நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்
அத்தியாயம் - 22
கரிசல் மண் படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி
‘கரிசல் இலக்கியத்தின் தந்தை’ என்று போற்றப்படும் கி.ரா.வைப் போல, அம்மண்ணில் பிறந்த
மற்றொரு ஆளுமை மேலாண்மை பொன்னுச்சாமி. விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு
என்ற கிராமத்தில் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க
முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக
இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன்
ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார்.
மேலாண்மை பொன்னுசாமி 36 புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும்.
ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதினார். இவர் எழுதிய
‘மின்சாரப்பூ’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல்
2007 ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.
இத்தகைய சிறப்புவாய்ந்த மேலாண்மை பொன்னுச்சாமியைப் பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழக
தமிழியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மூ.பாலசுப்பிரமணியன், தனது ‘கரிசல் நிலமும் மேலாண்மறைநாடு கிராமமும்’
என்ற ஆய்வு கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
கரிசல் எழுத்தாளர்களில் மேலாண்மை பொன்னுச்சாமியும்
குறிப்பிடத்தக்கவர். அவர் தனது கதை இலக்கியங்களில் கரிசல் வட்டார
இயல்புகளை நயம்பட வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவர் பிறந்து
வளர்ந்த மேலாண்மறைநாடு கிராமத்தை வெளியாகக் கொண்டு படைப்புகளைத் தந்துள்ளார்.
‘‘ மேலாண்மறைநாடு கரிசல் பூமி. மானாவாரி நிலங்களையும்,
வறண்ட கிணறுகளையும் நம்பி விவசாயம் செய்யும் கிராமம். அக்கிராம மக்களின் வாழ்வு வறுமையோடு போராடுவதும் விவசாயம் இல்லாத காலத்தில்
பிழைப்புக்காக, அருகிலிருக்கும் தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளுக்குச் செல்வதும்தான். வறுமை மட்டுமல்ல,
சாதியம், பெண்ணடிமைத்தனம் போன்ற சிக்கல்களும் அவர்களுக்கு
உண்டு. புதிய பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்ட மாற்றங்கள் அக்கிராம
வாழ்வை, நரக வாழ்வாக மாற்றியது எனப் புதுச் சிக்கல்களும் உண்டு.
இவற்றை கருக்களாகக் கொண்டே மேலாண்மை பொன்னுச்சாமி கதைகளைப் படைத்துள்ளார்.
கரிசல் மண் தன்மையைப் பற்றி அவர் மேலும் கூறும்போது,
‘‘வீட்டுக்குத் தெற்கில் புஞ்சை, தோலுரிந்த எலும்பாகக்
கிடந்தது. ஓடை மணலைப் பறிகொடுத்துவிட்டுப் பாறையாய்ப் பல்லிளித்த
ஓடையைக் கடந்து, ஊருணிக் கரையேறி வண்டிப் பாதையில் நடந்து...
எங்கேயும் ஒரு பச்சை கிடையாது. காய்ந்த கனல் பறந்து கிடந்தது காடு. தீப்பிடித்த மாதிரி
இருந்தது. புல்கூட காய்ந்துபோய் தேன்நிறச் சருகுகளாய்...
மழைத் தண்ணீர் இல்லாமல் மானாவாரிக் காடு முழுக்க சும்மா கிடந்தது. ஒரு வெள்ளாமை கூட இல்லை. இறவைக் கிணறுகளிலும்
தண்ணீர் வரட்டிழுப்புதான். மிளகாச் செடிகள், தாயற்ற பிள்ளைகளாய்க் காய்ந்து வாடிச் சுருங்கிக் கிடந்தன.
காலை வெயிலே வண்ட அனலாய் வீசியது. துணுக்கு மேகங்கள் கூட இல்லை. கழுவிப் போட்ட பாத்திரமாய்
ஆகாயம்...’’ என விவரிப்பதன் மூலம் அதன் இயல்புகளைப் புரிந்து
கொள்ள முடிகின்றது.
