Monday, June 2, 2025

நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் அத்தியாயம் - 18

 நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் 

அத்தியாயம் - 18

 

நெல்வகைகளைக் குறிப்பிடும் எட்டயபுர பள்ளு

 

எட்டையபுரம் பள்ளு’ என்ற இலக்கியத்தைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன். பலர் இதை அறியாமல் இருக்கலாம். இதில் நாட்டுப்புறக் கூறுகள் அதிகமாக உள்ளன.

குறிப்பாக, நாம் ஆண்டாண்டு காலமாக விதைத்து வந்த நெல் வகைகளைப் பற்றி தெளிவாகச் சொல்லியுள்ளது. இந்த நெல் வகைகளை யாருக்கு நன்கொடை தர வேண்டும் என்றும் இந்த பள்ளுவில் குறிப்பிடப்பட்டுள்ளது..

ஒரு காலத்தில் தமிழகத்தில் எட்டயபுரம் சமஸ்தானத்தில் எத்தனை நெல் வகைகள் இருந்தன என்பதை ‘எட்டயபுரம் பள்ளு’ பாடலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

எட்டயபுரம் பள்ளு என்ற இந்த நூலைப் பாடியவர் நாகூர் முத்துப் புலவர் என்பவர். இப்புலவர் சோழ நாட்டைச் சேர்ந்த தஞ்சைக்கு அடுத்திருக்கும் கடற்கரை நகரான நாகூர் ஊரைச் சேர்ந்தவர். பாட்டுடைத் தலைவன் மீது மட்டும் அல்லாது அவனது முன்னோரான ‘வெங்கடேசுவர எட்டப்ப பூபதி’ என்பார் மீதும் செய்யுள்கள் பாடியுள்ளார் என உ.வே.சா. கூறுவார்.

இப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவர் காலத்தவர். இக்கடிகை முத்துப் புலவர் கி.பி.1705 முதல் கி.பி.1725 வரை, ஆட்சி புரிந்து வந்த ‘ஜெக வீரராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கர்’ காலத்தவர் என அறிய முடிகிறது.

குமார எட்டேந்திரன் அவையில் முதன்மைப் புலவராக இவர் விளங்கினார். நாகூர்  என்பது இன்றைய நாகப்பட்டினமாகும். அன்னை வேளாங்கண்ணியின் திருக்கோயிலும், இஸ்லாமியர் போற்றும் புனித பள்ளிவாசலும் பெற்று இன்று இவ்வூர் ஆன்மிகச் சிறப்பு மிக்க ஊராக விளங்குகிறது.

ஏட்டின் முன்னோ அல்லது பின்னோ நூல் எழுந்த காலத்தையோ அல்லது படி எடுத்த காலத்தையோ  குறிப்பிடப்படாததால், கலைக்களஞ்சியக் குறிப்பின்படி இந்நூலின் காலம் கி.பி.19-ம் நூற்றாண்டு என கருத முடிகிறது.

நெல் அளந்த குறிப்பு

எட்டையபுரப் பள்ளுவில் எட்டயபுரம் அரண்மனை நெல் திருக்கோயில்கள், தமிழ்ப் புலவர்கள், ஆன்றோர், சான்றோர் என  யார் யாருக்கு நல்கையாக (அன்பளிப்பாக) அளக்கப்பட்டது என்பதற்கான சில குறிப்புகள் காணப்படுகின்றன. எட்டையபுர சமஸ்தான வரலாற்றை அறிவதற்குக் இக்குறிப்புகள் பெரிதும் தரவுகளாக அமைந்து துணை செய்யும்.

