Wednesday, February 26, 2020

அறிவியலுக்கு அருட்கொடை குலசேகரன்பட்டினம்*

*அறிவியலுக்கு அருட்கொடை குலசேகரன்பட்டினம்*
————————————
இன்றைய (26.02.2020) தினமணி நாளிதழில் குலசேகரப் பட்டினம் ராக்கெட் ஏவுதளம் குறித்து வெளியான என்னுடைய பத்தி:

அறிவியலுக்கு அருட்கொடை குலசேகரப்பட்டினம்
••••••
தெற்கு சீமையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி கலவரங்கள் கடுமையாக இருந்தது. கொடுமையான நிலை இது குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மறைந்த எஸ். ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் ஆராய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையில் சமூக பொருளாதார காரணங்களால் இந்தக் கலவரங்கள் நடக்கின்றன. பொருளாதார ரீதியாக பல்வேறு திட்டங்களை இந்த வட்டாரத்திற்கு அரசு மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டுமென பரிந்துரைத்தது. அதன் விளைவாக நாங்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தொழில் நுட்ப பூங்கா, குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம், தாமிரபரணி நதியை சீர்படுத்தல், கோவில்பட்டி, சங்கரன்கோவில், விளாத்திகுளம், ஒட்டபிடாரம், வானம் பார்த்த பகுதியில் விவசாயிகளின் நலனை நிலைநிறுத்தல், தூத்துக்குடி துறைமுக நகரை மேலும் வலுப்படுத்தல் எனப் பல விடையங்களை நீதிபதி எஸ்.ஆர். பாண்டியன் குழு வலியுறுத்தியது.
அந்த வகையில் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் நீண்ட நாளாக மத்திய அரசின் பார்வையில் இந்திராகாந்தி ஆட்சி காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இதை திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே.டி. கோசல்ராம் வலியுறுத்தினார். இன்றைக்கு குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து ஸ்ரீரிஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட்டுகளை விண்ணுக்கு ஏவி வருகின்றன. அங்கு இரு ஏவுதளங்கள் இருக்கின்றன. குலசேகரப்பட்டிணம் தசரா விழாவுக்கு முக்கியமான இந்துக்கள் வழிபடும் தளமாகும். கிராம்மாக இருந்தாலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர தளமாக விளங்க இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியாக இந்த நெல்லை வட்டாரத்தில் கூடங்குளம் (இதற்கு மாற்றுக்கருத்து உண்டு) மகேந்திரகிரி, நாங்குனேரி கட்டபொம்மன் பாதுகாப்புத் தளம் என இவ்வட்டாரத்தில் மத்திய அரசினுடைய அமைப்பு ரீதியான பல நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இஸ்ரோ நிறுவனத்தின் குலசேகரப்பட்டின கடல் கிராமத்தில் அமைய இருக்கின்ற மூன்றாவது ஏவுதளம் தமிழகத்தின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். பல்வேறு இயற்கை சீற்றங்களால் ஹரிகோட்டா ஏவுதளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் வேறு ஏவுதளங்கள் இல்லாத நிலை இருந்தபோது குலசேகரப்பட்டினத்தில் அமைவது அவசியமே. அமெரிக்க, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வட்டாரங்களில் ராக்கெட் ஏவுதளங்களை அமைத்துள்ளது.
இந்த முன்றாவது ராக்கெட் ஏவுதளம் பனிரெண்டாவது ஐந்தாவது திட்டத்தில் சேர்க்கப்பட்டும் தாமதமாகத்தான் இந்த்த் திட்டத்தை நாடாளுமன்றத்தில் அணுசக்தி அமைக்க ஜிதேந்திரசிங் குலசேகரப்பட்டின திட்டத்தை அறிவித்தார்.
கடந்த 2012ல் பேராசிரியர் நாராயணா தலைமையில் அண்ணாமலை, அபேகுமார், சுதர்குமார், சோமநாத், சேஷ்டகிரிராவ், கணங்கோ என ஏழு பேர் குழு தமிழகம், ஆந்திரம் ஏன் கேரள பகுதிகளில் ஆய்வு செய்து மூன்றாவது ஏவுதளம் குலசேகரப்பட்டினம்தான் ஏற்றது என்று தங்களது ஆய்வு கட்டுரையை மத்திய அரசிடம் சமர்பித்த்து. அப்போது இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன்.
