Wednesday, March 3, 2021

#அமெரிக்காவின்_கடன்_அதிகரிப்பு


உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ள அமெரிக்கா, இந்தியாவுக்குத் தர வேண்டிய கடன் தொகை மட்டும் 21,600 கோடி டாலராகும். அந்நாட்டின் மொத்த கடன் சுமை 29 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. சீனா மற்றும் ஜப்பானுக்கு மிக அதிக அளவிலான கடன் தொகையை அமெரிக்கா திரும்ப அளிக்க வேண்டியுள்ளது.
2020-ம் ஆண்டு அமெரிக்காவின் கடன் தொகை 23.4 லட்சம் கோடி டாலராக இருந்தது. இதன்படி ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும் உள்ள கடன் சுமை 72,309 டாலராகும்.
கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் கடன் சுமை 29 லட்சம் கோடி டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தனி நபர் மீதான கடன் சுமையும் அதிகரிக்கும்.
அதிக கடன் தொகையை பெற்றுள்ள சீனாவும் ஜப்பானும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் மூனி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் போட்டி நாடாகத்தான் சீனாவை அமெரிக்கா கருதுகிறது. இரு நாடுகளிடையே போட்டி என்பது எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கிறது. சீனாவுக்கு ஒரு லட்சம் கோடி டாலரும், ஜப்பானுக்கு ஒரு லட்சம் கோடி டாலரும் கடன் பாக்கி உள்ளது என்று குடியரசு கட்சியின் செனட் உறுப்பினரான மூனி தெரிவித்தார். கரோனா வைரஸ் பரவலின்போது மானிய உதவி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 2 லட்சம் கோடி திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை கடுமையாக எதிர்த்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அதிபராக பொறுப்பேற்றவுடன் ஜோ பைடன் 1.9 லட்சம் கோடி டாலருக்கு மானிய சலுகைகளை அறிவித்தார். இதில் நேரடி நிதி உதவியும் அடங்கும். அத்துடன் நாடு முழுவதும் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பு ஊசி போடுவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
அமெரிக்காவுக்கு கடன் வழங்கிய நாடுகள் நல்ல எண்ணத்துடன் கடன் வழங்கியதாக எடுத்துக்கொள்ள முடியாது. பிரேசிலுக்கு 25,800 கோடி டாலரும், இந்தியாவுக்கு 21,600 கோடி டாலரும் கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது என்றும் மூனி குறிப்பிட்டார்.
2000-வது ஆண்டில் அமெரிக்காவின் மொத்த கடன் 5.6 லட்சம் கோடி டாலராக இருந்தது. ஓபாமா அதிபராக இருந்த 8 ஆண்டுகளில் இது இரட்டிப்பாக அதிகரித்தது.
2050-ம் ஆண்டில் அமெரிக் காவின் கடன் சுமை 104 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது 27.9 லட்சம் கோடி டாலர் கடன் உள்ளது. இது ஒவ்வொரு அமெரிக்கரின் மீதான கடன் சுமை 84 ஆயிரம் டாலராகும் என்றும் மூனி குறிப்பிட்டார். ஓராண்டில் ஒரு நபர் மீது 10 ஆயிரம் டாலர் வீதம் கடன் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
1.03.2021

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...