Monday, February 17, 2020

அன்றைய_கூட்டுக்குடும்பங்கள்

#அன்றைய_கிராமிய #கூட்டுக்_குடும்பங்கள்
-------------------------------------
 
தமிழக குடும்பங்களில் சமீப காலத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவது உண்மை. கடந்த காலத்தில் நிலவிய கூட்டுக் குடும்பங்கள் சிதைவுறுகின்றன என்று கருதுகிறோர். வேளாண் நாகரிகத்திற்கு உரிய ‘பல தலைமுறை கூட்டுக் குடும்பங்கள்.’ இன்று இல்லை கொள்ளுப் பாட்டன் முதல் கொள்ளுப் பேரன் வரை ஆறு தலைமுறைகள் கொண்ட நேர்வழி விரிந்த குடும்பங்கள் இன்று குறைந்து விட்டன. ஓரிடத்தில் தங்கி வாழும் வேளாண்மை சார்ந்த வாழ்க்கை சிதைந்ததே இதற்குக் காரணமாகும். அதேபோல அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா என அனைவரும் சேர்ந்து வாழும் கிளைவழி விரிந்த குடும்பங்களும் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. மிக்க் குறைந்த கால அளவுக்கு இத்தகைய குடும்ப வடிவங்கள் காணப்படுகின்றன.
ஒரு கூரையின் கீழ் உண்டு, உறங்கி வாழும் முறையும் மாறிக்கொண்டிருக்கிறது. எல்லோருடைய உழைப்பும் வருமானமும் ஒருவர் கைக்குச் சென்று நிர்வகிக்கும் முறையும மாறிவிட்டது. வேளாண்மையிலிருந்து விலகியதே இதற்குக் காரணமாகும். குறைந்த காலப் பகுதியே அனைவரும் சேர்ந்து வாழும் சூழலும், அவர்களும் வெவ்வேறு ஊர்களில்/நகரங்களில் வாழும் சூழலும் இருப்பதால் இப்போது விரிந்த குடும்பங்கள் காணப்படுகின்றன.
கரிசல் காட்டுக் கிராமங்களில் நிகழ்ந்த மாற்றங்களைக் கி.ரா. பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
கி.ரா. இனவரைவியல்
“செங்கன்னாவின் குடும்பம் முந்து கூட்டுக்குடும்பமாகத்தான் இருந்தது. அப்புறம் அவர் வீட்டுக்கு வந்த “மகாலட்சுமிகள்” ஒருத்தருக்கொருத்தர் பேச்சண்டை போட்டு, கூட்டுக் குடும்பத்தை உடைத்தார்கள்.
“பாத்தா ரொம்ப; பகுந்தாக் கொஞ்சம்” அந்த மோடாமோடி அந்தஸ்திலிருந்து கோனேரியின் குடும்பம் இறங்கிவிட்டது. இப்போ அந்தப் பெரிய வீட்டுக்குள் சிறிய ஆறு குடும்பங்கள் வசிக்கின்றன. குறுக்கே மறுக்கே சுவர்களை எழுப்பி, இடமில்லாத இடத்தில் உண்டாக்கிய சமையல் பிறைகளினால் புகைபிடித்துப் போய்விட்டது அந்த வீடு.
கூட்டுக்குடும்பங்கள் உடைந்ததோடு பழைய எண்ணங்களும் உடைந்துகொண்டே வருகின்றன; முக்கியமாகப் பெண்டுகளிடத்தில். வெயிலில் போய்ச் சாக வேண்டிய அவசியமில்லை என்று தீர்மானித்துவிட்டார்கள் அவர்கள்.”
சொத்துடைமைக் குடும்பங்கள் பொதுவாக்க் கொள்ளுப் பாட்டன் தொடங்கிக் கொள்ளுப் பேரன் வரை செங்குத்து வழியில் விரிந்து நிற்கும். அதுபோலவே, பெரியப்பா, சித்தப்பா அண்ணன் தம்பிகள், விதவையான சகோதரிகள் எனப் பக்கவாட்டிலும் விரிந்து நிற்கும். இத்தகைய விரிந்த குடும்பங்கள் சாதாரண பேச்சு வழக்கில் ‘கூட்டுக் குடும்பங்கள்’ எனப்படும். உடைமையைக் கொண்டிராத உழைத்து வாழும் கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் விரிந்த குடும்பங்களாக இருப்பதில்லை. பொதுவாகத் தனிக் குடும்பங்களாகவே அவை காணப்படுகின்றன.
கூட்டுக் குடும்பங்களின் சிறப்புகள் பற்றிக் கி.ரா. கரிசல் காட்டுக் குடும்பங்களின் அனுபவத்தைக் கொண்டு விவரிக்கிறார். ‘இவர்களைப் பிரித்தது...?’ (1984) கதையில் பின்வருமாறு எழுதுகிறார்.
