*பகிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு*:
*ஓராண்டில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு*
சென்னையில், பகிங்ஹாம் கால்வாய் நீளம், அகலத்தை கண்டறிந்து, ஓராண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, கஸ்தூரிபா நகர் மற்றும் இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர் சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'அடையாறு கஸ்தூரிபா நகர் முதல் இந்திரா நகர் வரை, கால்வாய் கரை சாலையை ஆக்கிரமித்து குடிசைகள், கான்கிரீட் கட்டுமானங்கள் உள்ளன. 'கால்வாயில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், மழை காலங்களில் எங்கள் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. எனவே, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014- இல் இந்த வழக்கு தொடரப்பட்டது. 2017க்கு பின், 2022 ஏப்ரலில் தான் இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி தலைமையிலான அமர்வில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, பகிங்ஹாம் கால்வாய் மீட்புக்காக 1,281 கோடி ரூபாய் ஒப்புதல் அளித்ததற்கான முழுமையான திட்டம் குறித்து, மனுத் தாக்கல் செய்யும்படி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரனுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' நேற்று பிறப்பித்த உத்தரவு:
பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தாக்கல் செய்த பல்வேறு அறிக்கைகளை பார்க்கும்போது, கூவம் மற்றும் அடையாறு ஆறு, பகிங்ஹாம் கால்வாயின் மோசமான நிலைமை தெரிகிறது. இந்த கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதை அறிக்கை காட்டுகிறது. பகிங்ஹாம் கால்வாயில், ஒரு காலத்தில் படகு போக்குவரத்து நடந்துள்ளது.
இந்த கால்வாயை கப்பல் போக்குவரத்துக்காக மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு அறிவிப்பு செய்தது. ஆனால், ஆக்கிரமிப்புகளால் அது தடைபட்டது.அடையாறு, கூவம் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கான புள்ளி விபரங்கள் உள்ளன. ஆனால், பகிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு, புள்ளி விபரங்கள் வழங்கப்படவில்லை.
இதற்கு, கால்வாயின் எல்லையை கண்டறிந்தால் தான், ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, கீழ்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
* பகிங்ஹாம் கால்வாயின் எல்லையை, ஆறு மாதங்களுக்குள் பொதுப்பணித் துறை நிர்வாக பொறியாளர் வரையறுக்க வேண்டும். இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது. கால அவகாசத்தை பின்பற்றவில்லை என்றால், அதற்கு அதிகாரிகளே பொறுப்பு.
* அசல் ஆவணங்கள் அடிப்படையில், கால்வாயின் நீளம் மற்றும் அகலத்தை வரையறை செய்ய வேண்டும். பழைய அளவிலேயே கால்வாய் மீட்கப்பட வேண்டும்.
* எல்லை வரையறை பணிகள் முடிந்த உடன், ஓராண்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இந்த அவகாசத்தை பின்பற்ற தவறினாலும், அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.
* ஆக்கிரமிப்புகள் அவ்வப்போது அகற்றப்படும் போது, பகிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் நிகழாமல், உள்நாட்டு நீர்வழி ஆணையம் பராமரிக்க வேண்டும்.
* மாடி ரயில் திட்டத்துக்காக கட்டப்பட்ட துாண்கள், மேம்பாலம், பாலங்கள் தவிர்த்து, பகிங்ஹாம் கால்வாயில் உள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற வேண்டும். நீர் வழி போக்குவரத்துக்கு வசதியாக அகற்ற வேண்டும்.
* பகிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் தொடர் பாக, வேறு எந்த நீதிமன்றமும், வழக்குகளை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. கால்வாயில் உள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகளை, அரசு வரன்முறை செய்யக் கூடாது.
* கால்வாயை சுத்தப்படுத்தி, பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க, வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவர் என நம்புகிறோம். ஆறு, கால்வாய், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமை. இயற்கை வளங்களை, பொக்கிஷங்களை, அரசும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment