———————————————————
திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தில், 1896 மார்ச், 2-ல் பிறந்தவர் ரா.பி.சேதுப்பிள்ளை. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியபடியே, சட்டம் பயின்றார். நெல்லை நகரசபை உறுப்பினராகவும், நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்ணாமலை மற்றும் சென்னை பல்கலையில், தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். தமிழ்ப் பேரகராதியைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார்.
கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் விளக்கவுரை, கந்த புராண விரிவுரை என, பல்வேறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். கட்டுரை, வாழ்க்கை வரலாறு என, 20-க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்தார்.
இவரது சொற்பொழிவுகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவரது, தமிழின்பம் நூலுக்கு, சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 1961 ஏப்ரல் 25-ல் தன் 65-வது வயதில் காலமானார்.
ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த தினம் இன்று
******
சிறப்புப் பதிவு – Madras Review
ரா.பி.சேதுப்பிள்ளை தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது. மேலும் தமிழறிஞர், எழுத்தாளர், வழக்கறிஞர், மேடைப்பேச்சாளர் என பன்முகம் கொண்டவர்.
பிறவிப்பெருமான்பிள்ளை – சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
ஐந்து வயதில் சேதுப்பிள்ளை உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசலத் தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார்.
தனது தொடக்கக் கல்வியைப் பாளையங்கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்து கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்து கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுபிள்ளைக்கு தமிழ் ஆர்வத்தை வளர்த்தவர்கள்.
அவர் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார்.
1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுகாலம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார்.
வையாபுரிப் பிள்ளையின் தமிழகராதி
வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். அதன்பின் சேதுபிள்ளை தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார்.
இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
எழுதிய நூல்கள்
இரா.பி.சேதுப்பிள்ளையின் உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அடங்குவன. பதினான்கு கட்டுரை நூல்களையும், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்திருக்கிறார். சேதுப்பிள்ளையின் நூல்களுள் பலவும் அவர் தமிழக வானொலி நிலையங்களில் ஆற்றிய இலக்கிய சொற்பொழிவுகளின் தொகுப்புகளாகும். இன்னும் சில நூல்கள் அவர் தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்புகளாக அமைந்தவை.
சிலப்பதிகார நூல்நயம்
தமிழின்பம்
தமிழ்நாட்டு நவமணிகள்
தமிழ் வீரம்
தமிழ் விருந்து
வேலும் வில்லும்
வேலின் வெற்றி
வழிவழி வள்ளுவர்
ஆற்றங்கரையினிலே
தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
செஞ்சொற் கவிக்கோவை
பாரதியாரின் கவித்திரட்டு
இரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் நூல் ‘திருவள்ளுவர் நூல் நயம்’. தலை சிறந்த இவரின் ஆய்வு நூல் ‘ஊரும் பேரும்’ ஆகும்.
ஊர்ப் பெயர்களில் உள்ள வடமொழிக் கலப்புகள்
இவரது ‘ஊரும் பேரும்’ நூலில் மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது என்று ஊர்களின் பெயர்களுக்கு காரணங்களை சொன்னதோடு தமிழக ஊர்பெயரில் இருக்கும் வடமொழி கலப்பையும் சுட்டிக்காட்டினார்.
மலையைக் குறிக்கும் வட சொற்களும் சிறுபான்மையாக ஊர்ப் பெயர்களிலே காணப்படும் கிரி என்னும் சொல் சிவகிரி, புவனகிரி முதலிய ஊர்ப் பெயர்களிலே அமைந்துள்ளது. அசலம் என்ற வடசொல் விருத்தாசலம், வேதாசலம், வேங்கடாசலம், தணிகாசலம் முதலிய பெயர்களில் வழங்கும். இன்னும் சைலம், அத்திரி என்னும் வடசொற்களையும் இரண்டொரு ஊர்ப் பெயர்களிலே காணலாம்.
நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊரொன்று சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது. வானமாமலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு என எழுதியிருப்பார்.
தனி மரங்களின் பெயர்களான ஊர்ப் பெயர்கள்
மேலும் தமிழ்நாட்டிலுள்ள சில ஊர்ப் பெயர்கள் தனி மரங்களின் பெயராகக் காணப்படுகின்றன. கரவீரம் என்பது பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று. கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. இன்றும் கரவீரக் கோயிலில் பொன்னலரியே தல விருட்சமாகப் போற்றப்படுகின்றது. தேவாரத்தில் குறிக்கப்படுகின்ற திருப்பைஞ்ஞலி என்ற ஊரும் மரத்தின் அடியாகப் பிறந்ததேயாகும். பைஞ்ஞலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். அவ்வகையான வாழைகள் சிறந்து விளங்கிய ஊரைப் பைஞ்ஞீலி என்று பழந்தமிழர் அழைத்தனர்.
இன்றும் வாகையும் புன்னையும் வடஆற்காட்டில் ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. சிவகங்கை வட்டத்தில் காஞ்சிரமும் கருங்காலியும் இரண்டு ஊர்களின் பெயர்களாக அமைந்துள்ளன. தமிழகத்தில் ஆனும் அரசும், அத்தியும், ஆத்தியும், புளியும், புன்னையும், பனையும் தென்னையும், மாவும், வேம்பும் மற்றும் பல மரங்களும் செழித்து வளர்தலால் அவற்றின் பெயர்கள் எல்லாம் ஊர்ப் பெயர்களாக ஆங்காங்கு வழங்கக் காணலாம் என்பதை குறிப்பிட்ட ஆய்வில் குறிஞ்சி நில ஊர்ப் பெயர் குறித்து பேசும்போது எழுதியிருப்பார்.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர்.
சென்னை தங்கசாலை தமிழ் மன்றத்தில் 5 ஆண்டுகள் இவர் திருக்குறள் வகுப்பு நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
பேராசிரியர் அன்பழகன் சேதுபிள்ளை குறித்து
”தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்ட பேராசிரியர் இரா.பி.சேதுபிள்ளை. அவரது சொன்மாரி செந்தமிழ்ச் சொற்கள் நடனம் புரிய, எதுகையும் மோனையும் பண்ணிசைக்க, சுவைதரும் கவிதை மேற்கோளாக, எடுப்பான நடையில் நின்று நிதானித்துப் பொழியும்” என்று பேராசிரியர் அன்பழகன் குறிப்பிடுவார்.
சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு சாகித்ய அகாதமி பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார்
இத்தனை சிறப்புமிக்க ரா.பி.சேதுபிள்ளை 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ம் நாள் தனது தமிழ்ப் பணியை முடித்துக்கொண்டார்.
No comments:
Post a Comment