மேலாண்மை பொன்னுச்சாமி தனது படைப்புகளுக்கான வெளியாக மேலாண்மறைநாடு என்னும் கிராமத்தைக்
கொண்டிருந்தார். அக்கிராமம் விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி வட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில்
இருக்கின்றது. கரிசல் கிராமங்களுக்குரிய அத்தனை அடையாளங்களையும்
கொண்டிருக்கும் இக்கிராமம் குறித்து தனது படைப்புகளில் விவரித்துள்ளார். மேலாண்மறைநாட்டை மையமாகக் கொண்டு மற்றைய கரிசல் பகுதிகளையும் பேசியுள்ளார்.
அவரின் 99 சதவீத கதைகள் இக்கிராமத்தையே வெளியாகக்
கொண்டிருக்கின்றன என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
‘‘தண்ணீர் பிறப்பே காணாது, காய்ந்து கனல் பறந்து கிடக்கிற
ஆறு... அசோக வனமாக வேலிமரக்காடு... வெட்டுப்பட்டுக்
காய்ந்து கிடந்த முளகுமி... மஞ்சணத்தி மரம்... ஆற்றுக் கரையின் மண் சரிவு... தலைவிரி கோலமாகப் பேயாகக்
கிடக்கிற வேலிமர விளார்கள்... நெருக்கமாக நாலு தூர்கள்...
ஒடிந்து நொறுங்கிக் கிடக்கிற முள்குமி... விரல்
நுழைக்க முடியாத அடர்த்தி, ஏகப்பட்ட தொழைதழைகள்...’’ என்னும் பகுதியால் கரிசல் நிலத்தின் வறட்சியை அடையாளமாகவும் எல்லையாகவும் கொண்டிருக்கும்
அக்கிராமம்.
மேலாண்மறைநாடு கிராமத்தைச் சுற்றியுள்ள கரிசல் பூமியில் வறட்சியான விவசாயம் செய்யப்படுவதையும், நிலத்தின் இயல்பையும், தண்ணீரின் தரத்தையும்,
மேலாண்மை பொன்னுச்சாமி தனது மற்றொரு கதையில் கூறும்போது,
‘‘காடு கரைகளிலிருந்த பச்சைப் பசப்புகளைக் கோடை வெயிலும் காற்றும் தின்று தீர்த்து
விட்டன. கரிசல் காடுகளில் பயிர் பச்சையெல்லாம் ஓய்ந்து பழங்கதையாகி...
உழுது போட்டு விட்டனர் சம்சாரிகள். இறவைத் தோட்டங்களிலும்
பருத்தி ஓய்ந்துவிட்டது. உழுது ஆறப் போட்டு விட்டனர்.
மிச்சமிருக்கிற ஒன்றிரண்டு தோட்டங்களிலும் கதை கந்தலாகிக் கிடக்கிறது.
கோடை மழையில்லாமல் அகத்திகள் கூட நெஞ்சுவற்றிப் போய் இணுக்கு இணுக்காக
இலைகளை ஆட்டிக் கொண்டு குச்சியாக நிற்கின்றன.’’
‘‘கோவணத் துணி போல கொஞ்சமாய் நிலம். அதுவும் உப்புத் தண்ணீர்...
வாயில் வைக்க முடியாது. வேப்பெண்ணையாய்க் குமட்டும்.
உப்புத் தண்ணீர் பாய்ந்து பாய்ந்து உவர் பொங்குகிற புஞ்சையில் மழையில்லா
விட்டால் தீப்பிடித்த மாதிரிதான். பருத்திச் செடிகளெல்லாம் பட்டுப்
போய்விட்டன. அகத்தியும் செத்துப் போயிற்று. வேறு என்ன செய்ய? எல்லாவற்றையும் பிடுங்கி துப்புரவாக்கி,
நிலத்தை உழுது போட்டாகி விட்டது...’’ என்கிறார்.
