Wednesday, February 19, 2020

#கே_ஆர்_விஜயா

#கே_ஆர்_விஜயா  பிறந்த நாள் சிறப்பு பதிவு 

குடும்பப்பாங்கான படங்களில், குணசித்திர வேடங்களில் முத்திரை பதிக்கும் வண்ணம் நடித்து ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் குடியிருக்கும் சிறந்த நடிகைகளில் கே.ஆர்.விஜயாவுக்கு ஒரு தனி இடம் உண்டு.

கதாநாயகி வேடங்களிலேயே நீண்ட காலம் நடித்த மிகச் சில நடிகைகளில் இவரும் ஒருவர்.
அவருடைய திரைப்படம் பயணத்தை பற்றி நினைவலைகளை நம்மோடு பகிர்ந்தது.

“என் தயார் கல்யாணி குட்டிக்கு கேரள மாநிலம் திரிச்சூர்தான் சொந்த ஊர். என் தந்தை ராமசந்திரனோ ஆந்திராவைச் சேர்ந்தவர். இரண்டாம் உலக யுத்தத்தின்போது ராணுவத்தில் பணியாற்றியவர் அவர். என் அம்மாவின் சகோதரர்களும் அப்போது அவருடன் ராணுவத்தில் பணியாற்றியிருக்கின்றனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தால் இரு குடும்பத்தாரும் பேசி முடிவெடுத்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

என் பெற்றோருக்கு நான்தான் மூத்த பெண். எனக்குப் பிறகு பிறந்த குழந்தைகளில் இப்போது மிஞ்சியிருப்பது எனது தங்கைகள் இருவரும் ஒரு தம்பியும்தான். சிறிய வயதில் கேரளாவில் கொஞ்ச காலமும் ஆந்திராவில் கொஞ்ச காலமும் இருந்ததால் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும்படியாகிவிட்டது. ஆந்திராவில் அப்பா வீட்டில் நாங்கள் இருந்தபோது எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர் தெலுங்கு நடிகர் நாகையா. எங்கள் இரண்டு வீட்டுக்கும் நடுவில் பொதுவாக ஒரு கிணறு இருக்கும். நாகையாவுக்கு குழந்தை கிடையாது என்பதால் என்னிடம் மிகவும் பிரியமுடன் இருப்பார். குடும்பத்துடன் எங்காவது வெளியில் செல்லும்போது தவறாமல் என்னையும் அழைத்துச் செல்வார்.

அப்பா ராணுவத்தில் பணியாற்றினாலும் கலைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். எனக்கு சுமார் பத்து அல்லது பதினோரு வயது இருக்கும்போது எங்கள் குடும்பம் தமிழ்நாட்டில் பழனிக்கு வந்து செட்டில் ஆனது. இங்குதான் முதல் முறையாக நான் மேடை ஏறினேன். அப்பாவுக்கு நாடகத் துறையில் இருந்த ஈடுபாடே நான் மேடை ஏறக் காரணமாக அமைந்தது. பள்ளிக்குச் சென்று நான் கற்க முடியாத கல்வியை நாடக மேடைகளும், நாடக வசன புத்தகங்களும்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தன.

ஐம்பதுகளில் நான் நாடக மேடை ஏறியபோது அப்போது வெளியாகியிருந்த “பாசமலர்’ பாவமன்னிப்பு’ போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்குத்தான் பெரும்பாலும் என்னை ஆட வைப்பார்கள்.

காசநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நாடகம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஒரு நாள் நிகழ்ச்சிக்கு பத்து ரூபாய் சம்பளம். அந்த நாள்களில் பத்து ரூபாய் என்பது பெரிய தொகை. அவ்வளவு பெரிய தொகையை வைத்துக்கொண்டு எப்படி செலவு செய்வது என்று மலைப்பாக இருக்கும். பழநியில் இந்த நாடகம் வெற்றிகரமாக நடந்த பின், மதுரை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய ஊர்களுக்கும் சென்று நாடகம் நடத்தவேண்டியிருந்தது. அந்தந்த ஊர்களில் நடக்கும் அரசு பொருட்காட்சிகளில் இந்த நாடகம் நடக்கும்.

எங்கள் பிரச்சார நாடகம் முடிந்ததும் பிரபல திரைப்பட நட்சத்திரங்களின் நாடகங்கள் நடக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, டி.ஆர்.மகாலிங்கம், ஆகியோர் தங்கள் குழுவினருடன் நடத்திய நாடங்களை அப்போது நான் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்திருக்கிறேன். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் குழுவில் அப்போது நடித்து வந்த முத்துராமன் நடித்த நாடகங்களைப் பார்த்ததுகூட இப்போதும் எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

எங்கள் நாடகம் பல ஊர்களிலும் நடத்தப்பட்ட பின் இறுதியில் சென்னை தீவுத்திடலுக்கு வந்தது. இதற்கு தலைமை தாங்கிய ஜெமினி கணேசன் நாடகம் முடிந்த பிறகு என்னைப் பாராட்டிப் பேசியதுடன், “இந்தப் பெண்ணுக்கு கலைத்துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று வாழ்த்தும் தெரிவித்தார். இதற்குப்பின் பல அமெச்சூர் நாடகங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புக்கள் வரவே நான் அவற்றில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது முதல்முறையாக மாடலிங் செய்யும் வாய்ப்பும் வந்தது.

அப்போது பிரபலமாக இருந்த சிம்சன் பிஸ்கட் அண்ட் சாக்லேட் விளம்பரத்துக்காக நான் புடவையில் போஸ் கொடுத்தேன். அப்போது எனக்கு புடவை கட்டும் வயதே இல்லை. அவ்வளவு சின்ன பெண்ணாக நான் இருந்தேன்.

புடவையுடன் நான் இருந்த சிம்சன் சாக்லேட் விளம்பரம்தான் படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்தது. ஜெமினி கணேசன், சாவித்திரி ஜோடி நடிக்கவிருந்த “கற்பகம்’ படத்துக்காக இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முக்கிய வேடமொன்றில் சரோஜாதேவியை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் சரோஜாதேவி அப்போது ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் உடனடியாக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. எனவே புதுமுக நடிகை ஒருவரை அந்த வேடத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டார்.

சிம்சன் சாக்லேட் விளம்பரத்தில் என்னைப் பார்த்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உடனே நேரில் வரவழைத்துப் பார்த்ததுடன் சில வசனங்களையும் எழுதிக் கொடுத்து பேசவைத்துப் பார்த்த பின்னர் “கற்பகம்’ படத்துக்காக என்னைத் தேர்வு செய்தார். சென்னையில் நான் நடித்த நாடகத்துக்குத் தலைமை தாங்கிப் பேசிய ஜெமினியின் வார்த்தை அவ்வளவு சீக்கரம் பலிக்கும் என்றோ அதுவும் முதல் படத்திலேயே அவருடனேயே சேர்ந்து நடிப்பேன் என்றோ நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சிறு வயதில் என்னைத் தூக்கிக் கொஞ்சிய நாகைய்யாவும் “கற்பகம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெமினி, எம்.ஆர்.ராதா, ரங்காராவ், வி.கே.ராமசாமி, முத்துராமன், சாவித்திரி, என்று அந்தப் படத்தில் நடித்த நடிகர் நடிகையர் அத்தனை பேரும் மிகப்பெரிய நட்சத்திரங்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனது முதல் படத்திலே கிடைத்ததை நான் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும்.

சரியாக நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு 1963ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு தீபாவளி நாளில் வந்த “கற்பகம்’ தமிழ் ரசிகர்களிடையே எனக்கு மிகச்சிறந்த அறிமுகத்தைத் தேடித்தந்ததுடன் என் வாழ்க்கைப் பாதையையும் முழுதாக மாற்றியமைத்து விட்டது.

அதன் பிறகு தொடர்ந்து எனக்குக் கிடைத்த படங்களும், அதில் நான் ஏற்ற வேடங்களும் என் படவுலக வாழ்க்கையை பலமுள்ளதாக்கிவிட்டன. எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று அப்போதிருந்த ஜாம்பவான்களில் ஆரம்பித்து இன்றைய தலைமுறை நட்சத்திரங்கள்வரை அனைவருடனும் நடித்துவிட்டேன். “கற்பகம்’ படத்தில் என்னை அறிமுகப்படுத்திய கே.எஸ்.கோபாலகிருஷ்ணனே “நத்தையில் முத்து’ என்ற என் நூறாவது படத்தையும் இயக்கினார். எனது முன்னூறாவது படமாக அமைந்த “படிக்காத பண்ணையார்’ படத்தையும் அவரே இயக்கினார். இப்போது நானூறாவது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.

