Thursday, September 8, 2022

Onam

*Girls Performing Kaikottikali Dance During Onam Festival In Kerala 1950s*

சாமவெண் தாமரைமேல் அயனும் தரணியளந்த வாமனன் ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். 

மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று வாமனன் கேட்க,இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று தலைகுனிந்தார் மகாபலி. உடனே அவரது தலையில் பாதத்தை வைத்து அழுத்தி பாதாளம் அனுப்பினார் வாமனன்


ஓணம் திருநாள் : இணையத்தில் இருந்து....

சங்ககாலத் தமிழரால் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட ஓணத்திருவிழா, இன்றைய தமிழராகிய எமக்குத் தொடர்பில்லாத, அன்றேல் அறியப்படாத, அறிய விரும்பாத பண்டிகையாக இருக்கிறது.  காலத்தின் கோலத்தை என்ன சொல்வது? “மறந்த சொத்து மக்களுக்கும் இல்லை” என்பது தமிழர் பழமொழி அல்லவா?  இந்தப் பழமொழியை எம்மூதாதையர் எமக்காகவே சொல்லிச் சென்றனர் போலும். நம்மவர்களால் மறந்து போனவற்றுள் ஓணத்திருவிழாவும் ஒன்று.

முதலில் ஓணம் என்பது தமிழ்ச்சொல், அது மலையாள மொழிச்சொல் இல்லையென்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து உருவான ஒரு மொழியே மலையாளம். மலையாள மொழியில் கேரளாவின் வடக்கே செல்லச் செல்ல சமஸ்கிருதக் கலப்பு கூடுதலாகவும், தெற்கே வர வர தமிழ்மொழிக் கலப்பு கூடுதலாகவும் இருப்பதைக் காணலாம். மலையாளிகளின் பேச்சில் தமிழ் இருக்கும். எழுத்தில் இருக்காது. இது இன்றைய நிலை.

மகாத்மாகாந்தியால் காங்கிரஸ்கட்சியின் கிளைகள் இந்தியா எங்கும் மொழிவாரியாக 1920ல் தோற்றுவிக்கப்பட்ட போது, தமிழ்நாட்டில் 'தமிழ்நாடு காங்கிரஸ்'  உண்டானது. ஆனால் கேரளாவில் 'திருவாங்கூர் - கொச்சி தமிழ்நாடு காங்கிரஸ்' என்ற பெயரிலேயே உருவானது. எண்பது வருடங்களூக்கு முன்பு கூட மலையாளிகள் தம்மை தமிழ்நாட்டினர் என அழைத்து பெருமையடைந்தை அது காட்டுகின்றது. 

அதுமட்டுமல்ல மலையாளமொழியின் மிகப்பழைய இலக்கியமான இராமசரிதம் கி. பி 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதுவும் தமிழ்மொழிக் கலப்போடு பல்லவகிரந்த எழுத்தில் எழுதியதே. அதைப்படிப்பவர் தமிழென்றே விளங்கிக் கொள்வர். கி. பி 16ம் 17ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலேயே மலையாள எழுத்து முறையை  துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் உருவாக்கினார். நாநூறூ வருடங்களுக்கு முன்பும் தமிழராய் வாழ்ந்த மலையாளிகள் பழந்தமிழர் கொண்டாடிய ஓணத்திருவிழாவை கொண்டாடி வருவதில் வியப்பொன்றுமில்லை. 
ஆனால் தமிழர் எனச்சொல்லி வாழ்கின்ற நாம் எமது முன்னோரான ஒண்தமிழர் கொண்டாடிய ஓணத்திருவிழாவை மறந்ததே பெருவியப்பாகும். 

