*கோனார் தமிழ் உரை* என்பது எத்தனை முக்கியமான நினைவு என்பது நம் தலைமுறையினருக்குத் தெரியும். பின்பு கோனார் தமிழ் அகராதி வெளிவந்தது
ஆசிரியர்களே கோனார் தமிழ் உரையை நம்பி இருந்த காலம் அது.
அந்தக் கோனார் எந்த ஊரைச் சேர்தவர் அவரின் பெயர் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும். சமீபத்தில் தான் எனக்குத் தெரிய வந்தது.
முதன்முதலில் கோனார் தமிழ் உரையை எழுதியவர் ஐயம் பெருமாள் கோனார். இவர் திருச்சியில் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய் இருந்தார். பின்னர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராசிரியராய் ஆனார்.
இவரிடம் படித்தவர்கள் எழுத்தாளர் சுஜாதா, நடிகர் அசோகன்.
கோனார் தமிழ் உரையை வெளியிட்ட பின் பழநியப்பா பதிப்பகம் பெரும் நிறுவனமானது.
கோனார் அவர்களுக்கு பழநியப்பா பதிப்பகம் கொடுத்த ஊதியத்தில் அவர் கட்டிய வீட்டிற்கு ‘ பழநியப்பா இல்லம்’ என்று பெயர் சூட்டினார்.
பழநியப்பா பதிப்பகம் பெரும் நிறுவனமான பின் சென்னையில் கட்டிய அலுவலகத்திற்கு ‘ கோனார் மாளிகை’ என்று பெயர் சூட்டியது. அலுவலகத்திற்குள்ளும் கோனாரின் பெரிய புகைப்படம் வைக்கபட்டிருக்கும். அதை வணங்கிய பிறகே உரிமையாளரான பழநியப்பன் அவர்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபடுவார்.
தமிழர்களால் தவிர்க்க முடியாதது கோனார் தமிழ் உரை. கோனார் தமிழ் உரையின் ஆசிரியர் திரு. ஐயம்பெருமாள் கோனாரை இக்கால தமிழர்கள் எவரும் அறியவில்லை.
திரு.ஐயம்பெருமாள் கோனார் அவர்கள் தோன்றும் போதே திருவுடையவராகத் தோன்றியவர்.அவர் பெயருக்குமுன் இருக்கும் திரு என்பது அவரது தந்தையின் பெயராகிய திருச்சிராப்பள்ளி திருவேங்கடக்கோனாரைக் குறிக்கும்.
திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் இளமையிலேயே அன்னையே இழந்து தம்பெரிய அன்னையின் ஆதரவில் திருச்சிராப்பள்ளி சின்னக் கடைத் தெருவில் உள்ள தம் இல்லத்தில் வளர்ந்து வரலானார்.
திருச்சிராப்பள்ளி ஆரியன் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்து படித்தார். அவர்க்குத் தமிழ்ப்பற்று நாளும் வளர்ந்து வரலாயிற்று. பிறகு தேசிய உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார்.
கோனார் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றார். பின்னர் மதுரைச் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வரும் தமிழ்த் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராகத் தனித் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி 1933-இல் வெற்றி பெற்றார். அவர் 15 ஆண்டுகள் தமிழ் உரையையும் ,வினா விடையையும் தம் சொந்த முயற்சிலேயும்,சில வெளியீட்டாளர் மூலமாகவும் வெளியிட்டு நல்ல போதக ஆசிரியராகவும் விளங்கிய அவர் சிறந்த உரையாசிரியராகவும் மதிக்கப்பட்டார்.
1942-ஆம் ஆண்டு புனித சூசையப்பர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியராகத் திகழ்ந்த நடேச முதலியார் அவர்களுக்குப் பின் கோனாருக்கு இப்பதவி அளிக்கப்பட்டது.
1966-ஆம் ஆண்டு வரை தமது அறுபதாவது ஆண்டு முடிய தமது தமிழ்ப் பேராசிரியர் பணியைச் சிறப்பாக செய்து மாணவர்களும், ஆசிரியர்களும் போற்றிப் புகழ்ந்து பாராட்டும் வகையில் ஒய்வு பெறலானார்.
கல்லூரிப் பேராசிரியரான பின், கல்லூரிப் தமிழ்ப்பாட நூல்களுக்கும் உரை எழுதலானார். இவ்வாறு கல்லூரியில் பாடம் கற்பிப்பதிலும், உரை எழுதுவதிலும் அவர் வல்லவர் என்னும் நற்பெயர் எங்கும் பரவப் பெற்றார்.
