Friday, September 5, 2014

தெற்குச் சீமையின் தீரத்திற்கும், அஞ்சாமைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த தியாகச் சுடர் வ.உ.சிதம்பரனாரின் ஓர் குறிப்பு

தெற்குச் சீமையின் தீரத்திற்கும், அஞ்சாமைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த தியாகச் சுடர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் இன்று.


தியாகத்தை அர்ப்பணித்த வ.உ.சி. தனது இறுதி நாட்களில் சந்தித்தது வேதனையும், துயரமும்தான். பொது வாழ்வில் ‘தகுதியே தடை’ என்பது அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. உழைப்பும், தகுதியும் முக்கியமல்ல என்பது பொது வாழ்வில் நுழைபவர்களுக்கு பாலபாடமாகும். தியாகச் சுடர் வ.உ.சி.யைப் பற்றி என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’யில் செய்தப் பதிவுகள்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
-----------------------------------------------------------------------------------------
விடுதலையே நமது குறிக்கோள், அதனை எப்பாடு பட்டேனும் அடைந்தே தீரவேண்டும்; விடுதலையின்றி வாழ்வதைவிடச் சாவதே மேல்; ஆன்மா அழிவற்றது; பொது நலத்திற்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் உயிர் துடிப்பவனே நற்பேறு அடைவான் என்று கூறி மக்களைத் தட்டியெழுப்பிய வ.உ. சிதம்பரனார், வெள்ளையனை எதிர்க்க ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ எனும் சுதேசிக் கப்பல் கழகத்தைத் தொடங்கினார். திலகர் வழியில் தனது போராட்டத்தை நடத்தினார். இவருடைய தேசியப் போராட்டத்திற்கு இரு முறை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டும், பின்னர் குறைக்கப்பட்டது. 1906-ல் சுதேசிக் கழகத்தைத் தொடங்க வ.உ.சி. மக்களிடம் நன்கொடை கேட்டார்.

பாரதியார், இராஜாஜி முதலியோர் பொருள், நிதி திரட்டினர். சேலத்தில் வழக்குரைஞராய்த் தம் பணியைத் தொடங்கிய இராஜாஜி தான் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை தேசியக் கப்பல் கழகத்திற்கு அளித்தார். மக்கள் தலைக்கு நான்கு அணா மேனிக்கு (25 காசு) பொருளுதவியளிததனர். இவ்வாறு சேர்த்த பணத்திலிருந்து இரண்டு கப்பல்கள் வாங்கப்பெற்றன.

24.09.1907 வெளியான அறிக்கையில் சுதேசிக் கப்பல் கம்பெனியின் அக்கிராசனராக (தலைவராக) பாலவநத்தம் ஜமீன்தார் பொ. பாண்டித்துரைத் தேவர் அவர்களுடன், எஸ். நல்லபெருமாள் பிள்ளை, வி.ஏ.வி.எஸ். வெங்கடாசலம் செட்டியார், எம்.வி. மாயன் நாடார், எஸ். வெங்கடேச ராமானுஜம் செட்டியார், என்.டி.ஏ. ஆறுமுகம் பிள்ளை, எஸ்.எஸ்.வி. கிருஷ்ணப் பிள்ளை, வி.ஏ.எஸ். ஆதிநாராயணன் செட்டியார், ஏ.எஸ்.வி. திருச்சிற்றம்பலம் பிள்ளை, கொழும்பில் வணிகம் செய்துவந்த ஏ.எம். செய்யத் இப்ராஹிம், திண்டுக்கல் ஏ. அசனுசைன் இராவுத்தர், இராமநாதபுரம் சீனி அசனுசைன் இராவுத்தர் ஆகியோரைச் சேர்த்து மொத்தம் 31 பேர் இயக்குநர்களாக (டைரக்டர்களாக) இருந்தனர். கௌரவச் செயலாளராக என்.டி. கிருஷ்ண அய்யங்காரும், துணைக் காரியதரிசியாக வ.உ. சிதம்பரம் பிள்ளையும், ஆடிட்டராகத் திருநெல்வேலி வழக்கறிஞர் பி.கே. இராம அய்யர், எம். கிருஷ்ணன் நாயர், பால் பீட்டர், பி.எல். வேணு அய்யர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். சேலம் விஜயராகவ ஆச்சாரியார் சட்ட ஆலோசகராகப் பொறுப்பிலிருந்தார். நாவலர் சோமசுந்தர பாரதியும் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். கம்பெனி அலுவலகம் தூத்துக்குடி பீச் ரோடு நான்காம் எண் கட்டடத்தில் இயங்கியது.

