நேற்று (10.09.2014) கலந்து கொண்டு பேசியது பின்வருமாறு:
அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை ஈந்த தியாகிகளான மனப்பாடு அந்தோனி ஜான், கூடங்குளம் ராஜசேகர், இடிந்தகரை ரோசலின், சகாயம் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில், நண்பர் சுப. உதயகுமார் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
கூடங்குளம் அணு உலை கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் ரிட் மனு தாக்கல் செய்தவன் என்ற தகுதி மட்டுமல்லாது, 1987 இறுதியிலும், 1988ல் ராஜீவ் காந்தி இத்திட்டத்தை ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தபோதே, இப்பகுதிக்கு வந்து களப்பணி ஆற்றியவன்.
இதனடிப்படையில் தலைவர் கலைஞர் அவர்களின் அனுமதியுடன் இந்த மேடையில் உள்ளேன். இதுகுறித்து, 123 என்ற தலைப்பிலானநூலையும் ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுதியும் உள்ளேன்.
கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் இப்பகுதியில் இப்பிரச்சினை குறித்து களப்பணிக்கு வந்தபொழுது, எனக்கு நினைவுக்கு வருகிறது. ஓய்வுபெற்ற ஆசிரியர் முத்துகுமாரசாமி, தங்கம் துரைசாமி போன்றவர்கள் சந்தித்து பேசினோம். அப்போது அவர்கள் என்ன சொன்னார்கள்? என்று தெரியுமா. அணு மின் நிலையம் அமைப்பதற்காக எங்களுடைய நிலத்தை, ஒரு ஏக்கர் ரூ.2,000/- விலைக்கு கேட்டார்கள் என்றும், அந்நிலத்தில் புளியமரம் இருந்தால் கூடுதலாக ரூ.100/- தருவதாகவும் சொன்னார்கள் என்று கூறினர். புளியமரத்தால் ஆண்டொன்றுக்கு ரூ.2,000/- வருமானம் கிடைக்கும். வாழ்வாதார நிலத்தை, அணு உலை அமைப்பதற்காக எப்படி தருவது என்றும் கூறினார்கள்.
அந்த காலகட்டத்தில் சிலர், பேச்சிப்பாறையிலிருந்து இப்பகுதிக்கு தண்ணீர் வரும் எனவும், தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்றும் நம்பினார்கள். ஆனால் கடைசியில் பேச்சிப்பாறையிலிருந்து தண்ணீரும் வரவில்லை; அவர்கள் நம்பி இருந்த வேலை வாய்ப்பும் இல்லை.
ஆரம்ப காலத்தில் அணு உலை கூடாது என்பதற்காக டி.மத்தியாஸ், ஒய்.டேவிட், டாக்டர் சாமுவேல் அமிர்தன், டாக்டர் ஞான ராபின்சன் போன்றவர்கள் மட்டுமல்லாது, ஓவியா, பத்திரிகையாளர் ஏ.எஸ் பன்னீர்செல்வம், யு.என்.ஐ. ரமேஷ் போன்ற பலரும் 1988 காலகட்டத்தில் நடத்திய பிரச்சார இயக்கங்களை மறக்க முடியாது. குறிப்பாக பத்திரிகையாளர் அம்பிராஜன், கோடகநல்லூர் பிரேமா நந்தகுமார், ஜி. பாலமோகன், டி. சிவாஜிராவ், தினமணி ஐராவதி மகாதேவன், புத்திகோட்டா சுப்பாராவ், தீரேந்திர சர்மா போன்றோரின் பங்களிப்பை மறக்க முடியாது. ஏ.எஸ்.பன்னீர் செல்வம் போன்றோர் ஜூனியர் விகடனில் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் கூடாது என தொடரை எழுதினார்கள்.
