//சென்னை மாகாணம் அப்போதிருந்த நிலையிலேயே, தமிழ் மாகாணம் எனப் பெயர் மாற்றப்படுவதையே பலரும் விரும்பினர். ஆனால், லட்சக்கணக்கில் தெலுங்கு, கன்னட, மலையாள மக்கள் இணைந்து வசிக்கும் ஒரு மாநிலத்திற்குத் தமிழ் என்று பெயர் சூட்டுவது பிரச்சினைகளை உருவாக்கும் என்றே பலரும் கருதினார்கள். இதனாலேயே ஐந்து மொழிகளை உள்ளடக்கிய ‘திராவிடத் தேசம்’ என்ற பெயர் பலருக்கும் ஏற்புடையதாகத் தோன்றியது. எனினும்கூட ‘தனி நாடு’ என்ற கோரிக்கையை அவர்கள் ஏற்கவில்லை.
26.06.1945 அன்று திருச்சி மலைக்கோட்டையில் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை தலைமையில் இலக்கியக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ம.பொ.சிவஞானம் பேசினார். அப்போது அவர், ‘சுதந்திர இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாகத் திருத்தி அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாகாணமும் இந்திய சமஷ்டியில் பூரண சுயாட்சி பெற்ற அங்கமாக இருக்கவேண்டும். மத்திய அரசிடம் பாதுகாப்பு, போக்குவரத்து, அயல்நாட்டு உறவு ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டுமே இருக்க வேண்டும். எஞ்சிய எல்லா அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கே உரிமையாக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
தமிழுக்குத் தனி மாநிலம் கோரியவர்களிலும், மாநிலங்களுக்குச் சுயாட்சி கோரியவர்களிலும் இவரே அனைவருக்கும் முன்னோடி என்று குறிப்பிடலாம். இங்கு மட்டுமல்ல, தான் கலந்துகொண்ட எல்லாக் கூட்டங்களிலும் இக்கருத்தை அவர் வலியுறுத்த ஆரம்பித்தார். அந்நாட்களில் காங்கிரஸ் தேசியம் பேசியது. திராவிடர் கழகம் பிரிவினைவாதம் பேசியது. ம.பொ.சிவஞானம் காங்கிரஸில் இருந்தபடியே தனி மாநிலம் என்று பேசினார். இதனால் இவரை காங்கிரஸாரும் ஏற்கவில்லை, திராவிட இயக்கத்தாரும் ஏற்கவில்லை.
அடுத்த ஆண்டு, அதாவது 1946 மே மாதத்தில் அவர் தன் கொள்கைகளை வலியுறுத்தி ‘தமிழ் முரசு’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அதன் முதல் இதழிலேயே அவர் ‘தமிழரசு’ கோரிக்கையை வலியுறுத்தி எழுதினார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
‘வருங்காலச் சுதந்திர இந்தியாவில் சுதந்திரத் தமிழ் அரசு அமைந்தே தீரவேண்டும். தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். அந்த அரசு வகுக்கும் சுய நிர்ணய உரிமை தமிழருக்கு வேண்டும். இந்தச் சுய நிர்ணய உரிமை இந்தியாவில் உள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் இருக்க வேண்டும்.
வயது வந்த வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடி தமிழகத்தில் சுதந்திர தமிழரசை நிறுவுவர். இந்தப் புதிய தமிழரசு தனியரசு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்றாலும், கடந்த காலச் சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய இனங்கள் அடைந்துள்ள ஒற்றுமை உணர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, சர்வதேச நிலை ஆகியவை காரணமாக தமிழரசு, தானே தன் விருப்பத்தின் பேரில், ஏனைய இன அரசுகள் அடங்கிய இந்திய சமஷ்டியில் இணைய வேண்டும்.
தமிழரசானது தனது கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஆந்திர, கேரள, கன்னட இன அரசுகளுடன் கூட்டுறவு கொண்டு ஒரு துணை சமஷ்டியை நிறுவிக்கொள்ளும் உரிமையையும் உடையதாக இருத்தல் வேண்டும்.’
காங்கிரஸில் இருந்தபடியே இக்கருத்தை ம.பொ.சி. கூறியதால் காங்கிரஸாரும் இதனை ஏற்கவில்லை. திராவிட இயக்கமும் ஏற்கவில்லை. எனினும், மாறுபட்ட கருத்து என்பதால் பரவலான சர்ச்சையை இது ஏற்படுத்தியது.
சென்னை மாகாண முதலமைச்சர் பொறுப்பை வகித்த டி.பிரகாசம் மீது உறுப்பினர்களுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தெலுங்கர் என்பதால் அவர் சென்னை மாகாணத்தைப் பிரிக்கக் கோரும் ‘விசால ஆந்திரா’ கொள்கைக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என தமிழ் உறுப்பினர்கள் கருதினர். இதையடுத்து அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முற்பட்டனர். இதைத் தொடர்ந்து பிரகாசம் பதவி விலகினார். புதிய முதலமைச்சராக ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் பொறுப்பேற்றார்.
நேரு தலைமையிலான இடைக்கால அரசு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க முற்பட்டது. இதற்கென ஒரு குழு அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவிற்குச் சட்ட ஆலோசகராக பி.என்.ராவ் எனப்பட்ட பெனகல் நரசிங்கராவ் நியமிக்கப்பட்டார். நிர்வாக வசதிக்காக நாட்டைப் பிரிக்கும் அவரது முடிவு சென்னை மாகாணத்தின் தலைநகரான சென்னை மாநகரைப் பிரிக்கும் திட்டம் ஒன்றை உருவாக்கியது. இதுகுறித்து வெளியான தகவல் அனைத்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும் அதிரவைப்பதாக இருந்தது. அந்தத் திட்டம் இதுதான்.
1. இப்போதுள்ள எல்லைகளின்படி இனியும் சென்னை ஒரே மாகாணமாக நீடிக்கும்.
2. நிர்வாக வசதியை முன்னிட்டு வட சென்னை, தென் சென்னை என இரு உப மாகாணங்கள் ஏற்படுத்தப்படும். இதுபோக சென்னை ஜில்லா என ஒன்றும் ஏற்படுத்தப்படும். (இன்றைய மாவட்டம் அன்று ஜில்லா எனப்பட்டது.) இந்த ஜில்லாவில் சென்னை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. ஒவ்வொரு உப மாகாணத்துக்கும் தனித்தனியே சட்டசபையும் மந்திரி சபையும் இருக்கும்.
4. சென்னை ஜில்லா நிர்வாகம் இரண்டு மாகாணங்களுக்கும் பொதுவான விவகாரங்களை நிர்வாகம் செய்யக் கூட்டு மந்திரி சபை ஏற்படுத்தப்படும். இரு உப மாகாணங்களிலிருந்தும் சம பங்கு உறுப்பினர்கள் மற்றும் சென்னை ஜில்லா உறுப்பினர்களில் ஒருவர் இதன் உறுப்பினராக இருப்பர். இந்த உறுப்பினர்கள் கூடி நிர்வாக விஷயங்களை முடிவு செய்வர். இந்தக் கூட்டு மந்திரி சபை உறுப்பினர்களின் ஆயுட் காலம் சுவிட்சர்லாந்தில் உள்ளதுபோல வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும்.
5. மாகாணத்தின் நிர்வாகத் தலைவர் (கவர்னர் போன்றவர்) இரு உப மாகாணங்களின் தலைவராகவும் இருப்பார்.
6. கவர்னர் போன்ற அந்தஸ்துள்ள மாகாணத் தலைவருக்கு, அந்தந்த உப மாகாண மந்திரி சபை தங்களது மாகாணங்கள் தொடர்பான நிர்வாக விஷயங்களில் ஆலோசனை கூறும். சென்னை ஜில்லா போன்ற பொது விவகாரங்களில் கூட்டு மந்திரி சபை ஆலோசனை கூறும். மாகாணத்தின் உப பிரிவுகளின் நிர்வாகம் மாகாண நிர்வாகத் தலைவரின் மேற்பார்வையில் நடப்பதாகவே கருதப்படும்.
7. பொது நிர்வாகத்துக்கு உட்பட்டவை எவை, தனி நிர்வாகத்துக்கு உட்பட்டவை எவை என்பன போன்ற விஷயங்களைப் பொது மந்திரி சபையைக் கலந்தாலோசித்து மாகாண நிர்வாகத் தலைவர் முடிவு செய்வார்.
பி.என்.ராவின் இந்தத் திட்டம் சென்னை மாகாண மக்களைப் பரபரப்பில் ஆழ்த்தியது. ‘தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம்’ என்ற கோரிக்கை வலுவடையத் தொடங்கியதுடன், தங்கள் புதிய மாநிலத்துக்குத் தலைநகராக சென்னையே இருக்க வேண்டும் என்றும் தெலுங்கு மக்கள் கூறத் தொடங்கினர். அவர்கள் ‘சென்னை எங்களுடையதே’ என்ற பொருளில் ‘மதராஸ் மனதே’ என்ற கோஷத்தை எழுப்பினர். இந்தக் கோஷம் பெரிதும் வலுக்கத் தொடங்கியதால், சென்னை தங்கள் கையை விட்டுப் போய்விடுமோ என தமிழர்கள் அஞ்சினர்.
பி.என்.ராவ் திட்டப்படி வட சென்னை தெலுங்கு மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் ஆக வாய்ப்புண்டு. தென் சென்னையோ தமிழகம், மலபார், தென் கன்னட மாவட்டங்களைக் கொண்ட கதம்பப் பகுதியாக இருக்கும். தமிழ், கன்னடம், மலையாளம் மூன்றும் கலந்த மாநிலமாகத்தான் இருக்கும்.
இந்தத் திட்டத்தை முதல்வராக இருந்து விலகிய டி.பிரகாசம், வி.வி.கிரி, டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற பலரும் வரவேற்றனர். முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கருத்து தெரிவிக்கவில்லை. ‘எப்படியும் இப்போதுள்ள சென்னை மாகாணம் முழுமையாகத்தான் இருக்கப் போகிறது’ என்று காமராஜர் போன்றவர்களும் கருதினர். ம.பொ.சி. ஒருவர்தான் அதனை மிகக் கடுமையாக எதிர்த்தார். அவர் 01.04.1947 தேதியிட்ட ‘தமிழ் முரசு’ இதழில் ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று ஆவேசமாகத் தலையங்கம் எழுதினார்.
‘ஆந்திரர்கள் சென்னையை மட்டும் சொந்தம் கொண்டாடினர். டி.என்.ராவ் திட்டமோ சென்னை மட்டுமல்லாது அதன் சுற்றுப் பிரதேசங்களையும் பறித்து ஆந்திரருக்கு அளிக்க எண்ணுகிறது. அத்துடன் மலையாளிகளும் கன்னடர்களும் உரிமை கொண்டாட வழிவகுக்கிறது. முன்பு கவர்னரின் ஆலோசகராக இருந்த ஸ்டிராத்தி என்பவர்தான் சென்னையைப் பொதுவாக்க ஆலோசனை கூறியவர். இப்போது அதை ஒரு திட்டமாகவே பி.என்.ராவ் முன்வைத்துள்ளார். குமரி முதல் வேங்கடம் வரை தமிழ்நாட்டின் எல்லையாகக் கொண்டு தமிழரசு அமைய வேண்டும். தமிழ் நாட்டிலிருந்து சென்னையைத் துண்டாடும் நாள் சென்னையில் ரத்த ஆறு ஓடும் நாளாகத்தான் இருக்கும். தங்கள் தலைகளைக் கொடுத்தேனும் தமிழ்நாட்டின் தலைநகரைக் காக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.’
இவ்வாறு அனல் பறக்க எழுதிய அவர், ‘உரிமைக்கு எல்லை வேங்கடம், உறவுக்கு எல்லை இமயம்’ என்று புதிய கோஷத்தை எழுப்பினார்.
.
.
.
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் டி.பிரகாசம் தெலுங்கு மக்களால் ‘ஆந்திர கேசரி’ எனப்பட்டவர். அவர், ‘பி.என்.ராவ் திட்டத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கின்றேன். ஆந்திர மக்களும் ஏற்பார்கள். சென்னை நகரில் ஆந்திர மக்களுக்கு இடம் உண்டா என்ற கேள்வியே எழவில்லை. ஏனென்றால், ஆந்திரர்களிடமிருந்துதான் சென்னையை ஆங்கிலேயர் பெற்றனர். எனவே சென்னையில் ஆந்திரர்களுக்குப் பூரண உரிமை உண்டு’ என்றார்.
இந்திய அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தத்துவஞானி என்று பெயர் பெற்றவர். அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் இதனை ஆதரித்ததுதான் வியப்பு. அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
‘சென்னை எதிர்கால ஆந்திர மாகாணத்தின் தலைநகர் ஆகவேண்டும். ஏனெனில், அந்நகரம் நடுவாக இருப்பதுடன் ஆந்திர மாகாணத்தின் கடற்கரைப் பிரதேசத்தையும், உள்நாட்டு ஜில்லாக்களையும் இணைத்து வைப்பதாக உள்ளது. நெடுங்காலமாகவே சென்னைக்கு ஆந்திரத் தொடர்பு உண்டு. சென்னையின் வளர்ச்சியில் ஆந்திரர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒன்றரை லட்சம் தெலுங்கர்கள் சென்னையில் வசிக்கின்றனர். எனவேதான் சென்னைதான் ஆந்திர மாகாணத்துக்குப் பொருத்தமான தலைநகரம். அரசாங்கத்துக்கு இந்த யோசனை பிடிக்காவிட்டால் சென்னை நகரை இரண்டாகப் பிரித்து இரு தலைநகரங்களை உருவாக்கலாம். இதற்கென ஒரு பிரிவினை கமிஷன் அமைக்கலாம்.
நகரம் ஒன்றாக இருந்தாலும், பிரதேச வேற்றுமையால் இரண்டுபட்டு நிர்வாக நடைமுறையிலும் இரண்டாகப் பிரிந்து நிற்கிற நகரங்கள் பல உண்டு. ஹைதராபாத்-செகந்திராபாத், பெங்களூர் நகரம்-கண்டோன்மென்ட், பிரிட்டிஷ் கொச்சி-சமஸ்தான கொச்சி போன்றவை இதற்குச் சான்றுகள்.’
இதன் பின்னரே தமிழகத் தலைவர்கள் பலரும் விழித்துக்கொண்டனர். //
தமிழ்நாடு தனிமாநிலம் உருவான வரலாறு, ஆர்.ராதாகிருஷ்ணன், சுவாசம் பதிப்பகம்,
No comments:
Post a Comment