Monday, June 2, 2025

நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் அத்தியாயம் - 11

 

நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்

அத்தியாயம் - 11

 

காகவி பாரதி பிறந்த எட்டையபுரம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக, தொழில், வர்த்தகம், பொருளாதார வாய்ப்பு, வசதிகள் மிகுந்த நகரமாக உருவாகியிருக்க வேண்டும். ஆனால், எந்தவித முன்னேற்றமும் இல்லாத பேரூராட்சியாக எட்டையபுரம் உள்ளது.

தற்போது எட்டையபுரம், தாலுகா தலைநகர் ஆகிவிட்டது.  எட்டையபுரம் தலைநகர் ஆக வேண்டும் என்று 1990-ல் எட்டையபுரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் பா.முத்து முயற்சியில் நான் தலைமையேற்று போராடினேன். தமிழக அரசின் நெசவு ஆலை ஒன்று அங்கு உள்ளது. மற்றபடி பெரிய தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லையே என்ற வருத்தம் என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது.

1989 சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நான் போட்டியிட்டேன். அப்போது,  ‘‘பாரதி பெயரில் நாட்டுப்புறவியல், தமிழ் இலக்கியம், கிராமிய சிந்தனைகள், கிராமிய வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றும்,   எட்டையபுரத்தோடு தொடர்பு கொண்டவர்களான நாவலர் சோமசுந்தர பாரதி, உமறுப் புலவர், முத்துசாமி தீட்சிதர்  ஆகியோரைக் குறித்து ஆய்வுப் பலகை வைப்பேன்’’ என்றும் தேர்தல் பரப்புரையில் உறுதி கொடுத்தேன்.

இருந்தபோதும், அந்தத் தேர்தலில் நான் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இதனால் மேற்குறிப்பிட்ட காரியங்களை நிறைவேற்ற என்னால்  இயலவில்லை. மற்றவர்களும் அதைப்பற்றி சிந்திக்கவில்லை.

இந்த இடத்தில் ஒன்றை பதிவு செய்யவேண்டும்.

1970களின் தொடக்கத்தில் எட்டையபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பிறந்த வீட்டை நாட்டுடமையாக்கினார் அன்றைய முதல்வர் கலைஞர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள்  மன்னை நாராயணசாமியும், சி.பா.ஆதித்தனாரும், ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் கலெக்டர்  சண்முகசிகாமணியும் கலந்து கொண்டார்கள். அதுகுறித்தான கல்வெட்டு அங்கு பதிக்கப்பட்டது.

இந்நிலையில்,   1980களில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அந்த கல்வெட்டை பெயர்த்து எங்கேயோ போட்டுவிட்டார்கள். பிறகு 1989களில் திமுக ஆட்சிக் காலத்தில்  அந்த நினைவு கல்வெட்டை தேடிக் கண்டுபிடித்து மீண்டும்  வைக்க முயற்சி செய்தேன். அந்தச் சூழலில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.  மேலும் மதிமுக உதயம் என்ற நிலையில் என்னுடைய இந்த முயற்சி கைகூடவில்லை.

அதைத்தொடர்ந்து,  2009 முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்துக்குப் பின்னர், ‘தமிழகத்தில் டெசோ மாநாட்டை நடத்த வேண்டும், ஈழத் தமிழர்களைப் பற்றி பேசவேண்டும். அதனால் திமுகவுக்கு நீ வாஎன்று கலைஞர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,  2009 ஆகஸ்ட் மாதத்தில் திமுகவில்  இணைந்தேன்.

அதன் பின்னர், கலைஞர் பெயர் பொறிக்கப்பட்ட அந்தக் கல்வெட்டை தேடிக் கண்டுபிடித்து, பாரதி இல்லத்தில் வைத்தேன். அதுவரை அங்குள்ள திமுக ஜாம்பவான்கள் ஒருவர் கூட இதற்கான முயற்சியில் இறங்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. இதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமும் இல்லை போலும்!

பாரதி இல்லத்தில் அந்தக் கல்வெட்டை 2009-ம் ஆண்டு பாரதி பிறந்தநாளன்று மீண்டும் நிறுவுவதற்கு அமைச்சர்களை எல்லாம் அழைத்தேன். அந்த சமயத்தில் திருச்செந்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்  அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதனால் யாரும் வரவில்லை. நானும், முன்னாள் அமைச்சர் சங்கரன்கோவில் தங்கவேலுவும்  அன்று அந்தக் கல்வெட்டை வைத்தோம்.

பாரதி இல்லத்தில் அப்போது நான் இருந்தபோது, கடுமையான காற்று வீசியது. ‘‘என்ன இங்க இப்படி காத்து அடிக்குது?’’ என்று கேட்டேன்.

