கவனத்தைக் கோருகிறார்கள். அது குறித்து அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது மதுரை மாநாட்டில் மேற்சொன்னதை  குறித்து விவாதிக்க இருக்கிறது.

அப்படியான கொள்கை விவாதங்களை  இந்தியாவின் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.

அது ஒருபுறம் இருக்க இன்றைய சிபிஎம் கட்சியின் இந்தியத் தலைவர் பிரகாஷ் காரத் அடிப்படையில் காங்கிரசுக்கு எதிரானவர். மறைந்த சீதாராம் எச்சூரி அவர்கள் எப்போதும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து அதனிடம் கை குலுக்கி கொண்டே இருப்பார். வாழ்நாள் முழுக்க காங்கிரஸின் தோழனாக அதைத் தாங்கி பிடித்து நடந்து கொண்டார். இந்தக் கருத்து  பரவலானது தான் என்றாலும் கூட அது குறித்து நமக்கு முழுமையாக தெரியவில்லை.

இன்றைய சூழ்நிலையில் பாசிசம், நவ பாசிசம் என்று கம்யூனிஸ்டுகள் குறிப்பிடுவது பாஜகவை விமர்சிப்பதாகத்தான் குறிப்பாக  எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் தான் அவர்களது கட்சிகளுக்குள் விவாதம் நடந்து வருகிறது. இது எதை நோக்கிச் செல்லும் என்றும் இப்போதைக்குச் சொல்ல இயலவில்லை.

இந்திரா அம்மையாரின் அவசர நிலைப் பிரகடனத்தை ஆர் எஸ் எஸ்  போன்ற அமைப்புகளும் அன்றைக்கு இருந்த பாஜக போன்றவையும் கடுமையாக எதிர்த்தவை.  சிபிஎம் இவர்களுடன் இணைந்து எதிர்த்து போராடியத்து.ஆனால் அப்படிப்பட்ட எமர்ஜென்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டாங்கே தலைமையில் 
ஆதரித்தது என்பதையும்  நாம்மறந்து விடக்கூடாது. அப்போது தானே பாசிசத்தின் மூலக்கருத்து உண்டானது இல்லையா? 

மாற்றுக்கருத்துக்களுடன் திமுக காங்கிரஸ் கூட்டணி என்றும் ஒரு திட்டம் இருக்கிறது மற்றும் சோசியலிஸ்ட் கட்சிகள் அதாவது இன்றைக்கு காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்கும் முலாயம் (அகிலேஷ் யாதவும்) இன்றைய லல்லு பிரசாத் யாதவும்  சோசியலிஸ்ட் கட்சியில் இருக்கும் போது எமர்ஜென்சியை எதிர்த்து இந்திராவுடன் கடுமையாக மோதினவர்கள்தான்!. அதேபோல் காஷ்மீர் தேசிய மாநில கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லாவும் 
எமர்ஜென்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்தான். ஆனால் காலங்கள் மாறுகின்ற போது சித்தாந்தங்களும் மாறுகிறது என்கிற கணக்கில் அவரவர் பிராந்தியங்களின் அணுகுமுறையும் மாறுகிறது எனும் அடிப்படையில் இந்திய அரசியலின் முகமே மாறிக் கொண்டிருக்கிறது!

தேச நலன்களுக்குரிய சித்தாந்தங்களே முக்கியம் என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், ஜெயபிரகாஷ் நாராயணன், ஆச்சாரியார் நரேந்திர தேவ், லோகியா, போன்றவர்கள் எல்லாம் 
கூறுவார்கள். ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட லல்லுபிரசாத்யாதவ் முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள் இன்று மாறிக் கொண்டார்கள். இப்படியான நிலை தான் இன்று இருக்கிறது. 

இந்திய மார்க்சிஸ்ட்களிடம் குறிப்பாக இம்மாதிரியான பாசிசம் நவ பாசிசம் போன்ற விவாதங்கள் இதுவரை வந்ததில்லை. அவர்களுடைய கொள்கைகள் அடிப்படையில் பார்த்தால் ஒரு காலத்திலும் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸை ஆதரிக்க முடியாது!