அதேபோல் மேலாண்மறைநாடு கிராமக் கரிசல் மண்ணின் தன்மையைப் பற்றிக் கூறும்போது,
‘‘ஊருக்குத் தெற்கே உப்பு மூலையில் நாலு குறுக்கம் கரிசல் காடு நாற்சதுரமான காடு,
நல்ல மண் கண்டம், உழுதுபோட்டால், ஈரல்கறி மாதிரி மினுமினுக்கும். சொல்லி வைத்த மாதிரி
விளையும், காணப்பயறு, தட்டைப்பயறு,
எள், நாற்றுச் சோளம் எது போட்டாலும், ஒன்றுக்கு நூறாக விளைச்சல் காட்டும்’’ என்று ‘பூமிக்கும் பொறுக்காது’ என்னும் கதை வழியே பேசியுள்ளார்.
இவ்வாறு தனது ஆய்வு நூலில் விவரிக்கிறார் முனைவர் மூ.பாலசுப்பிரமணியன்.
கரிசல் மண்ணில் கம்மவார் இனம்
கரிசல் மண்ணையும் கம்மவார் இனத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது. இவ்வினத்தின்
வாழ்வோடும், வாழ்வாதாரத்தோடும்,
வாழ்வியலோடும் இணைந்த நிலம் கரிசல் நிலம். குறிப்பாக,
நீர்ப்பாசனம் இல்லாத வானம் பார்த்த வறண்ட கரிசல் நிலத்துக்கும்,
கம்ம இனத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கோயம்புத்தூர்,
உடுமலைப்பேட்டை, பழனியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்
இவர்கள் குடியுள்ள கிராமங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனால்,
ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி (இன்றைய விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம்) மாவட்டங்களில்
நிறைந்து காணப்படுகின்றனர். இந்த மாவட்டங்களில், எங்கே கரிசல் நிலம் ஆரம்பமாகின்றதோ அங்கிருந்து தொடங்கி எங்கே கரிசல் நிலம்
முடிகின்றதோ அங்குவரை இம்மக்கள் வாழும் கிராமங்களை அதிகமாகக் காணலாம். குறிப்பாக, இவர்கள் தமிழ்நாட்டில் குடியேறிய ஆரம்பகால
கட்டங்களில் கரிசல் மண் இல்லாத பகுதிகளில் இம்மக்கள் வாழும் கிராமங்களைக் காண்பதரிது.
விடுதலைக்கு முன்னர் 1921-ம் ஆண்டு அன்றைய
பிரிட்டிஷ் அரசு எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இதை உறுதிப்படுத்துகிறது.
அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் கம்மவார் மக்கள் தொகை
11.61 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தக்
கம்மவார் மக்கள் தொகையில் 76.4 சதவீதம் ஆந்திர மாவட்டங்களிலும்,
மீதமுள்ள 23.6 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ள
11 மாவட்டங்களிலும் வாழ்ந்துள்ளனர். ஆந்திரப் பகுதியில்
வாழ்ந்த 8.88 லட்சம்
பேரில் பெரும்பாலானவர்கள் குண்டூர் (35.6%), கிருஷ்ணா (25.6%), நெல்லூர் (11.35%), சித்தூர் (10.7) முதலான மாவட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இந்த இனத்தவர்களின் மக்கள் தொகையைப் (1921) பார்க்கும் பொழுது, தமிழகத்தில் வாழ்ந்த
2.73 லட்சம் மக்களில், பெரும்பாலானவர்கள் தென்
மாவட்டங்களான திருநெல்வேலி (20.88%), ராமநாதபுரம்
(19.85%), மதுரை (7.3%), மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர்
(19.5%), வட மாவட்டங்களான செங்கல்பட்டு (12.86%), வடஆற்காடு (10.29%), தென் ஆற்காடு (4.78%) முதலான மாவட்டங்களில் வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது. இன்னும் குறிப்பாக, தென் மாவட்டங்களில் ஏறத்தாழ
50 சதவீதம், மேற்கு மாவட்டங்களில் 20 சதவீதம் பேர் வாழ்ந்ததாகப் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
சான்றாக, மதுரையிலிருந்து திருநெல்வேலி
செல்லும் நெடுஞ்சாலையில், திருமங்கலம் தொடங்கி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி,
கயத்தாறு வரை கரிசல் நிலம் நீக்கமற நிறைந்திருப்பதைக் காணலாம்.