இக்கணக்கை எழுதுபவன் தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும்போது,

"கண்டிடும் நெல்லுக்கும் புல்லுக்கு முள்ள

கணக்கு நா(ன்) சொல்லுறே னாண்டே"

எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

அதைத் தொடர்ந்து, அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

எட்டீசுபரர் பூசைக்குச் சீரகச் சம்பா நெல்லில் நாலாயிரங் கோட்டை நெல்லை அம்மை நாத பட்டர் என்ற கோயிற் பூசாரியிடம் அளித்ததாகவும் ராமவெங்கடாசல விட்ணு ஆலயத்திற்குச் சம்பா நெல் ஆயிரங்கோட்டை திருமலை அய்யங்கார் வசம் அளந்ததாகவும், சாத்தூர் பெருமாள் படித்தரப்பூசை, காலம் தவறாமல் நடைபெற அரசரின் ஆணைப்படி ஆயரங்கோட்டை நெல்லை, கஸ்தூரி வாணன் பால் அளந்ததாகவும், விண்ணோர் போற்றும் கழுகாசலக் குகவேளுக்கு பூந்தாளைச் சம்பா நெல், அண்ணாப்பட்டர் வசம் ஆயிரங்கோட்டை அளந்ததாகவும், ஆதிவெயிலு வந்தாள் அன்னை முப்பிடாரியலங்காரி கோயிற்கு ஐநூறு கோட்டை நெல் பண்டாரத்திட்டம் அளந்ததாகவும், மங்காத கீர்த்தி பெறு எட்டையபுரத்தங்காள் நாயகிக்கென முன்னூறு கோட்டை நெல்லைப் பூசாரி அங்கணன் வசம் அளந்ததாகவும், தவசித்தம் பிரானுக்கு உரிய பூசைகள் நடைபெற நல்கையாக சுப்பன் பண்டாரம் வசம் ஆயிரங் கோட்டை ராசவெள்ளை நெல் அளந்ததாகவும்,

குல தெய்வமான சக்கதேவிக்கு ஆனைக் கொம்பன் நெல் முன்னூற்றைந்து கோட்டை அளந்ததாகவும், காசி நகர்தனில் வாசம் செய்யும் விசுவேசருக்கு நித்திய பூசை நடைபெற ஆயிரங்கோட்டை நெல் போசனச் சம்பா அளந்ததாகவும், புனித நீராடுதலுக்குரிய தமிழகத்தின் தலைசிறந்த தலமான தனுக்கோடி சிவராமலிங்கர் ஆலய பூசைக்காக பிள்ளைச் சம்பா ஆயிரங்கோட்டை நெல் அளந்ததாகவும், இரத்தினகிரிக் கோவிற் கட்டளைக்கென எண்ணூறு கோட்டை மிளகி நெல்லை சிவாலயப் பண்டாரத்திடம் அளந்ததாகவும், மதுரையில் எழுந்தருளியிருக்கும் சொக்கர் மீனாட்சி ஆலயத்திற்கு குங்குமச் சம்பா நெல்லில் எண்ணூறு கோட்டை நெல் மீனாட்சிநாத பட்டர் வசம் அளந்ததாகவும், தென்பாண்டி நாட்டில் ஆழ்வார்திருநகரில் எழுந்தருளியுள்ள பெருமாள் கட்டளைக் கென, பூந்தாழை நெல்லில் நானூறு கோட்டையை நல்கையாக சேஷயங்கார் வசம் அளந்ததாகவும்,

நெல்லையில் கோயில் கொண்டுள்ள நெல்லை நாயகர் உடன் உறை காந்திமதி கோயிலுக்குக் கட்டளையாக ஆயிரங்கோட்டை புழுகுச்சம்பா நெல்லை வாடிக்கைப்படி அளந்ததாகவும், புனைவனச் சங்கரேசுபவர் கோயிலுக்கு நித்திய பூசை வேண்டியும் அன்னதான நற்காரியத்திற்காகவும் சம்பா நெல்லில் அறுநூறு கோட்டை அளந்ததாகவும், மங்கை யெனும் கோவிற் பட்டியில் எழுந்தருளியுள்ள பூவண்ண நாதர் பூசைக்கென்று சம்பா நெல் முன்னூறு கோட்டை அளந்ததாகவும், கடல் முத்தமிடும் அறுபடை வீட்டில் ஒன்றான திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் சண்முக நாதர் கட்டளைக்கென வெந்தயச்சம்பா நெல்லில் எழுநூறு கோட்டை வேலன் என்பாரிடம் அளந்ததாகவும்,வேதபாராயணம் மற்றும் சாத்திர, தோத்திரங்கள் கற்றுத்தரும் அந்தணர்களான தாத்தையங்கார் வகையினருக்கு ஐநூறு கோட்டை நெல் அளந்ததாகவும்,

வீடுபேற்றை நல்க வல்ல வேள்வி களைச் செய்யவல்ல வேத விற்பனர் சுப்பிர தீட்சதருக்கு எழுநூற்றொரு கோட்டை சீரகச்சம்பா நெல் அளந்ததாகவும், எட்டையபுர சமத்தான பரம்பரையைச் சேர்ந்த கண்ணப்ப குருசாமிக்கென எண்ணூற்றஞ்சு கோட்டை நெல் அளந்ததாகவும், நற்றமிழ் காத்தும் படிப்பித்தும், ஆசானாகவும் இருந்தும் செயலாற்றும் பன கடிகை நமச்சிவாயப் புலவர் பெருமகனார்க்கு அரசனின் ஆணைப்படி முன்னூற்றைந்து கோட்டை நெல் வழங்கியதாகவும், இன்னிசையில் வல்லுநராக வீணை தனிற் சிறந்து விளங்கும் வெள்ளை அண்ணாவி குமாரர்க்கென்று வாழைப்பூச் சம்பாவில் தொன்னூற்று ஐந்து கோட்டை நெல் அளந்த தாகவும், குமார எட்ட பாண்டிய தெய்வேந்திர கன்னன் பெயரை நாளும் பாடும் நற்றமிழ்ப் புலவர் நாகூர் முத்துப் புலவனுக்கு வளமைசேர்க்க முன்னூறு கோட்டை நெல் அளந்ததாகவும்,

நீர்நிலைகளை உண்டாக்குபவரும், அவ்வாறு உண்டாக்கிய குளம், ஏரிகளைக் காவற் புரிவோருக்கும், பசிப்பிணிப் போக்க நீர்நிலை காக்கும் ராக்கப்பன் செட்டியார் வசம் அரண்மனை நல்கையாக ஆயிரங்கோட்டை நெல் அளந்ததாகவும், கனக சபாபதியாபிள்ளைக் கணக்கின் படி முத்துப்பேயன்பால் எண்ணாயிரம் கோட்டை நெல் பாட்டத்தில் அளந்ததாகவும்,

உவணகிரி சுற்றித் தேரோட்டி வைப்பதற்கு ஒன்பதினா யிரம் கோட்டை நெல் அளந்ததாகவும் அந்நெல்லைக் குமார வேல்மணி என்பார் பெற்றதாகவும், சம்பாதி என்ற இடத்தில் உள்ள குமரகுருபரர் சன்னதி சத்திரம் நடக்கவென்று தொண்ணூற்றொரு கோட்டை நெல் சுப்பன் வசம் அளந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன.

இந்த வகையில் எண்பத்தீராயிரத் தெழுநூற்றொரு கோட்டை நெல் நீக்கி சேரில் வந்த நெல் அளவு தொண்ணூற்றிரண்டு லச்சங்கோட்டை சொந்தத்திருப்பில் உள்ளதாகவும், ஒரு பாடல் கூறுகிறது. இவை அன்றிச் சம்பிறுதிப் பிள்ளை வயித்திலிங்கத் தயாள் எழுதுங் கைக் கணக்கின்படி இன்னும் அளக்கப்படாத நெற்கட்டுகள் உள்ளதாகவும் இத்தனை நெல்லும் உள்ளூர் மணியம் வெங்கடேசு ரெட்டுவேள் முன்னிலையில் அளந்து கணக்கிடப் பட்டது என்ற குறிப்பும் உள்ளது.

இவற்றை எல்லாம் காணும் போது எட்டயபுர அரண்மனையின் செல்வச் செழிப்பையும் நிருவாகச் சிறப்பையும் தரும சிந்தனையையும் அறிந்து கொள்ளதக்க சான்றாக மேற்சொன்னவைகள் அமையும் அன்றோ.

