Friday, June 13, 2025

1982 பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம்... ஒரு பார்வை!

1982 பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவம்... ஒரு பார்வை!
•••••
அருமை சகோதரர், விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை 1979லிருந்து அறிந்தவன். அந்த காலக்கட்டத்தில் திரு. பழ.நெடுமாறன், புலவர் புலமைப்பித்தன் போன்ற பலர் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். சற்று பின்னோக்கி பார்க்கின்றேன்.

82 காலகட்டங்களில், இன்னும் சரியாச் சொல்லவேண்டும் என்றால் 19-5-1982 ல் கரிகாலன் என்கிற பிரபாகரன், ராகவன் என்கிற சிவகுமார், ஜோதீஸ்வரன் என்று மூணு பேரும் ராஜகுமாரி தியேட்டரில் தொட்டால் சுடும் படம் பார்த்துவிட்டு பாண்டி பஜார் ஹமீதியா ஹோட்டலில் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு திரும்பும் போது, கீதா கபே ஓட்டல் இருந்த நடைபாதையில் கண்ணனுடன் வந்த உமாமகேஸ்வரன் என்ற முகுந்தனை சந்தித்த போது இரவு 9.30 மணிக்கு ரெண்டு தரப்பிலும் வாக்குவாதம் ஆகி துப்பாக்கிச் சூடு நடந்தது. அதனால் பாண்டி பஜாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையை சேர்ந்த இரண்டு தரப்பும் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக தகவல் பரவியது.

அன்றிரவே தி இந்து ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்தவரும் என் நண்பருமான பார்த்தசாரதி,75159 என்றஎண் கொண்ட என் வீட்டு லேன்ட்லைனுக்கு போன் செய்தார். அப்போழுதெல்லாம் இப்போது இருப்பது போல் தகவல் தொடர்பு சாதனங்கள் கிடையாது. Landline போன்கள் தான்.

“பாண்டி பஜார்ல சிலோன்காரங்க சிலர் துப்பாக்கியால சுட்டுகிட்டு சண்டை போட்டுகிட்டாங்களாம். அதுல கைதான ஒருத்தர் உங்க வீட்ல,உங்க கூட தங்கியிருந்ததாகவும்,பழ.நெடுமாறன்ல்லாம் தெரியும்ன்னு சொல்றார்” என்று சொன்னார். அப்போது எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வர்.

எனக்கு பகீர் என்றது. உடனே ஒரு ஆட்டோ பிடித்து பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன். உள்ளே போய் அவர்களை கைது செய்த இன்ஸ்பெக்டர் மாணிக்கம் என்றவரிடம் சென்று பேசினேன்

“ஆமா சார்…அரெஸ்ட் பண்ணிருக்கோம். நக்சலைட்டுங்க போல.அதுல ஒருத்தர் தப்பிச்சுட்டாரு….” ன்னு சொன்னார்.

“நக்சலைட்டா?” என்று நான் திரும்ப கேட்க,

“ஆமாங்க… இலங்கைல கூட நக்சலைட்டுங்க இருக்காங்களா சார்?” ன்னு மீண்டும் நக்சலைட்டா என்னும் வார்த்தையை பயன்படுத்தினார்.

“அவங்க நகசலைட்டுங்க இல்லை..” என்று சொல்லிக் கொண்டே கைதான அந்த இளைஞர் பக்கத்தில் வந்தேன்.

அங்க ஒரு பெஞ்சில் பிரபாகரனோடு ராகவனும், ஜோதீஸ்வரனும் உக்காந்திருந்தார்கள்.என்னைப் பார்த்ததும், பிரபாகரன்

“அண்ணே…” என்று என் கையைப் பிடித்துக் கொண்டார்.

அப்போது மறுபடியும் அந்த போலீஸ்காரர் வந்து, “இவங்க நக்சலைட்டுங்க” என்று என்னைப் பார்த்து கேட்டுட்டு, அந்த இளைஞரிடம் ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கப் போனார்.

“என் பெயர் கரிகாலன் என்கிற வேலுப்பிள்ளை பிரபாகரன், நான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை சேர்ந்தவன். நாங்கள் எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் விடுதலை வீரர்கள்…” என்று தொடங்கி, என்ன நடந்தது,எதற்காக துப்பாக்கிச் சூடு நடந்தது என்று தம்பி விளக்கமாக சொன்னார். சொல்லிவிட்டு,

“நான் இப்ப இந்தியாவுல தான் இருக்கேன். இந்த நாட்டோட சட்ட திட்டங்களை மதிக்க வேண்டியது என் கடமை.அதான் துப்பாக்கி சண்டை முடிஞ்சதுக்கு போலீஸ் கைது பண்றதுக்கு நானே ஒத்துழைச்சேன்” என்று தம்பி சொல்லி முடித்தார்.