“இதெல்லாம் எப்படி உண்டாகிறது என்று தெரியலை. அந்தக் குடும்பங்களுக்குள் உள்ள ஒற்றுமைபோல அந்த ஊரிலேயே கிடையாது.
நாலு அண்ணந்தம்பிகள்: ராம லெட்சுமண பரத சத்துருக்காள் போல, எந்தப் பாவிச் சிங்கம் வந்து இந்தக் காளைகளைப் பிரிச்சதுண்ணு தெரியலை. நாலு பேருக்கும் கல்யாணம் ஆனவுடன், நீளமான அந்த வீட்டை மூணு ஓலைத் தடுக்குளால்ப் பிரித்து நாலு பகுதிகளாக்கிக் குடும்பங்களை ஆரம்பித்தார்கள்.
ஒரு வசதிக்காகத்தான் நாலு குடும்பமாக இருந்தார்களே தவிர பொட்டச்சிகளுக்குள்ளெ ஒருநா ஒரு பொழுதுகூட வாய்ச் சத்தம் வந்த்து கிடையாது. அப்படியே மீறி வந்தாலும் அந்த ஆம்பிளைகளின் ஒரு திரட்டு முழியிலெ அடங்கிப்போகும்.
பூர்வீக நிலம் எட்டு ஏக்கர் கரிசக்காட்டை குடும்பத்துக்கு ரண்டு ஏக்கர் வீதம் பாகவஸ்தி செய்துகொண்டாலும் சேர்ந்தோன் அதில் பாடுபட்டார்கள்.
பண ஏர் ஒன்றுக்குத்தான் செலவு; மற்றபடி களையெடுப்பு, களை செதுக்கு, பயிர் கலைப்பிக்கிறது. அறுவடை, எல்லாம் நாலு  குடும்பங்களும் சேர்ந்து சேர்ந்தே ஒவ்வொருத்தர் நிலத்திலும் மொய் ஆட்களாகப் போய் செய்து முடித்துவிடுவதால் அந்தக் குடும்பங்களிலிருந்து ஒரு மணி தானியமோ ஒரு கூறு பருத்தியோ வெளியே போகிறதில்லை.”
‘புறப்பாடு’ (1973) கதையில் கி.ரா. நான்கு தலைமுறைக் குடும்பம் ஒன்றின் முகத்தைக் காட்டுகிறார். அக்குடும்பத்தில் மிகவும் வயதானவரான அண்ணாரப்பக் கவுண்டரின் மூப்பினை மிகவும் அலாதியாக விவரிக்கிறார்.
“அந்தப் பட்டியலிலேயே ரொம்ப வயசானவர் அண்ணாரப்பக் கவுண்டர் ஒருத்தர்தான். அவருடைய மூன்று பெண்டாட்டிகளும் இரண்டு தொடுப்புகளும் எப்பவோ செத்துப் போய் விட்டார்கள். மகன்கள் மகள்கள் கூடச் செத்துப் போனார்கள். பேரன் பேத்திகள் சிலருக்குப் பல விழுந்துவிட்டது. சிலருக்குத் தலை நரைக்கவும் வழுக்கை விழவும் ஆரம்பித்துவிட்டது. மன்னன் அண்ணாரப்பக் கவுண்டருக்கோ தந்தம் பன்னரிவாள்ப் பல்மாதிரி தேய்ந்து போனதே தவிர ஒன்றுகூட உதிரவில்லை. ‘நாப்பது நாளைக்குக் கோழிக்கறியும் பச்சை நெல்லுச்சோறும் போட்டா இப்பவுங்கூட ஒரு கல்யாணம் பண்ணிக் காட்டுவேன்’ என்று சொல்லுவார். அவரால் இப்பவும் சத்தம் போட்டுக் குரல் நடுங்காமல் பாடமுடியும். ஆனால் பேரன் பேத்திகள் சண்டைக்கு வருவார்கள்.
முழு வயோதிகத்தினால் அவருடைய கம்பீரமான உயரமும் உருவமும் வாடிய சருகுபோல் சுருண்டு வளைந்து சிறுத்துவிட்டது. கட்டிலில் மூலை சேர்ந்து விட்டார். தேய்ந்து போன கலப்பை மாதிரி.
ஒரு வருஷமாக அவர், இந்தா அந்தா என்று வரகந்தட்டு விளையாட்டில் மறுக்குகிற மாதிரி காலனை மறுக்கிக் கொண்டு பிடிபடாமல் இருந்து கொண்டிருக்கிறார்.
‘கவுண்டரின் கணக்கை சித்திரபுத்திரன் தொலைத்து விட்டான்’ என்கிறார்கள் ஊர்வாசிகள். அவருடைய மரணத்துக்காக இப்பொ அழுபவர்கள் யாருமில்லை. இந்தக் கிழடு செத்துத் தொலையமாட்டேங்குதே என்று சத்தம் போட்டுச் சொன்னார்கள்.
ஒவ்வொரு பௌர்ணமியையும் அமாவாசையையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தார்கள்.
குடும்பங்கள், குடும்ப உறவினர்களின் உறவுகள் இரண்டிலும் இரத்த வழியிலும் மண வழியிலும் பின்னப்பட்டவை. இவற்றில் அன்பு, பாசம் இரண்டாலும் கட்டப்பட்ட உறவுகள் என்னெற்றும் நிலைத்திருக்கின்றன. தமிழ்க் குடும்பங்களில் காணப்படும் பாசம், அன்பு குறித்து மேலை மானிடவியல் அறிஞர் மார்கரட் ட்ராவிக் ஒரு நூல் எழுதியுள்ளார். தமிழ்க் குடும்பங்களில் அன்பு குறித்துச் சில குறிப்புகள். (Notes on Love in a Tamil Family 1996) எனும் அந்த நூலில் உள்ள இனவரைவியல் குறிப்பகளைக் காட்டிலும் கி.ரா.வின் குறிப்புகள் காத்திரமானவை; அகவயமானவை. ‘தோழன் ரங்கசாமி’ (1960) கதையில் ஓர் அடர்த்தியான இனவரைவியல் குறிப்பினைத் தருகிறார்.
தன்னுடைய ஒரே பையனான ரங்கசாமியின் மேல் அவருக்கு உயிர். அவனை எப்பாடு பட்டாவது ஊருக்கு அழைத்துக்கொண்டு போக வேண்டுமென்று எண்ணியே வந்தார். ரங்கசாமியோ ஒவ்வொரு தடவையும் முடியாது என்றே சொல்லி அனுப்பிவிடுவான். ‘பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்று வருத்தப்பட்டுக்கொண்டே அந்தப் பெரியவர் தள்ளாடித் தள்ளாடி நடந்து சொல்லுவார்.
“இந்த்த் தள்ளாத வயது காலத்தில் எனக்கு யாரப்பா துணை? உன்னை நம்பித்தானே நான் இருக்கிறேன்” என்று துக்கத்தோடு சொன்னார் அவர்.
“அப்பா நான் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளுங்கள்” இதை ரங்கசாமி வெகுசுலபமாகச் சொல்லிவிட்டான். அவர் அவனேயே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். தாங்கமுடியாத துயரத்தால் அவருடைய மூக்கு இரண்டு மூன்று தடவை துடித்த்து. கனமான வெப்பம் நிறைந்த  இரண்டு துளி வெந்நீர் அவரது கண்களிலிருந்து பொத்தென்று தரையில் விழுந்தது.
“தொட்டிலிலும் தோள்மீதும், இரவுபகல் கண்மூடாது வைத்துச் சீராட்டி வளர்த்த பையனா? இவன்! இவனை யார் இப்படிச் செய்தார்கள். ஏ! பாவிகளே!”
“எப்படியாக இருந்த பையன் இப்படி ஆகிவிட்டான். ஐயோ! சுக்காக உலர்ந்து போனானே”
குடும்பம் பல சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியான இடம் என்றாலும், அது வேறு சில காலகட்டங்களில் சிலருக்குத் துன்பத்தை விளைவிக்கும் இடமாகவும் மாறிவிடுகிறது. குடும்பங்களின் இன்ப, துன்ப நிகழ்வுகள் இரண்டையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலக் கி.ரா. பேசுவது அவர் ஒரு தேர்ந்த இனவரைவியலர் என்பதைக் காட்டுகிறது. ‘ஜடாயு’ (1959) எனும் ஆரம்பகாலக் கதையில் கி.ரா.வின் பதிவு கவனிக்கத்தக்கதாய் உள்ளது.
“ஐயோ! நான் சொல்கிறதையும் தயவுசெய்து கேட்க வேணும். நீங்கள் என்னுடைய தகப்பன் மாதிரி. இவள் என்னுடைய சொந்த மாமன் மகள். இவள் எனக்கு வாழ்க்கைப்பட்டு அஞ்சி வருஷமாகிறது. இந்த அஞ்சி வருஷமும் இவளோடு இந்தப் போராட்டம்தான். பகலெல்லாம் எலும்புமுறிய வேலை செய்துவிட்டு ராத்திரி வீட்டுக்கு வந்தால், வீட்டில் இருக்கமாட்டாள். விடியத்தான் வீட்டுக்கு வருவாள். இவளை நான் ராத்திரியெல்லாம் தேடிக்கொண்டு அலைய வேண்டும். கட்டிய புருஷன் எத்தனை நாளைக்குத்தான் இதைச் சகித்துக்கொண்டு இருப்பான்?”