நூறு, நூற்றைம்பது, இருநூறு, இருநூற்றைம்பது என எண்ணிக்கையில் வந்த படங்களை எல்லாம் இயக்கியது என் முதல் படத்தே இயக்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான். திட்டமிட்டு இப்படி செய்யவில்லை. யதேச்சையாக அமைந்தது இது. எனது நூறாவது படமாக “நத்தையில் முத்து’ வெளியீட்டுக்குத் தயாராக இருந்த போதே “தீர்க்கசுமங்கலி’ படமும் திரைக்கு வரத்தயாராக இருந்தது. “தீர்க்கசுமங்கலி’ வெளியீட்டைத் தள்ளி வைக்கலாமா என்றுகூட யோசித்தார்கள். கடைசியில் இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி இரண்டும் நூறு நாள்கள் ஒடியது.

அந்தக்காலத்தில் இரண்டு அல்லது மூன்று கதாநாயகிகள் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தாலும் நடிப்பில்தான் எங்களுக்குள் போட்டி இருக்குமே தவிர நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அன்பாகவும் அனுசரனையாகவும் நடந்து கொள்வோம். படப்பிடிப்பில் சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடுகூட இல்லாமல்தான் பழகுவோம். நடிப்பிலும் மேக்கப்பிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். “கற்பகம்’ படத்தில் நான் அறிமுகமானபோது புகழின் உச்சத்தில் இருந்த சாவித்திரி புதுமுகமான என்னிடம். “நீ காதுகளை மறைப்பதுபோல் தலைமுடியை வாருவதுதான் மிகவும் அழகாக இருக்கிறது. அப்படியே மேக்கப் போட்டுக்கொள்” என்று சொன்னதுடன் எப்படி பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி பல விஷயங்களையும் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அன்று தொடங்கி இன்றுவரை நான் சாவித்திரி சொல்லிக் கொடுத்த மாதிரிதான் தலை வாரிக் கொள்கிறேன். கதாபாத்திரத்துக்கு தேவை என்றால் மட்டுமே நான் “ஹேர் ஸ்டை’லை மாற்றிக்கொள்வேன்.

இதேபோல்தான் சரோஜாதேவியும் என்னிடம் பழகினார்.

அப்போது எம்.ஜி.ஆர்.ஜோடியாக தொடர்ந்து பல படங்களில் நடித்ததுடன் வேறு பல படங்களிலும் நடித்துக்கொண்டிருந்த பிசியான நடிகையான சரோஜாதேவி யாருடனும் அதிகம் பழகமாட்டார். ஒதுங்கியே இருப்பார் என்று சொல்வார்கள். “நான் ஆணையிட்டால்’ படத்தில் முதன்முதலாக சரோஜாதேவியுடன் சேர்ந்து நடித்தபோது அது எவ்வளவு தவறான தகவல் என்று எனக்கு புரிந்தது. முதல்நாள் படப்பிடிப்பின்போதே,”வா விஜயா சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லி அழைத்துச் சென்று அவ்வளவு அன்பாக என்னை உபசரித்தார். ஆத்மார்ந்தமான அந்த அன்பு இன்றுவரை நீடிக்கிறது. பெங்களுரில் இப்போது வசிக்கும் சரோஜாதேவி தொலைக்காட்சியில் நான் நடித்த ஏதாவது ஒரு படத்தின் பாடல் காட்சியைப் பார்த்தால்கூட உடனை எனக்கு போன் செய்து பேசுவார். சமீபத்தில் ஒரு நாள் போன் செய்து, “பழைய படங்களில் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?’ என்றாரே பார்க்கலாம்.

“கன்னடத்துப் பைங்கிளின்னு பெயரெடுத்ததே நீங்கள்தான். உங்களைவிட யார்அழகு?’ என்றேன்.

