Friday, September 19, 2014

சீன - இலங்கை கமுக்கமான காரியங்கள்

சீன - இலங்கை கமுக்கமான காரியங்கள்.. ..
----------------------------------------------------------------------
சீன அதிபர் ஜீஜின்பிங் நேற்றைக்கு இந்தியா வந்து, அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். குறிப்பாக இரயில்வே, தொழில் பூங்காக்கள் இந்தியாவில் அமைய வழி வகுக்கப்பட்டுள்ளது.

இந்திய வருகைக்கு முன்பு சீன அதிபர் ஜீஜின்பிங், இலங்கைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது 140 கோடி டாலர்களில் இலங்கையில் துறைமுக நகரம் அமைக்கவும், கொழும்புக்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் செயற்கை தீவு அமைக்கவும் சீன அதிபரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். செயற்கை தீவு அமைப்பது, இந்து மகா சமுத்திரத்தின் அமைதிக்கு எதிராக அமையும். இப்படி பல முறை சீனா, இலங்கைக்கு கடன் வழங்கி, அந்நாட்டோடு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில், தைவான், திபெத் பிரச்சினைகள் மட்டுமல்லாது, பல பிரச்சினைகளிலும் சீனாவுக்கு துணை நிற்போம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே சீன அதிபரிடம் உறுதி அளித்துள்ளார்.

இந்தியாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களைவிட, இலங்கையுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் நோக்கத்தில் சீனாவின் அக்கறை அதிகமானதாகும். இந்த ஒப்பந்தங்கள் மூலமாக துறைமுகங்களும், செயற்கை தீவுகளும் அமைத்தல், திரிகோணமலையை சீனாவிடம் ஒப்படைப்பது, கச்சத்தீவு வரை சீனாவின் நடமாட்டம், வங்கக் கடலிலும், இந்திய பெருங்கடலிலும் வணிக ரீதியாக சில்க்வே அமைத்து சீனாவின் ஆதிக்கம் அதிகமாகி விடுமோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகின்றது. ஏற்கனவே எனது முகநூலில் 13.09.2014 அன்று குறிப்பிட்ட செய்தியை அப்படியே, நேற்றைய (17.09.2014) ‘இந்து’வில் கொழும்புவில் உள்ள அதன் செய்தியாளர் மீரா சீனிவாசன், இந்தியாவுக்கெதிராக தெற்கு கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகிவிடுமா என்ற வினாவை எழுப்பியுள்ளார். இலங்கையும் - சீனாவும் இந்தியாவுக்கு எதிராக கமுக்கமாக பல செயல்களில் ஈடுபட்டுள்ளன. இப்பிரச்சினையில் இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றதோ தெரியவில்லை.

ராஜபக்சே ஒபாமாவை சந்திக்கிறார்; சீன அதிபரை சந்திக்கிறார். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். இதனை கண்டிக்காமல் இருப்பது இந்தியாவின் ஆளுமையை கேள்விக்குறியாக்கி விடும். உலக புவி அரசியலிலும், பன்னாட்டுத் தொடர்புகளிலும் கடந்த காலங்களில், இந்தியாவின் பங்கு மகத்தானது. பஞ்சசீலம், அணி சேராக் கொள்கை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு ஏற்பட்ட கீர்த்தியை தற்போது விட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...