Saturday, January 16, 2016

"இந்திய தேசியக்கொடி கூட மரபணு மாற்றப்பட்ட பருத்தியிலிருந்து தான் தயாராகியுள்ளது.இது எத்தனை பேருக்குத் தெரியும்.இந்தியாவில் விளையும் 98% பருத்தி மரபணு மாற்றப்பட்ட மான்சாண்டோ பருத்தி.." என்று "நல்ல சந்தை" என்ற அமைப்பை இயற்கை விவசாயத்தை லாபகரமானது என்பதை உணர்த்துவதற்காகவேத் துவக்கிய திரு.ஜெகநாதன்,

"குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்களுக்கான ஒரு நினைவுத் தூண் தமிழ்நாட்டில் நிறுவப்பட காரணமே,

தமிழ்நாட்டில் விவசாயிகளின் போராட்டத்தை நடத்திக் காட்டியவரும்,உழவர்களுக்காகவே ஒரு அரசியல் கட்சியைத் துவக்கி நடத்தியவருமான நாராயணசாமி நாயுடு தான்" என்ற தகவலைச் சொன்ன தராசு இதழின் ஆசிரியர் ஷ்யாம்.

"மரபணு மாற்றப்பட்ட விதைகள் விவசாயத்தை மட்டும் அழிக்கவில்லை.நம் கலாச்சாரத்தையே அழிக்கிறது" என்பன போன்ற அதிர்ச்சியான தகவல்களைச் சொன்ன பூவுலகின் நண்பர்கள் குழுவைச் சார்ந்த சித்த மருத்துவர் கு.சிவராமன்,

என்று தெரியாத பல அரிய தகவல்களைக் கொண்டு-உழவின் சிறப்பை விளக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது "மக்கள் மேடை" யின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி.

இளையராஜாவின் அதிரடி இசையுடன் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் ஆரம்பக் காட்சியில் ஹீரோவின் அறிமுகத்தைப் போல-நெறியாளர் Venkada Prakash நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பேச்சாளர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திய விதம் அருமை.அத்தகைய அருமையான அறிமுக உரை,கொஞ்சம் கூட மிகைப்படுத்தப்பட்டதல்ல என்பதாக அமைந்தது பங்கு கொண்டவர்களின் அனுபவம் மற்றும் அவர்கள் தந்த தகவல்கள்.பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்புக்களைத் தந்ததோடு,பார்வையாளர்களை அவர்களின் பெயர்களைச் சொல்லி அழைத்தது அனைத்திலும் அருமை.

"இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஒரு விவசாயியை-தன் உரிமையைக் கேட்டான் என்பதற்காக அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் சுட்டுக் கொன்றது.அன்று தொடங்கி இன்று வரையிலும் கூட விவசாயிகளின் மரணங்கள் நின்ற பாடில்லை" என்று தன் பேச்சைத் தொடங்கிய நிகழ்ச்சியின் மற்றொரு விவாதவாளரும்,கரிசல் காட்டு விவசாயியும்-வழக்கறிஞருமான திரு Radhakrishnan KS அதன் பின் சொன்னது எல்லாமே அரிய தகவல்கள்.

"விவசாயிகளின் முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தான்.அவரது ஆட்சிக்காலம் மிகக் குறுகியதாக இருந்தாலும் அதில் அவ்வளவு சாதனைகளைச் செய்தார்.அதே வேளை விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னிறுத்திய லால்பகதூர் சாஸ்திரியோ,சரண்சிங்கோ ஆட்சியில் அதிகம் நீடிக்கவில்லை.இந்தியாவில் இதுவரையிலும் கிட்டத்தட்ட மூன்று லட்சமும்,தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் கிட்டத்தட்ட 40 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்,1957 ல் தொடங்கி 70 விவசாயிகள் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடியதற்காகச் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்,வேறெந்த தொழில்களில் இவ்வாறு நடந்திருந்தால் தொழிற்சங்கங்கள் சும்மா விடுமா? இந்தியாவே எரிந்திருக்கும்" என்று சரவெடியாக வெடித்தவர்,

"கோவை லட்சுமி மில்ஸ் அதிபர் ஜி.கே சுந்தரம் எம்பி,திரு.நாராயணசாமி நாயுடு,ரா.கிருஷ்ணசாமி கவுண்டர் எம்எல்ஏ,கரூர் முத்துசாமி கவுண்டர் எம்பி,அரூர் முத்து கவுண்டர் எம்பி,தென்காசி திரு.ஏ.ஆர்.சுப்பையா முதலியார் எம்எல்ஏ,சாத்தூர் முள்ளிச்செவலைச் சார்ந்த ராம்மூர்த்தி எம்பி,டாக்டர் திரு.கொண்டல் சாமி,திரு.கு.வரதராஜன்,திரு.ஜெகந்நாதன்,திரு.பால்பாண்டி,திரு.சங்கிலி எம்எல்ஏ,அதிசயமணி" என்று விவசாய சங்கங்கள் உருவாக உழைத்தவர்களைப் பட்டியலிட்டதோடு,

"கரிசல் இலக்கிய மேதை திரு.கி.ரா கூட விவசாயப் போராட்டத்தில் கைதாகி ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார்"என்றார்.அக்காலத்தில் விவசாயப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி-இந்திரா காந்தியையே நடுநடுங்க வைத்த திரு.நாராயணசாமி நாயுடுவிற்கு அவர் மறைந்த கோவில்பட்டி நகரத்தில் சிலை வைக்க,தான் படும் போராட்டத்தை விளக்கிய கேஎஸ்ஆர்,

"தமிழ்நாட்டிலேயே ஒரு மாநில முதல்வருக்கு எதிராக-"மொட்டை பெட்டிஷன்" போடப்பட்டது-விவசாயிகளின் முதல்வரான ஓமந்தூராருக்கு எதிராகத்தான்.அதைச் செய்தவரின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.அது ஆய்வு செய்யப்பட வேண்டியது" என்ற அதிர்ச்சியான தகவலையும் சொல்லத் தவறவில்லலை.

மொத்தத்தில் வழக்கமான டிபேட் கிளஷேக்கள் இல்லாமல்-அட்டகாசமான அரிய தகவலைக் கொண்டதாக அமைந்து-உழவின் தேவையையும் உணர்த்தியதோடு,

"எவர்களையோ" திருப்திப்படுத்த காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளைப் போல உலகத்தின் அச்சாணியான உழவுத் தொழிலும்,கட்டிடக் காடுகளை உருவாக்கும் காட்டுமிராண்டி ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்களுக்காக,

"காட்சிப்படுத்தப்பட்ட தொழில்கள்" பட்டியலில் காரணமின்றி சேர்க்கப்பட்டு,எதிர்காலத்தில் தடை செய்யப்பட்டுவிடுமோ என்ற பயத்தையும் உருவாக்கி விட்டது.

நம் கடமை காத்திருக்கிறது........

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...