ராஜிவ் காந்தி இத்திட்டத்தை கொண்டுவர ரஷ்ய அதிபர் கோர்பசேவுடன் ஒப்பந்தம் போட்டார். பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்திய செர்னோபில் அணு உலை தொழில் நுட்பத்தில் இந்நிறுவனத்தையும் நிறுவ முயன்றதற்கு எதிர்ப்பும் இருந்தது. இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு ராஜிவ் காந்தி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏற்பட்ட எதிர்ப்பை கண்டு அருகில் உள்ள வடக்கன்குளம் வந்தவர், கூடங்குளம் வருவதை தவிர்த்தார். இவையெல்லாம் பழைய செய்திகள். நண்பர் சுப. உதயகுமார் தலைமையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. இப்போராட்டம், இந்தியாவை மட்டுமல்லாது அகிலத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள், 1989இல் ஆட்சிக்கு வந்தவுடன், சட்டமன்றத்தில் என்ன சொன்னார், கூடங்குளம் அணு உலை திட்டத்தில் மக்களிடம் அச்சம் உள்ளது. அதனை போக்கியபின் தான் திட்டம் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என குறிப்பிட்டார். தலைவர் கலைஞர் அவர்களின் இந்த கருத்தைப் பாராட்டி, அன்றைய தினமணியில் அதன் ஆசிரியர் நடுப்பக்கத்தில் எழுதினார். அதே நிலைப்பாட்டில்தான் இன்றைக்கும் கூடங்குளம் பிரச்சினையை அணுகுகின்றார். ஆனால் இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தூத்துக்குடியில் இப்பிரச்சினை குறித்து பேசும்பொழுது நான் உங்கள் சகோதரி, உங்களுக்கு துணை இருப்பேன் என்றார். சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்குப் பின் அவரின் நிலைப்பாடு என்ன? தற்போது சுப.உதயகுமாரை சந்தித்து பேசுவதையே தவிர்க்கின்றார். அப்போது நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிட்டு, இப்பொழுது மௌனம் ஏன்?
திரு. சுப.உதயகுமார் மற்றும் அவரது சகாக்கள் தலைவர் கலைஞர் அவர்களையும், தளபதி ஸ்டாலின் அவர்களையும் எனது முயற்சியினால் சந்தித்து இப்போராட்டம் குறித்து பேசினார்கள். அப்போது தலைவர் கலைஞர் அவர்களிடம், சுப.உதயகுமார், ஒன்று மற்றும் இரண்டு அணு உலைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், 3 மற்றும் 4 உலைகள் அமைக்க இருப்பதாக கூறுகிறார்கள். 3, 4 அணு உலைகள் கூடாது என்று விளக்கமாக சொன்னார். உடனே தலைவர் கலைஞர் அவர்கள், இதுகுறித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து பேச கூறுகிறேன் என்று கூறினார். இது சுப.உதயகுமாருக்கு மகிழ்ச்சியை அளித்தது.
தலைவர் கலைஞர் அவர்கள் கூடங்குளம் வட்டார மக்கள் குறிப்பாக மீனவர்கள் நலனில் அக்கறை உள்ளவர். அவர் இங்குள்ள நிலைமை குறித்து அடிக்கடி என்னிடம் கேட்பார். அணு மின் நிலையத்தில் 1 மற்றும் 2 உலைகளில் மின் உற்பத்தி துவங்கிவிட்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். சரி, அங்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது? அது எங்கே செல்கிறது?
கடந்த 1995 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில் இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்களில் 3,887 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். அவர்களில் 2,600 பேர் (70 சதவீதம்) புற்றுநோயால் உயிரிழந்திருக்கின்றனர். சுமார் 255 அணு சக்தி விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் தற்கொலை செய்து செத்திருக்கின்றனர். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 7.9.2014 அன்று தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது.
நண்பர் சமஸ், தமிழ் இந்துவில், நெய்தல் நில மீனவர்கள் படும் பாடுகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். சென்னையிலிருந்து, கிழக்கு கடற்கரை வழியாக குமரி வரை, அதாவது வங்கக் கடற்கரை அருகில் வசிப்பர்கள் புற்று நோய் பாதிப்புக்குள்ளாகின்றனர் எனவும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். அணு உலையால் புற்றுநோயின் கொடுமை மிகவும் அதிகரிக்கும் என கூறுகிறார்.
கூடங்குளத்தைப் பொறுத்தவரை, மன்மோகன் சிங் அரசு தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று கூடங்குளம் 3 மற்றும் 4 அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட்டது.
தரமற்ற உபகரணங்களும், உதிரிப் பாகங்களும் பொறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளம் முதல் உலை துவங்கியதாக சொல்லப்படும் அக்டோபர் 2013 முதல் இன்று வரை 30 கோடி ரூபாய்க்கு டீசல் வாங்கியிருக்கிறார்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இவ்வளவு டீசலுக்கு என்ன தேவை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படிக் கேட்டால், பதில் சொல்ல மறுக்கிறார்கள். இந்த வாரத்திலும் ஒரு லட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிறார்கள்.