சுதேசிக் கப்பல் கழகம், உலகப் புகழ்பெற்ற கடலாளுமை படைத்த வெள்ளையரை எதிர்த்து விடுதலையுணர்ச்சியின் அடிப்படையிலேயே வ.உ.சி. கப்பலை அலைகடல் நடுவுள் செலுத்தினார். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் இரவில் நகருக்குள் தூங்குவதற்கு அஞ்சி இரவு முழுவதும் படகுகளிலேறிக் கடலில் மிதந்து தூங்கினரென்றால் வ.உ.சி.யின் விடுதலை வேட்கை எப்படிப்பட்டது என்று நன்கு அறிய முடியும். வ.உ.சி.யின் விடுதலைக் குரலைக் குற்றமாகக் கொண்டே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

விபின் சந்திரபாலர் சிறையிலிருந்து விடுதலை பெற்றதை நாடெங்கும் விழாவாகக் கொண்டாடும்பொழுது நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்நிகழ்ச்சியை நடத்த வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் ஊர்வலமாக நடந்து கூட்டத்திற்கு வருவதற்குத் தடை பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறி ஊர்வலத்திலும், பொதுக் கூட்டத்திலும் இருவரும் பேசினர். பல குற்றச்சாட்டுகள் வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் மீது சுமத்தி, ஆள் தூக்கிச் சட்டத்தின் கீழ் 1908 மார்ச் 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர். சிதம்பரனார் மீது இ.பி.கோ. 142-ஏயும், சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு இ.பி.கோ.153ஏ என்ற பிரிவுகளின் மீது குற்றம் சாட்டப்பட்டார். சிவா மீது இ.பி.கோ.124ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

அடுத்த நாள் 13-ம் தேதி திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்து வெள்ளையர் அரசை எதிர்த்துப் போராடினர். இதனைத் திருநெல்வேலிக் கலகம் என்று குறிப்பிடுவது உண்டு. மார்ச் 14-ம் தேதி தச்சநல்லூரிலும், கரூரிலும் மக்கள் எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தினர். பலரின் பசியின்போது உணவளித்த சிதம்பரனாரின் கரங்கள், கோவைச் சிறையில் செக்கிழுத்து இன்னலுற்றன. சுப்பிரமணிய சிவாசைச் சேலம் சிறையில் அடைத்து ஆங்கில அரசு சித்திரவதை செய்தது.

1908-ல் பிரிட்டிஷாருக்கு எதிராக நெல்லையில் போராடியவர்கள் மீது கலெக்டர் வின்ச் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் மாண்டனர்.

வ.உ.சி. வழக்கில் உதவ டாக்டர் வரதராஜூலு நாயுடு அடிக்கடி நெல்லைக்கு வந்து செல்வார். பாரதியை, வ.உ.சி. மாமா என்று அழைப்பார்.




விடுதலைக்குப் பின்பு வ.உ.சிதம்பரனார் திருக்குறளுக்கு உரை எழுதுதல் மற்றும் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். வறுமையோடு போராடிக் கொண்டிருந்தார். செல்வச் சீமானாக இருந்த வ.உ.சிதம்பரனார், 1924-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை பெரம்பூரில் சில காலம் வாழ்ந்தபொழுது தவிடு விற்று வாழ்க்கை நடத்தினார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகில் உள்ள விஸ்வகர்மா பள்ளியின் அருகில் உள்ள ஒரு வீட்டில் வறுமையில் வாடியதும், கோவில்பட்டி நீதிமன்றத்துக்குக் கிழிந்த கோட்டை உடுத்திக்கொண்டு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டதையும் பார்த்துப் பலர் கண்ணீர் சிந்தினர்.

