Friday, September 19, 2014

இன்று ஸ்காட்லாண்டு தமிழ் ஈழத்திற்கு எப்போது வாக்கெடுப்பு?

இன்று ஸ்காட்லாண்டு
தமிழ் ஈழத்திற்கு எப்போது வாக்கெடுப்பு?




பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாண்டு பிரிவதற்காக, பொது வாக்கெடுப்பு (referendum) இன்று (18.09.2014) காலை 7 மணிக்கு துவங்கி, இரவு 10 மணி வரை நடைபெறும். பொது வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. 40 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். தெற்கு எல்லையில் உள்ள ஸ்காட்லாண்டு மக்களில் ஒரு பகுதியினருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த பொது வாக்கெடுப்பின் முடிவு நாளை (19.09.2014) இரவு வெளிவரும். பெரும்பான்மையோர் ஸ்காட்லாண்டு பிரிட்டனிலிருந்து பிரிய வேண்டும் என்றே விரும்புகின்றனர். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஹபார்டி நகரில் ‘நமக்குள் பிரிவினை வேண்டாம்; ஒன்றுபட்டு இருப்போம்’ என கூறியுள்ளார். பிரிட்டனின் இராணி எலிசபெத் ‘நாட்டின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கிரேட் பிரிட்டன் என்ற அமைப்பில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாண்டு, அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் இருந்தன. பெரும் போராட்டடத்திற்கு பின் 1922இல் அயர்லாந்து தனி நாடாக பிரிந்தது. வடக்கு அயர்லாந்து மட்டும் பிரிட்டனோடு இருந்தது. 1653லிருந்து ஸ்காட்லாண்டு, பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இங்கிலாந்தோடு இணைந்தது. 1707இல் கிரேட் பிரிட்டன் அமைந்தது. ஸ்காட்லாண்டு தனியாக பிரிய வேண்டுமென்று நீண்ட நெடுங்காலமாக குரல் கொடுத்த பின்பு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை உருவாக்கி, அதற்கு 2013 டிசம்பரில் ராணி எலிசபெத்தும் ஒப்புதல் அளித்தார். அதன்படி ஸ்காட்லாண்டு பிரிவதற்கு பொது வாக்கெடுப்பு நடக்கின்றது.
370 ஆண்டு காலம் பிரிட்டனோடு இருந்த ஸ்காட்லாண்டு பிரிந்தால், பண பரிவர்த்தனை, இராணுவம், பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியம், ஏனைய நிர்வாக அமைப்பிலும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியதிருக்கும். யூரோ நாணயத்தை பயன்படுத்த முடியாது. பவுண்ட், ஸ்டெர்லிங்கை இங்கிலாந்து வங்கி உதவியுடன் ஸ்காட்லாண்டு பயன்படுத்த விரும்பினாலும் பிரிட்டன் இதனை எதிர்க்கும். சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லையென்றாலும், இந்தப் பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் 2016-ல்தான் தனி நாடாக ஸ்காட்லாண்டு அமையும்.
இந்த பொது வாக்கெடுப்பு குறித்து நடைபெற்ற கருத்து கணிப்புகளில், தனி நாடாக பிரிய வேண்டுமா அல்லது பிரிட்டனிலேயே தொடர வேண்டுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இரண்டும் சமநிலைதான் என தெரிய வந்துள்ளது. ஆனாலும் பிரிவினை என்பது தடுக்க முடியாது என்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


ஸ்காட்லாண்டு பிரிவினைக்காக பொது வாக்கெடுப்பு நடப்பது ஸ்காட்லாண்டு மக்களின் கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் நிறைவேற்றும் வகையில் நடக்கின்றது.
ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், இலங்கையில் ஈழத் தமிழர்கள் நலனுக்காக அரசியல் தீர்வுக்கான தமிழ் ஈழமோ, சுய நிர்ணய உரிமையோ அல்லது அவர்கள் விரும்புகின்ற தீர்வோ கிடைக்க பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏன் தயக்கம்? நீண்ட நாள் குரலாக ஒலித்தாலும், உலக நாடுகள் கண்டு கொள்ளாதது வேதனையை தருகிறது.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...