கடற்கரைப் பகுதிதான் இதற்கு சரியாக இருக்கும். குலசேகரப்பட்டினம் சுமார் பூமத்திரேகைக்கு ஸ்ரீஹரிகோட்டாவைவிட சற்று அருகில் உள்ளது. எனவே ராக்கெட் ஏவுவதற்கான செலவு மிச்சமாகும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து தெற்கு முகமாகத்தான் செலுத்த வேண்டியிருக்கும். அதில் சிறிது சிரமங்கள் உள்ளன. ஆனால் குலசேகரப்பட்டினம் தெற்கே இருப்பதால் ராக்கெட் செலுத்த எளிதாக இருக்கும். குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட் நேரடியாகவே அருகே உள்ள இலங்கையை எல்லையில் பறக்காமல் நேராக விண்ணுக்கு செல்லும். ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தும்பொழுது தென்கிழக்கு திசையை நோக்கி சென்று இலங்கை வரை இதனுடைய தாக்கம் ஏற்படும். அயல்நாடுகளில் எல்லைகளில் ராக்கெட் பயணம் தாக்கம் இருக்க்க்கூடாது என்று சர்வதேச சட்டங்கள் இருக்கின்றன. இந்த வகையில் ஹரிகோட்டாவைவிட குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவ இந்த பிரச்சினைகளையெல்லாம் எழாது. இந்த இட்டத்தில்லிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் தெற்கு திசையை நோக்கி வானத்தில் எழும். ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 13 டிகிரி கோணத்தில் தென்கிழக்கு நோக்கி சில சிரமங்களுக்கிடையே மாற்றி சில கட்டுப்பாடுகளோடு வான் நோக்கி செலுத்த வேண்டும். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் 8 டிகிரி கோணத்தில் செலுத்தி இந்த சிக்கல் இல்லாமல் வானத்தில் பயணிக்கும். அதுமட்டுமல்ல இதற்கு வேண்டிய திரவ வடிவமான எரிபொருள் மிக அருகாமையில் மகேந்திரகிரியில் கிடைக்கின்றது. இங்கிருந்து 1479 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விசாகப்பட்டிணத்திற்கு கொகண்டு சென்று ஹரிகோட்டாவிற்கு மாற்றப்படுகிறது. இப்போது குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் தளம் 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகேந்திரகிரியிலிருந்து எளிதாக எரிபொருள் கிடைப்பதால் 1400 கிலோமீட்டர் எரிபொருள் ஸ்ரீஹரிகோட்டாவில் பயணித்தது மிச்சமாகும்.
தற்போதைய இஸ்ரோ தலைவர் சிவன் முயற்சியில் இந்த தளம் அமைய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு 2300 ஏக்கர் தேவையான நிலங்களை பள்ளக்குறிச்சி, மாதவகுறிச்சி, படுக்கைப்பத்து என திருச்செந்தூர் வட்டார கிராம நிலங்களில் ஆர்ஜிதப்படுத்த தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்காண்டு வருகின்றது. இதற்கான பணி அலுவலகத்தை திருச்செந்தூரில் அமைந்து எட்டு பிரிவுகளாக அதிகாரிகள் பணிகளாற்றி வருகின்றனர். இங்கு தென்னை, பனைமரங்கள் கணக்கெடுத்து நில எடுப்பு சட்டங்களுக்குட்பட்டு பணிகளை முடுக்கி விடப்பட்டன. ஏற்கெனவே குலசேகரப்பட்டினம் விடுதலைப் போராட்ட களத்தில் முக்கிய தளமாக அமைந்தது. பாண்டியர் ஆட்சி காலத்தில் நாணயம் அச்சடிக்கவும், இந்த வட்டாரத்தில் அப்போதைய ரயில் வண்டிகள் திருச்செந்தூர், குலசேரகப்பட்டினம், திசையன்வினை என்ற மார்க்கத்தில் ஓடி பின்னர் நிறுத்தப்பட்டன. குலசேகரப்பட்டினம் துறைமுகம், உவரி எனும் முக்கியம் வாய்ந்த பகுதிகளாக அமைந்தன. இப்படி வரலாற்று தரவுகளும் குலசேகரப்பட்டினத்திற்கு உண்டு. இங்கிருந்து சாலமன் மன்னனுக்கு மயில் றெக்கைகளை அனுப்ப்ப்பட்டதாக விவிலியம் கூறுகின்றது.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைந்தால் வேலைவாய்ப்பு இந்த வட்டாரங்கள் வணிக ரீதியாக முன்னேற்றம், தூத்துக்குடி சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் எனப்பல பயண்பாடுகளும் ஏற்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவைவிட குலசேகரப்பட்டினத்தில் பெரிய ராக்கெட்டுகளை ஏவ இயற்கையாக பொருத்தமான இடமாகும். 1350 கிலோ ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து எடையுடன் செலுத்தப்படுகிறது. ஆனால் குலசேகரப்பட்டினத்திலிருந்து 1800 கிலோ எடை அனுப்பலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