திருமங்கலம், திருவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில்
திருமங்கலம் முதல் கிருஷ்ணன் கோவில் வரையுள்ள பகுதிகள், மதுரை,
தூத்துக்குடி நெடுஞ்சாலை................
எட்டையாபுரம், தூத்துக்குடி வரையுள்ள
பகுதிகள்..............நெடுஞ்சாலையில நாலாட்டின்புத்தூர்,
வானரமுட்டி, கழுகுமலை, குருவிகுளம்
வரை அமைந்துள்ள பகுதிகள், கோவில்பட்டி, ராஜபாளையம் நெடுஞ்சாலையில் இடைப்பட்ட பகுதிகள் ஆகிய அனைத்தும் கரிசல் மண் நிறைந்த பகுதிகளாகும்.
மேற்கூறிய பகுதிகள் அனைத்திலும் கம்ம இன கிராமங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதைப்போலவே சாத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையின் இருமருங்கிலும்,
சிவகாசியிலிருந்து கழுகுமலை செல்லும் சாலையின் இருபுறமும் அருப்புக்கோட்டையிலிருந்து
சாத்தூர், நாகலாபுரம், விளாத்திகுளம்,
எட்டையபுரம் வழியாகக் கோவில்பட்டி செல்லும் சாலையின் அனைத்துப் பக்கங்களிலும்
இம்மக்கள் வாழும் கிராமங்களை அதிகம் காணலாம்.
மாவட்ட வாரியாகக் கரிசல் நிலப்பரப்பையும் கம்மவார் மக்கள் தொகையையும் ஒப்பிட்டுப்
பார்க்கையில் பெருவாரியானவர்கள், வானம் பார்த்த
வறண்ட கரிசல் பூமியில் குடியேறினர் என்பது தெளிவாகிறது
இந்த இனத்தவரின் பூர்வீக இருப்பிடம் ஆந்திரப்பிரதேசம். அதிலும் குறிப்பாக கிருஷ்ணா நதியின் தெற்கே அமைந்துள்ள குண்டூர்,
விஜயவாடா, நெல்லூர் மாவட்டங்களைச் சார்ந்தவர்கள்.
குண்டூர் மாவட்டம் கரிசல் நிறைந்த மாவட்டம். பெரும்பாலும்
மழையை நம்பி வேளாண்மை செய்த மாவட்டம். பருத்தி மிளகாய்,
சிறுதானியப் பயிர்கள் ஆகிய மானாவாரிப் பயிர்களை இன்றும் பயிர் செய்கின்றனர்.
எனவே தங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட மண், தங்களோடு உறவாடிய தட்பவெப்ப நிலை, தாங்கள் விளைவித்த
பயிர் வகைகளை எவ்வித இன்னலின்றி பயிர் செய்வதற்கு ஏதுவான சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில்
கொண்டு கரிசல் பூமியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
நீர்ப்பாசன வசதியுள்ள செம்மண், வண்டல் மண், கரிசல் மண் நிறைந்த பகுதிகள், ஏரிகள், குளங்கள் நிறைந்த பகுதிகள், ஆற்றோரப் பகுதிகள் ஆகியவற்றில் பூர்வீகத் தமிழ் மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக
வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய இடங்களில் நிலங்கள் கிடைப்பது
கடினம்; குடியேறுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு.
