Saturday, April 5, 2025

*இலங்கைக்குபயணம்செய்தஇந்திய_பிரதமர்களும், கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை*

*இலங்கைக்குபயணம்செய்தஇந்திய_பிரதமர்களும், கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை*

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை இலங்கைக்குச் செல்ல உள்ளார். இது அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணமாகும்.

தாய்லாந்து பயணத்தைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மோதி இலங்கைக்கு செல்ல உள்ளார்.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார் இந்தியப் பிரதமர் மோதி.

ஜனாதிபதி அநுர பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு தனது முதல் அரசு பயணத்தை மேற்கொண்டார்.

இந்தியா - இலங்கை உறவுகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வரலாற்று ரீதியான பிணைப்பு உள்ளது.

இலங்கைக்கு பௌத்தம் அறிமுகமாவதற்கு முன்பே, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே மத மற்றும் கலாசார ரீதியிலான உறவுகள் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

சமீபத்திய வரலாற்றைக் கருத்தில் கொண்டால், 1960 களில் இருந்து 65 ஆண்டுகளில் 8 இந்தியப் பிரதமர்கள் இந்தத் தீவுக்குப் பயணம் செய்துள்ளனர்.

1962 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இலங்கைக்குப் பயணம் செய்தார். பின்னர் 1973 ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையிலான சிறந்த உறவுக்கு வரலாறு சாட்சியாக உள்ளது.

கச்சத்தீவின் உரிமை தொடர்பான பிரச்னை தீர்க்கப்பட்ட விதம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி இலங்கையின் பிரதமராக இருந்த பண்டாரநாயக்கவுக்கும் , இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவின் உரிமையை இலங்கை பெற்றது.

1979 ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் மொராஜி தேசாயும்,பின்னர் 1987 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கைக்குப் பயணம் செய்தனர்.

ராணுவ அணிவகுப்பின் போது நடந்த தாக்குதல் சம்பவம், ராஜீவ் காந்தியின் இலங்கைப் பயணம் வரலாற்றில் இடம்பெறக் காரணமானது.

1991 இல் - நரசிம்ம ராவ், 6வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும், 1998 இல், இந்தியப் பிரதமர் வாஜ்பாய்10வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும் இலங்கைக்குப் பயணம் செய்தனர்.

பின்னர் 2008 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 15வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கு பயணம் செய்தார்.

அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு பயணம் செய்தார்.

நான்கு இந்தியப் பிரதமர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதிவுகளின்படி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள்:

நேரு - கொத்தலாவல ஒப்பந்தம் - 1954.

இந்திய அரசியலமைப்புப் பிரிவு 8 இன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட தேதியில் (ஜனவரி 26, 1950) இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்திய குடியுரிமையைப் பெற அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள இந்திய தூதரகங்களில் இந்தப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அந்த நேரத்தில் இலங்கையில் வாழ்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களை தங்க வைப்பதற்கு போதிய இடம் இல்லை

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு குறுகியதாக இருந்ததால், 1949 ஆம் ஆண்டின் 03 ஆம் எண் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களுக்கான காலக்கெடுவை பூர்த்தி செய்யத் தவறிய இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இந்த விஷயத்தில் தீர்வு பெறுவதற்காக தொடர்ந்து காத்திருக்க வேண்டியிருந்தது.

இது ஒரு பெரிய சிக்கலாகத் தொடர்ந்தது. இந்தியாவிலோ அல்லது இலங்கையிலோ குடியுரிமை இல்லாமல் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து இலங்கையில் தங்கியிருந்தனர்.

அந்தப் பிரச்னையைத் தீர்க்கும் நோக்கில், 1954 அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஒரு மாநாடு நடைபெற்றது.

குடியுரிமைக்காக காத்திருந்த மக்கள் இலங்கை குடிமக்களாக அங்கீகரிக்கப்படும் வரை இந்திய குடிமக்களாகவே இருப்பார்கள் என்று இலங்கை தூதுக்குழு கருதியது.

இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் விரும்பினால் இந்திய குடிமக்களாகப் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக இந்தியக் குழு ஒப்புக்கொண்டது.

இலங்கைக் குழுவிற்கு அப்போதைய பிரதமர் சர் ஜான் கொத்தலாவல தலைமை தாங்கினார்.

இந்தியக் குழுவிற்கு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமை தாங்கினார்.

இரு பிரதமர்களும் 1954 அக்டோபர் 10 அன்று டெல்லியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் நேரு-கொத்தலாவல ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் இந்த ஒப்பந்தம் பிரச்னையை முழுமையாக தீர்க்கவில்லை.

 
கச்சத்தீவு ஒப்பந்தம்:

பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவுகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இலங்கை பிரதமர் பண்டாரநாயக்க - இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே ஜூன் 26, 1974 அன்று கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவின் உரிமையை இலங்கை பெற்றது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லை பிரிக்கப்படும்போது அங்குள்ள கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டு இந்திய-இலங்கைத் தலைவர்கள் கையெழுத்திட்ட மற்றொரு ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவைச் சுற்றி மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்:

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இலங்கைக்குள் சுதந்திரமாக நுழைந்த இந்தியர்களின் எண்ணிக்கை, அதில் சட்டவிரோதமாக நுழைந்து உள்ளூர் மக்களுடன் இணைந்தவர்களுடன் சேர்த்து, லட்சக்கணக்கானதாக இருந்தது.

இந்த தேசிய சிக்கல் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

1964 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டதாக குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, 1964 அக்டோபர் 30 ஆம் தேதி முடிவடைந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் நாடற்றவர்களின் எண்ணிக்கை 30.10.1964 நிலவரப்படி, 975,000 என மதிப்பிடப்பட்டது.

பின்னர் 300,000 நபர்களுக்கு இலங்கை குடியுரிமையும் 525,000 நபர்களுக்கு இந்திய குடியுரிமையும் வழங்க இருதரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டது.

1974 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில் , மீதமுள்ள 150,000 மக்களை இரு நாடுகளுக்கும் இடையில் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இலங்கைக்கான எண்ணிக்கை 375,000 ஆகவும், இந்தியாவிற்கான எண்ணிக்கை 600,000 ஆகவும் மாற்றப்பட்டது.

1987 ஆம் ஆண்டு இந்திய -இலங்கை ஒப்பந்தம்:

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1987 ஜூலை 29 அன்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில், நாட்டில் எதிர்ப்பு கிளம்பியதற்கு மத்தியிலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கை உள்நாட்டுப் போரின் ஒரு திருப்புமுனையாக இது கருதப்பட்டது.

அனைத்து மிதவாத, ஆயுத குழு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீதும் விடுதலைப் புலிகள் அதிகாரப்பூர்வமற்ற தடையை அறிவித்து அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட சூழலில், அமிர்தலிங்கம், சிவசித்தம்பரம் மற்றும் சம்பந்தன் போன்ற மிதவாத தமிழ்த் தலைவர்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில், அதிகரித்து வரும் ராணுவ சூழலை முடிவுக்கு கொண்டு வந்து, இந்தியாவின் ஆதரவுடன் இலங்கையில் தமிழ் தேசியப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வை எட்டுவதே அமிர்தலிங்கம் மற்றும் சம்பந்தன் போன்ற தலைவர்களின் முக்கிய முயற்சியாக இருந்தது.

இதற்கிடையில், பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனா கையெழுத்திட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் போர் நிறுத்தம் தொடங்கியது. போர்நிறுத்த அடையாளமாக புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்ததன் மூலம், நாட்டிற்கு வெளியே இருந்த தமிழ் தலைவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினர்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.

மேலும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரதமர் மோதியின் ஆட்சிக்காலம்
சமீபத்தில், 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் கீழ் செயல்படும் பிரதமர் மோதியின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டுள்ளன.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் போது இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கிய முதல் நாடாக இந்தியா விளங்கியது.

பின்னர், 2022-ஆம் ஆண்டில், இலங்கை அதன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, அதற்குத் தேவையான எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவைப் பெற இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் மதிப்புடைய உதவியை வழங்கியது.

ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கைக்கு பிரதமர் மோதி பயணம் செய்தார். தாக்குதலுக்கு பிறகு, இலங்கைக்கு முதல் பயணம் மேற்கொண்ட ஒரு நாட்டின் தலைவராக மோதி விளங்கினார்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண அறிவுரைகளை வெளியிட்டிருந்த சூழலில், இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் பெற்றது.

2017 சர்வதேச வெசாக் விழாவின் விருந்தினர்
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார்.

மார்ச் 14, 2015 அன்று, நரேந்திர மோதி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மிக நெருக்கமான தொடர்பு பௌத்தம் என்று கூறிய இந்தியப் பிரதமர், இந்திய அரசு மற்றும் சமூகத்தின் இன்றியமையாத பகுதியாக பௌத்தம் மாறிவிட்டது என்றும், அது சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஹட்டன் நோர்வூட் பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட டிக்கோயா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.

நரேந்திர மோதியின் முதல் இலங்கைப் பயணம் ஏன் சிறப்பு வாய்ந்தது?

மோதி இந்தியப் பிரதமாக தேர்வான பிறகு, 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் செய்தார். இந்தியப் பிரதமர் ஒருவர் கடைசியாக இலங்கைக்கு பயணம் செய்தது சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு.

1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி மீதான தாக்குதலுக்குப் பிறகு, இந்தியத் தலைவர்கள் குறைவாகவே இலங்கைக்குப் பயணம் செய்தனர்.

முன்னதாக, 2008 ஆம் ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மட்டுமே இலங்கைக்குச் சென்றார்.

2015 ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் செய்த இந்தியப் பிரதமர் மோதி, அனுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மகா போதியையும் வழிபட்டார்.

இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு முதல் முறையாக பயணம் செய்தார் என்ற வரலாற்றுப் பெருமையும் கிடைத்தது.

யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுடன் கட்டப்பட்ட வீடுகளை இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு ஒப்படைக்கும் விழாவில், அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து கலந்து கொண்டார்.

- பிபிசி
#KSR post
5-4-2025


Friday, April 4, 2025

கச்சத்தீவு குறித்த சில அறியாத விஷயங்கள்!

#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! 
———————————————————-
கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இலங்கையை ஆண்ட போது  1921 வது வருட காலங்களிலேயே கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்று சொல்லிவிட்டார்கள். அது குறிப்பாக ராமநாதபுர அரசருக்குச் சொந்தமானது என்பதில் ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கான ரெக்கார்டுகள் இருக்கின்றன. அன்றைய இலங்கையின் வரைபடத்திலும் கட்சத்தீவு இந்தியாவின் பகுதியாகவே தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்திலும் கட்சத்தீவு சேர்க்கப்பட்டிருந்தது! கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே இவையெல்லாம் பேசி முடிவு செய்யப்பட்டவைதான்!
பிறகு ஒரு காலகட்டத்தில் அரசு குடியரசு தின விழாஒன்றை டெல்லியில் மத்திய அரசு   ஶ்ரீமாவோ பண்டாரநாயக வை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார்கள். பண்டாரநாயக கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு திரும்ப இரண்டு மூன்று நாட்கள் தாமதமாகிவிட்டது! பிரதமர் இந்திராகாந்தி கூட அதிகாரிகளை அழைத்து என்ன ஶ்ரீமாவோ பண்டாரநாயக இந்தியாவைச் சுற்றிப் பார்க்கிறாரா சிங்களராக இருப்பதால் புத்தகயாவை சென்று பார்த்துவிட்டுத் திரும்புகிறாரா?  இல்லை உடல்நிலை ஏதும் சரி இல்லையா?ஏன் இன்னும் இலங்கைக்கு திரும்பவில்லை என்றெல்லாம் கேட்டிருக்கிறார்!

