Monday, March 1, 2021

#ஐநா_மனித_உரிமை_ஆணையத்தில்_நிலுவையில்_உள்ள_ஈழத்தமிழர்_பிரச்சினை #ஐநா_தீர்மானத்தை_நிராகரிக்க_இலங்கை_அமைச்சர்_வலியுறுத்தல்


———————————————————-
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் அமர்வுகள் தற்போது ஜெனீவாவில் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக கடும் தீர்மானங்கள் கொண்டு வர மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சமயத்தில் இலங்கையின் வடக்குப் பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது நியாயத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐநா மனித உரிமை ஆணையத்தில் ஈழத்தமிழர் குறித்தான தீர்மானம் நிலுவையில் இருந்தாலும் அதன் பின் நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது கவலையாக உள்ளது. இந்தியா இந்த விசயத்தில் தெளிவான ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முடிவு எடுக்கவேண்டும்.
சீனா, பாகிஸ்தான், பங்காளதேஷ், நேபாளம் போன்ற நாடுகள் சிங்கள அரசுக்கு ஆதரவாக உள்ளது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் நெருங்குகின்றது. ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்கு சர்வதேச நம்பகமான சுதந்திரமான புலனாய்வும் விசாரணையும் வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் இந்தப் பிரச்சினையில் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் எந்த நகர்வும் இல்லை.
இந்தியா இன்னும் ஈழத்தமிழர்கள் பக்கம் நிற்காமல் கடந்து சென்றால் இந்தியாவிற்கும் நல்லதல்ல. ஏறத்தாழ 65,000 சதுர கி.மீ., பரப்பில் இருக்கும் இலங்கைத் தீவில் தமிழர்கள் அழிக்கப்படுவதையும், தமிழ் அடையாளங்கள் அழிக்கப்படுவதையும் தடுக்கவேண்டியப் பொறுப்பும் கடமையும் இந்தியாவிற்கு உண்டு. இன்னும் மாகாண கவுன்சில்களுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அரசியல் அமைப்புச் சட்டமும் தமிழர்களுக்கு ஏற்புடைய வகையில் அமையவில்லை. தொடர்ந்து அங்குள்ள தமிழ் மக்கள் சொல்லவும் முடியாமல் அழவும் முடியாமல் தவிக்கின்றனர்.

இலங்கையில் இலங்கை பொது ஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009-ல் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இரு தரப்பிலும் நடைபெற்ற இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவரும் மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச அதிபராக உள்ளார். இதையடுத்து, இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நடைமுறைகள் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையர் மைக்கேல் பேச்லெட்டின் அறிக்கையை அந்த நாடு அண்மையில் நிராகரித்தது.
இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை பேசியது:
இலங்கைக்கு எதிராகா ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஆதாரமில்லாதது. அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இந்தத் தீர்மானத்துக்கு முந்தைய அரசு அளித்த இணை ஆதரவை தற்போதைய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை நிராகரிக்க ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி, இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை மற்ற நாடுகளும் நிராகரிக்க வேண்டும் என்று வம்புத்தனமாக கூறுகிறார்.
———-
• இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
• "…*உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்ந்திருக்கிறது," என்று மீஷெல் பேச்சலெட் கூறினார்*.
• முந்தைய ஆண்டுகளில் வளர்ந்து வந்த சிவில் சமூகமும் ஊடக சுதந்திரமும் தற்போது வேகமாக சுருக்கி வருகின்றன. நீதித்துறை சுதந்திரம், இலங்கை மனித உரிமைகள் ஆணையம், தேசிய காவல் ஆணையம் ஆகியவை, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் பலவீனமாக்கப்பட்டுள்ளன.
• தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர், அரசின் உயர் பொறுப்புகள் உள்ளிட்ட பணிகளில் சேராத வகையில், அவர்கள் பிளவுபடுத்தக்கூடிய மற்றும் தவறான சொல்லாடல்களால் தவிர்க்கப்படுகிறார்கள்.
• கடந்த கால வன்முறைகள், இப்போதும் தொடரலாம் என்ற அபாய செய்தியின் அறிகுறி தெளிவாக தென்படுகிறது. அடுத்து வந்த அரசுகள், உண்மையையும் பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன. உண்மையில், மனித உரிமைகள் வழக்குகளில் அரசாங்கம் நீதி நடைமுறைகளுக்கு தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
• "உயர் ஆணையரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கிறது. உறுப்பு நாட்டின் இறையாண்மை மற்றும் சுய மரியாதையை பாதிக்கக் கூடிய வகையில் இந்த அறிக்கை உள்ளது," என்று காணொளி வாயிலாக நிகழ்த்திய உரையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
27.02.2021

No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...