நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள்
அத்தியாயம் - 17
வட்டார நாட்டுப்புறக் கூறுகள்
ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வியல், பழக்கவழக்கங்கள், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், சடங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதை ‘வட்டார நாட்டுப்புறக் கூறுகள்’ என்பார்கள். அந்த வட்டாரத்தின் சிறப்பினை வெளிப்படுத்தும் கூறுகளாக இவை
அமையும்.
அன்றைய மக்களிடையே புழக்கத்தில் இருந்த உறவு முறைச் சொற்கள்
இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளன. அம்மன், அப்பன், மாமன், அக்கை, அண்ணன், தாத்தன், அய்யன் ஆகிய சொற்களில் அம்மா, அப்பா, மாமா, அக்கா, அண்ணா, தாத்தா, ஐயா என்று உறவுகள் முறைகள் காலம்காலமாக தொடர்ந்து வருகின்றன என்று ‘பண்பாட்டு வழக்கில் உறவு
முறை சொற்கள்’ என்ற நூலில் அதன் நூலாசிரியர் முனைவர்
நா.சுலோச்சனா குறிப்பிட்டுள்ளார்.
உறவு முறைகளைப் பொறுத்தவரை, மதத்தைக் கடந்து, அதாவது இஸ்லாமியர்களை ‘மாமா’ என்று கூப்பிடுவது உண்டு. அதேபோல் சாதிகளைத் தாண்டி அண்ணாச்சி, சின்னய்யா, பெரிய அய்யா என்று அழைப்பதும் உண்டு. தெருப் பெயர்களிலும் ஊர்ப் பெயர்களிலும்
அன்றைக்கு சாதிப் பெயர்கள் இருந்தாலும், சாதியைக் கடந்த அன்பால், இவ்வாறு உறவோடு அழைக்கப்பட்டனர்.
உறவு முறை சொற்கள் வட்டார வடிவில் உம்மா - அம்மா, உம்மம்மா - பெரியம்மா, லாத்தா, ராத்தம்மா - அம்மாவின்
சகோதர சகோதரிகள், சாச்சி - அம்மாவின் தங்கை, ராத்தா - அக்கா, காக்கா - அண்ணன், சாச்சப்பா - சாச்சா, சின்ன வாப்பா - தந்தையின் சின்ன சகோதரர், பெரிய வாப்பா, பெருத்தா - தந்தையின்
பெரிய சகோதரர், வாப்பம்மா - தந்தையின் தாய், தாத்தா - அப்பாவின் தந்தை, நன்னத்தா - அப்பா, நானி, நென்னிம்மா - அம்மாவின் அம்மா, மாமி - தந்தையின் சகோதரி, காளா - அம்மாவின்
சகோதரர், மச்சி - அண்ணாவின் மனைவி - இவையெல்லாம் சங்கரன்கோவில் இஸ்லாமிய மக்களிடம்
உள்ள உறவு முறைகள்.
ரம்ஜான் பண்டிகை வந்து விட்டால், சங்கரன்கோவிலில் இருந்து இஸ்லாமிய அன்பர்கள் எங்கள் வீட்டுக்குப் பிரியாணியை தவறாமல்
அனுப்பி விடுவார்கள். மதம் - உறவு முறைகளைத் தாண்டி இந்த அன்பு வெளிப்பட்டது. இன்றைக்கு அதெல்லாம் காணாமல் போய்விட்டது.
சாதிப் பெயர்கள் சாலைகளுக்குக் கூடாது என்று சொன்ன பிறகுதான்
அதாவது 1993-க்குப் பிறகுதான் சாதிச் சண்டைகள் தொடங்கின. .
எங்கள் வீட்டில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சீனி அவருடைய
தம்பி ராமன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். எங்கள் தந்தையார் கே.பி.சீனிவாசன் மறைந்தபோது, இடுகாட்டில் நடைபெற்ற கொள்ளி
வைக்கும் சடங்கில் எங்களுடன் இணைந்து அவர்களும் பங்கேற்றனர்.
ஆன்மீகப் பெரியோரின் தொண்டுகள்
காஞ்சிபுரம் காஞ்சி
சங்கரமடத்தின், 71-வது மடாதிபதியாக சத்ய சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சுவாமிகள் தற்போது பொறுப்பேற்றுள்ளார். திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனத்துக்கு அதிகமான ஆதீனகர்த்தர்களை வழங்கியது நெல்லை மாவட்டம்தான். அதேபோல் வைணவத்தில் நாங்குநேரி, திருக்குறுங்குடி, ஆழ்வார்திருநகரி போன்ற ஜீயர் மடங்கள் முக்கியமானவை. ஆழ்வார்திருநகரியில்தான் மணவாள மாமுனிகள், நம்மாழ்வார் அவதரித்தனர். பெருங்குளத்தில் உள்ள செங்கோல் ஆதீனம், ஆண்டாண்டு காலமாக சைவத்தை வளர்த்து வந்த ஆதீனமாகும். இந்த ஆதீனங்கள் சைவத்தையும்,
தமிழையும் போற்றி
வளர்த்தன.
அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர் ஸ்ரீரமண மகரிஷி
ஆவார். ரமண மகரிஷி பிறந்ததும் கரிசல் காடுதான்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழியில் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாக அவதரித்தார். திருவண்ணாமலையில்
அமைந்துள்ள, ஸ்ரீ ரமண ஆசிரமம் உலகப் புகழ் பெற்றதாகும்.
குறிப்பாக, திருவாவடுதுறை, தருமபுர ஆதீனத்தின் தமிழ்ப்பணிகள் அளவிட முடியாதவை. திருவாவடுதுறை ஆதீனத்தில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். அங்குதான் உ.வே.சா.
திருவாவடுதுறை ஆதீனத்தின் 16-வது குரு மகா சந்நிதானமாக 1869 முதல் 1888-ஆம் ஆண்டு வரை இருந்தவர் சுப்பிரமணிய தேசிகர் ஆவார். இவரின் இளவல்தான் தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான திருக்குற்றாலக்
குறவஞ்சியை பாடிய திரிகூடராசப்பக் கவிஞர் .
கிறித்தவர்களில் குறிப்பாக புனித சவேரியர் உலாவிய மண் மணப்பாடு. பாளையங்கோட்டையில் இடையன்குடி, குருக்கள்பட்டி போன்ற பல இடங்களில் கிறித்துவ பாதிரிமார்கள்
கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றவர்கள் கிறித்துவ
மார்க்கத்தைப் பரப்பினர். அதோடு, பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தனர். குறிப்பாக பாளையங்கோட்டையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்டவைதான்.
இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரை, சதக்கத்துல்லா அப்பா, பீர் முகம்மது போன்றவர்கள் இறை பணியாற்றினார்கள். இவர்களின் தர்காக்களுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்து
மக்களும் சென்று வருகின்றனர். பொட்டல்புதூர், தென்காசி, மேலப்பாளையம், காயல்பட்டினம், கடையநல்லூர் போன்ற பல இடங்களில் நிறைந்து வாழும் இஸ்லாமியர்கள், இறை பணியோடு கல்விப் பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
சைவம், வைணவம் மட்டுமல்ல, கிறித்துவம், இஸ்லாம் மார்க்கங்களும் நெல்லை மாவட்டத்தில் தழைத்தோங்கியிருந்தன
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்து - இஸ்லாம் - கிறித்தவ மதத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்கள்,
ஆன்றோர், சான்றோர் மதத் துவேஷத்துக்கு இடம் தராமல் தங்களுடைய கருத்துகளை, மக்களிடம் போதித்தார்கள்.
காஞ்சி மகாப் பெரியவர் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி
சுவாமிகள் திருவிடைமருதூரில் கடந்த 1950 டிச.25-ல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, மத ஒற்றுமை பற்றி
பின்வருமாறு கூறினார்:
‘‘புனிதமான கங்கை நதி கிழக்கு நோக்கி ஓடுகிறது. நர்மதை
மேற்கே செல்கிறது. மகாநதி தெற்கிலிருந்து வடக்கே செல்கிறது.
பல நதிகள் பல திசைகளில் ஓடுகின்றன. எல்லாம் முடிவில்
கடலில் கலக்கின்றன. சேரும் இடம் ஒன்றே; அவை எங்கு போனாலும் கடலும் அவைகளைச் சூழ்கிறது. அதைப்போல
நாம் பல வழிகளில் இறைவனை வழிபடுகிறோம். பாதைகளில் வேற்றுமை உள;
ஆட்கொள்ளும் வஸ்து ஒன்றே. பல வழிகளில் இறைவனை அடைய
நாம் முயற்சிக்கலாம். ஆனால் வேற்று வழிகளில் செல்கையில் ஒற்றுமையை
மறந்து கடவுளின் ஏகத்துவத்தைக் கைவிடக் கூடாது’’ என்று கூறினார்.
திருமூலர் அருளிய திருமந்திரத்தில் (2066) ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்றும், கனியன்பூங்குன்றனார் புறநானூறு
(192) பாடலில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்றும், தாயுமானவர் ‘அங்கு
இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி’ என்றும்,
குணங்குடி மஸ்தான் ‘அங்கும் இங்கும் என ஒண்ணா அகண்ட பரிபூரணமாய்
எங்கும் நிறைந்த இறையே நிராமயமே’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மதங்களைக் கடந்து மக்களின் ஒற்றுமை
ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை
எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கிய
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இன்றைக்கு லட்சக்கணக்கான மக்களால் கொண்டாடப்பட்டு
வருகிறார். அவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்து
மரியாதை செலுத்துகிறது. பசும்பொன்னில் அக்டோபர் மாத இறுதியில்,
3 நாட்கள் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்
இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், அபிஷேகம் செய்தல் என கொண்டாடி வருகின்றனர்.
அத்தகைய பெருமை வாய்ந்த முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் தாயார் இந்திராணி
அம்மையார், பசும்பொன் தேவர் பிறந்த 6-வது மாதத்தில் இறந்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் போல் சாயல் உள்ள ஓர் இஸ்லாமியப் பெண்மணியால் தேவர்
திருமகனார் வளர்க்கப்பட்டார். பிற்காலத்தில் அந்த அம்மையார் கயத்தாறில்
வாழ்ந்து வந்தார்.
பசுமலை, பார்வர்டு பிளாக் துணைத் தலைவர்
தம்முடைய பசும்பொன் தேவரின்
வாழ்க்கை வரலாறு கட்டுரையில் கூறும்போது, ‘‘தேவர் தமது வாழ்நாளில் பல முறை அந்த அம்மையாரைப்
போய்ப் பார்த்து, அவருக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்தார்’’
என்று குறிப்பிட்டுள்ளார்.
சீறாப்புராணம் பாடிய உமறுப் புலவரின் அடக்கஸ்தலம் எட்டயபுரத்தில் உள்ளது. திறந்தவெளியில் இருந்த அந்த அடக்கஸ்தலத்திற்கு கட்டிடம் எழுப்பிச்
சிறப்பித்தவர் பிச்சையாக் கோனார் ஆவார்.
எட்டயபுரத்தில் வாழும் யாதவர், தேவர் இன மக்கள் தம் பிள்ளைகளுக்கு ‘உமறு’ என்று பெயரிடுகின்றனர். உமறுக் கோனார், உமறுத் தேவர், உமறம்மாள் என்ற பெயரில் பலர் இப்பகுதியில்
இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
திருநெல்வேலிக்கு அருகேயுள்ள மியான் பள்ளியில் செய்யது அப்துல் கரீம் மியான் வலி
என்னும் மகானின் சமாதி (தர்கா) உள்ளது. இதற்கு ராணி மங்கம்மாள் மானியம் வழங்கியுள்ளார்.
நெல்லை மாவட்டம் வீராணத்தில் பள்ளிவாசலுக்கு,
1776-ம் ஆண்டில், சேகு சேர்வை என்பவர் மூலமாக மானியம்
வழங்கியவர் ஊத்துமலை ஜமீன்தார் சின்ன நயினார்த் தேவர் என்ற மருதப்ப தேவர் ஆவார்.
