Friday, July 15, 2022

தமிழகத்தில் அன்றைய சோசலிஸ்ட்கள் (பி.எஸ்.பி, எஸ்.எஸ்.பி)



தமிழகத்தில் அன்றைய சோசலிஸ்ட்கள்
(பி.எஸ்.பி, எஸ்.எஸ்.பி)  
***************
                                          

கடந்த காலத்தில் நம்மிடம் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி என்று சோஷலிஸ்டுகள் முக்கிய அங்கமாக அரசியல் களத்தில் இருந்தனர்.நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கிட்டத்தட்ட 1975 வரை சோஷலிஸ்டுகள் அரசியல் களம் இருந்தது.1952 இல் ஆச்சார்யா நரேந்திர தேவ்,ஜெயபிரகாஷ் நாராயணன், ஜே.பி.கிருபளான,முன்னாள் பிரதமர் சந்திர சேகர்,அசோக் மேத்தா,சின்கா,சியாம் சுந்தர் தாஸ் என்.ஜி. கோரே
எஸ்.எம் .ஜோஷி ஆகியோர் தொடங்கிய பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை பிஎஸ்பி என்பார்கள்.இன்றைய முலாயம், லல்லு,நிட்டிஷ் குமார் வரை பிஎஸ்பியில் இருந்தவர்கள்தான்.1951ல் துவங்கப்பட்ட அரசியல் கட்சி, வடபுலத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் சட்டமன்ற உறுப்பினராகளாக இந்த கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்த கட்சியின் சின்னம் குடிசை சின்னம். 
இந்த கட்சியில் முக்கிய தலைவராக இருந்த ராம்மனோகர் லோகியா பிரிந்து 1955 சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி அதாவது எஸ்எஸ்பி என்ற கட்சியை உருவாக்கினார். மதுலிமாயி, இந்திராவை வென்ற ராஜநாரயன்,அனந்தராம் ஜெய்ஸ்வால என பலர் இதில் இருந்தனர்.இதன் சார்பிலும் தமிழகத்தில் சில உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு சென்றார்கள்.இதனுடைய சின்னம் ஆலமரம். 
கடந்த 1960 இல் கிருபளானி பிஎஸ்பிலிருந்து விலகி, கட்சி அரசியலுக்கு அப்பால் இருந்தார்.1964 இல் அசோக் மேத்தா காங்கிரஸில் இணைந்தார்.பின், ஜார்ஜ் பெர்னாடஸ் 1969 இல் எஸ்.எஸ்.பியின் பொறுப்பை ஏற்றார்.
பிகார் முதல்வராக இருந்த கர்பூரி தாக்கரும் சோஷலிஸ்ட் தான்.அவரை போலவே பலர் பிகார்,உபி போன்ற மாநிலங்களில் இந்த இயக்கங்களில் இருந்தனர்.மத்திய அமைச்சராக இருந்த ஜனேஸ்வர மிஸ்ராவும் சோஷலிஸ்ட் தான்.
முதல் நாடாளுமன்ற தேர்தலில் 10.41% வாக்குகள் பெற்று 19 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றனர்.பின் நடந்து தேர்தலில் 6.81% வாக்குகளை பெற்று 12 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றனர். 1967 இல் 3.06% வாக்குகள் பெற்று 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றனர்.1971 இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த 1.04 % வாக்குகளை பெற்று இரண்டு இடங்களில் மட்டுமே சோஷலிஸ்ட்கள் வெற்றி பெற்றனர்.
1947-இல் பண்டித நேரு பிரதமர் காலத்திலிருந்து; கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்ட்களின் கடுமையான அரசியல் விமர்சனத்திற்கு காங்கிரசும், பண்டித நேருவும் உட்பட்டனர்.
இந்த தாக்கத்தால்தான் ஆவடி காங்கிரஸ் கட்சி மாநாட்டில் சோஷலிஸ்ச கொள்கை என்று நேருவின் தலைமையில் முன்னெடுத்தனர்.மேலும் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் மீது விமர்சனங்கள் இருப்பதால் ரஷ்யாவோடு நட்புறவு மட்டுமல்ல ரஷ்யாவில் நடைமுறையில் இருந்த ஐந்தாண்டு திட்டத்தை நேரு இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தினர்.இப்படி எல்லாம் காங்கிரஸ் கட்சி ஆண்டாளும் கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும் வைத்த வாதங்கள் பெரும் விவாத்த்தை அன்றைக்கு ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாது.இதனால் காங்கிரஸ் கட்சியிலும் சோஷலிச துணை அமைப்பு உருவானது.
தீவிரமாக வடபுலத்தில் மட்டுமல்ல,கேரளாவிலும் பட்டம் தானுபிள்ளை தலைமையில் 1954,மார்ச்சில் சோஷலிஸ்ட் அமைச்சரவையே அமைந்தது என்பது வரலாறு.புதிய நவ கேரளம் அமைந்த பின்னும் 1962 செப்டம்பர் வரை தானுப் பிள்ளை ஆட்சியை தொடர்ந்தார். 
தமிழகத்திலும் சோஷலிஸ்ட் உறுப்பினர்கள் இருந்தார்கள்.1967 தேர்தலில் இரண்டு சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் திமுக கூட்டணியில் அண்ணா தலைமையில் ஏழு தொகுதியில் போட்டியிடனர்.தமிழகத்தில் பழைய சோஷலிஸ்டுகள் எப்படி இருந்தார்கள் என்று பார்த்தால், தமிழகத்தில் சோசலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராகளாக இருந்தவர்கள், தொழிற்சங்கத் தலைவராக இருந்த எ.சுப்பிரமணியம், எம்.சுரேந்திரன், பட்டுக்கோட்டை எ.ஆர்.மாரிமுத்து, பிற்காலத்தில் இவர் காங்கிரசில் இணைந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார், இவர்களெல்லாம் ஜே.பி தலைமையிலான பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்ந்தவர்கள். அதுமட்டுமல்ல பூதலூர் ஆறுமுகம்சாமி, சட்ட மேலவை உறுப்பினர், என் மீது பாசம் கொண்டவர், அவர் இஸ்கஸ் என்ற அமைப்பில் அவரோடும் என்.டி.சுந்தரவடிவேல், என்.டி.வானமாமலை அவர்களோடு பணியாற்றிய காலங்கள் உண்டு. கோவில்பட்டி சோ. அழகர்சாமி மூத்த தலைவராகவும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சட்டமன்ற கட்சி தலைவராகவும்,ஜெ.பி தலைமையில் சோஷலிஸ்டாக துவக்கத்தில் இருந்தவர்.
அன்பு வேதாச்சலம்,பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த முன்னாள் தமிழக சட்ட மேலவை மதுரை அய்யன் அம்பலம், மதுரை ராமர், ஹெச் எம் எஸ் என்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த ராமையா போன்றவர்களெல்லாம் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தார்கள். புதுக்கோட்டை வல்லத்தரசு சோசலிஸ்ட் கட்சி ஆதரவில் தேர்தலில் போட்டியிட்டார்.

