Thursday, September 22, 2022

*ஏதென்ஸ்-கிரக்கம்-Athens-Greece* ஜனநாயகம்- Democracy



————————————
இந்தப் படம் காலைப் பொழுதில் கதிரவனின் கதிர்கள் படும் பழமை வாய்ந்த ஏதென்ஸ் நகரம். அன்றைக்கு வாதங்கள், விவாதங்கள், சிந்தனைகள், தீர்வுகள், கொள்கை கோட்பாடுகளுடைய நாற்றாங்காலாக அது இருந்தது. அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளேட்டோ போன்ற பல சிந்தனையாளர்கள் உலாவிய இடம் இது. ஜனநாயகத்தின் பிறப்பிடம்.   இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், சுமார் 3400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் நகரம், குறைந்தது 7000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக மனிதர் வாழும் இடமாக விளங்குகின்றது. கி.மு.1400 அளவில் மைசீனிய நாகரிகத்தின் முக்கிய பிரதேசமாக ஏதென்ஸ் கோட்டை (Acropolis) விளங்கியது. இரும்புக் கால புதையல்களிலிருந்து கி.மு.900 முதல் இப்பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் முதன்மைபெற்ற நகரமாக விளங்கியமை புலப்படுகின்றது. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக எழுச்சிகளின் விளைவாகக் கி.மு.508 இல் கிளீஸ்தீன்[sனால் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் பயனாகச் சனநாயக முறைமை ஏதென்சில் தோற்றம்பெற்றது.1896 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன.
அதேபோன்று ரோம் நகரில் குடியரசு என்ற தத்துவம் உருவெடுத்தது. ஏதென்சில் இருந்து உருவெடுத்த ஜனநாயகத்தின் வீச்சு, பிரிட்டனில் நாடாளுமன்ற முறையை முதன்முதலாகக் கடைப்பிடிக்கச் செய்தது. இங்கிலாந்தை ‘நாடாளுமன்ற தாய்’ என்று அழைக்கவும் செய்தனர். ஆனால் இங்கிலாந்தில எழுதப்பட்ட அரசியல் சட்டம் எதுவும் கிடையாது. மரபுகளும், சம்பிரதாயங்களும், கடந்த கால வழிமுறைகளும் தாம் அரசியல் சட்டமாகத் திகழ்கிறது.  
நியூசிலாந்திலும் இஸ்ரேலிலும் எழுதப்பட்ட அரசியல் சட்டம் நடைமுறையில் இல்லை. ஆனால் உலகத்தில் அரசியல் சட்ட ஆவணம் என ஜான் அரசரால் கையெழுத்திட்டு ரன்னிமேடியில் வழங்கப்பட்ட மகாசாசனம் மேக்னா கார்ட்டா ஆகும். இதுவே உலகத்தில் முதன்முதலாக எழுதப்பட்ட அரசியல்சாசனத்தின் கூறாகும். பிரிட்டனில் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம், நாடாளுமன்ற முறை என்பது அடிப்படையில் ஆண்டாண்டு காலமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனின் காமன்வெல்த் நாடுகள் எல்லாம் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றுகின்றன.  
ரோமில் பிறந்த குடியரசு பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கப்பட்டு, குடியரசுத்தலவர் ஆட்சி நடைமுறையில் உள்ளது. ஜனநாயகம், குடியரசு இரண்டுக்கும் ஒரே சிந்தனை ஓட்டம் இருந்தாலும் நடைமுறையில் வித்தியாசமானவை. தமிழகத்தில் அன்றைக்கு குடவோலை முறை என்ற வாக்குப்பதிவு செய்யும்முறையைப் பின்பற்றினோம்.  
இந்த வகையில் கிரேக்கம், ரோமானியம், ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தொழிற் புரட்சிக்குப் பிறகும், ரஷ்யாவில் ரஷ்ய புரட்சிக்குப் பிறகும் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தத்துவங்கள் பிறந்து வளர்ந்தன. கால நிலைக்கு ஏற்றவாறு அவை பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகின்றன. அரசியல் அடிப்படைக் கூறுகளுக்கு கிரேக்கத்தின் ஏதென்ஸின் பங்கு மகத்தானது.

#KSR post 
22-9-2022.

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...