ஆதலால் மலையாள மொழியின் மிகப்பழைய இலக்கியமான இராமசரிதம் எழுதப்படுவதற்கு ஆயிரவருடங்களுக்கு முன்பே ஓணத்திருவிழாவை பண்டைத் தமிழர் எங்கு எப்படியெல்லாம் கொண்டாடினர் என்பதற்கான ஆதாரங்களை 

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்" 

என தொல்காப்பியர் கூறிய தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பில் பார்ப்போம்

ஓணம் என்றால் என்ன? வானமண்டலத்தில் இருக்கும் இருபத்தேழு  நட்சத்திரத் தொகுதியில் ஒன்று ஓணம். ஓணநட்சத்திரம் பறவை வடிவில் இருப்பதால் அதற்கு ஓணமென்று பெயர். 'ஓணுதல்' என்றால் பறத்தல். விலங்குகள் ஓடுதல் போல பறவைகள் பறத்தலே ஓணுதல். ஓணம் என்ற சொல்லுடன் திரு சேர்த்து திருவோணம் என அந்த நட்சத்திரத்தை அழைக்கிறோம். வடமேற்குத் திசையில் திருவோண நட்சத்திரத்தைப் பார்க்கலாம். அது பறவை பறப்பது போன்ற வடிவில் தெரிவதால் அதனை கழுகாக கற்பிதம் செய்கிறார்கள். பண்டைய தமிழர்களால் மாயோன் என அழைக்கப்பட்ட திருமால் வாமன அவதாரத்தில் ஆவணி மாதத்து ஓணநட்சத்திரத்தில் பிறந்தார். கி. பி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார் திருமாலை தனது குழந்தையாக எண்ணி

“நீபிறந்த திருவோணம் இன்று நீராட வேண்டும்
எம்பிரான் ஓடாதே வாராய்"                                - (பெரியாழ்வார் திருமொழி 2: 4: 2)
என அழைப்பதை அவரது பாசுரம் காட்டுகிறது. 

ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த திருநாவுக்கரசரும் தமது தேவாரத்தில்

“ஓணப்பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனும்
காணாப் பராவியுங் காண்கின்றிலர்" 
எனக்கூற, 

பெரியாழ்வாரும் இன்னொரு பாசுரத்தில்

“ஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண்
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே”

என்று பாடியிள்ளார். தமிழர் திருமாலை 'ஓணப்பிரான்' எனவும் 'திருவோணத்தான்' எனவும் அழைத்ததை இவை சொல்கின்றன.

திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் மூன்று அவதாரங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அசுரரைக் கொல்வதற்கென்றே எடுத்திருக்கிறார். திருமால், வராக அவதாரத்தில் இரணியனின் தம்பி 'இரண்யாக்சனைக்' கொன்றார். நரசிம்ம அவதாரத்தில் 'இரணியனைக்' கொன்றார். வாமன அவதாரத்தில் இரணியனின் மகன் பிரகலாதனின் பேரனான 'மாபலியைக்' கொன்றார். அவனை மாபலி என்றும் மாவலி என்றும் புராணங்கள் கூறுகின்றன. இன்றும் அவன் புகழைச் இலங்கையில் ஓடும் 'மாபலிகங்கை' ஆறும்,

“மாவலிகங்கை நாடெங்கள் நாடே" என்ற கதிரைமலைப் பள்ளும் சொல்லாமல் சொல்கின்றன.

மாபலியின் புகழும் வலிமையும் கண்டு தேவர்கள் பொறாமை கொண்டனர். தேவர்களின் தாயான அதிதி என்பவள், திருமாலை வணங்கி மாபலியிடமிருந்து தம்மை காத்தருளும் வண்ணம் வேண்ட அவளுக்கு மகனாய் பிறந்தார். அவர் குள்ளமாய் இருந்தார். மாபலி யாகம் செய்வதை அறிந்து, அங்கே வந்து தனக்கு தானமாக தன் காலால் மூன்றடி நிலம் கேட்டார். மாபலியும் தருவதாகச் சொன்னான். அருளாளனான மாபலி குருவாகிய சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாது, நிலத்தைத் தாரை வார்த்து வாமனனுக்குக் கொடுத்தான். மாபலி தாரை வார்த்த தண்ணீர் கையிற்பட்டதுமே குள்ள வாமனன் நெடுமாலாய் வளர்ந்தார்.  அதனை சங்க இலக்கியத்தின் பத்துப்பாட்டில் நப்பூதனார் என்னும் புலவர்

“நீர் செல நிமிர்ந்த மாஅல் போல”
என்று செப்புகிறார்.

