Sunday, June 1, 2025

நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் அத்தியாயம் - 4

 

நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்

அத்தியாயம் - 4

 

சென்னை மாநிலம்  / தமிழ்நாடு

 

1948-ல் டார் கமிஷனும், 1954-ல் பசல் அலி கமிஷனும் நம்முடைய எல்லைகளை ஒழுங்குபடுத்தினாலும், நமக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.

1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி  தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு ஏறத்தாழ 69 ஆண்டுகள் ஆகிவிட்டன.

 இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளை பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த எல்லைகள் வரையறுக்கப்பட்ட  நாளை கேரளம்  ஆண்டுதோறும் நவம்பர்  1-ம் தேதிநவ கேரளம்அல்லதுஐக்கிய கேரளம்என்று கொண்டாடி வருகிறது. கர்நாடகம்சம்யுக்த கர்நாடகம்  என்றும், ஆந்திரம்விசாலா ஆந்திரம்என்று கொண்டாடுகிறது. அதேபோல் மகாராஷ்டிராவில்மகா மகாராஷ்டிராஎன்றும்,  குஜராத்தில்சம்யுக்த குஜராத்என்றும் கொண்டாடப்படுகிறது.

ஆனால், நாம் மட்டும் நவ.1-ம் தேதியைக் கொண்டாடாமல், அண்ணாதமிழ்நாடுஎன்று பெயர் சூட்டிய நாளான ஜூலை 18-ம் தேதியைதமிழ்நாடு நாள்என்று இன்றைக்கு கொண்டாடுகின்றோம்.

பிள்ளை பிறந்த நாளைத்தானே கொண்டாட வேண்டும் பிறந்த நாள் என்று! பிள்ளைக்குப் பேறு வைத்த நாளையா பிறந்த நாள் என்று கொண்டாடுவார்கள் ? என்பதுதான் என் போன்றவர்களின் கேள்வி. எம்.ஜி.ஆரும் கலைஞரும் கொண்டாடிய நாள் நவம்பர் 1. ஆனால், முதல்வராக ஸ்டாலின்  வந்த பிறகு இதை மாற்றி விட்டார்கள்.

இப்படியாக தமிழ்நாட்டின் எல்லைகள் அமைந்த பிறகு, காமராஜர் முதல்வர் பதவிக்கு வருகின்றார். அதற்கு முன் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, ராஜாஜி என சென்னை ராஜ்தானியின் முதல்வர்களாக இருந்தார்கள். ‘தமிழ்நாடுஎன்ற பெயர் வைப்பதற்கு முன் சென்னை மாகாணமாக இருந்தது. இப்படியான நிலையில் அரசியல் சூழ்நிலைகள் மாறின.

 நான் பிறப்பதற்கு முன்பும், என்னுடைய பள்ளிக்காலத்திலும் நிகழ்ந்த  சில நிகழ்வுகள்...

நான் பிறக்கும்போதே எங்கள் குருஞ்சாக்குளம் கிராமத்துக்கு  மின்சாரம் வந்துவிட்டது. பக்கத்தில் உள்ள என் தாயார் பிறந்த ஊரான வெள்ளாகுளத்தில் மின்சாரம் கிடையாது. வயல்வெளிப் பிரதேசம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று பசுமையாக இருக்கும். குளத்துப் பாசனம்.  மின்சார வசதி இல்லாததால், அந்தக் கிராமத்தில் மாலை 6 மணிக்கு கல் விளக்குத் தூணில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றப்படும். இதற்காக தெருக்களில் தூண்கள் நிறுவப்பட்டிருக்கும். அதில் நான்கு புறமும் கண்ணாடி அமைந்த குடுவைக்குள்,   சீமெண்ணெய்என்று அன்றைய வழக்கில் இருந்த மண்ணெண்ணெய்யை  ஊற்றி விளக்கு ஏற்றுவதற்காககோல்காரன்என்று ஒரு  பொறுப்பாளர் இருப்பார்.  அவரைகாவல்காரன்என்றும் அழைப்பார்கள். அவர் வந்து  மண்ணெண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவார். இரவு 8  - 9 மணிக்கு வந்து விளக்கை அணைத்துவிட்டுச் செல்வார். இது வழக்கமாக நடைபெறும். புரட்டாசி, மார்கழி மாதங்களில் மட்டும் விடிய விடிய விளக்குகள்  எரியும். அதேபோல், குளத்தில் இருந்து  தண்ணீரை  வெளியேற்ற, மதகைத் திறந்துவிடுவதற்குமடையன் என்று ஒருவர் இருப்பார்.   அவர் அந்த மதகை  அடிக்கடி மசகை போட்டு பராமரிப்பார்.

இந்த மசகை எப்படி செய்வார்கள் என்றால்... வைக்கோலையும், தேங்காய் சிரட்டைகளையும் சேர்த்து தீ வைத்து கொளுத்தி,  அந்த சாம்பலுடன் விளக்கெண்ணெய் ஊற்றி கலப்பார்கள். அது கருப்பு கலரில்கிரீஸ்போன்று இருக்கும்.  இதைத்தான் மசகை என்று அழைத்தனர்.

கிராமத்தில் தபால் நிலையம் இருக்கும். உள்ளூர்காரர் ஒருவர் தபால் நிலைய அதிகாரியாக இருப்பார். அந்த அதிகாரியின் வீட்டில்தான் தபால் அலுவலகம் இருக்கும். தபால் போடுவதற்கு பெட்டியும் வைக்கப்பட்டிருக்கும். மதிய நேரத்தில்  கோவில்பட்டி திருவேங்கடத்தில் இருந்து ஒருரன்னர் தபால் பையை எடுத்துக் கொண்டு வருவார். அதில் முத்திரை போட்டு, யார் யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவரவர்க்கு கொடுப்பார்கள். குறிப்பாக 6, 7-ம் தேதிகளில், ராணுவப் படையில் இருக்கும் ஜவான்கள் தங்கள் வீட்டுக்கு தாய், தந்தையர் மனைவிக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்புவார்கள்.  அந்த சமயத்தில் ஆயிரக்கணக்கில் பணப்புழக்கம் இருக்கும். இது 10-ம் தேதி வரை நீடிக்கும்.

ஆசிரியர்கள் பணியாற்றும் ஊரிலேயே தங்கி விடுவார்கள். 5-ம் வகுப்பு வரை இருந்தால் தொடக்கப் பள்ளி, 1 -ல் இருந்து 8 வரை இருந்தால் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி. அன்றைக்கெல்லாம் பள்ளி ஆசிரியர்கள் போன்ற கிராமப் பணியாளர்கள், பஞ்சாயத்து யூனியன் ஆபீசிலேயே பணி மாறுதல் பெற்றுக் கொள்ளலாம். இப்போது போல எதற்கெடுத்தாலும், சென்னைக்கு வந்து அமைச்சரைப் பார்த்து, அதற்கு செய்யவேண்டியதைச் செய்து மாறுதல் பெறும் நிலை அன்றைக்கு இல்லை.

மேலும், ‘கிராம சேவக்என்பவர்,  விவசாய பயிர் பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுரை கூறுவார். ‘முக்கிய சேவக்என்பவர் பெண்களாக இருந்து, பெண்களின் நலன், முன்னேற்றம் என்ற அளவில் கிராமங்களுக்கு வந்து ஆலோசனை வழங்குவார்கள். இதேபோல் ஒவ்வொரு கிராமத்துக்கும்கிராம முன்சீப்என்ற கிராம அதிகாரி இருப்பார். பஞ்சாயத்து யூனியன் அதாவது ஒன்றியத்தில் ஒரு பிடிஓ, பள்ளிகளை கவனித்து நிர்வாகிக்கும் சிஇஓ மற்றும் கல்வித் துறை ஆய்வாளர் என்ற பொறுப்புகளில் அதிகாரிகள் இருப்பது உண்டு.

என்னுடைய தகப்பனார் கே.வி.சீனிவாச நாயுடு  கிராம முன்சீப்பாக இருந்தார். பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியில் என்னுடைய முப்பாட்டனார் கெந்தஸ்திரி பேரம் ரெங்கசாமி நாயுடு, ‘ஆங்கிலேயர் ஆட்சியில் கிராம முன்சீப் அதிகாரியாகப் பணியாற்ற முடியாதுஎனக் கூறி மறுத்து விட்டார்.  இவர் ..சி.க்கு நல்ல அறிமுகமானவர். அவரை விட வயதில் மூத்தவர். ‘நைனாஎன்று  ..சி அழைப்பார்.  கிராம அதிகாரியாகப் பொறுப்பேற்க மாட்டேன்என்று முப்பாட்டனார் கூறியதும், கோவில்பட்டி, சங்கரன்கோவிலில் இருந்து அதிகாரிகள் நேரடியாக வந்து, ‘உங்களைத் தவிர வேறு யாரையும் இந்தப் பொறுப்பில் நியமிக்க முடியாத நிலையில் உள்ளோம். தயவு செய்து இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்என்று சொன்னதால், அப்பொறுப்பை ஏற்றுக்  கொண்டார்.

