#1965மொழிப்போரும்_வினோபாவும்.
#விருதுநகர்_பெ_சீனிவாசன்
____________________________________
தமிழக மொழிப்போராட்டத்தை ஒட்டி பூமிதான தலைவர் வினோபா உண்ணாநோன்பை முடித்துக்கொண்டு இன்றோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவாகின்றன.
தமிழகத்தில் 1965ல் மாணவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய போராட்டம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், தமிழக காங்கிரஸ் ஆட்சியையும் நிலைகுலையச் செய்தது.
தமிழக மொழிப்போராட்டம் தீவிரமடைந்த போது மத்திய அமைச்சர்களான சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அழகேசனும் பதவி விலகினார்கள். இந்திஎதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் சுடப்பட்டதும், நூற்றுக்கணக்கில் உயிர் இழந்த சம்பவங்களையொட்டி ஆச்சார்ய வினோபா தன்னுடைய உண்ணாநோன்பை 17-02-1965ல் நிறுத்திக் கொண்டார். அப்போது ஆந்திராவின் நெல்லூரிலும் மொழிப்போர் பிரச்சனையால் பதற்றமான நிலை ஏற்பட்டது.
மறைந்த, தமிழக சட்டப்பேரவையின் துணைத் தலைவர், மாணவர் தலைவராக இந்திஎதிர்ப்பு போராட்டத்தை நடத்திய பெ.சீனிவாசன் ஒரு சமயம் என்னிடம் குறிப்பிட்டது, “என்னை காவல்துறையினர் தேடிக்கொண்டிருந்தார்கள். நான் அகில இந்திய அளவில் இந்தப்போராட்ட்த்தை எடுத்துச் செல்ல ஆந்திரா வழியாக கல்கத்தா செல்ல திட்டமிட்டிருந்தேன்.
திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த பொழுது வினோபா உண்ணாவிரதமும், இந்த போராட்டம் இந்தியா முழுவதும் பரவிவிடும் ஐயம் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிக்கு ஏற்பட்டது என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. தமிழகத்தில் மாணவர் போராட்டம் நிறுத்தப்பட்டது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை“ என்றும் சொன்னார்.
அண்ணன் பெ.சீனிவாசனிடம் முழுமையாக உங்களைப் பற்றி ஒருநூல் எழுதுங்கள் என்று பலதடவை சொன்னபோதும் “நான் தராசு வார இதழில் தொடர் எழுதி உள்ளேன். அதனை நூலாக கொண்டுவரலாம்” என்றுதான் பதில் சொன்னார்.
அவர் மாணவராக இருந்தபோது கொண்ட போர்குணம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவர் பங்களிப்பு என அவர்குறித்த முழுமையான ஒரு நூல் வெளிவரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வினோபா ஆற்றியப் பங்கையும், சரியாக 50ஆண்டுகள் மேல கடந்த நினைவுகளையும் இன்றைய தினத்தில் மனதில் கொள்ளவேண்டும். .
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-2-2020.
#ksrpost
No comments:
Post a Comment