Tuesday, June 24, 2025

#கள்ளுக்கடை #மதுவிலக்கு #drystate

 #கள்ளுக்கடை #மதுவிலக்கு #drystate

————————————— தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறந்து இதுவரை அரசு நடத்தி வருவதில் ஏற்பட்ட தனிமனித உடல் ஆற்றல் நாட்டு நம்பிக்கைகள் எதிர்காலம் எல்லாமும் மது விடுதிகளில் தெருக்களில் மட்டுமல்ல ஆரோக்கியமான தனிக் குடும்பங்களையும் பொதுவெளியில் சீரழித்துவருகின்றன. மதுக்கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு விதவைகள் என சொல்லி பெண்களின் தாலியைக் காப்பாற்றுவோம் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் கூட இன்று பதவி சுகத்தில் பேசியதை மறந்துவிட்டு வாழ்கிறார்கள். அல்லது ஊருக்கு உபதேசம் சொல்லிவிட்டு அடுத்த தேர்தலுக்குத் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 4829. இவற்றில் நாளொன்றிற்கு 150 கோடிக்கு விற்பனையாகிறது. விடுமுறை நாள்களில் 200 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு குவார்ட்டர் பாட்டிலின் விலை 99 ரூ (பாலாஜி கணக்கில்லாமல்) குவார்ட்டர் என்பது 180 மில்லி லிட்டர். அப்படியானால் நாளொன்றுக்குத் தமிழ் நாட்டில் புழங்கும் மதுவின் அளவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.இப்படி மது வியாபாரம் செழிப்பாக நடக்கின்றது.

இன்றைய காலத்தில் பார்க்கும் பொழுது இத்தகைய ரசாயன மதுத் தயாரிப்புகளை விடவும் இயற்கையான முறையில் தென்னை மற்றும் பனைத் தாவரங்களில் உருவாகும் கள் கெடுதல் அல்ல. கள் என்னதான் போதை தரும் பானம் என்றாலும் டாஸ்மார்க் கடைகளில் விற்கப்படும் மதுவை விட குறைந்த அளவே உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கு தெரிய அந்த காலத்தில் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு ஒரே ஒரு பனை மரத்தின் கள் தொடர்ந்து அவர்கள் ஒன்பது மாதங்கள் குழந்தையை தாங்கி இருக்கும் காலத்திலும் கூட விடியல் நேரத்தில் வழங்கப்பட்டன. அதில் செயற்கை முறையில் ஆல்கஹால் மற்றும் போதைக்காக வேறு எதுவும் கலக்கப்படுவதைத் தவிர்த்து விட்டால் அதுபோல உடம்புக்கு நல்லது செய்யக்கூடிய இயற்கையான ஆரோக்கியம் நிறைந்த பானம் எதுவும் இல்லை. அந்தக் கள்ளில் உருவாகும் பாக்டீரியாக்கள் உடலுக்கும் குடலுக்கும் வலிமையைத்தான் தருகிறது. இன்று வரை தமிழ்நாடு தவிர்த்து கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற பல பகுதிகளின் கள் இறக்கப்பட்டு இன்றைய கல்லீரலை கெடுக்கும் டாஸ்மாக் மதுபானங்களை விட உழைக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் அரசுகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அதை அருந்திவிட்டு திடகாத்திரமாகத் தான் இருக்கிறார்கள். விடுமுறை காலங்களில் தலைக்குஎண்ணெய் தேய்த்துக் குளிப்பது கள் அருந்திவிட்டு நல்ல உணவுகளை உண்பது ஓய்வெடுத்துஉறங்குவது என்று ஒரு தலைமுறை இருந்தது. நான் கிராமங்களில் அவர்களைப் பார்த்திருக்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உழைத்துக் கொண்டிருப்பார்கள். கள் குடித்துவிட்டு உற்சாகமாகத் தான் இருப்பார்கள். இன்றைய டாஸ்மார்க் சரக்குகளைக் குடித்து உடலைக் கல்லீரலைக்கெடுத்துக் கொண்டு மருத்துவமனைகளில் படுத்து கிடக்கும் பலரைப் பார்த்து விட்டுத் தான் இதை நான் சொல்கிறேன். மாறாக இன்றைய கேரளாவில் வாழும் மனிதர்கள் உயரத்தில் இருக்கும் தங்கள் வீடுகளுக்காக அங்கு ஏறி செல்வது சுமைகளை தூக்குவது விவசாயக் கட்டுமானங்களில் ஆண்களும் பெண்களுமாக வேலை செய்வது போன்ற காரியங்களால் அவர்களுக்கு இயற்கையாகவே உடற்பயிற்சி நேர்ந்து விடுவதோடு நல்ல உறக்கத்திற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் அவர்கள் கள் குடிப்பதை எதார்த்தமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு மாறாகத் தமிழக மக்கள் சமவெளிகளிலேயே வாழ்வதால் அவர்களுக்கு சரியான உடற்பயிற்சியும் நடையும் இது மாதிரியான உணவுப் பொருட்களான கள் அருந்துவதையும் தடையின் காரணமாக மறந்து விட்டதால் அவர்கள் உடல் நலிவுற்று விடுகிறார்கள். கேரளாவில் உழைப்பையே முக்கிய முக்கியமாக கொண்டிருப்பதால் ,பெண்கள் அங்கு தொலைக்காட்சியைப் பார்ப்பது அதிகம் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி முன்பாக முழு நாட்களும் பெண்கள் அமர்ந்து விடுகிறார்கள். சமையல் வேலை போக உட்கார்ந்த நிலையிலேயே அவர்கள் தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்த்து வருவதால் ஏற்படும் உடல் உபாதைகள் அதிகம் என்பது தான் உண்மை. இந்த டாஸ்மாக் மது விடுதிகளுக்கு வெளியே மரங்களிலிருந்து கள் இறக்குவது தடை செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு கள்ளச் சாராய வியாபாரிகள் அங்ககாங்கே தோன்றி விடுகிறார்கள். அவர்கள் எத்தனால் கலந்த மோசமான மதுவைக் காய்ச்சி தயாரித்து மலிவான விலையில் விற்பனை செய்வதன் மூலம் அதைக் குடிப்பதால் அடித்தட்டு மக்கள் பலரின் உயிரிழப்பும் நேர்ந்துவிடுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதன் விளைவுகளைக் கள்ளக்குறிச்சியிலும் செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணத்தில் நாம் பார்த்து வந்தோம். பின்னோக்கிப் பார்த்தோமேயானால் முதல்வர் அண்ணா காலத்திலும் கூட மதுவிலக்கு இருந்த நேரத்திலும் கள்ளச்சாராயத்தால் ஒரு 60 பேர் உயிரிழந்தார்கள். உடனே அண்ணா1/2