இந்தச் சமயத்தில் கதவைத் திறந்துகொண்டு நாயக்கர் தங்கியிருந்த வீட்டுக்காரச் சுந்தரம் செட்டியார் வெளியே வந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களும் வந்தார்கள்.
தூரத்தில் நின்றிருந்த சுருட்டைத் தலையனின் ஆட்களில் ஒருவன் இவர்களை நோக்கி வந்தான்.
அவன் சுருட்டைத் தலையனைப் பார்த்துச் சொன்னான். ‘என்ன லச்சை’ பழைய படியும் தொடங்கியாச்சா, நானா இருந்தால் இவளை கட்டிகிட்டு அழுகிறதைவிட, பேசாமல் ஒரு தலைமுழுக்குப் போட்டுருவேன். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிறது உனக்குத்தான் அண்ணே பொருத்தம்!”
கிராமங்கள் சாதிகளால் கட்டப்பட்டிருந்தாலும், உறவுகளால் இயங்குகின்றன. இந்த உறவில் நேரியல் உறவும, புனைவியல் உறவும் கலந்துள்ளன. ஒரு சமூகத்தார் மற்ற சமூகத்தாரை உறவுமுறை கொண்டு அழைப்பதும் விளிப்பதும் சந்று வினோதமானதுதான். ஆனால் அத்தகைய நடைமுறை கிராம சமூகத்தின் ஒன்றியத்திற்கு உதவுகின்றன. இந்த நடைமுறையைக் கி.ரா. ‘ஜீவன்’ (1972) கதையில் மிக அழகாக விவரிக்கிறார்.
“அந்த ஊரிலுள்ள பிள்ளைமார்; செட்டியார், நாயக்கமார்களோடு சம்மந்த வழி செய்து கொள்ளாவிட்டாலும் பெரியப்பா, சித்தப்பா, மாமா என்றெல்லாம் உறவுமுறை கொண்டாடி வந்தார்கள். ஊமையான அங்குப்பிள்ளை அந்த ஊரில் தனக்கு யார் யார் அண்ணன் தம்பி முறை சம்மந்தகார முறை என்று தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தது ஆச்சரியம்தான்.
பின்னுரை
தமிழ் நாவலாசிரியர்கள் குடும்ப உறவுகளை மையமிட்டு எழுதுபவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். குடும்ப உறவுகளில் தாய்க்கும் குழந்தைகளுக்குமான உறவு ‘அன்பு’ வயப்பட்டது. தந்தைக்கும பிள்ளைகளுக்குமான உறவு ‘மரியாதை’ சார்ந்தது. சகோதர, சகோதரிகளுக்கிடையேயான உறவு இளமையில் ‘பாச’ உணர்வு சார்ந்தது. பங்காளிகள் ஆனவுடன் ‘விலகி’ நிற்கும் தன்மையுடையது. மாமன் மச்சான்களுக்கிடையில் ‘கேலி’ உறவு விஞ்சி நிற்கும். மாமனார்-மருமகள், மாமியார்-மருமகன் முதலானவர்களுக்கிடையில் உள்ள உறவு ‘தவிர்ப்பு’ உறவு சார்ந்தது.
தமிழ்ச் சமூகத்தில் ஒரு சமூகத்தார் நெருக்கமான மற்ற சமூகத்தாரை உறவு சொல்லி அழைத்துப பழகும் முறை உள்ளது. இதனை இனவரைவியலர்கள் ‘புனைவியல் உறவுமுறை’ என்பார்கள். வேளாளர் ஒருவர் சக ஊரில் வாழும் வன்னியரை அண்ணன்,  தம்பி, மாமன், மச்சான் என அழைப்பது வெகு இயல்பு. இஸ்லாமிய, கிறித்துவ சமூகத்தாருடன் இந்துக்கள் இத்தகைய புனைவியல் உறவு முறையைப் பேணுகின்றனர். இது சமூக ஒன்றியத்தைப் பேணும் ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறது. கி.ரா. தன் கதைகளில தனிக்குடும்பம், கூட்டுக் குடும்பம், சிதைவுற்ற குடும்பம் ஆகியவற்றில் தொடங்கிப் புனைவியல் உறவு வரை அனைத்தையும் பேசுகிறார்.

- கே.எஸ். இராதாகிருஷ்ணன்
17.02.2020

#அன்றைய_கூட்டுக்குடும்பங்கள்
#ksrpost
#KSRadhakrishnan_post


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...