Sunday, September 7, 2014

பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம் நூல் வெளியீடு

பண்டிதமணி ஜெகவீர பாண்டியனார் எழுதி, 1950இல் வெளியிடப்பட்ட எங்கள் தெற்குச் சீமையின் வீர புகழ் பாடும் ‘பாஞ்சாலங்குறிச்சி வீர சரிதம்’ என்ற இரண்டு தொகுதிகளுடைய நூலை தலைவர் கலைஞர் நாட்டுமையாக்கினார்.
இந்த நூல் செம்பதிப்பாக, நான் பதிப்பாசிரியராக கொண்டு, உயிர்மைப் பதிப்பகம், நண்பர் மனுஷ்யபுத்திரன் வெளியிடுகின்றார். கிடைத்த நூல்படி மிகவும் மோசமாக, பக்கங்கள் அழிந்த நிலையில் இருந்தது. பக்கங்களைத் திருப்பினாலே உடைந்துவிடுகிற நிலையில் இருந்த பழைய தொகுப்பிலிருந்து சிரமப்பட்டு  2007இலிருந்து படியெடுத்து வெளியிடப்படுகிறது. இந்த நூல் பல சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்தது. 25 ஆண்டுகளுக்கு முன், 1989இல் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, தி.மு.க. வேட்பாளராக நான் போட்டியிட்டபோது, முன்னாள் சட்டப்பேரவைத் துணைத்தலைவர், அண்ணன் விருதுநகர் பெ.சீனிவாசன் அவர்கள் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் என்னை சந்திக்க கோவில்பட்டி வந்தபோது, அவரது காரில் நீண்ட நாட்களாக நான் தேடிய  இந்த நூல் கிடைக்கப் பெற்றது. அவருடன் வாதாடி நூல் தொகுப்புகளை கையகப்படுத்துவதற்கே பெரும் பாடாகியது.
1989லிருந்து இந்த நூலை வெளியிட வேண்டும் என்று நினைத்தபொழுது, அரசியல் பணி, வழக்கறிஞர் பணி என காலம் கடந்துவிட்டது. அந்த நூலை தற்போது அச்சில் பார்க்கப் போவது கடமை முடிந்தது என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. பண்டிதமணி ஜெகவீர பாண்டியனார் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. மதுரை வடக்கு மாசி வீதியில், திரு. பழ.நெடுமாறன் அவர்களோடு பழகிய காலத்தில், ஜெகவீர பாண்டியனாரை சந்தித்ததுண்டு. நல்ல தமிழறிஞர்.


கட்டபொம்மன் வம்சத்தில் ஒட்டநத்தம் கிராமத்தில் பிறந்த ஜெகவீர பாண்டியனார் திருக்குறள் குமரேச வெண்பா, கம்பன் கடைநிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் சரிதம், திருச்செந்தூர் அந்தாதி போன்ற நூல்களைப் பதிப்பித்தார். இவருடைய தமிழ்ப் பணிக்காக மதுரை தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச் சங்கம் ஆகியன இவரை அழைத்துப் பாராட்டின.
வ.உ.சி., பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார், சுத்தானந்த பாரதி, நாமக்கல் கவிஞர், சோமசுந்தர பாரதி, டி.கே.சி., ந.மு. வேங்கடசாமி நாட்டார், அவ்வை துரைசாமி பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் இவருக்கு நண்பர்களாக இருந்தனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி, திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர், குன்றக்குடி ஆதீனம், முதல்வர்கள் இராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், அண்ணா மற்றும் பசும்பொன் தேவர், ம.பொ.சி., அவினாசிலிங்கம் செட்டியார், ப.ஜீவானந்தம், கு.வேங்கடாசலபதி, ஐ. மாயாண்டி பாரதி போன்றவர்களோடு நெருக்கமாகப் பழகியவர். இவரைப் பற்றி, ‘கல்கி’, நா.பார்த்தசாரதி, பழ. நெடுமாறன் ஆகியோர் ஏடுகளில் கட்டுரைகளைத் தீட்டி உள்ளனர். ஒட்டநத்தத்தை விட்டு தூத்துக்குடியில் குடியேறி 1940-ல் தமிழவேள் பி.டி.ராசன், என்.எம்.ஆர். சுப்பராமன், பழ. நெடுமாறனுடைய தகப்பனார் கி. பழனியப்பனார், ஆர்.எஸ். நாயுடு ஆகியோரின் விருப்பத்திற்கிணங்க மதுரையில் குடியேறி இலக்கியப் பணிகளை மேற்கொண்டார். மதுரை பல்கலைக்கழக அகாடமிக் உறுப்பினராக அன்றைய துணைவேந்தரான தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் இவரை 1966-ம் ஆண்டு நியமித்தார். 1967 ஜூன் 17 அன்று காலமானார்.

                                                                                                              -
                                                                                                       
                                                                                                        கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...