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து சுரேந்திரன், எ.ஆர்.மாரிமுத்து பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து பி வேலுச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்லடத்தில் இருந்து கே.குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சோஷலிஸ்டுகள் அன்றைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி வழங்கியபோது,காவேரி பிரச்சனைகளில் சட்ட மன்றத்தில் கடுமையாக வாதிட்டவர் ஈரோடு ஆர்.நல்லசிவன் அவர் மட்டுமல்ல சின்னத்துரை சட்டமன்ற உறுப்பினரும் இருந்தார். இவர்களெல்லாம் லோகியோவுடைய ஆதரவாளர்களாக சின்னத்துரையும் நல்லசிவமும் எஸ்எஸ்பி கட்சியில் இருந்ததாக எனக்கு நினைவு. பெருந்துறை பாலசுப்ரமணியனும் லோகியோ தலைமையிலான சம்யுக்த சோசியலிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருந்தார். இவர்களைப் பற்றியெல்லாம் பலருக்கும் இன்று நினைவுக்கு வராது. சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த பலர் பிற்காலத்தில் காங்கிரசில் இணைந்து கொண்டார்கள். 

Unsung heroes எவ்வளோ பேர்.ஒரிசாவின் சுரேந்திர நாத்,ரபி ரேய்,மராட்டியத்தில் மது டந்தவதே ,பிரமீளா டந்தவதே ,மிருனாள் கோரே,கர்நாடகத்தில் கோபால கௌடரு,லங்கேஷ்,ஸ்நேஹலதா ரெட்டி,யூ.ஆர் . அனந்தமூர்த்தி,கிரீஸ் கர்னாட்,கேரளத்தின் வீரேந்திர குமார் (பிரபல மாத்ரு பூமி நாளிதழின் அதிபர்)நமது தமிழகத்தில் செங்கல்பட்டு  ஒ.என் துரை பாபு, டாக்டர் விஜயலட்சுமிஆகியோர்.
மொழி கொள்கையில் எதிரும் புதிருமாக இருந்த சோசியலிஸ்டுகளும் திமுகவும் 1967  எப்படி கூட்டணி அமைத்தனர்.