அப்படி வானுயர வளர்ந்த நெடுமால் ஓரடியால் மண்ணுலகை அளந்தார், இரண்டாம் அடியால் விண்ணுலகை அளந்தார், மூன்றாம் அடியை எங்கே அளப்பது என்று மாபலியைக் கேட்டார். “இதோ” என தன் தலையை தாழ்த்தி மாபலி காட்டினான். மாபலியின் தலைமேல் அடிவைத்து அழுத்தி பாதாளா உலகையும் அளந்து அவனை அழித்தார். இதுவே வாமன அவதாரம் சொல்லும் கதை.

திருவள்ளுவரும்
"மடியிலா மன்னன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு"                         - (குறள்: 610)

என திருமாலை 'அடியளந்தான்' என அழைப்பதால் இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக இக்கதை தமிழரிடம் பேசப்பட்டு வருவதை அறியலாம். கலித்தொகையில் நெய்தற்கலியைப் பாடிய நல்லந்துவனாரும்

"ஞாலம் மூன்று அடித்தாய முதல்வன்"         - (கலி: 124: 1)

என திருமாலைப் குறிப்பிடுகிறார்."

திருஞானசம்பந்தரும் மூன்றாம் திருமுறைத்தேவாரத்தில்

“சாமவெண் தாமரைமேல் அயனும் தரணியளந்த
வாமனனும் அறியாவகையான்”
என சிவனைப் போற்றுகிறார்.

இற்றைக்கு 2400 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில்

“மாயோன் மேய காடுறை உலகமும்”

என முல்லை நிலத்தில் வாழ்ந்த தமிழரின் கடவுளாக சுட்டப்பட்டவர் திருமால். எனவே தொல்காப்பியருக்கு முன் வாழ்ந்த தமிழரும் சங்கச் சான்றோரும் நாயன்மாரும் ஆழ்வாரும் திருமால்பெருமையை பேசினர்.

திருஞானசம்பந்தர் பூம்பாவை உயிர் பெற்று எழப்பாடிய தேவாரத்தில் ஐப்பசி ஓண விழா தமிழ்ப்பெண்களால் கொண்டாடப்பட்டதை

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” 

(ப.திருமுறை: 2:47:2)

என்று பாடியுள்ளார். இத்தேவாரம் மயிலாப்பூரில் வாழ்ந்த தமிழர் கி.பி 7ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓணவிழா கொண்டாடியதைச் சொல்கிறது. கி.பி 10ம் நூற்றாண்டிலும் ஐப்பசி ஓணவிழா கொண்டாடப்பட்டதை முதலாம் இராஜராஜனின் கல்வெட்டு அறியத்தருகிறது. ஐப்பசியில் கொண்டாடிய இந்த ஓணவிழா எங்கே போயிற்று? தமிழர் வருடப்பிறப்பு போல் ஆயிற்றா

வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்”

என தொல்காப்பியர் கூறிய திருவேங்கடத்தில் (இன்றைய திருப்பதியில்) நடந்த ஓணவிழாவை திருமழிசையாழ்வார் சென்று பார்த்து

“காணலுற்றேன் கல்லருவி முத்துதிர
ஓணவிழவில் ஒலியதிர - பேணி
வருவேங்கடவா என்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று"   - (திருமொழி. 2422)

என தனது பாசுரத்தில் சொல்லி மகிழ்ந்துள்ளார்.

ஶ்ரீவல்லிபுத்துரில் வாழ்ந்த பெரியாழ்வார், 'ஓணதிருவிழாவில் உன்னடியவர்களாகிய நாம் உமக்கு உடுத்துக் களைந்த பீதாம்பரப்பட்டு ஆடையை உடுத்தி, உமக்கு படைத்த உணவை உண்டு, உமக்கு அணிவித்த துளசி மாலையை அணிந்து, நீ எமக்குத் தந்துள்ள தொழிலைச் செய்து பாம்பணையில் பள்ளிகொள்ளும் உமக்கு பல்லாண்டு கூறுவோம்' என்கிறார்.

“உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே” 

 - (திருமொழி. பல்லாண்டு:9)

பெரியாழ்வார் இத்திருமொழியை ஶ்ரீவல்லிபுத்தூரிலா, ஶ்ரீரங்கத்திலா பாடினார் என்பது தெரியவில்லை. எனினும் ஓணத்திருவிழாவில் பாடியது தெரிகிறது


சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார், கி.பி 2ம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்த தமிழர் எப்படி ஓணவிழாவைக் கொண்டாடினார் என்பதை படம் பிடித்து 

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப”

என்று மிகநீண்டு செல்லும் பாடலாய் தந்துள்ளார்.

அவுணரை வென்ற மாயோன் பிறந்த ஓணநாளில்  வடுக்கள் பொருந்திய முகமுடைய மறவர்கள் வீரவிளையாட்டுக்களில் ஈடுபட, மாலைகள் அணிந்த மறவர்கள் களிற்று யானைகளை ஒன்றோடு ஒன்று பொருத ஓட்டினர். அந்த யானைச் சண்டையைக்  காணவரும் மக்கள் நிற்பதற்காகக்  கட்டப்பட்ட உயர்ந்த மேட்டுக் கரையிலே விரித்திருந்த நீலநிறத்துணியை நிலத்திலிலுள்ள பரற்கற்கள் உறுத்த கள்மயக்கத்தில் சிலர் நடந்து திரிந்தனர்.iமகளிர் தமது கணவன், பிள்ளை, சுற்றம் சூழச் சேர்ந்து குளத்திலே நீராடி, செவ்வழிப்பண் பாடி, யாழும் முழவும் ஆகுளியும் இசைக்க, சுடர்விளக்கு முன் செல்ல, பாற்சோறு முதலியபண்டங்களுடன் மயில் போல் நடந்து வந்து கடவுளை வணங்க, சாலினி மடையலிட்டு பூசை செய்தாள்  எனவும் மன்றங்களில் குரவையும் சேரிகளில் பாட்டுகளும் சொற்பொழிவுகளும் நடந்தன எனவும் மிகவிரிவாகக் காட்டியுள்ளார். பண்டைய ஓணத்திருவிழாவின் அடி ஒற்றியே இன்றைய கேரள ஓணத்திருவிழாவிலும் யானைகளும் வீரவிளையாட்டுகளும் மகளிர் படையல்களும் சாதி மத பேதமற்று நடைபெறுகின்றன

ஓணநாளில் குளத்திலே நீராடியது போல் சேதுக்கரையிலும் நீராடியதை சேதுபுராணம்

“ஓலமார் கங்கையாதி ஓண நீராடலெல்லாம்”

எனச் சொல்கிறது. 

துர்க்கைக்கு உகந்த நாளில் திருவோணமும் ஒன்று. இராமர் திருவோண நன்நாளில் சேதுவில் நீராடி துர்க்கையை வணங்கினாரென தேவிபாகவதம் கூறும். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயில் மகோற்சவ தீர்த்தத் திருவிழாவும் ஆவணித் திருவோணத்திலேயே நடைபெறுவது இதற்கோர் எடுத்துக்காட்டாகும்.

திருப்பதி, மயிலாப்பூர், தஞ்சை, ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிப்புத்தூர், மதுரை, சேது என பண்டைய தமிழகம் எங்கும்  ஒண்தமிழர் கொண்டாடிய ஓணத்திருவிழா பார்த்தோம். நம் தமிழ் மூதாதையர்   போல் ஓணத்திருநாளில் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி தீங்கின்றி உலகெலாம் திங்கள் மும்மாரி பொழிய நீங்காத செல்வம் பெறுவோம்.



#*HappyOnam* 
https://twitter.com/ksradhakrish/status/1567789267371577344?s=48&t=LXzSglLTAqIwz6KyNCi6ug


#KSR post 
8-9-2022.




No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...