யுரேனியம் அதிகமாக உள்ள ஆஸ்திரேலியாவில் அணு உலை இல்லை. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளும் அணு உலைகளை கைவிடுகின்ற நிலைமை. அணு மூலம் மிகவும் குறைவான அளவே மின் உற்பத்தி உள்ளது. அதுவும் குறிப்பிட்ட காலம் மட்டுமே செயல்பட முடியும்.
கடந்த மே 14, 2014 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இருவர் 70 டிகிரி வெப்பத்தினால் ஏற்பட்ட தீப்புண்களுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர். நான்கு மாதங்களாகயும், அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இதே நிலைமைதான் கல்பாக்கத்திலும். புற்றுநோய்களும், எலும்பு நோய்களால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற கல்கி ஏடு பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஆதாரத்தோடு எழுதியது.
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தல ஆய்வறிக்கை, பாதுகாப்பு அறிக்கை, பேரிடர் மேலாண்மைத் திட்டம், இழப்பீடு ஒப்பந்தம் போன்ற அடிப்படைத் தகவல்கள் எதையும் தர மறுக்கிறார்கள்.
கூடங்குளத்திலிருந்து கேரளத்துக்கு அதிகமாக மின்சாரம் தரவேண்டும் என்று கோருகின்ற கேரள முதல்வர், அவர்கள் மாநிலத்தில் ஓர் அணுமின் நிலையம் கட்டிக்கொள்ள முன்வரவில்லை. இந்த அணுக் கழிவுகளை எங்கே புதைக்கப் போகிறார்கள். முதலில் கர்நாடக மாநில கோலாரில் புதைக்கப் போகிறோம் என்று கூறினார்கள். ஆனால் அங்கு ஏற்பட்ட பலத்த எதிர்ப்பின் காரணமாக கூடங்குளத்திலேயே புதைக்கப் போகிறார்கள். கேரளாவைப் போன்று கர்நாடமும் மின்சாரம் கேட்கின்றது. இதனால் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்பை இப்பகுதி மக்களால் எப்படி சமாளிக்க முடியும்? இதுகுறித்து பல வினாக்கள் எழுப்பியும் எந்த பதிலும் இல்லை.
ஜூன் 7, 2014 அன்று சிவசேனை கட்சியினரும், மராட்டிய மாநில பாரதிய ஜனதா கட்சியினரும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவதேகரை சந்தித்து கொங்கண் மண்டலத்தின் சூழலையும், தங்கள் மீனவர்களின் நலனையும் கெடுப்பதால் ஜைதாபூர் அணுமின் நிலையத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தனர். மும்பை நகரின் அருகேயுள்ள தாராப்பூர் அணுமின் நிலையம் கட்டப்படும்போது, மீனவ மக்களின் தொழில் பாதிக்கப்படாது என்று அதிகாரிகள் கூறியதையும், பின்னர் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கியதும் 10 கி.மீ. சுற்றளவுக்குள் மீன் பிடிக்கக் கூடாது என்று அவர்கள் தடுக்கப்பட்டதையும் அந்தக் குழு கோடிட்டுக் காட்டியது. இப்படி பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றை நடுநிலையோடு ஆக்கபூர்வமாக பார்க்க வேண்டும்.
இப்போராட்டம் அமைதியாக தொடர்ந்து நடக்கிறது. வீரம் செறிந்த நெல்லை மண்ணிலிருந்து சுதந்திரப் போர் துவங்கியது. எண்ணற்ற ஆளுமைகளும் அன்று ஆங்கில அரசை எதிர்த்தனர். போராட்டம் என்றாலே நெல்லை மண் என்று அனைவருக்கும் தெரியும். இவ்வட்டார வடபகுதியான கோவில்பட்டி, சங்கரன்கோவில், விளாத்திகுளம் மற்றும் வள்ளியூர் போன்ற பகுதிகளில் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியையே திரும்பி பார்க்க வைத்தது. அப்போது காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் இருபது விவசாயிகள் தங்கள் உயிரை தந்தனர். அதுபோல கூடங்குளம் போராட்டம் நெல்லையில் நடக்கிறது. இப்பகுதி மக்களின் நலத்தையே தவமாகக் கொண்டு போராடுகின்ற திரு.சுப.உதயகுமாருக்கும் அவருடைய தோழர்களுக்கும் பாராட்டைத் தெரிவிப்பதோடு, இப்போராட்டம் வெற்றி பெறும் என கூறி இன்னுயிர் ஈந்த தியாக சுடர்களுக்கு எனது வீரவணக்கத்தை சொல்லி உரையை முடிக்கிறேன்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment