———————————————————-
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே தாதநாயக்கன்பட்டி கிராமத்தில் 250 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த எஸ்.யூ.ஏ., பார்ம்ஸ் என்ற தனியார் நிறுவனம் விவசாய பண்ணை என்ற பெயரில் வெடி மருந்து தொழிற்சாலை துவக்க ஆயத்தப்பணிகளை செய்து வருகிறது. பல நூறு டன் நைட்ரேட் வகை வெடி மருந்து பொருட்கள் உற்பத்தி செய்யவும், வெடி மருந்து பொருட்களை சேமிக்கவும் திட்டமிட்டு உள்ளனர். பெரிய ஐவர்மலைக்கு பின்புறம் தான் இதற்கான வேலைகள் நடக்க உள்ளன.
இதற்கான பத்திரப்பதிவும் நடந்துள்ளது. இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களும், விவசாயம் சார்ந்த தொழில்களும் பாதிக்கப்படும். வெடி மருந்து தொழிற்சாலைக்கு தேவைப்படும் தண்ணீரை அருகில் உள்ள குதிரையாறு அணையில் இருந்து பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மாசுபடவும், கோடை காலத்தில் அணை வறண்டு போகும் சூழலும் உருவாகும் நிலை ஏற்படும். பழநி அருகே தான் குதிரையாறு, பாலாறு – பொருந்தல் என அணைகள் உள்ளன. தொழிற்சாலை அமையும் பகுதியின் அருகிலேயே புதிய ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு எதுவும் தெரியவில்லை. அந்த நிறுவனமோ, அனுமதி அளிக்கும் அரசோ மக்களிடம் தெரியப்படுத்தவும் இல்லை.
சிவகாசியில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள், பல ஆண்டுகளுக்கு முன் துறையூர் வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து என தமிழ்நாட்டில் வெடி விபத்துகள் நடந்துள்ளது. இந்த நிலையில் புதிதாக தொடங்க இருக்கும் வெடி மருந்து தொழிற்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கும் என்று தெரியவில்லை. கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும் அதன் பாதிப்புகள் பெரிதளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பெங்களூரைத் தலைமை இடமாக கொண்ட இந்த நிறுவனம், அம்மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்காமல் தமிழகம் வந்தது ஏனென்று தெரியவில்லை. தொழிற்சாலை உருவாகி பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது வரவேற்கக்கூடியது தான். ஆனால் அதைவிட பாதுகாப்பு முக்கியம். இதற்காக விவசாய நிலத்தையும், நீராதாரத்தையும் பலிகடாவாக மாற்றிவிடக்கூடாது.
No comments:
Post a Comment