வறுமையில் வாடினாலும் தமிழ் வளர்க்க வேண்டுமென்று தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்களைப் பதிப்பித்தார். சா.வையாபுரி பிள்ளை, வெங்கடேசுவர நாயுடு ஆகியோர் வ.உ.சி.ககுத் துணையாக இருந்தனர்.

நெல்லைப் பகுதியில் விடுதலை வேள்வியில் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றினர். ஒவ்வொருவரும் இதயசுத்தியோடு இப்போராட்டத்தில் சர்வபரித் தியாகம் செய்தனர். “சிவம் பேசினால் சவமும் எழும்” என்று சொல்வார்கள். பேச்சாற்றலில் எழுச்சியை உருவாக்க சிவமும் வ.உ.சி.யுடன் சிறைக்குச் சென்றார். சிறைவாசத்துக்குப் பின்பு சிவத்திற்குக் கொடிய நோய் பற்றிக் கொண்டது. அதற்குப் பின்பு சிவம் தருமபுரி அருகில் உள்ள பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயில் கட்டி, ஆசிரமத்தை நிறுவினார். தன்னுடைய பேச்சில் அயர்லாந்தில் நடைபெறும் ஆயுதப் போராட்டத்தை அடிக்கடி சிவம் நினைவு கூர்வார். சிவம் மொத்தம் நான்கு வழக்குகளில் சிறைத் தண்டனை பெற்றவர்.

பாரதியார் தமது பாடல்களில் விடுதலை முழக்கத்தைச் செய்தார். சுப்பிரமணிய சிவாவும், வ.வே.சு. ஐயரும் தங்கள் வாக்குத் திறனால் விடுதலைக் குரல் கொடுத்தனர். மணியாச்சி இரயில் நிலையத்தில் வாஞ்சி, ஆஷ் என்ற மாவட்ட ஆட்சித் தலைவரைச் சுட்டுக் கொன்றார். பரலி சு.நெல்லையப்பர், கோமதி சங்கர தீட்சிதர், சோமயாஜுலு போன்றவர்களின் பணி குறிப்பிடத்தக்கது. விஜயா, நெல்லைச் செய்தி, இளந்தமிழன் போன்ற தமிழ் இதழ்கள் விடுதலை வேள்வியில் நெய்யூற்றின. இவ்வாறு, விடுதலைப் போருக்குத் திருநெல்வேலி மாவட்டமும் தன் பங்கினைப் பாங்குறச் செய்துள்ளது.
வாஞ்சிநாதனுடைய நடவடிக்கையை மேடம் காமா பாரிஸிலிருந்து ‘வந்தே மாதரம்’ இதழில் கீழ்குறிப்பிட்டவாறு பாராட்டினார்.

“திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் பட்டப்பகலில் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி இந்திய மக்கள் உறங்கவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. வடக்கோ, தெற்கோ, மேற்கோ, கிழக்கோ இந்தியாவின் எந்தப் பகுதியுமே இனிமேல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகள் இல்லை என்பதை எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதப்பட்டுவிட்டது. இதுவரை மிதவாத அரசியலின் தொட்டிலாக விளங்கி வந்த தென்னாட்டிலும் புரட்சிக் கனல் கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. இனிமேல் இந்தியாவில் பணியாற்ற வரும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து புறப்படும்போதே தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் வர வேண்டியிருக்கும்.”

வாஞ்சிநாதன் நிகழ்த்திய இந்த தீரச் செயல் இங்கிலாந்தை உலுக்கியது. 1911 ஜூன் 17-ல் ஆஷைச் சுட்டது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அதே வருடம் ஜூன் 19-ம் தேதி விவாதத்திற்குள்ளானது. சென்னையிலிருந்த வாஞ்சிநாதனுடைய துணைவியார் பொன்னம்மாளைப் பசும்பொன் தேவர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குச் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து அவரின் வாழ்த்துக்கள் பெறுவது வழக்கம்.

சிதம்பரனாரின் ஆளுமையும், புகழும் என்றும் மறையாது என்பது நமக்கு ஆறுதல்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...