Sunday, August 7, 2022

*சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை*, *இலங்கையின் இறைமை இந்தியாவின் பாதுகாப்பு இரண்டும் கேள்விக்கு உள்ளாகியுள்ளன*.

*சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை*,
*இலங்கையின் இறைமை இந்தியாவின் பாதுகாப்பு இரண்டும் கேள்விக்கு உள்ளாகியுள்ளன*. 
=================


சீனா தனது மூலோபாயத்தினைப் பல தந்திரோபாயங்கள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தினைக் கட்டம் கட்டமாக நிறைவேற்றி வருகின்றது.அதற்கு ஏற்றாற்போல ராஜபக்சக்களின் பலவீனத்தினை சீனா நன்கு பயன்படுத்தியுள்ளது.30 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளின் பலமானது இலங்கை அரசுக்கும்,இந்தியாவுக்குப் பக்கமான சீனாவின் இந்து சமுத்திர நுழைவுக்கும் சவாலாக இருந்தது.இந்த நிலையில் விடுதலைப் புலிகளை இலங்கையோடு சேர்ந்து அழித்ததன் மூலமாக அல்லது செயல் இழக்கச் செய்ததன் மூலமாக இலங்கை அரசுக்குப் புலிகளால் இருந்த சவாலை முறியடிப்பது என்ற போர்வையில் இந்து சமுத்திரத்தினுள் சீனா நுழைவதற்கான முதலாவது பெரும் காரியத்தை மேற்கொண்டது. 

இரண்டாவது கட்டமாக சாத்தியவள ஆய்வுகள் செய்யாமல் அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகமும்,மத்தள விமான நிலையமும் சீனாவின் பெருங்கடன் மூலமாக மகிந்த ஆட்சியில் அமைக்கப்பட்டன.இவற்றின் மூலமாகவும்  இலங்கையைத் தனது கடன் பொறிக்குள் சீனா வீழ்த்தியது. அடுத்த கட்டமாக துறைமுக வருவாய் இல்லாமலும்,கடன் சுமையாலும் தள்ளாடி விழுந்த இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருட நீண்ட காலக்குத்ததகை மூலம் சீனா கைப்பற்றியது. போட்சிற்றியினையும் சீனா தன் வசமாக்கியது.மேலும் கொழும்பின் தெற்கு முனையமும் சீனாவின் வசமாகியது.தற்போது நான்காவது கட்டமாக சான் வான்-5 என்ற உளவு ஆய்வுக்கப்பலை அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நோக்கி சீனா நகர்த்துகின்றது.அந்த வகையில் இலங்கை இதனைத் தற்போது விரும்பாத போதும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறது. இந்தியா இதனால் இலங்கை மீது நியாயமான ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறது. தற்காலிகமாகவேனும் அக்கப்பலை நிறுத்துமாறு இலங்கை கெஞ்சுகின்றது.சீனா பதில் அளிக்காமல் உள்ளது.இந்த நிலையில் இலங்கை விரும்பாத செயலை சீனா செய்வதால் இலங்கையின் இறைமை பாதிக்கப்பட்டுள்ளது என்பதுதான் அர்த்தம்.அதாவது தனது விருப்பத்தை அந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை என்றால் அந்த நாட்டின் இறைமை இளக்கப்பட்டுள்ளது என்பதே விளக்கமாகும்.இலங்கை இழைக்கின்ற தவறுகளால் இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமாவதை இந்தியா ஒரு போதும் விரும்பாது.அதற்கான எதிர்வினையினை இந்தியா மேற்கொள்ளதில் தவறு இல்லை. 

இந்தியா பட்டினியால் பாதிக்கப்படும் இலங்கை மக்களுக்கு உணவுக்கப்பலை அனுப்புவதை இலங்கை நன்றியுடன் நேரக்க வேண்டும்.மாறாக இந்தியாவுக்கு எதிரான உளவுக்கப்பலை வரவேற்பது என்பது ராஜதந்திரமற்ற அநாகரிகச் செயலாகும்.இந்தியாவின் உள்ளகப்பாதுகாப்பு விடயங்களை மிக நெருக்கமாக இருந்து அவதானித்து,இந்தியாவுக்கு எதிரான திட்டங்களை சீனா வகுப்பதற்கு இலங்கை இடமளித்திருப்பதாக இந்தியா கருதுகின்றது.இந்த நிலையில் இந்தியா தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கும், ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும் இணைத்துச் செயற்படுவதற்கான வாய்ப்பினை இலங்கை அளித்துள்ளது என்றுதான் கருதவேண்டியுள்ளது.தென்னிலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகமானது அடுத்த கட்டமாக சீனப்படையின் பிரசன்னத்திற்கும் இடமளிக்கலாம்.அது இந்தியாவை அச்சுறுத்த முடியும்.இக்காரணத்தை நியாயப்படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களின் கடற்கரை ஓரங்களில் இந்தியரசின் படைகளை நகர்த்த வாய்ப்பு ஏற்படலாம்.அந்த இடத்தில் ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு என்ற ஒப்புதலைத் தமிழர்கள் மூலம் இந்தியா பெறுவதற்கு முனையலாம்.ஆயின் இந்தியாவினதும் ஈழத்தமிழர்களினதும் பாதகாப்பு என்பது அரசியல் தீர்வு என்ற ஒரு புள்ளியில் சந்திக்க முடியும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...