இல்லை ஏதோ உங்களிடம் பேச வேண்டும் என்று காத்திருக்கிறார் ஆனால் தயக்கத்துடன் இருக்கிறார் என்பதாக அவரிடம் சொல்லப்பட்டது.
உடனே இந்திரா அம்மையார் அவரை தனது வீட்டிற்கு அழைத்து வீட்டின் பின் வாரண்டாவில் அமர வைத்துப் பேசுகிறார்.அவரது உடல்நிலை பற்றியும் இந்தியாவைச் சுற்றி பார்க்கிறீர்களா என்றெல்லாம் ஆதுரமாக விசாரிக்கிறார்! பண்டார நாயகா ஏதும் பேசாமல் மௌனமாய் இருக்கிறார்!

ஆனால் அவருடன் வந்த இலங்கை வெளி விவகாரத் துறை செயலார் விசயத்தைப் போட்டு உடைக்கிறார்! நாங்கள் கசசத் தீவை எங்களுக்குத் தருமாறு கேட்டு வந்திருக்கிறோம் என்று சொல்கிறார்!

 உடனே இந்திரா அம்மையார் அதை எப்படிக் கொடுக்க முடியும்? அது தமிழ்நாட்டின் சொந்தமானது அதை உங்களுக்குக் கொடுப்பது  மிகுந்த சிரமமானது என்று சொல்லுகிறார்!
பிறகு ஏதோ சமாதானமாக பேசி  இருங்கள் பார்க்கலாம் என்றுவிட்ட பிறகு இந்த தகவல் சென்னையில்  முதல்வர் கலைஞருக்கு உடனே தெரிவிக்கப்பட்டது! கலைஞர் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை! பிறகு கேவல்சிங்கும் சட்ட நிபுணர் டி கே பாஸும் டெல்லியில் இருந்து வந்து கலைஞரைச் சென்னைக் கோட்டையில் சந்திக்கிறார்கள்.!
அவ்வாறு சந்திக்கும்போது இலங்கை கச்சத்தீவை தங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறது! அதுக்கு பதிலாக இரண்டு வெற்று மணல் பரப்புள்ள சிறு கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள்! என்று சொல்ல….

முதலில் அது எப்படி முடியும்? என்று கேட்ட கலைஞர் கவனமாக யோசித்து இந்த பிரச்சனையை ஒரு இரண்டு வருடம் தள்ளிப் போடுங்கள் என்று சொல்லுகிறார்! சட்டபூர்வமாக இப்பொழுது முடியாது வேண்டுமானால் அமைதியாக அதை வைத்துக் கொண்டிருங்கள் என்றும் சொல்கிறார்.

அதன் பிறகு கலைஞர் இது குறித்துக் கட்சி கூட்டங்களையும் செயற்குழுவையும் கூட்டி ஆலோசிக்கிறார்! அது பெரும்பாலும் கச்சத்தீவை கொடுக்க கூடாது என்கிற முடிவை எட்டி இருந்தாலும்  கலைஞருக்கு அது சொல்லப்பட்டு  விட்டது என்பதனால் அதன் நிர்பந்தம் தெரிந்தே இருக்கிறது.

பிறகு 1974 இல் கச்சதீவை இலங்கைக்கு கொடுப்பதற்கான ஒப்பந்தம் கலைஞரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தம் 1976-ல் போடப்பட்ட போது கலைஞர் ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். ஆக இரண்டாவது ஒப்பந்தமும் முடிந்தது !இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஒப்பந்தமானது இரண்டு நாட்டு பிரதமர்களும் அருகருகே அமர்ந்து கையெழுத்து போட்டு நடக்கவில்லை.

இந்திரா காந்தி அம்மையார் டெல்லியில் கையெழுத்துப் போட்டு அனுப்புகிறார்! அந்த ஒப்பந்தத்தில் பண்டாரநாயக இலங்கையில் இருந்து கையெழுத்துப் போடுகிறார். இந்த  ஏற்பாடுகள் எல்லாம் இருநாட்டு வெளி விவகாரத் துறை செயலாளர்கள் கடினமூலமாகவே நடந்தது!

எம்ஜிஆர் எப்படி சட்ட  மேலவை தீர்மானம் இல்லாமல் சட்டமேல் சபையைக் மத்திய அரசுக்கு கடிதங்கள் மூலம் கலைத்தாரோ அது போலவும் இதுவும் நடந்தது!