மாவட்ட அதிகாரிகளை திருச்சியில் அழைத்து மதுவிலக்கைச் சரியான முறையில் அமுல்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கான தடை கடந்த 1973ஆம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டும், நீக்கப்பட்டும் நீடித்து வருவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்று கூறி தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்கம் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தது. (இதற்குப் பிறகு, 1987ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று கள், சாராயக் கடைகளை மூடுவதாக அரசு அறிவித்தது. ஆனால், இந்தியாவிலேயே தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை தொடர்ந்தது. ஆளும் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் - பிரமுகர்கள் ஆலை வைத்து சாராயம் காய்ச்சி, டாஸ்மாக் அரசுக்கே விற்பனை செய்கின்றனர்.) கள் பாதுகாப்பு இயக்கத்தினர் 2006 ஆம் ஆண்டு முதல் கடுமையான போராட்டங்களை நடத்தி வந்தனர் . மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 2009 ஆம் ஆண்டில் அன்றைக்கு முதலமைச்சர் கலைஞர் , கள்ளுக்கடை திறப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இக்குழுவானது, 01.07.2010ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசுக்கு தனது ஆய்வறிக்கையை சமர்பித்தது. முன்னாள் நீதிபதி உட்பட இருவர் கள்ளுக்கடையை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தனர். அறிக்கை வந்த பின் கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என அப்போது முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்கள் உறுதி அளித்திருந்தார். ஆனால், இன்று வரை 'கள் இறக்க' அனுமதி வழங்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் கள் இறக்க முடியவில்லை. ஆந்திரா, தெலங்கானா, கேரளா போன்ற அண்டைய மாநிலங்களில் கள் விற்கிறார்கள். பீஹாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டபோது கள்ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவையெல்லாம் போக இன்றைய மக்கள் தொகைப் பெருக்கத்தில் யார் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் யார் அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் அதை வைத்து யார் சம்பாதிக்கிறார்கள் என்பதெல்லாம் ஆளும் வர்க்கத்துக்கு தான் வெளிச்சமாக இருக்கிறது. அரசு சட்டம் மூலம் இதற்கான அனுமதிகளும் நடந்து கொண்டுதான் வருகிறது. தமிழ்நாட்டுக் காவல்துறையில் இது ஒரு தீராத மறைமுக பிரச்சனை. அதுபோக சாராய ஆலை உற்பத்தியாளர்கள் அரசுடன் இணைந்து கொண்டு எம்பி/ எம்எல்ஏ என பதவிகளை வைத்து உயிர்க்கொல்லியான இந்த மதுக்களை விற்று ஏராளமான பணத்தைக்கொள்ளையடிக்கிறார்கள். இதில் வரும் லாபத்தில் பத்து சதவீதத்தை தங்களுக்கு ஆதரவான அரசுக்கு நன்கொடையாகக் கொடுத்து விடுகிறார்கள். இந்த வகையில் மட்டும் அரசை நடத்தும் ஆளும் வர்க்கத்திற்கு பல வகையிலும் வருமானம் கிடைக்கிறது. இது போக வணிகங்கள் பல்வேறு வகையான முறையற்ற வருமானங்கள் யாவும் ஆட்சியாளர் குடுபத்துக்கு கிடைக்கிறது. இதற்கெல்லாம் பணம் சம்பாதித்து அதாவது இந்த மதுவை வாங்கி குடிக்க முடியாதவர்கள் தான் குறைந்த விலையில் கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்கிறார்கள். பல நேரங்களில் அபாயகரமாக மரணித்தும் போகிறார்கள். அதற்கு பதிலாகக் கிராமப்புறங்களில் இயற்கையாகப் பனை தென்னைகளில் இருந்து கிடைக்கும் கள் போன்றஆரோக்கிய பானத்தை இறக்கிக் குறைந்த விலையில் அவற்றைக் கொடுத்தால் என்ன தவறு. இது சார்ந்து எத்தனையோ தொழில் முறைகளும் வேலை வாய்ப்புகளும் மக்கள் பலருக்குக்கிடைக்கும் தானே. அன்றாடம் 500 ரூபாய் சம்பளம் வாங்குகிறவர் அதில் பெரும்பகுதியை டாஸ்மார்க் மதுக் கடையில் கொடுத்து விட்டு வெறுங்கையுடன்தான் வீடு திரும்புகிறார். பதிலாக ஒரு 50 லிருந்து 80 ரூபாய்க்குள் கள்ளைக் குடித்துவிட்டு மிச்சத்தை வீடு கொண்டு போவார் தானே. அடித்தட்டு மக்களின் குறைந்தபட்ச பானம் கள் மட்டும் தான் அதற்கு ஏன் இந்த அரசு தடைவிதிக்கிறது. இந்த அரசு சாராய வியாபாரிகள் கொழுத்துப் போவதற்கும் டாஸ்மார்க் வருவாயில் தங்களை காத்துக் கொள்வதற்கும் ஆன இந்த அவல நிலை தொடர்வதற்குப் பதில் உண்மையில் கள்ளுக்கடைகளைத் திறப்பது மக்களுக்கானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எப்படியும் போதைக்கு பழகியவர்களுக்கு அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப குறைந்த விலையான கள்ளை வழங்குவது மக்களுக்கான அறம் சார்ந்தது. தொடர்ந்து கொள்ளையடித்துவரும் இந்த அரசு சாராய வியாபாரிகள் அதைச் செய்வார்களா? வள்ளுவன் 'கள்ளுண்ணாதே!' என்று அதிகாரமாக சொல்லியே கேட்காத தமிழர்கள் அரசுகள், சாராய காய்ச்சிகள் & சாராய ஆலை முதலாளிகள் கம் அரசியல்வாதிகள் சொல்லியா கள்ளை குடிக்காமல் இருக்க போகிறார்கள்...? கள்ளு விவகாரத்தில் நான் "சிறியகள் பெறினே எமக்குஈயு மன்னே பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணுமன்னே (புறநானூறு)" நெடுமான் அஞ்சியோடு சேர்ந்து கள்ளுண்டு களித்த அவ்வையின் பாதை…..2/2 #கள்ளுக்கடை #மதுவிலக்கு #drystate #prohibition #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 18-6-2025.



No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...