Sunday, June 1, 2025

நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் அத்தியாயம் - 6

 

நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்

அத்தியாயம் - 6

 

அன்றைக்கு வீடுகள் எல்லாம் பெரும்பாலும் கற்கள் வைத்துதான் கட்டப்பட்டன. மலையில் இருந்து கற்களைக் கொண்டு வந்து, பின்னர்  அதை சதுர கற்களாக வெட்டி அதைக் கொண்டு வீடு கட்டினார்கள். ஒருசிலரே  செங்கலைப் பயன்படுத்தினார்கள். அதேபோல் காளவாசலில் இருந்து சுண்ணாம்பு வாங்கி வந்து, அதனுடன் சரியான விகிதத்தில் மணலைக் கலந்து  கட்டிடப் பணிக்கு பயன்படுத்துவார்கள். அப்போதெல்லாம் சிமென்ட் பயன்பாடு அவ்வளவாக இல்லை.

சுவரைப் பூச வேண்டுமென்றால், பெரிய அம்மியில் சுண்ணாம்பு மற்றும் மணல் கலவையைப் போட்டு அரைப்பார்கள். சாந்து போன்று வரும். அதைக் கொண்டு பூசி விடுவார்கள். சுவர்களில் சன்னல் அமைப்பார்கள்.  அதேபோல் மேற்கூரைக்கு கீழே சின்ன சின்ன பாட்டு சன்னல்களை  வைப்பார்கள். அதில் இருந்து காற்றும் வெளிச்சமும் வரும்.

மேல் தளத்துக்கு மர உத்திரங்கள் மீது தேக்கு மரக் கட்டைகளை மேலோட்டமாக இடையிடையே வைத்து தளம் போடும் செங்கற்களை அடுக்கி வைப்பார்கள். பின்னர், கடுக்காய் நீரோடு சுண்ணாம்பு, மணல் கலவையைச் சேர்த்து மேல் தளத்தை  போடுவார்கள். ஒரு சிலரின் வீட்டில் மட்டும்தான் மாடிக்கு செல்வதற்கு படிக்கட்டுகள் இருக்கும். பெரும்பாலான வீடுகளில் மர ஏணிதான் இருக்கும்..

பொதுவாக ஒரு வீட்டில் பெரிய ஹால் ஒன்று  இருக்கும். அதை பட்டாசால் என்று அழைப்பார்கள். அதேபோல், சின்ன  அறைகளாக இரண்டு மூன்று  இருக்கும்.  சமையல் அறையில் அடுப்புக்கு மேலே, புகை போவதற்காக புகை  போக்கியும் கட்டுவார்கள்.

மேலும், பருத்தி, மிளகாய், தானியங்கள் போட்டு வைக்க தனித்தனி அறைகள் இருக்கும். பருத்திக்கான அறையில் கீழே ஈரமில்லாமல்  இருப்பதற்காக மணல் பரப்பி அதன் மேல் பருத்தியை  இருப்பு வைப்பார்கள். அதேபோல் மிளகாய் வத்தலையும் வைப்பார்கள். தானியங்கள், உளுந்து மற்றும் பருப்பு வகைகளை மட்டும் மூட்டைகளில் கட்டி தனி அறையில் வைப்பார்கள்.

வீடுகளுக்கே வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் நல்ல விலை கிடைத்தால்  விற்பார்கள். இல்லையெனில் இவர்களே சங்கரன்கோவில், கோவில்பட்டி, சாத்தூர் கமிஷன் கடைகளுக்குக் கொண்டுபோய் விற்றுவிட்டு வந்துவிடுவார்கள்.

தானியங்களை பெரும்பாலும் மாட்டு வண்டிகளில்தான் கொண்டு போவார்கள். மாட்டு வண்டிகள் குறிப்பாக கயத்தாறு ஆசாரி செய்து கொடுக்கும் வண்டிகளுக்கு  அந்த காலத்தில் மவுசு அதிகம். நல்லாட்டின்புதூரிலும் வண்டிகள்  செய்வதுண்டு. அதன் அடையாளமாக பட்டறை பேருந்து நிலையம் என்று ஒன்று இன்றைக்கும்  உள்ளது.  ஒரு வீட்டில் இரண்டு மூன்று ஜோடி உழவு மாடுகள், இரண்டு மூன்று பசுமாடுகள், எருமை மாடுகள் இருக்கும். மாடுகள் கட்டுவதற்காக தொழுவம் இருக்கும். அங்கு சேகரமாகும் கழிவுகள் விவசாயத்துக்கு எருவாகப் பயன்படும்.

நெற்பயிர் சாகுபடி செய்வதற்கு முன் நிலத்தை பக்குவப்படுத்துவார்கள். அதற்கு தண்ணீர் கட்டிய தொழி என்பார்கள்.  வயலில் கொளிஞ்சி இலைகளைப் போட்டு நன்றாக மிதித்து சேறும் சகதியுமாக நிலத்துக்குள் மூழ்கிய  பிறகு நாற்றுகளை நடுவார்கள். இந்த தொழி முறையால் மண்ணில் நைட்ரஜன் சத்து கிடைக்கும். இதனால் நெற்பயிர் எளிதில் வளரும்.

பருத்தியைப் பொருத்தவரை, முதலில் பருத்தி விதைகளை சாணத்தில் தோய்த்து, அதை வரிசையாகத் தோண்டப்பட்ட உழவுக்குழியில் விதைப்பார்கள். மிளகாய் என்றால் நாற்று பாவி நட வேண்டும். மானாவாரிப் பயிர்களான எள், துவரை, நிலக்கடலை இவற்றையெல்லாம் மழை பொழிந்தவுடன் உழுது விதைகளை விதைப்பது உண்டு. கரும்பை துண்டு துண்டாக வெட்டி அதை உரத் தண்ணீரில் நன்றாகக் கழுவி, வரிசையாக நடுவார்கள்.

இப்படியாக விவசாய முறைகள் இருந்தன.

எங்கள் ஊர் பெரும்பாலும் கரிசல் மண் நிறைந்த பகுதியாகும். ஒரு சில இடங்களில் ஆங்காங்கே செவல் தரையும் உண்டு. கொய்யா , மா, எலுமிச்சை, நார்த்தங்காய், தென்னை போன்றவற்றை சுருக்கமாக ஒரு ஏக்கருக்குள் சாகுபடி செய்வது உண்டு.

மழை பெய்தால் கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுத்து மேல் பகுதி வரை வந்து விடும். கோடை காலங்களில்  நீர் வற்றி விட்டால், கிணற்றை திரும்பவும் ஆழப்படுத்த வேண்டும். அன்றைக்கு ஜிஇசி பம்ப் செட்கள்தான் பெரும்பாலும் பயன்பாட்டில் இருந்தன.  இது உயர் தரமான மோட்டார்  என்று கூறுவார்கள். மின் மோட்டார் இல்லாத விவசாய நிலங்களில்கமலைஎன்று சொல்லக் கூடிய ஏற்றம் இறைத்து  நீர் பாய்ச்சுவார்கள்.

சில நேரங்களில் மோட்டாரில் காயில் கருகிவிடும். அதை சரிப்படுத்துவதற்காக மோட்டாரை எடுத்துக் கொண்டு, எங்கள் பண்ணையில் வேலை பார்க்கும் ராமன், சீனியோடு கோவில்பட்டி, சங்கரன்கோவிலுக்குப் போவோம். அப்படி செல்லும்போது மாட்னி ஷோ சினிமா பார்த்து விடுவோம். கோவில்பட்டி என்றால் தூத்துக்குடியில்  இருந்து வரும் மீனில் செய்யப்படும் வறுவலைச் சாப்பிடுவோம். எங்கள் ஊரில் குளத்து மீன்களான அயிரை, விறால்தான் கிடைக்கும். மேலும் அங்கே உள்ள நாடார் கடையிலும், திமுகவில் இருந்த கலைமணி காசி கடையிலும் சாப்பிடுவதுண்டு. அங்கு மீன், மட்டன் சுக்கா வறுவல் மிகவும் ருசியாக இருக்கும்.

சங்கரன்கோவில் என்றால், எங்கள் குடும்ப நண்பர் சுல்தான் கடையில் பிரியாணியை ஒரு பிடி பிடித்து விடுவோம். இதனால் மோட்டார் காயில் பழுதடைந்து விட்டால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் ஒரு மோட்டார் காயில் கட்டுவதற்கு 200 முதல் 300 ரூபாய் வரை செலவாகும். அன்றைக்கு அது  பெரிய தொகை.

அன்றைய திருமண விழாக்களைப் பற்றி ஏற்கெனவே நான் கூறியுள்ளேன். இன்னொன்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

எங்கள் ஊர் பெண்ணை திருமணம் செய்து, விருந்துக்கு வரும் புது மாப்பிள்ளைகள் குறைந்தது 2 வாரமாவது மாமனார் வீட்டில் தங்குவார்கள். அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு இருக்கும். விருந்து தடபுடலாக நடக்கும். எங்கள் ஊரில் இளவட்டக்கல் என்று ஒன்று பந்து வடிவில் பெரிதாக இருந்தது. விருந்து முடிந்து மனைவியோடு மாப்பிள்ளை சொந்த ஊர் திரும்பும்போது, அந்த இளவட்டக் கல்லைத் தூக்கி  தோள் புறமாகக் கொண்டு வந்து பின்னால் போட வேண்டும். அப்படி  போடவில்லை என்றால் மாமனார் வீட்டில்  மாப்பிள்ளையை சரியாகக் கவனிக்கவில்லை, அல்லது மாமனார் வீட்டு சாப்பாட்டை மாப்பிள்ளை சரியாகச் சாப்பிடவில்லை என்று கிண்டல் செய்வார்கள். இவ்வாறு மாப்பிள்ளையை விருந்துக்கு அழைப்பதைஇஞ்சி வைத்து விட்டீர்களா?’ என்று கூறுவார்கள். இப்படியான பழக்கம் அன்றைக்கு இருந்தது.

அந்தக் காலத்தில் கழிவறைகள்  ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அரசாங்கம் சார்பில்  கட்டப்பட்டிருந்தன.  ஆனால் கழிவறையை எப்படி பயன்படுத்துவது என்று கிராம மக்களுக்குத் தெரியாது. இதனால் பராமரிப்பின்றி அவை வீணாகி விட்டன.

1960 காலகட்டத்தில்  கழிவு நீர்  செல்வதற்காக சிமென்ட் வாறுகால்கள் தெருவோரமாகக் கட்டப்பட்டன.

இன்றைக்கு நடைபெறும் மணல் திருட்டு, கனிம வளக் கொள்ளைகளைப் பற்றியெல்லாம் அன்றைக்கு யாருமே எண்ணிப் பார்க்கவில்லை.

எங்கள் கிராமத்தில் சலவை செய்யும் தொழிலாளர் குடும்பங்களுக்கு வருஷத்துக்கு  கூலியாக இத்தனை மூட்டை என்று கொடுத்து விடுவோம். அதேபோல் முடிதிருத்துபவர், செருப்பு தைத்துத் தருபவர்களுக்கும் தனித்தனியாக கூலியாக நெல் மூட்டைகள் கொடுப்பது வாடிக்கை.

இன்றைக்கு வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. பேராசிரியர் சீனிவாசராகவன், வெம்பக்கோட்டை பகுதியிலும் ஆதி மக்களுடைய அடையாளங்கள் இருந்தன என்று அப்போதே சொன்னதுண்டு. ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு, சிவகாசியில் நடந்த நிகழ்ச்சிக்குச் செல்லும்போது,  இதை சொன்னார் என்று கேள்விப்பட்டேன்.

எங்கள் கிராமத்தில் உழவு மாடு வாங்க வேண்டுமென்றால் கழுகுமலை மாட்டுத் தாவணிக்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால், விருதுநகர் மாவட்டம் கன்னிசேரிக்கு செல்ல வேண்டும். பாம்புகோவில் சந்தை எங்கள் வட்டாரத்தில்  விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தும் முக்கியமான சந்தையாகும். அதேபோல் எங்கள் ஊர் அருகில் உள்ள திருவேங்கடத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சந்தை கூடும்.

கழுகுமலையில் அப்போது முதன்முதலாக கட்டுமானத்தோடு தியேட்டர் வந்தது. அதற்கு முன்னால் டென்ட் கொட்டகைதான் இருந்தது. பாலசுப்பிரமணியம் என்ற தியேட்டரை அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் வந்து திறந்து வைத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

அன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் விறகு அடுப்புகள்தான் பயன்பாட்டில் இருந்தன. ஒருசில வீடுகளில் மட்டும்தான் மண்ணெண்ணெய் ஸ்டவ் இருக்கும். அதற்கு மண்ணெண்ணெய் வாங்குவது பெரிய பாடாக இருக்கும்.

வீடுகளில் குடி தண்ணீரை தாமிரம், பித்தளை பாத்திரத்தில் வைத்திருப்பார்கள். அதில் டம்ளர், போனி அல்லது செம்பு வைத்திருப்பார்கள். அதைக்கொண்டு  தண்ணீர் எடுத்து  அருந்த வேண்டும். அதேபோல் அன்றாட பயன்பாட்டுக்கான தண்ணீரையும் குடங்கள், தவலைகள், தொட்டிகளில் நிரப்பி வைப்பார்கள். அப்போதெல்லாம்  தண்ணீர் குழாய்கள் வீடுகளில் அமைக்கப்படவில்லை.

ஒரு சம்சாரி வீட்டில் ஒருவருக்கு குறைந்தபட்சம் 4  - 5வேட்டி, சட்டைகள் இருக்கும். பெரும்பாலும் கிராமத்தில் சட்டை அணிய மாட்டார்கள். மேல் துண்டு மட்டும் அணிந்து கொள்வார்கள். உழவுப் பணியின்போது கோடுபோட்ட அண்டர்வேரை விவசாயிகள் அணிந்திருப்பார்கள். அதேபோல், கோவணம் மாதிரி லங்கோடு என்று சொல்லப்படும் துணியை கட்டிக் கொள்வார்கள்.

மருத்துவமனை என்றால் குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போக வேண்டும். கொஞ்சம் வசதியானவர்கள்  கோவில்பட்டி துரைராஜ் டாக்டர், சாமுவேல், சங்கர அய்யர் மருத்துவமனைக்கும் செல்வார்கள். சங்கரன் கோவில் என்றால், லைசாண்டர் மருத்துவமனைக்குச் செல்வார்கள்.

அந்த காலகட்டத்தில் அதிகமானோர் பாம்பு கடிக்கு ஆளானார்கள். பாம்பு கடித்துவிட்டால் விஷம் பரவாமல் இருக்க, பாம்பு கடித்த இடத்துக்கு மேலும் கீழும் கயிறால் கட்டி விடுவார்கள். பாம்பு கடி பட்டவர் இரவு முழுவதும் தூங்கக் கூடாது என்று சொல்வார்கள். அதனால்,  அவர் தூங்காமல் இருப்பதற்காக அவரைச் சுற்றி 10 பேர்  அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

அப்போதெல்லாம் கொஞ்சம் வசதியான ஒருசில வீடுகளில்தான் சைக்கிள் இருந்தது. ஒரு கிராமம் என்றால் 10 - 15 பேரிடம் மட்டும்தான் சைக்கிள்கள் இருந்தன. அதேபோல் ஒருசில வீடுகளில்தான் ரேடியோ இருக்கும். பெரும்பாலும் வீடுகளில் டேபிள் ஃபேன்கள்தான் பயன்பாட்டில் இருந்தன. அபூர்வமாக ஒருசில வீடுகளில் சீலிங் ஃபேன் அகலமான பிளேடுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும்.

சைக்கிள்களுக்கு தனியாக வரி கட்ட வேண்டும். வரி கட்டியதற்காக சின்ன அலுமினிய தகட்டில் நம்பர் போட்டு கிராம அதிகாரி தருவார். அதை சைக்கிளில்  மாட்டிக்கொள்ள வேண்டும். சைக்கிளில் டைனமோ லைட் பொருத்தியிருக்க வேண்டும். இரவில் லைட் இல்லாமல் போனால் போலீஸார் பிடித்துக் கொள்வார்கள். அதேபோல்,  மாட்டு வண்டிக்கும் சதுரமான அலுமினிய தகட்டில் நம்பர் போட்டு லைசென்ஸ் கொடுப்பார்கள்.

வீட்டு வரி கட்டும்போது நூல் நிலைய வரியும் கட்ட வேண்டும். கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிட்டத்தட்ட 300  புத்தகங்கள் வரை இருக்கும். காந்திய சிந்தனைகள், அகிலன், மு.., நா.பார்த்தசாரதி போன்றார் புத்தகங்களை சிறு வயதில் நான் அங்கு பார்த்ததாக நினைவு. பெரும்பாலான புத்தங்கள் பாரி நிலையம் வெளியிட்டவையாக இருந்தன. ஒவ்வொரு புத்தகத்துக்கும் எண் போடப்பட்டிருக்கும். புத்தகங்கள் பற்றிய விவரங்கள் அலுவலகத்தில் உள்ள லெட்ஜர் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். இது 1957 - 58-ம் ஆண்டு காலகட்டம்.

சமையல் என்பது ஒரு அற்புதமான கலை. எங்கள் வட்டாரத்தில் வைக்கப்படும் வத்தக் குழம்பு மணமும் சுவையும் தூக்கலாக இருக்கும். சுண்ட வத்தலோடு அதற்கு தேவையான மசால் வகைகளையும், நல்லெண்ணெய்யும் சேர்த்து,  ஓரளவு கெட்டியாக வைப்பார்கள்.  குழம்பு கொதிக்கும்போது அந்த தெருவே மணக்கும். இந்தக் குழம்பை நீண்ட தூர பயணத்துக்கு 2 - 3 நாட்கள்கூட வைத்துக் கொள்ளலாம். குழம்பு கெட்டுப்போகாமல் இருக்கும்.

கொங்கு மண்டலத்தில்  பச்சப்புளி ரசம் பிரபலம் போல், எங்கள் வட்டாரத்தில் வைக்கப்படும் ரசமும் பிரபலம். இந்த ரசம் நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். அந்த ரசத்தில் சேர்க்கப்படும் மசாலாக்கள், சுவையைத் தருவதோடு, குடலில் உள்ள புழுக்களையும் சாகடித்து விடும்.

நாட்டுக் கோழியை எப்படி சமைப்பார்கள் என்றால், முதலில் இறகுகளை அகற்றிவிட்டு, முழு கோழியாக நெருப்பில் வாட்டுவார்கள். பின்னர் நல்லெண்ணெய்யோடு மஞ்சளை சேர்த்து குழைத்து கோழி முழுவதும் பூசுவார்கள்.  சிறிது நேரம் கழித்து தேவையான அளவில் அருவாமனையில் அறுத்து, பின்னர் மசாலாக்கள் கலந்து சமைப்பார்கள். நாட்டுக்கோழி சமையலுக்கு நல்லெண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துவார்கள். சுவை அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

அதேபோல், ஆட்டுக்கறி என்றால் வெள்ளாட்டு கறிதான் எடுப்பார்கள். வெள்ளாட்டின் கால்களை வாங்கி வந்து, மஞ்சள் தேய்த்து  வெயிலில் காயவைத்து, பின்னர் சூப் வைப்பது தனி சுவையாகும்.

வீடுகளில் அன்றன்றைக்கு உருக்கிய நெய்யைத்தான் பயன்படுத்தினார்கள். அதை பருப்புடனோ, சாம்பாருடனோ கலந்து சாப்பிடுவது வழக்கம்.

அதேபோல் கூழ்வத்தல், வடாகம் போடுவதுண்டு. அரிசி மாவைக் காய்ச்சி அதனுடன் உப்பு, பெருங்காயம், மிளகாய் அரைத்து சேர்த்து கூழ் காய்ச்சுவார்கள். அதை இரண்டு வகையில் தயாரிப்பதுண்டு.  கெட்டியான கூழை  முறுக்கு பிழியும் குழாயில் பிழிந்து காய வைத்து எடுத்துக் கொள்வார்கள். அதேபோல் சற்று இளகிய நிலையில் உள்ள கூழை ஸ்பூனிலில் எடுத்து வட்டவட்டமாக சேலையில்  விட்டு காயவைப்பார்கள். பின்னர் அவற்றை  சேலையில் இருந்து பிரித்து எடுத்து மேலும் காய வைத்து எடுத்துக் கொள்வார்கள்.  இந்த கூழ் வத்தலை எண்ணெய்யில் பொறித்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வடகம் செய்வது எப்படியென்றால்... வெங்காயம், கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கி,  உரலில் போட்டு ஒன்றுரெண்டாக அரைத்து, உப்பு கலந்து உருண்டையாக செய்து வெயிலில் ஒரு வாரம் காயவைக்க வேண்டும். பின்னர் எண்ணெய்யில் பொறித்து மோர் சாதத்துடனோ, தயிர் சாதத்துடனோ சாப்பிடுவார்கள். அப்பளத்தைப் பொறுத்தவரை கல்லிடைக்குறிச்சியில் இருந்து வாங்கி வருவதுண்டு.

கிராமங்களில் அடிக்கடி ராகியில் களி செய்வார்கள். களியுடன் நல்லெண்ணெய் கலந்து உருண்டையாக நன்றாக உருட்டுவார்கள்.  களியுடன் கருப்பட்டியையும் ஒரு கடி கடித்துக் கொண்டு சாப்பிடும்போது  அவ்வளவு சுவையாக இருக்கும்.

காபிக்கொட்டையை பக்குவமாக வறுத்து அரவை செய்து வாங்கிய காபி பொடியில் டிகாஷன் போட்டு காபி அருந்துவதுண்டு.  டிபன் வகைகளுக்கு தேங்காய் சட்னி, கெட்டி காரச் சட்னி, கொத்தமல்லி சட்னி என 3 வகை இருக்கும்.

இந்த காரச் சட்னியைப் பற்றி சொல்லும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது...

பிரபல நாடாளுமன்றவாதியான என்.ஜி.ரங்கா, சுதந்திரா கட்சியில் இருந்தார். பின்னர் காங்கிரஸுக்கு வந்தார். மூத்த தலைவர். அவர் எங்கள் வீட்டுக்கு இரண்டு முறை வந்துள்ளார். அப்போது இட்லியுடன்  இந்த காரச் சட்னியை செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்யுடன்  ருசித்துச் சாப்பிட்டுவிட்டு,  இந்த சட்னியை எப்படி தயார் செய்கிறீர்கள்? என்று ஆச்சரியமாகக் கேட்டார். அந்த அளவுக்கு அது பிரபலம்.

.....இப்படியெல்லாம் ஆறு, குளம், வயல், தோட்டம், துரவு, களத்துமேடு என கிராமச் சூழலில் பின்னிப் பிணைந்து, கள்ளங்கபடமில்லாத பாமர மக்களோடு பழகி, விதவிதமான கிராமத்து உணவுகளை ருசித்து வாழ்ந்த காலங்களை   நினைத்துப் பார்க்கும்போது, நெஞ்சம் கனக்கிறது.

இன்றைக்கு நகர வாழ்க்கையில் பரபரப்பாக நாள்தோறும்  ஓடிக் கொண்டேயிருக்கிறோம். காலச் சூழலுக்கு ஏற்ப நம்மையும் மாற்றிக் கொண்டு வாழப் பழகி விட்டோம். ஆயிரம் வசதிகள், வாய்ப்புகள் இருந்தபோதும், அந்த இனிமையான கிராம வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கம் என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது.

(தொடர்வோம்...)

 

 

No comments:

Post a Comment

#செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்) பங்கேற்று உரையாற்றிகிறேன். அனைவரும் வருக! •••• ச.பென்னிகுயிக் பாலசிங்கத்தின் பதிவு (ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்) *செண்பகவல்லி கால்வாய்---தாகம் தீர்க்குமா...!!!* 60 ஆண்டு காலங்களுக்கு மேலாக செண்பகவல்லி கால்வாய் தண்ணீருக்காக காத்துக் கிடக்கிறது தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள். மானாவாரி காடுகளுக்கு பெயர் பெற்ற கரிசல் காடுகளினூடாக ஏழெட்டு தலைமுறைகளாக பாய்ந்தோடி வந்த செண்பகவல்லி கால்வாய்த் தண்ணீர்,வேறு வழியேயின்றி இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 1965 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட நாளில் தொடங்கிய,விவசாயிகளின் போராட்டங்கள் இன்று வரை ஓயல்லை. இயல்பாகவே உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல,அது எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தாலும் அதை ஒருபோதும் மதித்து நடைமுறைப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு கேரளாவின் மீது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வரக்கூடிய குற்றச்சாட்டாகும். அது முல்லைப் பெரியாறாக இருக்கட்டும், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, மலம்புழா, நெய்யாற்றின்கரை அணை என எல்லாவற்றிலும் அவர்களுடைய ஆதிக்கம் சுதந்திரத்திற்கு பின்னால் கொடிகட்டிப் பறக்கிறது. 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இன்னமும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்திலுள்ள பரணில் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அந்த அடிப்படையில் தான் அது செண்பகவல்லி கால்வாயியையும் அணுகுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 40 ஆண்டு காலம் தொடர் சட்டப் போராட்டங்கள் நடத்தியும்கூட முல்லைப் பெரியாறு அணையில் அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறோம் ஐந்து மாவட்ட விவசாயிகள். ஒருவேளை செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழ்நாடு உரிமை கோருமோ என்கிற கவலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கோட்டமலை டிவிசன், மணலாறு டிவிஷன், மாவடி மற்றும் சுந்தரமலை டிவிஷன்களை பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிசனாக அறிவித்தது கேரள மாநில அரசு. சிவகிரியையொட்டி இருக்கும் இந்த சுந்தரமலை டிவிசன்தான், செண்பகவல்லி கால்வாயின் மையப் பகுதியாகும். அது இன்றைக்கு ஒரு புலிகள் காப்பகத்தின் அங்கமாக அறிவிப்பு செய்யப்பட்டு, வாசுதேவநல்லூர் அருகே இருக்கும் தரணி சர்க்கரை ஆலையிலிருந்து தலையணை செல்லும் வழியில் நிறுவனமயமாக்கப்பட்டிருப்பதும் நிதர்சனமான உண்மை. கிட்டத்தட்ட 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட பெரியார் புலிகள் காப்பகத்தில், செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கிழக்கு டிவிஷன் மட்டும் சுமார் 620 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. கொடுமை என்னவென்றால் இவையெல்லாம் முறையாக 1956 மொழிவழிப் பிரிவினையின் போது அளவீடு செய்யப்படாத பகுதிகளாகும். செண்பகவல்லி கால்வாய் இருக்கும் பகுதி தற்போது புலிகள் காப்பகத்தின் ஒரு அங்கம் என்கிற நிலையில் மறுபடியும் அதற்குள் சென்று நம்மால் கால்வாயை சீரமைக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. உலகமெல்லாம் நடக்கும் போர் அத்துமீறல்களால் கான்கிரீட் கட்டிடங்கள் எல்லாம் உடைந்து சிதறும் நிலையில், கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் பாசனப்பரப்புக்காக நாம் சீரமைக்கச் சொல்வது மொத்தமுள்ள 1603 மீட்டரில், வெறும் 400 மீட்டர் நீள கட்டுமானம் மட்டுமே. தென்காசி மாவட்டத்தில், மேற்குப் பகுதியில் மட்டும் செழித்துக் கிடக்கும் வாசுதேவநல்லூரை உள்ளடக்கிய சிவகிரி தாலுகா, எப்போதும் வறண்டு கிடக்கும் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகாக்கள்... விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்தூர் தாலுகாக்கள்... எப்போதும் வறண்டு கிடக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்கள்... என செழித்து கிடக்கும் மக்கள் தொகையும், பரப்பளவும் எதிர்காலத்தை நினைத்து பயந்து கிடக்கிறது. நிலத்தடி நீரே குதிரைக் கொம்பாகியிருக்கும் காலகட்டத்தில், செண்பகவல்லி கால்வாய் தண்ணீர் மறுபடியும் பாய்ந்தோடி வந்தால் அத்தனை ஊரும் கூமாபட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கேரளா இந்த செண்பகவல்லி கால்வாய் உடைப்பை சரி செய்வதற்கு அனுமதிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நம்முன் எழுந்து நிற்கிறது. வருடத்திற்கு 2,700 டிஎம்சி தண்ணீரை கடலுக்குள் கொண்டு போய் சேர்க்கும் கேரளா, போகிறபோக்கில் இந்த தமிழகத்திற்கு 100 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது இந்த அப்பாவிகளுடைய இயலாக் குரல்கள். காது கொடுத்து கேட்கத்தான் கேரளாவில் யாரும் இல்லை. இந்த நிலையில் கால்வாய் அருகே ஒரு தங்குமிடத்தை அமைத்திருக்கும் பெரியார் புலிகள் காப்பகம்,அங்கு செல்வதற்கு கேரளாவின் வழியே பயண வழி இல்லாததால்,புலிகள் காப்பகத்தின் தலைமையகமான தேக்கடியில் இருந்து கம்பம் தேனி ஆண்டிபட்டி உசிலம்பட்டி பேரையூர் திருவல்லிபுத்தூர் ராஜபாளையம் சிவகிரி வாசுதேவநல்லூர் வழியாக வாகனங்களில் தன்னுடைய வனத்துறை பணியாளர்களை 10 நாட்களுக்கு ஒரு முறை அழைத்து வரும் பெரியார் புலிகள் காப்பகம், அவர்களை தலையணை முகாமில் தங்க வைத்த பிறகுதான், செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழக வனப் பகுதி வழியாக செல்ல அனுமதிக்கிறது. ஆனால் அந்த செண்பகவல்லி கால்வாய் இருக்கும் வனப்பகுதிக்குள், தமிழக வனத்துறையினர் செல்வதற்கு தடை இருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். ஆயுதங்களை தூக்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள தேனி மதுரை விருதுநகர் மாவட்டங்களின் வழியாக தென்காசி மாவட்டத்திற்குள் புகுந்து 5,000 அடி உயரத்தில் இருக்கும் செண்பகவல்லி கால்வாய்க்கு ஆயுதங்களை தாராளமாக கொண்டு செல்கிறார்கள் பெரியார் புலிகள் காப்பக வனத்துறை பணியாளர்கள். கேட்பதற்குத்தான் நாதிகளற்றுக் கிடக்கிறோம். இதுகுறித்து தமிழக அரசியல்வாதிகள் எந்த நிலையிலும் வாயே திறக்கவில்லை என்பது கசப்பான உண்மை.விதிவிலக்குகளும் இருக்கிறது. அரிதினும் அரிதானவராக வழக்கறிஞர் அண்ணன் கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் இதற்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த செண்பகவல்லி கால்வாய் பிரச்சனை மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுக்குமானால், அரசியல்வாதிகளால் ஊருக்குள் நடமாட முடியாது என்பதை இந்த விவசாய சமூகம் செய்து காட்ட வேண்டும். இந்த நிலையில் வரும் பத்தாம் தேதி சிவகிரி அருகே இருக்கும் தென்மலை கிராமத்தில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒரு மாநாடு போல செண்பகவல்லி கால்வாய் மீட்பு போராட்டம் நடக்கவிருககிறது. முன்னத்தி ஏர்களாக அந்த ஒருங்கிணைப்புக்கு பணியை முன்னின்று செய்து வரும் அத்தனை பேருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சொல்லி... நீண்ட காலமாக அந்தப் பகுதியில் செண்பகவல்லி கால்வாய்க்காக போராடிய இடையன்குளம் அண்ணன் ஜெயக்குமார் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் அண்ணன் கருணாநிதி போன்றவர்களையும் அழைத்திருக்கலாமா என்று முடிக்கிறேன். நன்றி ச.பென்னிகுயிக் பாலசிங்கம் ஒருங்கிணைப்பாளர் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

  #செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்) ப...