Sunday, January 24, 2016

சிக்கலில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்

பி.ஏ.பி. என்று அழைக்கப்படுகின்ற பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத் திட்டம், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அணை திட்டங்கள் ஆகும்.  1958 நவம்பர் 9ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகம்-கேரளம் மாநிலங்களிடையே நதிநீர் பங்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இதன் துணை நதிகளான தூணக்கனவு, பெருவாரிப்பள்ளம் ஆகியவை கேரள வனப்பகுதியில் அமைந்துள்ளன.  பிரதானமான பரம்பிக்குளம் அணை தமிழக பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டு, கேரள மாநிலத்தின் பகுதியில் இருந்தாலும் தமிழக அரசுதான் பராமரிப்பு  செய்கின்றது.

இந்த திட்டத்தின் நீர் பங்கீடு குறித்து கேரளாவும், தமிழகமும் 30 வருடங்களுக்கு ஒரு முறை அமர்ந்து பேசி மறு ஆய்வு செய்து ஒப்பந்தந்தத்தை குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.  ஆனால் தமிழகமும், கேரளமும் இதை சரியாக முறைப்படுத்தவில்லை.  கடந்த 1992 ஆம் ஆண்டு இரு மாநில அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.  அப்போது கேரளா பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையை தங்கள் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை தாங்கள் வழங்குவதாக கேரளா கோரிக்கை வைத்தது.  ஆனால் அணை பராமரிப்பு செலவை தமிழகம்தான் ஏற்கவேண்டும் என்ற நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியது.

படிப்படியாக பரம்பிக்குளம் அணையை கேரளா தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர திட்டங்களை தீட்டி வருகிறது.  இந்த அணையின் அருகே தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் 2013 ஆம் ஆண்டு கேரள அரசு தனது வனக் காவல் நிலையத்தை திறந்து அணைப் பகுதிகளை கண்காணிக்கத் தொடங்கியது.  கடந்த ஜனவரி 16ம் தேதி பரம்பிக்குளம் அணை மற்றும் துணை அணைகளின் பராமரிப்புப் பணிக்காக சென்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை அங்கு அனுமதிக்காமல் கேரள வனத்துறை திருப்பி அனுப்பியது.

மற்ற பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு, குமரி மாவட்டத்தில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவி  நயினார், உள்ளாறு, விருதுநகர் மாவட்டத்தில் செண்பகவல்லி-அழகர் அணை திட்டம், கோவை மாவட்டத்தில் பம்பாறு, சிறுவாணி போன்ற நீராதார பிரச்சினைகளில் கேரளா வம்பு செய்வதைப் போல பரம்பிக்குளம்-ஆழியாறிலும் பிரச்சினை செய்ய துவங்கிவிட்டது.  தமிழக அரசின் கட்டுப்பாட்டில் பரம்பிக்குளம் அணை இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டும், கேரளா இப்படி வம்படி வேலை செய்ய தொடங்கிவிட்டது.

45 லட்சம் ஏக்கர் கோவை-திருப்பூர் மாவட்டங்களுக்கு பாசன வசதி கிடைத்தும், குடிநீர் வழங்கும் இந்த பரம்பிக்குளம் திட்டத்தை கேரளா முடக்கப் பார்க்கிறது.

எப்படி காவிரி பிரச்சினையில் ஒப்பந்தத்தை திரும்ப அமர்ந்து பேச முடியாமல் தள்ளப்பட்டதோ, அம்மாதிரியே திரும்ப 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமர்ந்து பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தை ஆய்வு செய்யாமல் இருப்பது முறையற்ற நடவடிக்கையாகும்.  ஒத்துழைப்புத் தராமல் கேரள அரசை மத்திய அரசு கண்டிக்காமல் பாராமுகமாகவே இருக்கின்றது.  கவனத்தோடு கவனிக்க வேண்டிய தமிழக அரசும் கண்மூடித்தனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் வேதனையை தருகின்றது.

தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் அண்டை மாநிலங்களால் பறிக்கப்படுவது நெறியற்ற வாடிக்கைதனங்களாகிவிட்டது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...