எட்டையபுர சமத்தானத்தை ஆண்ட குமார யெட்டேந்திரன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தேடி நாம், வரலாற்று நூல்களை நுணுகிப் பார்த்தால் தக்க தரவுகளாக நமக்குக் கிடைப்பது குறைவே. இது குறித்துக் கலைக்களஞ்சியத்தில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது. அது வருமாறு:

எட்டையபுரத்தில் 1816 முதல் 1839 வரை ஆட்சிச் செலுத்திய வேங்கடேசுவர எட்டப்ப மகாராசாவின் மூத்த மகன். 1939-ல் பட்டத்திற்கு வந்தார். இசையில் ஆழ்ந்த புலமை உடையவர். தமிழ், தெலுங்கு மொழிகளில் வல்லவர். 'கார்த்திகேய' என்ற முத்திரையுடன் பல கீர்த்தனை உருப்படிகள் இயற்றியுள்ளார். தோடி ராகத்தில் 'கயவதன' என்று தொடங்கும் புகழ்பெற்ற பாடல் இவர் இயற்றியதுதான். பாலசுவாமி தீட்சிதர் போன்ற இசைப் பாடலாசிரியர்களும், சுப்புகுட்டி அய்யா, மீனாக்ஷ்சி சுந்தரம் அய்யா, சுப்பையா அண்ணாவி முதலான வீணை வித்துவான்களும், திருநெல்வேலி தேசிங்கு பாகவதர், மதுரை ராமய்யர்,தேவூர் சுப்பிரமணி அய்யா முதலான பாடகர்களும் இவரது அவையை அலங்கரித்தார்கள். இவருடைய முழுப் பெயர் ஜகதீசுவரராமகுமார எட்டப்பர் என்பதாகும்.

குமார எட்டேந்திரருக்குப் பிறகு அவரது தம்பி முத்துசாமி எட்டப்பருடைய மகன் ஜகதீசுவர குமார எட்டப்பன்  பட்டத்துக்கு வந்தார். இவர் ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் இம்மூன்று மொழிகளிலும் தேர்ந்தவர். மகாபாரதத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர். இவரது வேண்டுகோளின்படி 'கவித்திரயம்' என்று அழைக்கப்பெறும் மூன்று சிறந்த ஆந்திரக் கவிஞர்களால் இயற்றப்பட்ட மகாபாரதத்தை, சுப்பராம தீட்சிதர் தமிழில் மொழிபெயர்த்ததாகவும், அந்நூல் அச்சேறிய தாகவும், 'சம்பிரதாய பிரதர்சினி' என்னும் தெலுங்கு நூலிலிருந்து தெரியவருகிறது. (கலைக்களஞ்சியம், தொகுதி- 10ப. 212).

இதுவரை இந்த கண்ட செய்திகளில் இருந்து எட்டையபுரப் பள்ளு அனைத்து வகையிலும் சிறப்புற்று விளங்கும் நல் இலக்கியமாகவே திகழ்கிறது.

இதுவரை தமிழகத்தில் முக்கூடற்பள்ளுதான் மக்களிடையே புலவர்களாலும் ஆசிரியர்களாலும் பெரிதும் எடுத்துப் பேசப்பட்டது. இன்று அச்சு நூலாகத் தமிழன்னையின் பாதத்தை அழகு செய்யும் இந்நூல் முக்கூடற் பள்ளிற்கு எந்த வகையிலும் எட்டயபுரம் பள்ளு குறைந்ததல்ல.

தென்னிளசைச்(எட்டையபுரம்) சிறப்பு, அதனை ஆண்டு வந்த மாமன்னர்தம் பெருமை, சமூகப் பண்பாட்டுச் செய்திகள் ஆகியவற்றை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தும் இந்நூலின் சிறப்புப் போற்றுதற்குரியது. அரசும், தமிழ் ஆர்வலர்களும் இந்நூலை மக்களிடையே கொண்டு சென்றால் இப்பள்ளின் பெருமையை யாவரும் அறிந்து போற்ற ஏதுவாக அமையும்.