அன்றைய காலக்கட்டத்தில் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் பெயர் பெறாத காலம் அது. அதனால் ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிய போலீஸ்காரருக்கு பிரபாகரன் என்கிற அந்த போராளியுடைய மகத்துவம் தெரியவில்லை.

தப்பித்து ஓடிய அந்த இன்னொருவரை 21-5-1982 ல் கும்மிடிப்பூண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் போலீஸ் முகுந்தன் என்ற உமாமகேஸ்வரனை கைது செய்தார்கள். அவருடன் ஜோதீஸ்வரன் என்ற கண்ணனையும் கைது செய்தார்கள். பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நந்தகுமார் என்ற துணை ஆய்வாளர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கியை கையகப்படுத்தினார். அங்கு தலைமை காவலர் எஸ். ரெங்கசாமி எண்: HC 3425 இது குறித்தெல்லாம் எழுதி ஆவணப்படுத்தினார்.

கைதுக்கு பிறகு மறுநாளே தம்பியை ரிமான்ட் செய்து மெட்ராஸ் சென்ட்ரல் ஜெயிலில் போட்டார்கள். நான் தினமும் ஜெயிலுக்கு சென்று தம்பியை பார்த்து பேசுவேன். அப்படி ஒருமுறை போகும் போது,

“அண்ணே அடுத்த தடவை வர்றப்ப படிக்க புத்தகங்கள் கொண்டாங்கோ” என்று தம்பி கேட்டார்.

மறுநாளே நான் கொஞ்சம் புத்தகங்களைக் கொண்டு போனேன். நேதாஜியுடைய வாழ்க்கை வரலாறு, காஸ்ட்ரோ வரலாறு என்று பல கலவையான புத்தகங்களுடன் சேர்த்து, கி. ரா எழுதிய கோபல்ல கிராமம் புத்தகத்தையும் தந்தேன். அந்தப் புத்தகம், “அன்பான எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு…” என்று கி. ரா வே தன் கைப்பட எனக்கு எழுதித் தந்த புத்தகம்.

தம்பி புத்தகங்களை வாங்கிக் கொண்டார். புத்தகங்களை தந்துட்டு வந்த மறுநாளே, அதாவது 22-5-1982 ல,39 சாலைத் தெரு,மைலாப்பூர் என்கிற முகவரில இருந்த என் வீட்டை வெள்ளியங்கிரி என்ற அதிகாரி தலைமையிலான சிபிசிஐடி போலீஸ் ரெய்டு செய்தனர். டெல்லியில் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி,மொராஜி தேசாய், ஜெயப்பிரகாஷ் நாராயணன்,தாரகேஷ்வரி சின்ஹா,தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜர்,கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களோடு நான் இருந்த பல கருப்பு வெள்ளைப் போட்டோக்களை,பொக்கிசமாக் நான் சேர்த்து வைத்திருந்த ஏகப்பட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு சென்றனர். காரணம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று. தமிழ்நாட்டிலேயே புலிகளுக்கு ஆதரவாக இருந்ததால், முதன் முதலாக சிபிசிஐடி போலீஸ் ரெய்டுகளுக்கு உள்ளானது, என்னுடைய வீடு தான். அதே போல் பழ. நெடுமாறன் அவர்களுடைய வீடும், அவருக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களும் ரெய்டுகளுக்கு உள்ளானது.

புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என்று தடா சட்டத்தில் வைகோ தம்பி ரவியை கைது செய்தார்கள். வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடம் சிறையில் இருந்தார். அவரோட வீடுகளிலும் ரெய்டு நடந்தது….

ரெய்டு முடிந்த இரண்டு நாட்களில் மறுபடியும் தம்பியை பார்க்க ஜெயிலுக்கு சென்ற போது,

“என்ன அண்ணே உங்க வீட்டை ரெய்டு பண்ணிட்டாங்க போல. பேப்பர்ல செய்தி போட்ருந்தாங்க…என்னால தான உங்களுக்கு இந்த சிரமம்” என்று தம்பி கலங்கினார்.

“அட விடுங்க தம்பி…அத பத்தி எனக்கு கவலையேயில்லை ன்னு சொல்லிட்டு, புத்தகங்களை படிச்சீங்களா” என்று கேட்டேன்.

“அண்ணே, கோபல்ல கிராமம் ங்கற அந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன். படிக்க ஆரம்பிச்சதுலருந்து கீழ வைக்க மனசே வரலை. ஒரேடியா படிச்சு முடிச்சுட்டேன். அவ்வளவு அருமையா அய்யா கி.ரா எழுதிருக்காரு. இது வெறும் நாவல் இல்லண்ணே.. பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று ஆவணம். இதே மாதிரி ஒரு சுவையான ஆவணத்தை ஈழத்துக்கும் உருவாக்கனும்” என்று தம்பி சொன்னார்.