காங்கிரஸின் கடந்த காலங்களில் இருந்து அவர்கள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை! காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்த போது 1950 களில் போராடும் கம்யூனிஸ்டுகளைக் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள்! கேரள மாநிலக் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைத்தார்கள். எமர்ஜென்சி காலத்தில் ஜெயபிரகாஷ்  நாராயணன் உட்பட எத்தனை மூத்த கம்யூனிஸ்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட முடியாது. இதுதான் கடந்த கால வரலாற்றின் எதார்த்தம்! இன்றைக்கு அரசியலில் தனி நபர்களின் புகழ் பாடத் தொடங்கி விட்டநிலையில் அதன் கொள்கைகள் நாளடைவில் காலாவதி ஆகிவிடும் என்பதற்கான சமூக அவலங்கள் தொடங்கி இருக்கின்றன. பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்!

ஆனால் இங்கே தமிழ்நாட்டில் கட்சிகளின் பொதுக்குழுக் கூட்டங்களைப் பார்த்தால் அல்லது அதனுடைய மாநாடுகளைப் பார்த்தால் மாநாட்டுக்கு வரும் 2500 பேர்களுக்கு இன்னின்ன உணவுகள் வழங்கப்படும் என்று  மெனுப் பட்டியல்களை பிரச்சாரத் தட்டிகளாக அவர்களே ஊடகங்கள் தோறும் வைக்கிறார்கள். இதை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. அல்லது மக்களைத் தொண்டர்களை என்னவாக கணிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
 பொதுக்குழுவில் என்ன கொள்கைகள் என்ன திட்டங்கள் என்ன எதிர்கால உண்மையான நடைமுறைகள்  என்பதுபற்றி எதுவுமே இவர்கள் சொல்வதும் இல்லை! அவற்றை முன் பெரியாக செயல் திட்டங்கள் வைப்பதும் இல்லை! இது வெறும் சம்பிரதாயம்தான். பதிலாக நீங்கள் பொதுக் குழுவிற்கு வந்தால் என்னென்ன வகை உணவுகள் கிடைக்கும்  என்று பட்டியலைப் போட்டு மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் 10 15 ஆண்டுகளாக கட்சிப் பொதுக்குழு மாநாடுகளில் நடந்து வருகிறது!

கோட்பாடுகளைப் புறம் தள்ளிவிட்டு 
குடும்ப வாரிசுகளின் அரசியலுக்கு தோதாக இதை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதன்றி வேறென்ன! தலைவர்களை மட்டுமே முன்னிறுத்தி ஹீரோ ஒர்ஷிப்பாக எக்காளமாக கிளர்ச்சியாக மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி மயக்கமூட்டும் இந்திய அரசியல் இப்படியாகத்தான் அதன் வழியில் போய்க் கொண்டிருக்கிறது! அதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு பிறந்த வாரிசுகளுக்குமான அரசியலாகவும் இது தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை மன்னராட்சி என்று சொல்லாமல் வேறு என்ன வகையில் வகைப்படுத்துவது. இதெல்லாம் இன்றைக்கு மிக முக்கியமாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட  வேண்டிய அல்லது இத்தகைய போக்குகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டிய  நடைமுறையாகவும் அதற்கான புதிய அரசியல் மாற்றங்களும் தேவையாக இருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

தீர்மானங்களை எப்படி வடித்து நிறைவேற்ற வேண்டும் என் தெரியாமல் இங்கு கட்சிகள் உள்ளன. இரங்கல் தீர்மானம் ஒரே தீர்மானம் தனியாக முதலில் வாசித்து விட்டு சில எல்லோரும் எழுந்து நின்று அமைதி சில நொடிகள் அமைதி காக்க வேண்டும். பின் பொது தீர்மானங்களை முன் மொழிந்து பின் வழி மொழிய வேண்டும். இது மரபு. இவை 
எல்லாம் இன்றைய புதிய கட்சிகளுக்கு தெரிய வில்லை. இப்படி ஆலோசகர்கள், நிர்வாகிகள் அங்கு உள்ளனர்.

#இன்றையஅரசியல்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-3-2025.


*இலங்கைக்குபயணம்செய்தஇந்திய_பிரதமர்களும், கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை*

*இலங்கைக்குபயணம்செய்தஇந்திய_பிரதமர்களும், கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை* இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் ...