அதற்கு நாவலக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி சொன்னார், ‘‘எட்டையபுரத்தில்  ஒவ்வொரு திசையில் இருந்தும் வித்தியாசமான காற்று வீசும். தென்கிழக்கில் இருந்து உப்புக் காற்று, சூறாவளி வரும். குற்றாலத்தில் இருந்து வரும் தென்னல் காற்று, அதை தென்றல் என்று கூறுவார்கள். வடமேற்கில் இருந்து வீசும் பெரியமலை காற்று, புயல் காற்றுக்கு புசல் காற்று என்பார்கள். மேற்கே இருந்துவரும் காற்றுக்கு மேகாத்து, வாடை காற்றுக்கு சுழிகாற்று’’ என்பார்கள் என்று விவரித்தார்.

எங்கள் கரிசல் காட்டு மக்களிடையே சில நம்பிக்கைகள் காலம் காலமாக இருந்து வந்தன. சகுனம் பார்ப்பது, நேரம் பார்ப்பது, இன்னென்ன வேலைக்கு இன்னென்ன நிலைப்பாடு... என ஒவ்வொன்றும்  நமக்கு ஆச்சரியமூட்டுவதாக இருக்கும்.

அத்தகைய நம்பிக்கைகளில் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

*              தலைஈத்துப் பசுங்கிடாரியின் சாணியில்  ஒளிவு (மின்னல்) தாக்கினால் அது தங்கமாக மாறிவிடும்.

*              சாரைப்பாம்புடன் பிணசலாடிக் கொண்டிருக்கும் நல்ல பாம்புகளின் மீது கோடித் துணியைப் போட்டு அதன் விந்தின் கறைபட்ட அந்தத் துணியை எடுத்து மடியில் கட்டிக் கொண்டு போனால் எடுத்த வழக்கெல்லாம் ஜெயமாகும். பணப் பெட்டியில் வைத்தால் பணம் கொழிக்கும்.

*              அந்தி வேளையில் நம் வீட்டுக்கு வருகிற சம்மந்தக்காரர்கள் விளக்கு ஏற்றிய பிறகுதான் போக வேண்டும். இல்லையென்றால் நம்ம வீட்டுலட்சுமிஅவர்களோடு போய்விடுவாள்.

*              திங்கள்கிழமை பிரயாணம் கூடாது. (திங்கள் பயணம் திரும்பாப் பயணம்).

*              புதன்கிழமை ஈன்ற மாட்டை சம்மந்தக்காரர்களுக்குத் தானமாகக் கொடுத்துவிட வேண்டும்.

*              வெள்ளி, செவ்வாயில்காத்து கருப்புலாந்தும்.

*              துக்க வீட்டுக்கு வருபவர்களை வா என்று கேட்கக் கூடாது. வந்தவர்களும் போகும்போது சொல்லிக் கொள்ளாமல் போக வேண்டும்.

*              இளங்கொடியை (மாடு கன்று ஈன்றவுடன் போடும் நஞ்சுக்கொடி) நாய் தின்றுவிட்டால் மாட்டில் பால் இராது. இளங்கொடியை ஆலமரம் முதலிய பால் மரங்களில் கட்டி வைத்தால் மாட்டில் பால் நிறைய சுரக்கும்.

*              தலைச்சன்கள் இறந்துபோனால் சுடுகாட்டில் நம்முடைய நம்பிக்கையான ஆட்கள் கூட இருந்து  உடலை எரிக்க வேண்டும். இல்லையென்றால் மந்திரவாதிகள் வந்துதொழில்செய்ய மண்டையோட்டை கொண்டு போய் விடுவார்கள்.

*              இரும்பு கையில் இருந்தால் பேய் பிசாசு கிட்டே வராது.

*              முயல், நட்டிய வேலியைத் தாண்டாது; வெட்டிய குளத்தில் தண்ணீர் குடிக்காது.

*              ஐந்தாவது பெண் குழந்தை பிறந்தால் விசேஷம் (அஞ்சாவது பொண்ணு அடுக்கெல்லாம் பொண்ணு), எட்டாவது ஆண்; வெட்டும் சேவகன் (புலி); நாலாவது பெண், நடையைப் (வீட்டுவாசல் நடையைப்) பெருக்கும்.

*              பெண்கள் மசக்கையாக இருக்கும்போது அவர்கள் விரும்பும் தின்பண்டங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பிறக்கும் குழந்தையின் காதில் இருந்து சீழ் வடிந்து கொண்டே இருக்கும்.