இந்த நிலையில் 1.6.1982 அன்று நெடுமாறன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி கைது செய்யப்பட்ட பிரபாகரன் போன்ற இலங்கை விடுதலைப் போராட்ட இளைஞர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமில்லாமல் அவர்கள் உரிய வழக்குமன்றம் மூலமாக பிணை கோரினால் ஜாமீனில் விடுதலை செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

24 ஜூன் 1982 ல் திமுக சார்பில் ஈழ விடுதலை மாநாடு இராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் சத்தியேந்திரன் நடத்தினார். அதில் பேசுவதற்கு முன் வைகோ, தம்பியை சந்திது பேச வேண்டும் என்று சொல்லி சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு வந்தார். தம்பிக்கு நிறைய பழங்களை வைகோ வாங்கிக் கொண்டு வந்தார். வைகோ, நான், செவல்குளம் ஆச்சா குருசாமி ஜெயிலுக்கு போனோம். தம்பியிடம் வைகோ அரை மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள், அதை அப்படியே மாநாட்டில் பேசுகிறேன்னு சொல்லி கேட்டுக் கொண்டவர் அன்று மாலை இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் சென்று ஈழப் பிரச்சனை குறித்து உரையாற்றினார் என்பதெல்லாம் வரலாற்றுச் செய்திகள்.

பிரபாகரனையும் மற்றவர்களையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று கூட பத்திரிக்கைகள் அப்போது எழுதியது. நான் மத்திய சிறையில் 10-07-1982-ல் பிரபாகரனை சந்தித்தபொழுது பிரபாகரனும் முகுந்தனும் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இதனிடையே பிரபாகரன் மற்றும் போராளிகளுக்கு 05-08-1982 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை மனுக்களை தாக்கல் செய்தேன். நெடுமாறன் அவர்கள் இதற்கான முயற்சிகளிலும், மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை அவர்களை சந்திக்கவும் பணிகளை மேற்கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 06-08-1982 அன்று பிரபாகரனுடன் சேர்ந்து அனைவருக்கும் பிணை கிடைத்தது. பிரபாகரன் மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டார். அதனால் மதுரையில் உள்ள பழ.நெடுமாறனின் விவேகானந்தர் அச்சகத்தின் எதிரில் இருந்த அவரது இல்லத்தில் தங்கியிருந்தார்.

பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு (19-05-1982) நிகழ்விற்கு பின் தான் விடுதலைப் புலிகள் இயக்கம், பிரபாகரன் அவர்களைப் பற்றியும் வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதற்கு முன் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் தான் அறியப்பட்ட ஈழத் தலைவர்களாக விளங்கினார்கள். பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்கில் ஆஜர் ஆகி வழக்கையும் நடத்தினேன் (வழக்கு எண்- SC No 8/1983 on the file of 7 Addl Court-High Court campus disposed on Nov 2012) இப்படி பல வழக்குகள்.

பிரபாகரனையும் ஈழப் போராளிகளையும் இலங்கையிடம் ஒப்படைக்க கூடாது என்று அனைத்து கட்சி கூட்டத்தை 01-06-1982 இல் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்ல வளாகத்தில் (அரசினர் தோட்டம்) பழ. நெடுமாறன் கூட்டி தீர்மானத்தோடு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த போது அடியேன் உடன் சென்றேன். அது மட்டுமல்ல. முன்னாள் பிரதமர் சந்திரசேகர், எல். கே. அத்வானி, தேவிலால், ஃபரூக் அப்துல்லா (காஷ்மீர் முன்னாள் முதல்வர்), இராம்விலாஸ் பஸ்வான், தினேஸ் கோஸ்வாமி (ஏஜிபி – அஸ்ஸாம்), தீபன் கோஷ் (சிபிஎம்), சிட்டபாசு (பார்வார்டு பிளாக்), பனத்வாலா (முஸ்லிம் லீக்), சந்திரஜித் யாதவ், தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிர்லா, போன்ற தலைவர்களையும் இது குறித்து சந்தித்தோம்.

இதற்கிடையில் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஈழப்பிரச்சனையில் தமிழர்களுக்கு ஆதரவாக அக்கறை காட்டினார். பயிற்சி முகாம் நடத்தவும் உரிய உதவிகளையும் அவர் செய்ததுண்டு.