கோனாரின் சிறப்பினை உணர்ந்த உயர்திரு. செ.மெ.பழனியப்பச் செட்டியார் அவர்கள் அவரது உரை நூல்களைப் பள்ளி இறுதி வகுப்பு ஆகியவற்றின் தமிழ்ப்பாட நூல்களுக்கான உரைநூல்களைத் தமது வெளியீடாக வெளியிட விரும்பி ஏற்றுக்கொண்டார். இன்றும் பழனியப்பா பதிப்பகம் தனது அலுவகத்தின் கட்டிடத்திற்கு கோனார் மாளிகை என பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பி.ஏ.பி,எஸ்.சி, வகுப்புத் தமிழ் உரைநூல் அவர்தம் மைத்துனர் வாசன் பதிப்பகம், கோனார் பப்ளிகேசன்ஸ் மூலமாக வெளியிட்டு வந்தார். அவர்க்குப் பின் சென்னை, மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பாடநூல்களின் உரைகளும் மதுரை கோனார் பப்ளிகேசன்ஸ் உரிமையாளர் திரு.சடகோபன் அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.
திரு.கோனார் அவர்களின் தமிழ்ப்பற்றையும் தொண்டினையும் ‘ஆனந்த விகடன்’, ‘ஆசிரியரத்தினங்கள்’ என்ற தலைப்பில் பாராட்டுரை வழங்கிப் படம் வரைந்து சிறப்பித்தது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்! மாணவர்களுக்குக் கல்வியறிவோடு ஒழுக்கத்தையும் போதித்து அவர்களை நல்லதொரு குடிமகனாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள்தான் வருங்கால சமுதாயத்தின் ஆணி வேர். அப்படித் தன்னலமற்ற சேவை மனப்பான்மையோடு கல்விப் பணி ஆற்றிய ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களை
‘ஆசிரிய ரத்தினங்கள்’ என்னும் தலைப்பில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது விகடன். அவர்களைக் கோட்டுச் சித்திரமாக வரைந்து நம் முன்னே கொண்டு நிறுத்தியவர் இறையருள் ஓவியர் சில்பி. இங்கே படத்தில் இருக்கும் ஆசிரிய ரத்தினம் திரு. ஐயன் பெருமாள் கோனார். திருச்சி ஜோஸப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் கொண்டு வந்ததுதான் பிரபல ‘கோனார் நோட்ஸ்’.
கோனாரின் இறையன்பையும் அதனை வளர்க்கும் நெறியில் இடையராது ஆற்றிய சொற்பொழிவுத் தொண்டினையும் போற்றும் வகையில் உறையூர் “வாசுகி பக்த சன சபையார்” அவர்க்குப் பொன்னாடை போர்த்தி, “செம்பொருட்காட்சியர்” என்னும் பட்டத்தை வழங்கினார்.
மேலும் அவரது சமயத் தொண்டினைப் பாராட்ட விரும்பிய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவருக்குப் தங்கப்பதக்கம் வழங்கி “திருப்பாவை ஆராய்ச்சி மணி” என்ற பட்டத்தையும் சுட்டிச் சிறப்பித்தனர்.
மார்கழி முப்பது நாட்களிலும் திருச்சி வானொலி நிலையத்தினர் ஒலிபரப்பிய அவரது திருப்பாவை விளக்கவுரையைக் கேட்டுக் தமிழகமே பெரிதும் மகிழ்ந்தது.
தமிழ்ப்பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தம் சிறந்த தமிழ்ப் பணியினால் மாணவருலகம், ஆசிரியர் உலகம் , சமய உலகம், தமிழுலகம் பயனுறுமாறு சிறந்த போதகஆசிரியராகவும், உரையாசிரியாகவும், நூலாசிரியராகவும், சொற்பொலிவாளராகவும் சிறப்புற்று விளங்கினார்.
திரு.கோனார் அவர்கள் இயற்றிய நூல்கள்:- கோனார் தமிழ்கையகராதி, திருக்குறளுக்குக்கோனார்,பொன்னுரை மற்றும் சங்ககாலப்பாண்டியர், வாசன் பைந்தமிழ்ச் சோலை முதலியன.
கோனார் அவர்கள் இறந்த பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மூவருக்கு கோனர் விருது என்ற பெயரில் பணப் பரிசு வழங்கி வருகிறார்கள் பழநியப்பா பதிபகத்தார்.கோனார் தமிழ் உரை என்பது எத்தனை முக்கியமான நினைவு என்பது நம் தலைமுறையினருக்குத் தெரியும்.
இன்று அவரின் பிறந்தநாள்...அவரால் தான் தமிழ் வளர்ந்தது...
No comments:
Post a Comment