க.ரா.நல்லசிவம் பாலசுப்பிரமணியம் லோகியா தலைமையிலான சோசியலிஸ்ட் கட்சியில் தான் இருந்தனர் . நல்லசிவம் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்(1952-1971). இன்றும் கொடுமுடியில் அவருடைய துணைவியார் மிக சாதாரண இல்லத்தில் வசித்து வருகின்றார்.
1950 களில் தமிழ் மொழிக்காக போராடி சிறை சென்ற சோசலிஸ்ட் கட்சியினர் இன்றும் அதற்கான மொழிக்காவலர் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் உள்ள கிராமத்தில் அந்த உதவித்தொகை பெறுகிறவர் 90 வது அகவையில் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்.
பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் 1967 ஆம் ஆண்டு அன்றையஅமைச்சரும்நிலக்கிழாருமான நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார் தோற்கடித்து வெற்றி பெற்றவர் தான் தீரன் சின்னமலை குடும்பத்தின் வாரிசான பாலசுப்பிரமணியம்.

கடந்த 1967ல் அண்ணா ஆட்சி அமைக்கும்போது மாபெரும் கூட்டணி அமைத்தார். ராஜாஜியும் அந்த கூட்டணியில் இருந்தார். ஒரு முறை கழுதை மேல் 7 கட்சி கூட்டணி என்று ஒரு கார்ட்டூன் வந்தபொழுது அதில் சோஷலிஸ்டு கழுதைகளெல்லாம் ஏற்றிக் கொண்டுள்ளது என்று சொன்னபோது அதற்கு ராஜாஜி சொன்னார் அந்தக் கழுதை மெதுவாக நகர்ந்து சென்னையிலுள்ள கோட்டையை அடைந்துவிடும், கவலைப்பட ஒன்றுமில்லை என்று வேடிக்கையாகச் சொன்னார். 

அன்றைக்கு பிஎஸ்பி,எஸ்எஸ்பி என்று தமிழகத்தைப் பொறுத்தவரை அழைக்காமல் அண்ணா சோஷலிஸ்டுகள் என்றே அழைத்தார். 1969ல் கிட்டத்தட்ட ஆறு ஏழு உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு சென்றார்கள். பல பிரச்சினைகளை கையில் எடுத்து சட்டமன்றத்தில் அறிவுப்பூர்வமாக பேசியதெல்லாம் மறுக்கமுடியாது. இன்றைய இளைஞர்களுக்கு சோசலிஸ்ட் கட்சி என்ற ஒன்று இருந்ததா, அது என்ன பகதூர் சோஷலிஸ்ட் கட்சியா என்று வேடிக்கையாக கேட்பதுண்டு.
 
சோஷலிஸ்டுகள்1960 மற்றும் 70 களில் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றினார்கள். தன்னலமற்று மிகவும் எளிமையாக அவர்கள் அன்று கம்யூனிஸ்டுகள் போல வாழ்ந்தார்கள்.எவ்வளவு பெரிய தொழிற்சங்கவாதிகள் இந்த சோசியலிஸ்ட்கள். ஏ.சுப்பிரமணியம், ஹெச்.எம்.எஸ் ராமையா போன்ற சோஷலிஸ்ட் தொழிற்சங்க தலைவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தமிழகத்தில் தொழிற்சங்கங்களை வளர்த்தார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எஸ்எஸ்பி, பிஎஸ்பி என்ற கட்சிகள் இருந்தது தெரியுமா? தெரியாது. இதுதான் இன்றைக்கு நிலைமை. கச்சத்தீவை கொடுக்கக்கூடாது, தமிழகத்துக்கு உரிமைகள் பெற வேண்டும், மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசிடம் அதிகாரம் குவிந்திருக்கின்றன என்று அவர்களும் தமிழக சட்டமன்றத்தில் பேசியது உண்டு. ஈரோடு ஆர்.நல்லசிவம் அவர்களை பலமுறை சந்தித்தது உண்டு, என்னோடு அன்பு பாராட்டுவார். ஓ.என்.துரை பாபு, முனு ஆதி,ஜோலார் பேட்டை அருணாசலம்,கவிஞர்  கம்பதாசன், சில நாட்கள்
தினத்தந்தி  சி.பா.ஆதித்தனார்,
சோலை இருசன்( இவரிடமிருந்து மதிமுகவுக்கு 1995இல் சங்கொலியை பெற்றோம்)