*              உபயோகிக்கும் சமயத்தில் பச்சிலைகளைகளின் பெயர்களைச் சொல்லக் கூடாது. சொன்னால் நோய் குணமாகாது.

*              ஒருவரையுமே கடிக்காத, ஆயிரம் வருஷம் ஆயுளை உடைய நல்ல பாம்பில் நாகரத்தினம் இருக்கும். அந்த பாம்பு நீளமாக இருக்காது. ஒரு முழம் அல்லது ஒரு சாண் என்று குறுகி விடும். வயசாகி விட்டதால் அதற்கு கண் சரியாகத் தெரியாது. நடுச் சாமத்திலே  நாகரத்தினத்தை கக்கும். அந்த வெளிச்சத்திலேயேதான் அது இரையைத் தேடும். நாம் ஒரு கூடை நிறைய மாட்டுச் சாணி கொண்டு போய் அதன் மேல் போட்டு விட்டால் சாணிக்குள் நாகரத்தினம் பொதிந்து விடும். வெளிச்சம் இல்லாமல் பாம்பு கோபமாக தரையைக் கொத்தி கொத்தி உயிரை விட்டுவிடும். பிறகு நாம் அதை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து விடலாம். தேன் இறுகி கல்கண்டு ஆகிறதல்லவா அதுபோல அதனுடைய விஷம்தான் நாகரத்தினமாக ஆகிவிடுகிறதாம்!

என்றெல்லாம் அந்தக் காலத்து மக்கள் மத்தியில் நம்பிக்கைகள் இருந்து வந்தன.

கிராமப்புறத்தில் நாட்டார் வழக்காற்றியலில்  விடுகதைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பெரும்பாலும் அவை வினா வடிவிலும், அர்த்தங்கள் பொதிந்ததாகவும்  இருக்கும். பள்ளிக்கூடத்தையே எட்டிப் பார்க்காத அன்றைய பாமர மக்கள், அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடன்  உரையாடும்போது விடுகதைகளும் சரளமாக வந்து விழும்.

அதேபோல் முன்னோர் வகுத்த சில நம்பிக்கைகள், சடங்குகள், குலதெய்வ வழிபாடுகளைக் காலம் காலமாக கிராம மக்கள் பின்பற்றி வந்தனர்.

குறிப்பாக, ஆவி, பேய், பிசாசு, கனவுகள், சகுனம், தொழில் குறித்தான நம்பிக்கைகள் கிராமியப் பண்பாடு, கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து விளங்கின.

அதேபோல், சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

பெண்கள் வயதுக்கு வந்து விட்டால், தலைக்கு தண்ணீர் ஊற்றுதல், அதைத்தொடர்ந்து நடைபெறும் பூப்புனித நன்னீராட்டு விழா போன்றவற்றில் தாய்மாமன் சீர் முக்கியமானதாகக் கருதப்படும். குடும்பங்களுக்குள் தீராப் பகை, சண்டை சச்சரவுகள் இருந்தாலும் தாய்மாமன் சீர்  வழங்குவதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  அதேபோல்  பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு தாய்மாமன் அழைக்கப்படாவிட்டால், அதனால் குடும்பங்களுக்குள்  பகை ஏற்படுவதும் உண்டு.

திருமணமான பெண்கள் கருவுற்றதும் வளைகாப்பு - சீமந்தம், பேறு காலத்துக்கு தாய் வீட்டுக்கு அழைத்துச்  செல்லுதல், குழந்தை பிறந்த உடன் செய்யும் சடங்குகள், குழந்தைக்கு சேனை கொடுத்தல், இலை கட்டுதல், மொட்டை போட்டு காது குத்தி பெயரிடுதல் என சடங்கு சம்பிரதாயங்கள் அணிவகுக்கும்.

அதேபோல், தாய், தந்தையோ, அல்லது உறவினரோ இறந்து விட்டால், அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திவசம், திதி கொடுப்பதில் கண்ணும்கருத்துமாக இருந்தார்கள்.

இவற்றையெல்லாம் அன்றைய கிராம மக்கள், தங்கள் கடமையாக எண்ணி தவறாமல் கடைபிடித்து வந்தார்கள்.

 

1810-ம் ஆண்டில்,  ஓன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராக ஹெப்ரான் இருந்தார். அந்த சமயத்தில் மாவட்டம் முழுவதும் கடும் மழை பெய்து, தெருக்களில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்தன. சாலைகள் துண்டிக்கப்பட்டன. பலர் மாண்டனர். மாடுகள், ஆடுகள் என ஏராளமான கால்நடைகள் உயிரிழந்தன. திருநெல்வேலி கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஸ்ரீவைகுண்டம் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மிதந்தது. ஆழ்வார்திருநகரில் கிட்டத்தட்ட 500 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. மேற்கு தொடர்ச்சி, பாபநாசம் மலையில் இருந்து மலைப்பாம்புகள் தண்ணீரில் உருண்டு வந்து, கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளேயே சென்றுவிட்டன.