தென்காசியில் உள்ள அகமதுபேட்டையில் ஏற்றுமதி - இறக்குமதி பொருளை வியாபாரம் செய்யும் மணியம் இசுமாயில் ராவுத்தர் உள்ளிட்ட
இஸ்லாமிய வணிகர்கள் அனைவரும் குற்றாலத்தில் அருள்பாலிக்கும் குற்றாலநாதசுவாமி திருவிழாப்
பூசைக் கட்டளைக்கும், திருநெல்வேலி காந்திமதி அம்மனின் சிறுகாலைச்
சந்திக் கட்டளைக்கும் கொடுத்த மகமைக் கொடையைப் பற்றிய செப்பேடு கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தச் செப்பேட்டை எழுதியவர் மாடன் செட்டியார். தானாதிபதி அம்மைநாதன் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார். முஸ்லிம்கள் சார்பில் இசுமாயில் ராவுத்தர் கையொப்பமிட்டுள்ளார். கோயில் கார்பாரு சந்திர குமாருப் பிள்ளை செப்பேடு செய்து வைத்தார்.
இரண்டு செப்பேடு தயார் செய்து குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலுக்கும்,
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நன்கொடையை 1795-ம் ஆண்டில் இஸ்லாமிய வணிகர்கள் அளித்ததாக அந்த செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்காசி அகமதுபேட்டை வணிகர்கள் மட்டும் அல்லாமல், செங்கோட்டை, புளியரை, பண்பொழி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை,
சுரண்டை முதலிய ஊர்ச் சந்தையில் வியாபாரம் செய்யும் முஸ்லிம் வியாபாரிகளும்
இம்மகமையை மாதா மாதம் அளித்தனர் என்றும் இச் செப்பேடு கூறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு விஜய நாராயணத்தில் ஆடி மாதம் 16-ம் தேதி நடைபெறும் கந்தூரி விழா, மக்களின் ஒற்றுமை விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சாதி மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மதத்தினரும், சாதியினரும் இங்கு கூடுகின்றனர்.
அவர்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக இக்கிராமத்தில் உள்ள செய்யது
முஹம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை அப்பா தர்கா அமைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இந்த கந்தூரி விழாவுக்கு
வருகின்றனர். மும்பையில்
இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்கூட வருகின்றனர். கந்தூரி விழாவுக்கு வரும் இஸ்லாமியர்கள்
தங்குவதற்கு இக்கிராமத்தில் வசிக்கும் தேவர் சமுதாயத்தினர் தங்களது வீடுகளை ஒதுக்கிக் கொடுக்கின்றனர். ஏழை, பணக்காரர்
என்ற வித்தியாசமின்றி கிராமத்தில் உள்ள குடிசைகள், ஓட்டு வீடுகள்,
பங்களாக்கள் என அனைத்து வீடுகளிலும் இஸ்லாமியர்கள் தங்குகின்றனர்.
விழா நடைபெறுவது ஆடி 16-ம் தேதி என்றாலும்,
2 - 3 நாள்களுக்கு முன்பாகவே இஸ்லாமிய குடும்பங்கள் குவியத் தொடங்கி
விடுவார்கள். அவர்கள் திரும்பிச் செல்லும் வரை கிராமத்தில் உள்ள
தேவர் சமுதாயத்தினர் சகோதர பாசத்துடன் பழகுகின்றனர். அவர்களுக்குத் தேவையான
அனைத்து உதவிகளையும் செய்கின்றனர்.
அதோடு, இந்த கந்தூரி விழாவையும் தேவர் சமுதாயத்தினரே
முன்னின்று நடத்துகின்றனர். விழாக் காலத்தில் கிராமத்தில் மதுபானம்
அருந்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பிற சமுதாய மக்களும் ஒன்றிணைந்து
இந்த கந்தூரி விழாவை சீரும் சிறப்புமாக நடத்துகின்றனர்.
சாதி, மத துவேஷங்கள் அன்றைக்கு
இல்லை. ஆனால் இன்று எல்லை மீறிப் போவது மனவருத்தத்தைத்
தருகிறது.
(தொடர்வோம்....)
No comments:
Post a Comment