அதேபோல், என்னுடைய பாட்டனார் வெங்கடாசல நாயுடுவும் விடுதலைப் போராட்ட வீரர்தான். இவரும் ..சி.க்கு நெருங்கியவர். அவர் அந்தப் பதவியை வகித்த பின் என்னுடைய தந்தையார் கே.வி.சீனிவாச நாயுடு கிராம முன்சீப் பதவிக்கு வந்தார்.

 என்னுடைய தாயார் மங்கத்தாயாரம்மாள் தீவிர வைணவர். நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தின் அத்துணைப் பாசுரங்களும் அத்துப்படி. விடியற்காலை 4 மணிக்கு எழுந்து பச்சைத் தண்ணிரில் குளித்துவிட்டு, நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களை உச்சரித்து, திருவேங்கடத்தானை வணங்கிவிட்டுத்தான் தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.

எங்கள் கிராமம் விடியற்காலை 4 - 5 மணிக்கெல்லாம்  எழுந்து விடும்.  பெண்கள் விடியற்காலையில் வாசலில் சாணம் தெளித்து கோலங்கள் போட ஆரம்பித்து விடுவார்கள். சிலர் பருத்தி விதை, பிண்ணாக்கு கலந்து,  உழவு மாடுகளுக்கும், பால் வழங்குகின்ற பசு, எருமைகளுக்கும் தண்ணீர்  காட்டுவர். அதேபோல், மாட்டுத் தொழுவங்களில் உள்ள சாணக் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றி, சுத்தப்படுத்துவார்கள்.

மார்கழி மாதத்தில் அதிகாலையில்  குளிரில் போர்வையை இழுத்துப் போர்த்திப் படுத்திருக்கும் என்னை , எனது தாயார் எழுப்பி, குளிக்க  வைத்து, இடுப்பில் ஒரு துண்டைக் கட்டி விடுவார். மேலும்,  நெற்றியில் திருமண் இட்டு, ஆண்டாள் பாசுரங்களைப் பாட அனுப்பி விடுவார். நானும் மற்றவர்களோடு சேர்ந்து  தெருக்கள்தோறும் வலம் வருவேன். ஒருவர் ஆர்மோனியம் வாசிப்பார்... ஒருவர் பாசுரங்களைப் பாடுவார். நாங்களும் கோரசாகப் பாடிச் செல்வோம். தூத்துக்குடி ..சி. கல்லூரி முதல்வராக இருந்த  தமிழறிஞர் .சீனிவாசராகவனின்  திருப்பாவை பாசுரங்களின் விளக்கவுரை திருச்சி, திருநெல்வேலி வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்படும். அவரது அற்புதமான குரல் இன்பத் தேன்வந்து பாய்வது போல் இருக்கும்.

அதேபோல், காலையில், தயிரை மத்தினால் கடைந்து வெண்ணெய் எடுக்கும் சப்தம் கேட்கும்.  விவசாய வேலைக்குச் செல்வோர் காலை உணவாக ராகி கூழ், கம்பங்கூழ் போன்ற உணவுகளைத் தயாரிக்கும் மும்முரத்தில் இருப்பார்கள். ஒருபுறம் அம்மியில் காரச் சட்டினியும், தேங்காய்  சட்னியையும் அரைக்கும் சப்தம் கேட்கும்.

இப்படித்தான் கிராமங்களில் காலை வேளை இருக்கும்.

எனது வீட்டின் முன்னால் குடிநீர் கிணறு ஒன்று இருந்தது. அதில் தண்ணீர் இறைக்கும் கயிறு, வாலி, உருளையின் சத்தம் ஒரு சங்கீதமாக வெளிப்படும். காலை 8 மணிக்கெல்லாம் தயாராகி பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

மாலைப் பொழுதுகளில் கிராமங்கள்  8 - 8.30 மணிக்கெல்லாம் அடங்கி விடும். ஒருசில நாட்களில் ஊரினுடைய நிர்வாகம் சம்பந்தமாக இரவில் ஊர்க்கூட்டம் நடக்கும். முன்கூட்டியே இதுதொடர்பான அறிவிப்பை கிராமத்து வெட்டியான் அறிவித்து, மந்தைக்கு வருமாறு அழைப்பார்.

சில இரவுகளில் துணி வியாபாரிகள்  விதவிதமான ஜமுக்காளங்கள், துணிகளைக் கொண்டு வந்து ஏலம் விடுவார்கள். அங்கு காடா விளக்கு  ஜெகஜோதியாக எரியும். அந்த விளக்கொலியில் அவர்கள் கொண்டுவந்துள்ள துணிகள் பளபளப்பாக மின்னும்.

பொங்கல் காலங்களிலும் ஊர் சாற்றுகின்ற கோயில்  திருவிழாக்களிலும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். குறிப்பாக பிச்சைக்குட்டியின் வில்லுப்பாட்டு, கரகாட்டம் எல்லாம் நடக்கும். சில நேரங்களில் மதுரை , திருநெல்வேலியில் இருந்து வந்து  கர்நாடக இசை நிகழ்ச்சிகளையும் நடத்துவார்கள்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் இரண்டு மூன்று சலவைத் தொழிலாளிகளின் வீடுகள் இருக்கும். அவர்கள்  அழுக்குத் துணிகளை வெள்ளாவி வைத்து, பின்னர் குளத்துக்கரையில் துவைத்து,  காயவைத்து  அந்தத் துணிகளை வீடுகளுக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள்.  அந்தக் காலத்தில் துணிகளுக்கு சலவைக் கட்டிகளாக சன்லைட், ஏரோப்ளேன் போன்ற நீலக்கலர் சோப்புகள் பயன்பாட்டில் இருந்தன. குளியல் சோப்புகள் என்றால் மைசூர் சாண்டல், சிந்தால், லைப்பாய் போன்றவை பிரதானமாக இருக்கும்.

பெரும்பாலும் கிணற்று பம்ப் செட்டுகளில் குளிப்பது உண்டு. 1982 வாக்கில், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னுடைய கிராமத்துக்கு வந்தபோது,  அங்கு இருந்தவரைக்கும் இந்த பம்ப்செட் குளியலையே விரும்பினார். ஒரு சில கிணறுகளில் கீழே இறங்கி நீச்சலடித்தும் குளிக்கலாம்.

 தலைவலி, கால் வலி என்றால் ஆர்.எஸ்.பதி தைலம். முகத்துக்கு பாண்ட்ஸ் பவுடர், ரெம்மி பவுடர், தலைக்கு பில் கிரீம், முகத்துக்கு ஸ்னோ இவற்றையெல்லாம் பயன்படுத்துவதுண்டு.

வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பணியாரம், உப்புமா இருக்கும். மத்தியானம் சாப்பாட்டில் சாம்பார், ரசம், வெஞ்சனம், துவையல், கெட்டித் தயிர் இடம்பெறும். வத்தல் குழம்பும், மோர் குழம்பும் சுவையாக இருக்கும்.  விதவிதமான ஊறுகாய்களை வீட்டிலேயே தயார் செய்து கொள்வார்கள். தின்பண்டங்களாக கருப்பு எள் போட்ட முருக்கு, சீடை மற்றும் அதிரசம் எப்போதும் இருக்கும்.

எள் பொடி, பருப்பு பொடி என இட்லி பொடி 2 வகையில் இருக்கும். நல்லெண்ணெய்யும், கடலை எண்ணெய்யும் கழுகுமலையில் ஆட்டி பெற்றுக் கொள்வோம்.

இந்த கழுகுமலையில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு எழுந்தருளியுள்ள முருகனை வைத்துதான் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவைப் பாடினார்.

ஊத்துமலை அரசர் மருதப்பனார் காவடி எடுத்துக் கொண்டு கழுகுமலை முருகன்கோயிலுக்கு நடந்து சென்றபோது கால்வலி தெரியாமல் இருப்பதற்காக காவடிச் சிந்துவைப் பாடிக் கொண்டே சென்றார்.

கழுகுமலையில் விசாகத் திருவிழா, சங்கரன் கோவிலில் கோமதியம்மாள் - சங்கர நாராயணன்  திருக்கோயில் ஆடித் தபசு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் பிரபலம்.  புரட்டாசி, மார்கழி மாதங்களில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கோ, தெற்கே உள்ள நவதிருப்பதிக்கோ செல்வது வழக்கம்.

ஒருமுறை என் தந்தை எங்களை திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் சென்றார்.  எங்கள் ஊரில் இருந்து  திருவனந்தபுரம் பக்கம். தென்காசியில் இருந்து ரயிலில் ஏறினால்,  செங்கோட்டை தாண்டி, ஆரியங்காவு அருகில் 13 கண் பாலத்தில் ரயில் செல்லும்போது இயற்கை அன்னையின் அழகு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் சென்றடைந்தோம்.

அன்றைய நாளில்தான்  .எம்.எஸ். நம்பூதிரி பாட் தலைமையில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பேற்றது.   பத்மனாப சுவாமி கோயிலுக்கு நாங்கள்  சென்று கொண்டிருந்தபோது, கோயில் நம்பூதிரிகள் சிலர் , ‘‘கம்யூனிஸ்ட் அரசாங்கம் வந்துவிட்டது. நம்முடைய நிலை என்னவாகும் என்று தெரியவில்லையே...’’ என்று கவலையோடு மலையாள மொழியில் பேசிக் கொண்டு சென்றது இன்றைக்கும் என் காதில் ஒலிக்கிறது... ரவிவர்மா ஓவியக் கண்காட்சியையும் அங்கு பார்த்தோம்.

1965-க்கு முன்னால்  உயர்நிலைப் பள்ளிகளில் நான் படிக்கும் காலத்தில் இந்தி கற்றுக் கொடுத்தார்கள். இதற்காகஇந்தி பண்டிட்டுகள் இருந்தனர்.  அதேபோல், தமிழ் கற்பிக்கின்ற வித்வான்கள், படித்த புலவர்கள்தமிழ் பண்டிட்என இருந்தனர். இந்தி பரீட்சையில் தேர்வு ஆகவில்லை என்றாலும் பிரச்சினையில்லை. ஆனால் இந்தி படித்தால் போதும் என்ற நிலை இருந்தது. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு இந்தி வகுப்புகள் இல்லாமல் போய்விட்டன.

சிறுவயதில், தீப்பெட்டிக்குள் பச்சைக் கலரில் ஜொலிக்கும் பொன்வண்டு சேகரிப்பது, வெவ்வேறு நாடுகளின் அஞ்சல் தலைகளைச் சேகரிப்பது என்பதெல்லாம் ஒரு வழக்கமாக இருந்தது.

நான் உள்ளூரில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு, 9-ம் வகுப்புக்கு திருவேங்கடத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்  சேர்ந்தேன். அப்போது ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, பூகோளம் என்ற பாடங்கள் இருந்தன.  10-ம் வகுப்பில் இந்தப் பாடங்களோடு கூடுதலாக விருப்பப் பாடமும் இருந்தது. அதில்  சிறப்பு கணிதம், பயாலஜி, ரசாயனம், பவுதிகம், தொழில் சார்ந்த பொறியியல், நெசவு, விவசாயம், எலக்ட்ரிக்கல் சம்பந்தமான படிப்புகள் இடம் பெற்றிருந்தன. நான் பயாலஜி பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்தேன்.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்...

ராஜாஜி முதல்வராக  இருக்கும்போது குலக்கல்வியைக் கொண்டு வந்தார் என்று அவரைக்குல்லுகப் பட்டர்என்று அழைத்தது உண்டு. ஆனால், வரலாற்றைத் திரும்பி்ப் பார்த்தால், அன்றைக்கு நேரு ஆட்சிக் காலத்தில்  பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு தொழில் சார்ந்த கல்வி வேண்டும் என்று ஒரு கமிட்டி கொடுத்த அறிக்கையின் பிரகாரம்தான் ராஜாஜி இத்திட்டத்தை கொண்டு வந்தார். இதுதான் எதார்த்தம். உடனேகுல்லுக பட்டர் என அழைத்து பேச ஆரம்பித்துவிட்டனர், ராஜாஜிக்கு எதிரான ஆட்கள்.

இனி.... காமராஜர் முதல்வராகத் தேர்வு, காந்திஜியின் இலங்கைப் பயணம் குறித்து அடுத்த தொடரில் காண்போம்...

 

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...