அன்றைய ஜன சங்கத்தின் தமிழ்நாடு தலைவராக இருந்த  மதுரை ஜனா கிருஷ்ணமூர்த்தி இதை எதிர்த்து வழக்கு போட வேண்டும் என்று சொன்னார். இது சம்பந்தமாக நானும் நெடுமாறனும் கூட தீவிரமாக இதை மறுக்க வேண்டும் என்றெல்லாம் பேசினோம். குறிப்பாகச் சொன்னால் அந்த வழக்கிறாக நான் ஜனா கிருஷ்ணமூர்த்திக்கு அதிகம் உதவிகள் செய்தேன்! உயர் நீதிமன்றத்தில் இந்த எதிர் வழக்கு ரிட் பெட்டிஷன் ஒரு எண்ணாகக் கூடப் பதிவு செய்ய மறுக்கப்பட்டது. ரிஜிஸ்டாரைக் கேட்டு தலைமை நீதிபதி பேசிய பிறகுதான் அது வழக்கு எண்ணாகப் பதியப்பட்டது அப்போது எங்கள் பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி அவர்கள் தான் தலைமை நீதிபதியாக இருந்தார்! அவர் நம்பர் பண்ணுங்கள் என்று சொல்லி ஒத்துக் கொண்டார். அதன் பிறகு தான் வழக்கு பதிவானது! எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட போது அதற்கு வாதாடிய அவர் வாரிசான குருசாமி நாயக்கரை ஒரு தந்தியடித்து நாங்கள் காப்பாற்றினோமோ அதுபோலத்தான் இந்த கட்சி விவகாரத்தில் இந்த வழக்கைப் பதிவதற்கு அவ்வளவு சிரமப்பட்டோம். இப்படிக் கச்சத்தீவு விவகாரத்தில் பல நுணுக்கமான இன்றைக்கு உள்ள சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் யாருக்குமே தெரியாத பல விஷயங்கள் அடங்கியுள்ளன. இவற்றையெல்லாம் இன்று யாரும் இந்த வரலாற்று செய்திகளை பேச மாட்டார்கள்.

வெறுமனே கட்சத்தீவை மீட்போம் மீட்போம் என்று இப்போது வாய்ச்சவடால் அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது!

நிரந்தரத் தீர்வு தேவை!

கடலில் அத்துமீறி தங்கள் எல்லைக்குள் புகுவதாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடர்கிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மீனவர்கள் கைது பிரச்னைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.
கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்தபோது இரண்டு விசைப்படகுகளுடன் ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் கடந்த 2024,அக். 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த அக். 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
நிகழாண்டில் மட்டும் இதுபோன்று மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் 30-ஆக அதிகரித்துள்ளது எனவும், 140 மீனவர்களுடன் 200 மீன்பிடிப் படகுகளும் இலங்கை அரசு வசம் உள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை ( 2024-நவ.10) கைது செய்துள்ளனர். நிகழாண்டில் மட்டும் 350-க்கும் அதிகமான மீனவர்களை இலங்கை அரசு சிறைபிடித்துள்ளது. இவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண இரு நாடுகளின் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று கூட்டுப் பணிக்குழுவின் 6-ஆவது கூட்டம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் கொழும்பில் கடந்த 2024,அக். 29-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக மீனவர்களுக்கு எதிராக படை பலத்தை தவிர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இதற்கு முன்பு, கைது செய்யப்படும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்; இந்திய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்படுவார்கள். இப்போது இந்த நடைமுறை தொடர்ந்தாலும் தமிழக மீனவர்கள் புதுவிதமான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். கைது செய்யப்படும் மீனவர்களுக்கு பல மாதங்கள் சிறைத் தண்டனையும் கடுமையான அபராதமும் விதிக்கப்படுகின்றன.
கடந்த ஜூலையில் மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு இலங்கை பண மதிப்பில் தலா ரூ. 42 லட்சமும், 10 பேருக்கு தலா ரூ. 35 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று, கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 35 லட்சமும், 23 பேருக்கு தலா ரூ. 10 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அந்த நாட்டு சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்தப் படகுகளை மீட்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. படகுகள் பல மாதங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருப்பதால் தொழில் ரீதியாக மீனவர்கள் கடும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள படகுகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுகின்றன.
இது ஒருபுறம் இருக்க, தமிழக மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன்வளம் குறைந்து தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை வடக்குப் பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்ற போக்கை போக்கி இரு தரப்பில் பேசி தீர்வு ஏற்படவேண்டும். கச்சத்தீவு அருகில் சீனா காரர்கள் இருப்பு வேறு இருக்கிறது . சீனா காற்றாடி மின உற்பத்தி செய்ய இந்த தீவுகளை இரமேஸ்வரம் 14 கிமீ தொலைவில் குத்தகைக்கு எடுத்துள்ளன. இலங்கையை சுற்றி இந்து மகாசமுத்திரம், வங்க கடலில் சீனாவின் நடமாட்டம் இந்திய பாதுகாப்புக்கு நல்லது அல்ல.

#கச்சத்தீவு
#kathatheevu
#ChinaSriLanka
#இலங்கை_சீனா
#இந்துமகாசமுத்திரம்
#indianocean

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-4-2025.


Tuesday, April 1, 2025

#வடக்கெல்லை மீட்பு #தமிழகத்தில் திருத்தணி இணைப்பு #இதே நாளில் ஏப்1,1960

#வடக்கெல்லை மீட்பு 
#தமிழகத்தில் திருத்தணி இணைப்பு #இதே நாளில் ஏப்1,1960
———————————————————
1956 வது வருடம் நவம்பர் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி-செங்கோட்டை கேரளாவில் இருந்து விடுபட்டு நம்முடன் இணைந்தது. திருத்தணி அப்போது ஆந்திராவை விட்டு நம்மோடு இணையவில்லை.

ம பொசி, மங்கலக்கிழார், விநாயகம் போன்ற பல்வேறு ஆளுமைகளும் அவ்விதமான அரசியல் நோக்காளர்களும்  தீவிரமாகப் போராடித்தான் திருத்தணியைப் பெற்று தந்தனர். அத்துடன் ஆந்திராவில் இருந்து நம்மோடு வரவேண்டிய சித்தூர் நெல்லூர் திருப்பதி காளகஸ்தி போன்ற இடங்களையும் இழந்தோம் என்பதையும் மறந்து விடக்கூடாது.. இதே ஏப்ரல் 1ஆம் தேதி தான் திருத்தணி 1960 இல் நம்முடன் இணைந்தது. இந்த வரலாற்றின் மேல் எந்த அக்கறையும் இல்லாதவர்கள் தான் இப்போது தெரியாமல் இருக்கிறார்கள்! மட்டுமல்ல அவற்றின் மீது ஒரு நாட்டமும் அவர்களுக்கு இல்லை! இந்த நாள் குறித்த எந்த மனப்பதிவும் இல்லாதவர்கள் தான் இப்போது அரசியலில் வாழ்கிறார்கள்! வரலாற்றைத் திரும்பப் பார்ப்பதன் மூலமாகத்தான் நிகழ்காலத்தை எதிர்காலத்தை சரி செய்ய முடியும் என்பதை உணர்ந்த எங்களைப் போன்றவர்கள் தான் இந்த விஷயங்களை மறுபடியும் நினைவு படுத்த வேண்டி இருக்கிறது!

 1956 இல்  இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமானால் நில அடிப்படையில் வட வேங்கடம் தொட்டுத் தென்பகுதி குமரி வரை ஆதித் தமிழகம் இருந்தது  என்ற கூற்றுக்கு இணங்க தமிழகத்தின் தமிழ் பேசும் தாயகப் பகுதியான  திருப்பதியையும் திருத்தணியையும்  மொழிவாரி மாநிலத்திட்டத்தால் ஆந்திராவிடம் இழந்து மக்கள் தவித்தனர். 1957ஆம் ஆண்டு எல்லை ஆணையராக இருந்த எச்வி படாஸ்கர் தமிழகப் பகுதிகளாக விளங்கிய திருத்தணி திருவாலங்காடு வள்ளி மலை போன்றவை தமிழகத்துடன் இணைக்கப்படும் என்று தன் ஆணையில் குறிப்பிட்டு இருந்தார். அது தமிழக மக்களுக்கு ஆறுதலாக இருந்த வேலையில் அன்றைய பிரதமர் நேரு அந்த இணைப்பைச் செய்ய விடாமல் தாமதப்படுத்தினார்! பல முட்டுக்கட்டைகளுக்கிடையே தமிழகத்தின் வடக்கு எல்லை பாதுகாவலராக இருந்த மபொ சி  மிக வன்மையாக அதைக் கண்டித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
  அதன் அடிப்படையில் பின்வாங்காத பல போராட்டங்களையும் நடத்தினார்.

அதன் பிறகு 1960 நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்த போது எவ்விதத் திருத்தமும் இன்றி திருத்தணி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அதற்கான மசோதா சட்டமாகவும் ஆக்கப்பட்டது.

தமிழகத்துடன் திருத்தணி இணைந்த இந்த நாளில் (01-04-1960)
திருத்தணி மீட்புக்காக போராடிய
 ம பொ சி  மங்கலக்கிழார் விநாயகம் போன்ற தியாகிகளை தமிழ் மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்!

“திருத்தமிழ்க்கு உயர்திசைச் சிறப்புடைத் திருத்தணிகை” என்று -அருணகிரி நாதர்(திருப்புகழ்)

விசால ஆந்திரம் கேட்டு 1953ஆம் ஆண்டு தீவிரமாக போரடிய போது சித்தூர் மாவட்டத்தில் ஆறு பகுதிகளை  ஆந்திர மாநிலத்தில் சேர்ந்து விட்டது.அதில் மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் அடங்கும்.

1946ஆம் ஆண்டிலிருந்து-

“வேங்கடத்தை விட மாட்டோம்,
வேங்கடமே தமிழகத்தின் எல்லை,
தணிகை தமிழருக்கே”
- தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி
அப்போது தமிழ்நாட்டில் திராவிடநாடு முழக்கத்தை பெரியார், அண்ணா போன்றவர்கள் எழுப்பினர்

ஆந்திரர்கள் தலைநகரான சென்னையைக் கூட உரிமை கொண்டாடி கேட்க முடிந்தது. ஆனால் ராஜாஜி, ம.பொ.சிவஞானம் கடுமையாக இதை எதிர்ப்பு தெரிவித்தனர்.

நல்ல வேளையாக சென்னை மீட்புப் போரிலும், “தலையிட்டு தலையைக் கொடுத்தேனும் தலை நகரை காப்பேன்” என்று ம.பொ.சி. முழக்கமிட்டார். அந்த முழக்கத்திற்கு நல்ல பலனும் கிடைத்தது.

சென்னையை அரசியல் தளமாகக் கொண்டு இயங்கிய தமிழகக் கட்சிகள் எல்லாம் வேறு வழியின்றி சென்னை மீட்புக் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டன. முதல்வர் இராஜாஜி துணையோடு சென்னை தமிழர் வசமானது. ஆனால், சென்னையை மீட்க ஒத்துழைத்த பேராய, பொதுவுடைமை, திராவிட இயக்கக் கட்சிகளெல்லாம் வட வேங்கட மீட்புக் கிளர்ச்சிக்கு ம.பொ.சி. அழைத்த போது ஒதுங்கியே நின்று வேடிக்கை பார்த்தன.
ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டக்குழுவை உருவாக்கி சித்தூர், புத்தூர்,திருத்தணி ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பும், தொடர் வண்டி முன்பும் மறியல் போராட்டங்களை நடத்தி வந்தார். இவருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தது. அவர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக 3.7.1953இல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பகுதிகள் குறித்து ஆராய எல்லை ஆணையம் அமைக்க நேரு ஒப்புக் கொண்டார். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நேரு ஒப்புக் கொண்டபடி எல்லை ஆணையம் அமைக்க வில்லை.