இடம்பெயர்ந்த கம்ம இனத்தவரின் மொழியும், வாழ்வியல் முறைகளும் உள்ளூரில் வாழ்ந்து வந்த தமிழர்களின் வாழ்வியல் முறையிலிருந்து
வேறுபட்டிருந்தமையால், ஆரம்ப காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில்
‘குடிபுகல்’ சற்றே கடினமாக இருந்திருக்கலாம்;
எதிர்ப்பும் இருந்திருக்கலாம். இடம்பெயர்ந்து வரும்பொழுது,
யாரும் பயன்படுத்தாத நிலங்கள், குடியிருப்புகள்
இல்லாத நிலங்கள், யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுடைய தேவைகளைத்
தாங்களே பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய வகையில் அமைந்த இடங்கள், யாரையும் பகைக்காமல், யாரையும் எதிர்க்காமல்,
யாரையும் பலவந்தமாக வெளியேற்றாமல் அமைந்துள்ள இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில்
கொண்டு கரிசல் நிலத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
எனவே, ஆந்திராவிலிருந்து வந்த இவர்களுக்கு
வளம் நிறைந்த பகுதிகளில் குடியேற வாய்ப்பில்லை. தமிழகம் முழுவதும்
பெரும்பாலும் இவர்கள் வானம் பார்த்த பூமியில் தான் வாழ்கிறார்கள். விரோதிகளாலும் விரும்பப்படாத கரிசல் பூமியைத் திருத்தி, நாடாக்கி வளம் பெருக்கினர். கரிசலில் வாழ்ந்த இம்மக்கள்
இயற்கையிலிருந்து எதிர்பார்த்தது ஒன்றுதான்: சன்ன கேலி கொட்டதா?
சின்ன வான படதா? மனம் பத்தகவுமா? (ஒரு சின்னக் காற்றடிக்காதா? ஒரு சின்ன மழை பெய்யாதா?
நாமும் பிழைத்துக் கொள்ள மாட்டோமா?). ஒரு சின்னக்
காற்றிலும், ஒரு சின்ன மழையிலும் அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கை
கரிசல் அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.
இந்தத் தகவல்களை எல்லாம் இங்கு ஏன் பதிவு செய்கிறேன் என்றால்... ஒருசிலர் இவர்களை இம்மண்ணின் மைந்தர்கள் இல்லை என்றும்,
வந்தேறிகள் என்றும் விஷ விதைகளை மக்கள் மனதில் விதைக்கின்றனர்.
கரிசல் நிலத்துக்கு மத்தியில் மிகவும் அரிதாகக் குறைந்த அளவில் செம்மண் நிலப்பகுதியைக்
காணலாம். அத்தகைய பகுதிகளில் அமைந்துள்ள ஓரிரு கிராமங்களின்
பெயர்கள் மண்ணின் பெயரை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சான்றாக
கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் நடுவே தென்படும் சிறிய செம்மண் திடலில் அமைந்துள்ள
கிராமம் இடைசெவல் (கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பிறந்த ஊர்) எனப் பெயர் பெற்றுள்ளது.
கரிசல் சூழ்ந்த பகுதிக்கு நடுவே செம்மண் காணப்பட்டதால் இடைசெவல்
(இடையில் செம்மண்) எனப் பெயர் கொண்டுள்ளது.
இடைசெவவைலச் சார்ந்த பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன்
தனது ஊரின் பெயருக்கான காரணத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
‘‘கரிசல் தாயின் நெற்றியில் ஒரு செந்தூருக்கம் பொட்டு மாதிரிக் கொஞ்சம் செவல்காடு
(செம்மண் தரை) இருக்கிறது. தெற்கேயும் வெகுதூரம் கரிசல் இடைப்பட்ட இந்த இடத்துக்கு ‘இடைசெவல்’ என்று பெயர் சொல்லி வந்தார்கள். இதுவே நாளாவட்டத்தில் ஊர் பெயராகி விட்டது.
செவல்குளம், செவல்பட்டி என்ற
ஊர்களின் பெயர்க்காரணமும் இவ்வகையில் அமைந்ததே.
(தொடர்வோம்...)
No comments:
Post a Comment