குலசேகரப்பட்டினம் ஏவுதளம் இரண்டு மூன்று ஆண்டுகளில் பணிகளை முடிக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வட்டாரத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட சேதுசமுத்திர திட்டமும் நடைமுறைக்கு வந்து திரும்பவும் முடக்கப்பட்டது. துத்துக்குடி துறைமுக விரிவாக்கம், கேரள மேற்கு நோக்கி பாயும் நதிகள் கிழக்கு முகமாக இந்த வட்டாரத்தை திருப்புதல், தாமிரபரணி கருமேணி ஆறு, நம்பியாறு இணைப்பு மதுரையிலிருந்து அருப்புகோட்டை-விளாத்திகுளம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் ரயில் பாதை, கிழக்கு கடற்கரை சாலை முடிந்தும் முடியாமலிருக்கின்ற நிலையில் இருக்கின்ற நிலை என்பதையெல்லாம் குலசேகரப்பட்டிண ராக்கெட் ஏவுதளம் வந்தால் இதற்கும் விடிவு காலம் கிடைக்கலாம். தாமிரபரணி மணற்கொள்ளை, செயல்படாத நாங்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தொழிற்நுட்ப பூங்கா, திருச்செந்தூரிலிருந்து குலசேகரப்பட்டினம் – மணப்பாடு - உவரி எனத் தெற்கு முகமாக குமரிமுனை வரை ரயில்பாதை திட்டங்களும் நடைமுறைக்கு வரலாம்.
இப்படி பலவகையிலும் ஏற்றங்கள் நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்கள் ஏன் குமரி மாவட்டம் வரை குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தால் பயன்கள் பெறும்.
இது ஒரு ஆறுதலான செய்தியாக இருந்தாலும், நேரு ஆட்சி காலத்தில் தென்னிந்தியா பாதுகாப்பாக இருக்கின்றது என்ற எண்ணத்தில் எண்ணற்ற இராணுவ தளவாட மையங்களை அமைத்தார். ஆனால் இன்றைக்கு தெற்கு இந்துமகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம், அமெரிக்காவின் டீகோகர்சியா, பிரிட்டன், ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகளின் நடமாட்டம் மற்றும் இலங்கை திரிகோணமலை துறைமுக பிரச்சினைகளில் போட்டா போட்டி, எண்ணெய் கிடங்குகள் ஆய்வு என பல நாடுகளினுடைய ஊடுறுவல் உள்ளன. குறிப்பாக கூடங்குளம், மகேந்திரகிரி, குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளம் அனல்மின் நிலையங்கள், ஐ.என்.எஸ். நாங்குனேரி கட்டபொம்மன், கேரளத்தில் தும்பா என மிகவும் பாதுகாக்க வேண்டிய கேந்திர பகுதிகள் உள்ளன. அதையும் மத்திய அரசு மனதில் கொண்டு இந்தியாவின் பாதுகாப்பை, இந்துமகா சமுத்திரத்தில் இந்தியாவின் ஆளுமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வடக்கு வாழ்ந்தது, தெற்கு தேய்கிறது என்ற நிலையை போக்கும் வகையில் இப்படிப்பட்ட திட்டங்கள் தமிழகத்தில் மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும்.
குலசேகரப்பட்டினம் வரலாற்றில் இடம் பெற்றது. இனி அறிவியல் பூர்வமாக பன்னாட்டு அளவில் முக்கிய அடையாளமாக திகழ்வது தமிழகத்திற்கு காலம் கொடுத்த அருட்கொடையாகும்.


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நீதி கட்சியில் இருந்து, பெரியார், அண்ணாவிற்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ள ஊர் தான் குலசேகரன்பட்டிணம். பெண் விடுதலை, பெண் உரிமை எல்லாமே இங்கிருந்துதான் புறப்பட்டது. அண்ணா முதல்வர் ஆனவுடன் எங்கள் வீட்டுக்கு வந்தார். அந்தப்புகைப்படம் உள்ளது. 

      Delete
  2. நீதி கட்சியில் இருந்து, பெரியார், அண்ணாவிற்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ள ஊர் தான் குலசேகரன்பட்டிணம். பெண் விடுதலை, பெண் உரிமை எல்லாமே இங்கிருந்துதான் புறப்பட்டது. அண்ணா முதல்வர் ஆனவுடன் எங்கள் வீட்டுக்கு வந்தார். அந்தப்புகைப்படம் உள்ளது. 

    ReplyDelete

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...