நெடுமாறனுடைய நண்பர் திண்டுக்கல் அழகிரிசாமி தன்னுடைய சிறுமலை எஸ்டேட் இடத்தை பயிற்சி முகாமுக்காக தந்தார். நெடுமாறனும் நானும் சில மத்திய அரசு அதிகாரிகள் கூட தர்மபுரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை பயிற்சிக்காக தேடினோம். இதற்காக அந்த வட்டாரத்தில் இரண்டு நாட்கள் முகாமிட்டதெல்லாம் உண்டு. இப்படியெல்லாம் கடந்து போன செய்திகள்.

இதற்கிடையில் துவக்கத்தில் பாலசிங்கம் தமிழகத்துக்கு வந்தபொழுது உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கும் அறைகளை என் பெயரிலேயே பதிவு செய்தேன். பாலசிங்கமும் அவருடைய மனைவி அடேல் பாலசிங்கமும் சில நாட்கள் தங்கிய பின் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச் அருகில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். அங்கும் சில நாட்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன.

அந்த காலகட்டத்தில், பிரபாகரனை தினமும், வாரத்துக்கு அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்தவன் அடியேன். இந்த வாடிக்கை அவர் டெல்லியிலிருந்து 04-08-1987ம் தேதியில் நடைபெற்ற சுதுமலை கூட்டத்துக்கு செல்லும் வரை தொடர்ந்தது. இந்த சுதுமலை கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது திராவிடர் கழத் தலைவர் வீரமணி மற்றும் எனது தலைமையில் கூடி நேப்பியர் பாலம் அருகில் உள்ள பெரியார் சிலையின் கீழ் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினை எரித்தோம்.

இதற்கு பிறகு 12-09-1988-ல் கிட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போதும் பிரபாகரன், ‘அவரை போய் உடனே சந்தியுங்கள்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்.

இப்படி பல சம்பவங்கள், ஒன்றா? இரண்டா? எல்லாமே என் ஞாபகத் தொகுப்பில் மெளனமாக இருக்கிறது. இப்போது புலிகள்…ஈழம்…பிரபாகரன் என்று அவர்கள் பேரை வைத்து கூட்டம் கூட்டுபவர்கள் அதிகமாகி விட்டார்கள். இந்தக் கூட்டங்களுக்கு எல்லாம் ஆரம்பகாலத்தில் இருந்தே புலிகளுக்கு ஆதரவா இருப்பவர்கள் படுகிற கஷ்டங்கள் எதுவுமே தெரியாது. ஈழப்போராட்டம், புலிகள் ஆதரவு என்பதில் எங்களின் நிலைப்பாடுகள் உறுதிமிக்கவை.

இப்போது சிலர் பேசிக்கொண்டிருக்கும் வெட்டிப் பேச்சுகளை எல்லாம் கவனிக்கும்போது வேதனையாக உள்ளது. அந்த காலக்கட்டத்தில் இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள் என்றே தெரியாது. காலச்சக்கரங்கள் ஓடிவிட்டன.

இதையும் ஒரு பொருட்டாக கொண்டு விவாதங்கள் நடக்கின்றது என்று நினைக்கும்போது என்றோ ஒரு நாள் வாய்மை வெல்லும் என்ற கூற்றின்படி என் நினைவுத் தொகுப்புகளில் இது குறித்து விரிவாக பதிவு செய்து வருகிறேன். பிரபாகரன் அவர்களை சமீப காலங்களில் சந்தித்தவர்கள் எல்லாம் தங்களை மாவீரர்கள் போல போலியாக கர்ஜித்து ஒரு பிம்பத்தை உருவாக்குவது பொது தளத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

இவ்வளவு உழைத்தும் எங்களைப் போன்றவர்களை பலர் முதுகில் குத்தியதால் உண்மைகள் அரங்கேறுவதில்லை.

நல்லவர்கள், தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படுவதால் வேடிக்கை மனிதர்கள் தலை தூக்குகின்றனர்.

நீர் உயர வரப்பு உயரும்… வரப்பு உயர நிலம் உயரும், தகுதியே தடை என்கிற நிலையில் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட என் பேச்சு எப்படி அம்பலம் ஏறும். மக்களே ஜோடிக்கப்பட்ட பொய்களைத் தானே நம்புகிறார்கள். அதனால் தான் தற்குறிகள் எல்லாம் ஆட்டம் போடுகிறார்கள்.

இப்படி பேசுவதற்கு அந்த மனிதர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது. மனசாட்சி எப்படி இடம் கொடுக்கிறது.

இப்படி களப்பணி ஆற்றியவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கின்றோம்.

(படம்- பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு (19-05-1982) நிகழ்விற்க்கு பின் பிரபாகரன் கைது செய்ய போது. பின்னா அடியேன் இருந்தேன்)

🖋
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

13-6-2027.



No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...