 

 

அதுமட்டுமல்ல, அதேபோல பருத்தி, மிளகு பயிர், கம்பு, குதிரைவாலி, காக்காக் சோளம் மற்றம் சோள வகைகளுக்குவெவ்வேறு வகையான பெயர்களும் இந்தக் கரிசல் காட்டில் உண்டு. வேப்ப மரம் என்பது தெருகு்களில் அதிகமாகப் பார்க்க முடியாது. ஊர் மந்தையில் உள்ள கோயில் பக்கத்தில் இருக்கும்.  அகேிபோல இந்தப் பள்ளுவில் கிணற்றில் விழுந்த பொருட்களை மீட்கும்  பாதாளக் கரண்டி, காலில் முள் எடுக்க முள்வாங்கி பற்றியெல்லாம் குறிப்பிடுவது உண்டு.

முன்னாடி கருவேலம் மரங்கள்தான் இருந்தன. அதற்குப் பிறகு வேலி கருவேலம் வந்தது. அதை எப்படி காசு பண்ணலாம், அதை வைத்துஎப்படி வியாபாரம் செய்லாம், அதை எப்படி தீமூட்டம் செய்து அதை கரியாக்கலாம.் அந்தக் கரியை தேநரீர் கடைகளில் பாயலர்களுக்கு கெகாடுப்பதும், இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் ஆங்காங்கே சொல்லப்படுகிறது. எட்டைய பள்ளுவில் மட்டுமல் அல்லது எட்டயபுரம் மவட்டாரத்தில் நாட்டார் வழக்கிலும் சொல்லப்படுகிறது.

தருவைகுளம் மீனவர்கள் மீன் பிடித்துஅதை எப்படி கருவாடாக்கி பதப்பத்துவது, விதவிதமான மீன்கள் எப்படி கிடைக்கும், சக்காரா போன்ற மீன்களைப் பிடிக்கலாம். என்பதையெல்லாம் நாட்டார் வழக்ககாக கரிசல் மண்ணில் கூறப்படுகிறது. கரிசல் மண் என்பது வெறும் கரிசல் பூமி வரை மட்டும் அல்ல அதன் எல்லை தூத்துக்குடி கடற்கரை வரை விரிந்துள்ளது. இது நாட்டார் வழக்கு.

பிறகு ராப்பாடிகள் என்ற சாமக் கோடாகங்கிகள நள்ளிரவில்  அரிக்கன் விளக்குடன் பாடி வருவார்கள். குறைக்கும் நாய்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். தலைப்பிள்ளை மண்டையோட்டை இருந்து அவ்ர தயாரிக்கும் மை வசியத்துக்கு உதவுமாம். இரவில் அவர் சொல்வது பலிக்குமாம். அறுவடை முடிந்த காலங்களில் இவர்கள் வருவார்கள். வீட்டுக் கருகில் வருவதற்கு முன்பே அரிசியை சொளகில் வைத்து விட்டு, இந்த சாமசக் கோடங்கிகளைப் பார்க்காமலேயே அவர்கள் போடும் திருநீரை தட்டி விட்டு, தய்மார்கள் வருவார்கள். இந்த சாமக் கோடங்கிகளை நள்ளிரவில் பார்த்தால் படுத்திருக்கும குழந்தைகள் பதறும்.

இப்படியாக பின்னிரவைத் தாண்டி சாமக்கடாங்கிகள் அறுவடை சித்திரை மாதம் வரை கோடை காலத்திலும் வருவார்கள். இந்த கோடாஙகிகளுடைய வாக்கு நல்ல வாக்காக இருக்க வேண்டும் என்று அந்த தானியத்தை செளகில் படைக்கும்போது சமாமி கும்ிபிட்டு விட்டு வைப்பார்கள்.  இதெ்லாம் அந்தக் கால நாட்டார் வழக்கு. இதுகுறித்து மேலும் தொடர்வோம்...

 

(தொடர்வோம்...)

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...