 லோகியோவின் சம்யுக்த சோசியலிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்,சட்டமன்றத்தில் கடுமையாக வாதாடினார்கள்.அதுபோலவே ஜெபி தலைமையில் இருந்த எஸ்எஸ்பி உறுப்பினர்களும் திட்டமிட்டு சட்டமன்றத்தில் பேச வேண்டியதை பேசி அறிவுபூர்வமாக பல கருத்துக்களை சொன்னது இன்றைக்கும் சட்டமன்ற குறிப்புகளில் உள்ளன. இதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிபோகக்கூடாது என்று வாதாடினார்கள். 356 யை கொண்டு மத்திய அரசு விரும்பியவாறு மாநில அரசுகளை கலக்கக் கூடாது என்று பேசியவர்கள். காட்சிக்கு எளிமையான சட்டமன்ற உறுப்பினராக அன்றைக்கு இருந்தார்கள்.

பிஎஸ்பி கட்சித் தலைவர்கள் அவ்வளவு ஹிந்தி ஆதரவாளர்களாக இல்லை. ஆனால் லோகியா நல்ல மனிதர் தீவிர இந்தி பற்றாளராக இருந்தார் என்ற எதிர்வினை. அதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.ஜெயபிரகாஷ் நாராயணன் என்ற ஒருவர் இருந்தார், ஆச்சாரியர் நரேந்திர தேவ் இருந்தார். ராம் மனோகர் லோகியா அகில இந்தியத் தலைவராக இருந்தார்,ஆச்சார்யா நரேந்திர தேவ் ஈரோடு அரசினர் விடுதியில்தான் மறைந்தார் என்று யாருக்காவது தெரியக் கூடிய வாய்ப்பு இருக்கா? இல்லை.ஜே.பி.கிருபளானி இருந்தார் என தெரியுமா..?

 காமராஜர்க்கு எதிராக தமிழகத்தில் காங்கிரசிலிருந்து பிரிந்து சீர்திருத்த காங்கிரஸ் என தேர்தலில் போட்டியிட்டு 10,15 சட்டமன்ற உறுப்பினர்கள் 1950 களில் வெற்றி பெற்றனர் என்பது தெரியுமா இதுதான் இன்று நமது அறிவு சார்ந்த புரிதல் நினைவு. 

இந்த வரலாறை நாம் அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கவனம் முக்கியம்.இது யாருடைய பிழை? இந்தப் பிழைகள் தான் நமக்கு காட்சி பிழைகளாகவும்… இடமாற்று பிழைகளாகவும் அமைந்து, ஒரு புரிதல் இல்லாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். இன்றைக்கு உள்ள அரசியலை மட்டுமல்ல, கடந்த கால அரசியலை அறிந்து கொண்டால்தான் இன்றைக்குள்ள அரசியலுக்கான சரியான புரிதல் வரும். கடந்தகால அரசியல் வரலாறு நமக்கு எதற்கென்றால் நீங்கள் அரசியலுக்கு லாக்கியற்வர்கள்,அரசியலில் வருவோர்க்கெல்லாம் வரலாறு தெரியவேண்டும், பொருளாதாரம் தெரியவேண்டும், உலக நாட்டு அரசியல் தெரிய வேண்டும், உலக நாட்டு உறவுகள் தெரிய வேண்டும்,தற்போது தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்பவர்களுக்கு இதைப் பற்றிய தெளிவு இல்லை,பழைய வரலாறு பேசுவதும் இல்லை,அது அவசியமும் இல்லை,தேவையும் இல்லை என்று திமீராக சொல்கின்ற அவலநிலை,என்ன சொல்ல.அகில இந்திய அரசியலில் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும். இந்த தாக்கம் இல்லாமல் அரசியல் வந்து என்ன செய்யப் போகிறிர்கள்.எஸ்எஸ்பி, பிஎஸ்பி யின் கொள்கைகளை படியுங்கள். அருமையான கொள்கைகள். திராவிட இயக்கத்திற்கு எப்படி கொள்கைகளை அண்ணா, வகுத்தாரோ, அதேபோல சரிசமமாக அரசியலுக்கு ஏற்றவாறு, நேர்மையோடும் மக்களுக்கு ஏற்றவாறு, மக்கள் நல அரசியல் என்று கட்சியை வளர்த்தார்கள். 

                                                   
-தினமணி, 7-7-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...