Wednesday, June 4, 2025

#திமுகவுக்கு 1971 இல் உதவிய அன்றைய

 #திமுகவுக்கு 1971 இல் உதவிய அன்றைய #ஜன சங்கம் இருந்த இன்றைய #பாரதியஜனதா #கலைஞர் #மதுரைமுத்து

——————————————————————
மறைந்த முன்னாள் மேயர் மதுரை முத்து அவர்களின் சிலையைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் செல்ல இருக்கிறார் என்கிற செய்தியைப் பார்த்தேன்.
கலைஞர் காலத்தில் சென்னை மாநகராட்சி போலவே தமிழகத்தின் இரண்டாவது மாநகராட்சியாக 1971 மே மாதம் மதுரையை ஆக்கினார். மதுரையில் மிகப்பெரிய அந்த மாநகராட்சி கட்டிடம் ஏறக்குறைய மேயர் முத்துவின் அலுவலக அறைக்கு அருகே வரை தனது காரைக் கொண்டு செல்லும்படியான விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது.1970 களில் இந்தக் கட்டிடம் சிறப்பாகப் பேசப்பட்டது அதேபோல் திருநெல்வேலி மேம்பாலத்தையும் மிகச் சிறப்பாக கலைஞர் கட்டினார்.
அன்றைக்கு ஜன சங்கமாக இருந்த இன்றைய பாரதிய ஜனதாவின் வேட்பாளர் மதுரை மக்களால் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சௌராஷ்ட்ரா வகுப்பை சேர்ந்த ஆர்.வி. சேஷாத்திரி என்பவர் தனது ஒற்றை வாக்கை மதுரை முத்துவிற்கு அளிக்காவிட்டால் அன்றைக்கு முத்து மேயராகவே ஆகியிருக்க முடியாது.
அந்த ஒற்றை வாக்கை வாங்குவதற்குக் கலைஞர் வாஜ்பாயிடம் பேசினார். ஜனா கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினார். அப்போது நாங்களெல்லாம் ஸ்தாபனக் காங்கிரஸில் இருந்த நேரம். நெடுமாறன் மதுரை மாவட்டத்தின் தலைவர். ஸ்தாபன காங்கிரசின் பொதுச் செயலாளரும் கூட. எப்படியாவது மாநகராட்சித் தேர்தலில் மதுரை முத்துவைத் தோற்கடித்தாக வேண்டும் என்று நெடுமாறன் நினைத்தார். மதுரை முத்துவிற்கும் நெடுமாறனுக்கும் தொடர்ந்து அரசியல் ரீதியான போட்டிகளும் முரண்பாடுகளும் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. .
நெடுமாறன் ஏற்கனவே திமுகவிலிருந்தவர்தான். அண்ணாவுடனான முரண்பாடுகளால் சம்பத் வெளியே வந்த போது அவருடன் வெளியேறி வந்தவர். மதுரையின் லோக்கல் அரசியலில் நெடுமாறனும் மதுரை முத்துவும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இப்படியான சூழ்நிலையில் எப்படியாவது மதுரை முத்துவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று முயன்ற கலைஞர் ஜனா கிருஷ்ணமூர்த்தியை அழைத்து உங்க ஜனசங்க சேஷாத்திரி என்பவரை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். ஏனெனில் அந்த சேஷாத்திரி என்பவர் அளித்த ஒரு வாக்கைத்தான் கூடுதலாகப் பெற்று மதுரை முத்து ஜெயித்தார். இன்றைய திமுகவில் இதெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்? அன்றைக்கு ஜன சங்கமாக இருந்து இன்றைக்கு பாரதிய ஜனதாவாக மாறி உள்ள அரசியல் அமைப்பைத் தொடர்ந்து எதிர்த்து பேசுபவர்கள் அன்றைக்கு மதுரை முத்து மேயர் ஆவதற்கு இவர்கள்தான் அடித்தளமாக இருந்தார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். இன்றைக்கு மதுரை முத்துவின் சிலையை திறக்கச் செல்லும் முதல்வர் இதையெல்லாம் மேடையில் குறிப்பிட்டுப் பேசுவாரா? பார்க்கலாம்! அவருக்கு இது எங்கே
தெரியப் போகிறது!

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...