Sunday, January 24, 2016

இலங்கை வானொலி

இலங்கை வர்த்தக ஒலிபரப்பு எந்நாளும் நீங்கா நினைவுகளாக பரிணமித்துவிட்டன.  அறுபதுகளில் தெற்கு மாவட்டங்களில் இலங்கை வானொலி பாடல்கள்தான் செவிக்கு இனிமையான கீதங்களாக திகழ்ந்தது.  எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புக்கு கர்த்தவாக திகழ்ந்தார்.  1967 ஜனவரி மாதம் 5ம் தேதி இலங்கை வானொலி கூட்டு ஸ்தாபனமாக மாற்றம் செய்யப்பட்டது.  இலங்கை வானொலி நிலையம் ஆசியாவின் பிரதான வானொலி நிலையமாக திகழ்ந்தது.  பி.பி.சி. வானொலி ஆரம்பிக்கப்பட்ட உடன் 1922 ல் இலங்கையில் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.  இரண்டாம் உலகப்போரின்போது, இலங்கை வானொலி செய்திகள் கிழக்காசிய நாடுகளுக்கு உலகப்போரின் நிலைமைகளை எடுத்துச்செல்லும் ஊடகமாக அப்போதே திகழ்ந்தது.  இலங்கை விடுதலை பெற்றபின் 1949ல் இலங்கை வானொலி என்று மாற்றம் பெற்றது.  இந்த வானொலி உருவாக்கப்பட்ட வர்த்தக சேவை, தமிழ் பாடல்கள் ஒலிபரப்பு முக்கியமாக இலங்கை தமிழர்களும், தென்மாவட்ட தமிழகர்களும் பயன்பெற்றனர். இதற்கென தனி ரசிகர்களே அறுபதுகளில் இருப்பார்கள்.  நேயர் விருப்பத்திற்கு தங்கள் பெயர்களை பாட்டு ஒலிபரப்புவதற்கு முன்னால் அறிவிக்கவேண்டும் என்று விரும்பியதெல்லாம் உண்டு.  தன் குரலால் மக்களை ஈர்த்த அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ். ராஜு ஆகியோர்களையெல்லாம் மறக்கமுடியுமா.  அவர்களது உச்சரிப்பை இன்றைக்கும் நினைவுகள் உள்ளன. பாட்டுக்குப் பாட்டு, ஒரு நிமிட தமிழ், அன்றும் இன்றும், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, புதுவெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசையும் கதையும், இரவின் மடியில் என்ற நிகழ்ச்சிகளில் எப்படி அருமையான பாடல்களை தமிழர்களுக்கு தந்து வழங்கினர். நிகழ்ச்சியை தொகுப்பதும், நல்ல தூய தமிழும், மறக்க முடியாதவை.  கவிஞர் கண்ணதாசன் மறைந்தபோது இலங்கை வானொலி தனி நிகழ்ச்சியை நடத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

இந்த நிகழ்ச்சி தொகுப்பாளருடைய பேச்சு, அறிவிப்பாளருடைய கற்பனை ஆற்றல் போன்றவற்றை எப்படி மறக்க முடியும்.  இலங்கை வர்த்தக வானொலி என்றைக்கும் மறக்க முடியாத ஒலிபரப்பு தாரகை. எத்தனை தொலைக்காட்சிகளும், ஊடகங்கள் இசைகள் இருந்தாலும், 48 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கை வானொலியில் கேட்ட கீதங்களுக்கு ஒப்பானது எதுவும் கிடையாது. அப்போது பாடல்களை கேட்டாலே, தொலைக்காட்சியில் பார்ப்பது போன்று அந்த பாடல் காட்சிகள் மனதில் கற்பனையாக படமாக ஓடும். அந்த சக்தியை இலங்கை வானொலி வழங்கியது.  இதற்காகவே கடன் வாங்கியாவது டிரான்சிஸ்டர்கள், மின்சார வசதி உள்ள வீடுகளில் வானொலி பெட்டிகளை வாங்குவது உண்டு.  குறிப்பாக பிலிப்ஸ், மர்ஃபி ரேடியோக்கள் பிரபல்யம்.

அந்த காலத்தில் நெல்லை மாவட்ட கிராமங்களில் ஒரு வீட்டில் ஹெர்குலஸ் சைக்கிள் இருக்கின்றதா? ரலே சைக்கிள் இருக்கின்றதா? டேபிள் ஃபேன் இருக்கின்றதா? பிலிப்ஸ் ரேடியோ இருக்கின்றதா? மர்ஃபி ரேடியோ இருக்கின்றதா? என்பது ஒரு முக்கிய விசாரிப்பாக இருக்கும்.  மர்ஃபி ரேடியோவினுடைய டிரேட் மார்க் அடையாளமாக ஒரு சிறுவன் விரலை உதட்டுப் பக்கத்தில் வைத்துக்கொண்டிருப்பது ரசிக்கக் கூடியதாக இருக்கும்.  இப்படியாக கிராமங்களில் சிலோன் ரேடியோ என்று சொல்லி பேசிக்கொள்வது வாடிக்கை. சென்னை வானொலி நிலையம், திருச்சி வானொலி நிலையம் இருந்தாலும், இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பின் தமிழ் முழக்கம், தென் தமிழ்நாட்டை கட்டிப்போட்டதால், ஈழத் தமிழர்களின் உறவும் நம்மோடு கலந்துவிட்டது.  இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு ஒரு மறக்க முடியாத அத்தியாயமாக தமிழர்களுடைய வாழ்வியலோடு பின்னி பிணைந்தது.

No comments:

Post a Comment

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*  ———————————— From: OHCHR-UN Human Rights <ohchr-media@un.org> Sent: Friday,...