ஒவ்வொரு ஆண்டும் சூலை 3ஆம் நாள் வடக்கெல்லை பாதுகாப்பு குழு சார்பாக எல்லை ஆணைய நாள் கொண்டாடப் பட்டது. நேரு அரசாங்கம் இதையெல்லாம் பொருட்படுத்த மறுத்தது.

இதற்கிடையில், 1.11.1954இல் தமிழில் கூட்ட நடவடிக்கைகளை நடத்தியதாகக் கூறி தமிழர்களால் ஆளப்பட்டு வந்த திருத்தணிகை பஞ்சாயத்து சபையை ஆந்திர அரசு கலைத்தது.

ம.பொ.சி. தலைமையில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு மீண்டும் கூடியது. அது மீண்டும் வடக்கெல்லைப் போராட்டத்தின் இரண்டாம் கட்டப் போரை தொடங்கப் போவதாக அறிவித்தது. போராட்டத் தளபதியாக விநாயகம் அறிவிக்கப்பட்டார்.

15.10.1956இல் தமிழகமெங்கும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அதுபோல் ரயில் வண்டி சங்கிலியை இழுத்து தொடர்வண்டி நிறுத்தப் போராட்டம் நடத்தியதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பி.கோவிந்தசாமி இராஜ முந்திரி சிறையிலும், மாணிக்கம் பழனி சிறையிலும் மாண்டனர். போராட்டத்தைக் கண்டு அச்சமுற்ற தமிழக காங்கிரசு அரசும், ஆந்திர அரசும் தங்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.

இதனையே காரணமாக காட்டி எல்லை ஆணையம் அமைக்க முடியாது என்று நேரு அரசு கைவிரித்தது. பேச்சு வார்த்தை நாடகம் தோல்வியுற்ற நிலையில் 1956ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் படாஸ்கர் என்பவர் தலைமையில் எல்லை ஆணையம் அமைக்கப்படுவதாக நேரு அறிவித்தார்.

1957ஆம் ஆண்டு வெளிவந்த படாஸ்கர் ஆணையத் தீர்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டு திருத்தணிகையை தமிழகத்தோடு இணைப்பதற்கு நேரு அரசு வழக்கப் போல் காலம் கடத்தியது.

நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்கு/சட்டம் ஆக்குவதற்கு திருத்தணிகை அன்றைய சபாநாயகர் அனந்த சயனம் அய்யங்கார், வட நாட்டு  நாடாளுமன்ற  உறுப்பினர் பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியோர் திருத்தணி இணைப்பு மசோதாவை தடுக்க முற்பட்டனர்.

1959ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட இணைப்பு மசோதா நவம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதைக் கண்டித்து திருத்தணிகை பஞ்சாயத்து சபை கண்டன தீர்மானம் நிறைவேற்றியது. ம.பொ.சி. மத்திய அரசை வன்மையாகக் கண்டித்து கடிதம் எழுதினார். அதன் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 1.4.1960இல் நடைபெற்றது. அப்போது எவ்வித திருத்தமும் இன்றி திருத்தணி இணைப்பு மசோதா சட்டமாக்கப்பட்டது.

வடக்கெல்லை மீட்புக்காக போராடிய மங்கலகிழார், ம.பொ.சி., தளபதி விநாயகம், மேயர் செங்கல்வராயன், கோல்டன் ந.சுப்பிரமணியம், திருத்தணிகை பஞ்சாயத்து தலைவர் சரவணய்யா, என்.ஏ.ரசீது மற்றும் சிறை சென்ற போராளிகளை இன்று நினைவு கூறுவோம்!

#வடக்கெல்லைமீட்பு 
#தமிழகத்தில்திருத்தணிஇணைப்பு 

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
1-4-2025


*இலங்கைக்குபயணம்செய்தஇந்திய_பிரதமர்களும், கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை*

*இலங்கைக்குபயணம்செய்தஇந்திய_பிரதமர்களும், கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களும் – ஒரு வரலாற்றுப் பார்வை* இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் ...