#அகநானூறு
——————-
முதல், கரு, உரி ஆகிய முப்பொருளும் அமைய நானூறு பாடல்களால் ஆகிய அகத்திணை இலக்கியமே அகநானூறு. பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தூண்ட, மதுரை உப்பூரி குடிகிழார் மகன் உருத்திர சன்மன் பதின்மூன்று முதல் முப்பத்தோர் அடிகொண்ட நானூறு பாக்களை அழகாகத் தொகுத்துள்ளார். ஒற்றை எண்ணில் அமைபவை பாலைப்பாக்கள் இருநூறு; இரண்டு, எட்டு ஆகிய எண்களில் அமைபகை குறிஞ்சித் திணைப்பாக்கள் எண்பது, நான்கு என்று வரும் எண்களில் அமைபவை முல்லைத் திணைப்பாக்கள் நாற்பது, ஆறு என்று வரும எண்களில் அமைபவை மருத்த்திணைப் பாக்கள் நாற்பது, பத்து, இருபது, முப்பது என்று வரும் எண்களில் அமைபவை நெய்தல் திணைப்பாக்கள் நாற்பது, பாரதம் பாடிய பெருந்தேவனார் இறைவாழ்த்துப் பாடியுள்ளார். முதல் நூற்றிருபது பாடல்கள் ஆண்யானை போன்ற தோற்றமும் நடையும் பெற்று வருவதால் களிற்றியானை நிரை என்று போற்றப்படுகின்றன. நூற்றிருபத்தொன்று முதல் முந்நூறு வரை உள்ள நூற்று எண்பது பாடல்கள் முத்தும் பவளமும் கலந்தது போன்ற நடைநலம் பெற்றிருப்பதால் மணிமிடை பவளம் ஆகும். இறுதி நூறு பாடல்கள் முத்துக் கோத்த்து போன்று பொருளும் நடையும் கொண்டு பொலிவதால் நித்திலக் கோவை ஆகும்.
நூற்று நாற்பத்து நான்கு புலவர் பாடியுள்ள அகநானூற்றுப் பாக்கள் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை வனப்புற விளம்புகின்றன. தமிழர் திருமண முறையினை 86, 136 ஆகிய எண்கள் கொண்ட பாடல்கள் புலப்படுத்துகின்றன. மகத நாட்டு ந்ந்தர் தம் செல்வத்தைக் கங்கை ஆற்றின் அடிப்பகுதியில் மறைத்து வைத்திருந்த இருபாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. யவனர் தந்த வினை மாண் நன்கலம், குடவோலைத் தேர்தல் முறை, பொன்னேடு வந்து மிளகைப் பெற்றுச் செல்லும் அயல்நாட்டார் ஆகிய பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தலைவனும் தலைவியும் சந்தித்த இடமும் காலமும் முதற்பொருள் என்பர். தெய்வம் முதலாகத் தொழில் ஈறாக வருபவை கருப்பொருள் ஆகும். தினைதோறும் அமையும் ஒழுக்கமுறை உரிப்பொருள் ஆகும்.
குறுங்கொடி முருகனார் பாடிய முல்லைத் திணைப் பாடல் தலைவன் பண்பாட்டுச் சிறப்பையும் உயிர்களிடம் காட்டும் பரிவையும் விளம்புகிறது. காந்தள் மலர் போன்று மணக்கும் தலைவியைப் பார்ப்பதற்காக உறையூர் நோக்கித் தேரிலே விரைந்து வரும் தலைவன், வரும் வழியில் பூஞ்சோலையில் வண்டுகள் இன்பம் பண்பாடிக் கொண்டிருப்பவை பிரிந்து போய்விடக் கூடாது என்று கருதுகிறான். தேரை நிறுத்திக் குதிரைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் நாவை ஒலிக்காமல் கட்டுகிறானாம்;
பூத்த பொங்கர்த் துணையுடன் வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
என்ற தொடர், இன்பப் பண்பாடி இன்புறும் வண்டுகள் கலைந்து சென்று விடக்கூடாது என்று எண்ணுவது பேரின்பம் பயப்பதாகும்.
இயற்கையினைக் காட்சிப்படுத்துவதற்கு உவமைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. விண்மீன்கள் போன்று முசுண்டைப் பூக்களும் கரி பரந்த்து போன்று காயா மலர்களும் எரிபரந்த்து போன்று இலவம் பூக்களும் தோன்றுகின்றன. நண்டின் கண்ணுக்கு வேம்பின் அரும்பும் வெள்ளெலியின் கண்ணுக்குக் குன்றிமணியும் உவமையாக அமைந்துள்ளன.
அறிஞர் காசி விசுவநாதன் மூன்று தொகுதிகளாக அகநானூற்றைப் பாகனேரித்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார். (1943-46) முனைவர் தட்சிணாமூர்த்தியின் ஆங்கில மொழியாக்கம் பாரதிதாசன் பல்கலைக் கழக குறிஞ்சித் திணைப் பாடல்களிலும் அம்மூவனாரும் உலோச்சளாரும் நெய்தல் திணைப்பாடல்களிலும் ஒக்கூர் மாசாத்தியாரின் முல்லைத் திணைப்பாடலிலும் பெருங்கடுங்கோ பாலைத் திணைப் பாடல்களிலும் இளங்கடுங்கோவின் மருதத்திணைப் பாடலிலும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்பு ஒளியுடன் மிளிர்கிறது.
வாழையை உண்ணவந்த ஆண் யானை பக்கத்துக் குழியில் வீழ்வதும், பெண் யானை மரத்தை முறித்து ஆண்யானை ஏறிவரப் படியமைத்துக் கொடுப்பதும் மலைக்குகையான விடரகத்து எதிரொலிக்கிது; தலைவியின் நலம் நகர வரும் தலைவன், களவொழுக்கத்தை நாடுகிறான்; தோழி அறத்தொடு நிற்பதால் மணந்து கொள்ளும் முயற்சி ஊரார் அறியுமாறு செய்கிறது என்னும் உள்ளுறை உவம்ம் சிறப்புமிக்கது.
- கே.எஸ். இராதாகிருஷ்ணன்
18.02.2020
#அகநானூறு
#ksrpost
#KSRadhakrishnan_post
No comments:
Post a Comment