பெரும் வெள்ளத்தைத் தொடர்ந்து தொற்று நோய்கள் பரவின. ஆயிரக்கணக்கான மக்கள் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. சிகிச்சையளிக்க போதிய மருத்துவர்கள்  இல்லாத பற்றாக்குறை. உணவு, மருத்துவம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். எங்கு பார்த்தாலும் மக்களின் அவலக் குரல். பலர் இந்த நோயைக் கண்டு அஞ்சி பல்வேறு பகுதிகளுக்கும் தப்பி ஓடினர். இந்த இயற்கைச் சீற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் திணறியது.  இதை அக்காலத்தில்பெரும் சோதனைஎன்றார்கள்.

இதேபோல் 1923-ம் ஆண்டு டிசம்பர்  16 அன்றும் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ‘தாமிரபரணி ஆறுடைத்து ஊருகந்த அற்புத வெள்ளச் சிந்து’ எனும் குஜிலிப் பாடலும் நமக்குக் கிடைத்தது. இதை எழுதியவர்  தூத்துக்குடி வே.சி.சாமிநாதன் என்பவர். அந்தப் பாட்டு புத்தக வடிவிலும் வந்தது. அதன் விலை ஒரு அணா.

அந்தப் பாடல் வருமாறு:

தபாலாபீஸும் தண்ணீர்... தந்தியாபீஸும் தண்ணீர்...

தானோடும் ரெயில் முங்கத் தண்ணீர் தக்கதோர் கன

வான்கள் மிக்க கட்டிடமும் தண்ணீர், தானே கடைத்

தெருவுள் தண்ணீர் தண்ணீர்.

அபாயமிது போலவே அறியேம் மன்னவரே

அக்கரை கொக்கரைகுளம் தண்ணீர் தண்ணீர்

பாலத்தில் வண்டியில்லை பாதை நடப்புமில்லை

பக்கத்தில் ஓடவென்றால் தொல்லை கால வித்தியாசத்

தால் கலங்கிட நகர் முழுவதும் கண்ட சேதம் புகல

எல்லையில்லை.

செந்தூருக்குச் செல்லும் ரெயில் சேதம்

செல்லாம் நின்றதுவைப் பாரும்.

என பாடல் முழுக்க முழுக்க புலம்பலாகவே இருக்கும்.

இதேபோல், 1933-லும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அதற்குப் பிறகு 1950-ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.  அதைபிண்ணாக்கு பஞ்சம்என்று அழைத்தனர்.  அப்போது உணவு தானியங்கள் கிடைக்காமல், எள் பிண்ணாக்கு சாப்பிட்டு மக்கள் ஜீவித்தனர். வசதியானவர்கள் மொச்சைக் கொட்டை மற்றும் வறுத்து மேல்தோடு உடைக்கப்பட்ட  புளியங்கொட்டையை  ஊறவைத்து அவித்தும் சாப்பிட்டார்கள். அந்த அளவுக்கு பஞ்சம் தலைவிரித்து ஆடியது.

இதேபோல்   1709 முதல் 1735 வரையிலான காலகட்டத்தில் 7 முறை பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக குறிப்புகள் கிடைத்துள்ளன.

தாமிரபரணியில் 1810, 1827, 1847, 1867, 1869, 1874, 1877, 1895, 1914, 1971, 1979, 1984, 1990, 1991, 1992, 1993-ம் ஆண்டுகளிலும் சமீபத்தில் 2022, 2023, 2024 என தொடர்ந்து 3 ஆண்டுகளிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தங்களுடைய கோரிக்கைளுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய விவசாயிகள் 1969 முதல் 1992 வரை ஏறத்தாழ 48  பேருக்கும் மேல் துப்பாக்கி சூட்டுக்குப் பலியானார்கள். இதுகுறித்து விவரமான குறிப்புகளை பின்னால் பதிவு செய்கின்றேன்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே கடம்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், திருநெல்வேலி கலெக்டரிடம் சில கோரிக்கைகளை வைத்து நியாயம் கேட்டதற்காக சுட்டுக்  கொல்லப்பட்டார். அதுதான் தமிழ்நாட்டில் விவசாயி மீது நடந்த முதல் துப்பாக்கி சூடு ஆகும்.

(தொடர்வோம்...)

 

No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...