வடக்கில் தமிழ்த் தேசியம் தோற்றுவிடவில்லை
யாழில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் 13.63 விகிதமே
சிறீலங்காவின் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்.
தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டி அறிக்கை.
---------------------------
சிறீலங்காவின் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் தென்னிலங்கை சிங்களத் தரப்பான தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் வடக்கில் தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டதாக முன்வைக்கப்படும் போலிப் பிரச்சாரங்களை நிராகரித்திருக்கும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்திலிருந்தே வடக்கில் சுமார் இருபது சதவிகித தமிழின விரோதிகள் இருந்துவந்ததைச் சுட்டிக்காட்டி அந்த இனவிரோத வாக்குகளே தென்னிலங்கை சிங்களத் தரப்புக்களுக்கு அளிக்கப்பட்டு வந்திருந்தமையையும் குறிப்பிட்டுள்ளது.
வாரந்தோறும் தனது அவதானிப்பு அறிக்கையை வெளியிட்டுவரும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் இந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
சிறீலங்காவின் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தல் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. நாடு முழுவதும் 159 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. தேசிய மக்கள் சக்திக்கு யாழ் மாவட்டத்தில் முன்று ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இதன் பின்னணியில் வடக்கு மாகாணம் தமிழ்த் தேசியத்தை கைவிட்டுவிட்டதாகவும் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டதாகவும் சில தரப்புக்கள் விசமப் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.
இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பிரதேசங்கள் பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டு 1948 ஆம் ஆண்டு சிங்களவர்களிடம் கையளித்துச் சென்றபின் சிறீலங்கா சிங்கள அரசு தமிழினம் மீது திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டுவரும் நிலையில் தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடனேயே இதுவரை காலமும் பயணித்துவந்துள்ளன. தமிழரின் அரசியல் போராட்ட காலத்திலும் சரி அரசியல் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றமடைந்த பின்னரும் சரி தமிழர் தாயகப் பிரதேசங்கள் தெளிவான அரசியல் இலக்குடனேயே பயணித்து வந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்ம் மொனிக்கப்பட்டபின் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்களிடம் இரண்டு கோரிக்கைகள் மட்டுமே இருக்கிறது. ஒன்று தமது தாயகப் பிரதேசங்களில் தம்மைத் தாமே ஆளுகின்ற அரசியல் தீர்வு மற்றையது தமிழினம் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கான நீதி விசாரணை இந்த இரண்டையும் தவிர தமிழ் மக்கள் எதனையும் கோரவில்லை.
தென்னிலங்கையில் 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் அரகலய எனப்படுகின்ற வயிற்றுப் பசிக்கான போராட்டம் நடைபெற்றபோது தமிழர்கள் தனியாக ஒதுங்கி நின்று வேடிக்கையே பார்த்தார்கள். ஏனெனில் தமிழர்கள் சோற்றுக்கான போராட்டத்தில் தமது அரசியல் அபிலாசைகளை கரைத்துவிடத் தயாராக இருந்திருக்கவில்லை. அந்த போராட்டங்களின் பின்னணியில் இருந்து செயற்பட்ட ஜேவிபி எனும் இனவாதக் கட்சிதான் தேசிய மக்கள் சக்தியாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. அந்த ஐக்கிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த வாக்குகள் மூலம் கிடைத்த மூன்று ஆசனங்களை வைத்துக்கொண்டு வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது அல்லது மக்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டார்கள் என வாதிடுவது பொருத்தமானது அல்ல.
யாழில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் 13.63 விகிதமே
யாழ் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 5 இலட்சத்து 93 ஆயிரத்து 187 வாக்காளர்களில் 3 இலட்சத்து 25 ஆயிரத்து 312 பேரே வாக்களித்துள்ளனர். அது மொத்த வாக்காளரில் 60 சத விகிதமே 40 சதவிகித மக்கள் வாக்களிப்பிலேயே பங்கேற்றிருக்கவில்லை. வாக்களிப்பில் பங்கேற்ற மக்களில் 10 சதவிகித வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அவை 32 ஆயிரத்து 767 வாக்குகள். அவ்வாறாயின் மொத்த வாக்காளரில் 45 விகித மக்கள் தேர்தலைப் புறக்கணித்தும் தேர்தலில் பங்கேற்று தமது வாக்குகளை செல்லுபடியற்றதுமாக்கியிருக்கிறார்கள். யாழ் மாவட்டத்திலுள்ள மொத்த வாக்காளர் தொகையில் 80 ஆயிரத்து 830 வாக்குகளை அதாவது 13.63 விகித வாக்குகளையே தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கிறது. 2020 பாராளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி, சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட சிங்களத் தரப்புக்கள் 21.86 சத விகித வாக்குகளைப் பெற்றிருந்தன. இது 2020 ஆம் ஆண்டு சிங்களத் தரப்புக்களுக்கு கிடைத்த வாக்குகளில் 8.23 விகித வாக்குகள் குறைவானவை.
2020 இல் சிங்களத் தரப்புக்கள் பெற்ற வாக்குகள் 21.86 சதவிகிதம்
2020 பாராளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி 49 ஆயிரத்து 373 வாக்குகளையும் ஈ.பி.டி.பி 45 ஆயிரத்து 794 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 13 ஆயிரத்து 564 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 6 ஆயிரத்து 522 வாக்குகளையும் பெற்றிருந்தன. தென்னிலங்கைத் தரப்பைச் சேர்ந்த உதிரிக் கட்சிகள் யாழ் மாவட்டத்தில் பெற்றுக்கெண்ட 10 ஆயிரம் வாக்குகளையும் சேர்த்து தென்னிலங்கை தரப்புக்களுக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருந்தன. இது யாழ் மாவட்ட வாக்காளரில் 21.86 விகித வாக்குகளாகும்.
2020 இல் சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகளும் தமிழர் விரோத வாக்குகளே
இதனைவிட தொடர்ச்சியாக தமிழின விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த சுமந்திரனது 27 ஆயிரத்து 834 வாக்குகளைக் கூட்டுகின்றபோது 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான வாக்குகளாக கிடைத்திருந்தன. இவற்றில் வடக்கில் 2020 இல் பாராளுமன்ற அங்கத்துவம் பெற்றிருந்த தமிழர் விரோத தரப்பான அங்கஜன் 36ஆயிரத்து 365 வாக்குகளையும் டக்ளஸ் தேவானந்தா 32ஆயிரத்து 146 வாக்குகளையும் சுமந்திரன் 27 ஆயிரத்து 834 வாக்குகளையும் பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாகியிருந்தனர். இவர்கள் மூவரது வாக்குகளைக் கூட்டினால் 96 ஆயிரத்து 345 வாக்குகள் இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைத்திருந்தன.
2020 பாராளுமன்றத் தேர்தலில் 5 இலட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களாக காணப்பட்டிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 94 அயிரத்து 136 பேர் வாக்களித்திருந்தனர். அவற்றில் செல்லுபடியற்ற 35 ஆயிரத்து 6 வாக்குகள் நீங்கலாக
3 இலட்சத்து 59 ஆயிரத்து 130 வாக்குகள் அளிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளாகும். சுமந்திரனது வாக்குகளையும் சேர்த்து 2020 பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகளில் 35 சதவிகித வாக்குகளை தமிழின விரோத தரப்புக்கள் பெற்றுக்கொண்டிருந்தன.
2024 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 80 ஆயிரத்து 830 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட நிலையில் மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியிருக்கின்றனர். இவற்றினை விட தோல்வியடைந்த தமிழர் விரோத தரப்புக்களான ஈபிடிபி 17 ஆயிரத்து 730 ஐக்கிய மக்கள் சக்தி 15 ஆயிரத்து 267 வாக்குகளையும் ஜனாயக தேசியக் கூட்டமைப்பு (அங்கஜன் அணி) 12 ஆயிரத்து 437 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இந்த வாக்குகளைக் கூட்டுகின்றபோது தென்னிலங்கை தரப்புக்கள் 2024 பாராளுமன்றத் தேர்தலில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 264 வாக்குகளைப் பெற்றிருந்தன. இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 5 இலட்சத்து 93 ஆயிரத்து 187 ஆக காணப்பட்டிருந்தன. அவற்றில் அளிக்கப்பட்டு செல்லுபடியான வாக்குகள் 3 இலட்சத்து 25 ஆயிரத்து 312 வாக்குகளாகும்.
2020 உடன் ஒப்பிடும்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகள் குறைவு
ஆக 2020 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது தேசிய மக்கள் சக்தி மிகச் சொற்பமான வாக்குகளையே பெற்றிருக்கிறது. யாழ் மாவட்டத்தில் 45 சத விகித மக்கள் தேர்தலைப் புறக்கணித்தும் மற்றும் தேர்தலில் பங்கேற்று தமது வாக்குகளை செல்லுபடியற்றதுமாக்கியும் இருந்ததன் காரணமாக விகிதாசாரத் தேர்தலின் நன்மைகளைச் சாதகமாக்கி தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. இது தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சியோ மக்கள் தமிழ்த் தேசியத்திலிருந்து விலகிவிட்டார்களோ எனும் வாதம் எழுதத் தேவையற்ற வியாக்கியானமாகும்.
துரோகிகளைத் துரத்திவிட்டு எதிரிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழினத் துரோகிகளான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமாதன், ஆபிரகாம் சுமந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் இத்தனை காலமும் சிங்கள கட்சிகளின் முகவர்களுக்கு வாக்களித்துவந்த சுமார் 15 முதல் 20 விகித மக்கள் துரோகிகளை தோற்கடித்துவிட்டு எதிரிக்கு வாக்களித்திருக்கிறார்கள். எனினும் எதிரிகளையும் துரோகிகளையும் மக்கள் தோற்கடிக்கவேண்டியது அவர்களது வரலாற்றுக் கடமையாகும்.
மக்கள் சிந்திக்கவேண்டும்
இந்த மண் 50 ஆயிரம் மாவீரர்களையும் மூன்று இலட்சம் மக்களையும் இன விடுதலைக்காய் விதைத்திருக்கிறது. சிங்கள இனவழிப்பாளர்களால் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட தடைகளுக்கு மத்தியில்தான் தமிழினம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை நிலைநிறுத்தி கட்டமைத்திருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்காவும் ஊழல் ஒழிப்பிற்காகவும் தமிழினம் இத்தனை ஆண்டுகள் போராடவில்லை. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலுள்ள அரசியல் தரப்புக்களின் சுயநல பதவி மோகங்களும் மக்களைச் சலிப்பு நிலை நோக்கி நகர்த்தியிருக்கலாம். எனினும் எதிரியின் சதிகளை முறியடித்தவாறு வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் மக்கள் எமக்கான உரிமைகளுக்காய் ஒரணியாய் திரளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் விடுத்துள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment