——————————————————————
மறைந்த முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞரை நான் முதன் முதலில் அறிமுகம் 1978. ஆம் வருடம்.ஏறக்குறைய 47 வருடங்களுக்கு முன்பாக அறிமுகம். என்னைப் பிரியமாக ராதா என்று அழைப்பார். ஏதேனும் விடயங்கள் தேவையெனில் அதிகாலை என்னைத் தொலைபேசியில் அழைத்து விவரங்கள் கேடட்பார்.
நான் திமுகவில் இல்லாவிட்டாலும் கூட அவருடனான பழக்கம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. எனக்கும் தொடர்ந்து 30 ஆண்டுகள் திமுகவில் இருக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவருடன் இருந்தவரை கட்சிப் பணியில் அவர் மகிழ்ச்சி கொன்ட அளவில் என்னளவில் இயங்கி வந்தேன் ஈழத்தமிழர் பிரச்சனையாக (TESO1&2, ஐநா மன்றம் என )இருந்தாலும் ஜெயலலிதா வழக்கு போன்றவையாக இருந்தாலும் இது போன்ற முக்கிய பல்வேறு வகையான பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் எனக்கு தைரியம் வழங்கி பேசி அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சொல்வார். அவரது நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நானும் அதைச் செய்து கொடுத்திருக்கிறேன். அந்தப் பணியை நான் செய்து முடித்த பிறகு மனம் திறந்து பாராட்டுவார்.
ஆனாலும் என்னுடைய விஷயத்தில் எனக்கு ஏதேனும் செய்ய நினைக்கும் போது அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன. இருந்தாலும் அவரின் மறைவு காலம் வரை திமுகவில் நீடித்தேன். அந்த வகையில் என் மீது அவரது அன்பு இருந்தது. என் திருமணத்திற்கும் வந்து வாழ்த்தினார். என் துணைவியார் இறந்த போதும் நான் நேரில் வருகிறேன் என்று சொன்னார். நான் தான் வேண்டாம் நீங்கள் சிரமப்பட வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இப்படி எல்லாம் என் மீது அக்கறையாக இருந்தவர். ஒரு சில நேரங்களில் “அப்பா உனக்கு நான் சிலவற்றை செய்ய எண்ணி இருந்தேன் செய்ய முடியவில்லையே! ஆனால் நான் போவதற்குள் உனக்கு ஏதேனும் ஒன்றைச் செய்து விட்டு தான் போவேன்” என்றும் சொல்லி இருந்தார். இப்படி பல நிகழ்வுகள்….
அவருடைய இந்த உளப்பண்பினால் தான் எனக்கு திமுகவில் என்ன நடந்தாலும் அவருடன் கூட இருப்பதில் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். என் தகுதிக்கும் திறமைக்கும் அவர் கொடுத்த மதிப்பு முக்கியமானதாக இருந்தது . அவர் மீது பலர் பல வகையான விமர்சனங்களைச் செய்வார்கள் அது ஒருபுறம் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில் அவரது அக்கறை உண்மையாக இருந்தது.? நான் அதிகமாக பேசுகிறேன் எதையோ அதிகமாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் நான் கலைஞருடன் அறிமுகமான காலத்தில் அவருடன் கூட இருந்தவர்கள் இன்றைய முதல்வராக இருக்கக் கூடிய ஸ்டாலின் மற்றும் வைகோ,மு.கண்ணப்பன், பொன் முத்துராமலிங்கம்,துரைமுருகன் , திருத்துறைப்பூண்டி கல்யாணசுந்தரம் போக அப்போது டி ஆர் பாலு கூட ஆர் டி சீதாபதியின் கீழ் மாவட்டத் துணைச் செயலாளராக இருந்தார். இப்படி சிலர் 1978 இருந்தவர்கள் இன்று உள்ளனர்.இதை வைத்துப் பார்க்கும் பொழுது எனக்கும் கலைஞருக்கும் இருந்த நெருக்கம் பலருக்கு புரிபடும். இங்கு பல விஷயங்களை என்னால் வெளிப்படையாகப் பேசி விட முடியாது.இருந்தாலும் கலைஞர் மாற்று கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி அவர்கள் சொல்லுவதை மதிக்கக் கூடியவரும் அனுசரித்துப் போகக் கூடியவரும் அரவணைக்க கூடிய பண்பும் உள்ளவர் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
நான் கோபாலபுரம் போனால் மாடியில் அவர் படுக்கை அறையில் சாதாரணமாக மார்பில் துண்டைப் போர்த்தியபடி அமர்ந்திருக்கக் கூடிய நிலையிலும் கூட என்னை அருகே வைத்து பேசுவார். அந்த வகையில் நான் எப்போது போனாலும் மிக எளிமையாக என்னிடம் எல்லா விஷயங்களையும் பேசிக்கொள்ளும் படியான உரிமையைக் கொடுத்திருந்தார். மற்ற எந்த ஒரு தலைவருக்கும் கூட இப்படி ஒரு நெருக்கத்தை அவர் கொடுக்கவில்லை. வேறு யாரும் அவரிடம் இத்தகைய உரிமைகளை எடுத்துக் கொள்ளவும் முடியாது. அவர் வாழ்ந்து முடிந்த ஒரு அரசியல் ஆவணம். கலைஞர் தமிழக அரசியலில் ஒரு சகாப்தம் என்றே சொல்லுவேன். கலைஞர் போல ஏனோ என்னை ஸ்டாலின் அறியவில்லை. இது குறித்து எனக்கு அக்கறையும் இல்லை.
No comments:
Post a Comment