இதுபோல் எனது சமகாலத்து நடிகைகள் மட்டுமின்றி அஞ்சலிதேவி, வைஜயந்திமாலா, பி.எஸ்.சரோஜா போன்ற சீனியர் நடிகைகளின் அன்பையும் பெற்றிருப்பதை எண்ணி உண்மையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நடிகர் நடிகைகள் மட்டுமின்றி தொழில் நுட்பக்கலைஞர்களும் அந்தக்காலத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு படத்தின் வெற்றிக்கு உழைப்பார்கள்.

இப்போது இருப்பதுபோல் வசனங்களை தனியாக ஒலிப்பதிவு செய்யும் பழக்கம் அப்போது இல்லாததால் சவுண்ட் இன்ஜினியர், “அம்மா நீங்கள் பேசும் வசனத்தில்முதல் வார்த்தை சரியாக கேட்கவில்லை. கடைசி வார்த்தையை இன்னும் அழுத்தமாக உச்சரிக்க வேண்டும்” என்றெல்லாம் ஆலோசனைகள் சொல்லி காட்சி சிறப்பாக வர உதவுவார்கள். நட்சத்திர நடிகர் நடிகையரும் “இவரெல்லாமா நமக்கு ஆலோசனை சொல்வது’ என்று நினைக்காமல் படம் நன்றாக வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தானே சொல்கிறார் என்று புரிந்துகொண்டு நடிப்பார்கள். அதுதானே முக்கியம்?

சிவாஜியுடன் சேர்ந்து நடிக்கும்போது நடிப்பைப்பற்றி மட்டுமல்ல வாழ்க்கைக்குத் தேவையான வேறு பல விஷயங்களையும் நாம் கற்றுக்கொள்ளலாம். சிவாஜி படப்பிடிக்குத் தாமதாக வரமாட்டார்-குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாக வருவதுதான் அவர் வழக்கம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் படப்பிடிப்பு என்றில்லை. எங்கேயுமே தாமதமாகப் போகும் வழக்கம் அவருக்கு இல்லை. திருமணம் என்றாலும் சரி, பொது நிகழ்ச்சி என்றாலும் சரி குறிப்பிட்ட நேரத்திற்குள் தாமதமின்றி செல்ல வேண்டும் என்பதை நான் அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

அதேபோல் செட்டுக்குள் வந்தால் முழுக்க முழுக்க அவர் கதையிலும் தன் பாத்திரத்திலுமே இன்வால்வாகிவிடுவார். யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால்கூட மற்றவர்கள் வசனம் பேசுவதையும் நடிப்பதையும் கவனித்துக்கொண்டுதான் இருப்பார். அப்போதுதானே அவர் நடிக்கும்போது சரியான ரியாக்ஷன் கொடுக்க முடியும்? இப்படி செய்யும் தொழிலில் ஒரு ஈடுபாடும் அர்ப்பணிப்பு உணர்வும் இருந்ததால்தான் நடிப்பில் புதிய உயரங்களைத்தொட்ட அவரால் சாதனை சரித்திரங்களையும் படைக்க முடிந்தது.

இதேபோல் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடிக்கும்போதும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. பொது இடங்களில் சினிமா நட்சத்திரங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். நமது சொந்த உணர்ச்சிகள் எதையும் பொது இடத்தில் காட்டிக் கொள்ளக்கூடாது. நமது இமேஜுக்கு பங்கம் வரும்வகையில் எக்காரணத்தை முன்னிட்டும் நடந்து கொள்ளக் கூடாது, லேடி ஆர்டிஸ்ட் என்றால் மற்றவர்கள் கை எடுத்து கும்பிட்டு, “வாங்கம்மா உட்காருங்கம்மா’ என்று சொல்லி வரவேற்கும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் சொல்லுவார்.

அண்ணா முதல்வராக இருந்தபோது அவர் கையால் தமிழக அரசின் கலைமாமணி விருது வாங்கிய பெருமை எனக்கு உண்டு. எம்.ஜி.ஆரும் அதே ஆண்டுதான் கலைமாமணி விருது பெற்றார்.

எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் கூட்டத்துக்கு கேட்கவா வேண்டும்? நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கிலிருந்து வெளியே வந்து கார் இருக்கும் இடத்திற்கு செல்லக்கூட முடியவில்லை. எம்.ஜி.ஆரைச் சுற்றிலும் மக்கள் வெள்ளம்தான். ஆயினும் அவர் தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் என்னை பத்திரமாக அழைத்துச் சென்று என் காரில் என்னை ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதுதான் எம.ஜி.ஆர். இதேபோல் அவர் முதல்வராக இருந்தபோது அரசு சார்பில் சேலத்தில் நடந்த ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். விழா முடிந்ததும் இரவு கணவருடன் காரில் புறப்பட்டபோது, “இரவில் நீண்ட தூரம் காரில் செல்ல வேண்டாம். தங்கிவிட்டு காலையில் புறப்பட்டுச் செல்லுங்கள்’ என்று அதே பழைய அன்போடும் அக்கறையோடும் எம்.ஜி.ஆர். கூறிவே அதன்படியே நாங்கள் அன்றிரவு அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் பகலில் புறப்பட்டு சென்னை வந்தோம்.

எனது நூறாவது படம் “நத்தையில் முத்து’ வெளியானபோது ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, என்.டி.ராமாராவ் மற்றும் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டு என்னை வாழ்த்தியதை என்றென்றும் என்னால் மறக்க முடியாது. இவர்கள் எல்லோருடைய வாழ்த்தும்தான் இருநூறு, முன்னூறு, என்று படங்களின் எண்ணிக்கையை கடக்கச் செய்து இன்று நானூறாவது படத்தை நான் நெருங்குவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்த நான் இந்தியில் மட்டும் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறேன். பாலசந்தரின் “மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் தமிழுக்கு முன்பு முதலில் இந்தியில்தான் படமானது. “ஊஞ்சலோக்’ என்ற இந்தப் படத்தில் அசோக் குமார், பெரோஸ்கான், ராஜ்குமார், ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர். நாடகத்தைப்போலவே கதாநாயகி பாத்திரப் படைப்பு இந்திப் படத்தில் சஸ்பென்ஸôக உருவாக்கப்பட்டிருக்கும். நான் நடித்த இப்படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்ததுடன் தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புக்களும் வந்தன. ஆனால் என் கணவர்,””தமிழில்தான் நிறைய படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனவே! இப்போது ஏன் இந்திப் படங்களில் கவனம் செலுத்த வேண்டும்?’ என்றார். அது எனக்கு சரியாகப் படவே நானும் வேறு இந்திப்படவாய்ப்புக்களை ஏற்காமல் தமிழிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

நடிகைகளுக்கு திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குறைந்துவிடும். ஆனால் திருமணத்துக்கு முன்பு நடித்ததைவிட அதிகமாக திருமணத்துக்குப் பிறகுதான் நான் நடிக்க ஆரம்பித்தேன். காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணிவரை மட்டுமே நடிப்பது, ஞாயிற்றுக் கிழமைகளில் நடிப்பதில்லை என்பதையும் செயல்படுத்திய முதல் நடிகை நான்தான்.

எழுபதுகளின் மத்தியில் திருச்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கு கொள்ளச் சென்றிருந்தபோது அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் நான் சற்றும் எதிர்பாராதவகையில் “புன்னகை அரசி’ என்ற பட்டத்தை எனக்குக் கொடுத்துவிட்டார்கள். நாள்கள் செல்லச் செல்ல என் பெயருக்கு இணையாக இந்தப் பட்டத்தாலும் என்னை அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமீபத்தில் “புன்னகை இளவரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட சிநேகாவை என் வீட்டுக்கு அழைத்துவந்து ஒரு பத்திரிகைக்காக சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். அதன் பின்னர் அவரது திருமணத்துக்குக்கூட நான் சென்று வாழ்த்திவிட்டு வந்தேன்.

பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நான் நடித்திருந்தாலும் ஏவி.எம். தயாரித்த “நாணயம்’, எழுத்தாளர் தேவிபாலாவின் “மடிசார்மாமி’, அரிராஜன் இயக்கிய “மங்கை’ போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.

என்னைப் பொறுத்தவரை எல்லாவிதத்திலும் சந்தோஷமான நிறைவான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் ஒரே மகள் ஹேமாவுக்குக்கு இரண்டு பையன்கள். மூத்த மகன் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் பணியாற்ற, இளைய மகன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பரோடாவில் பணியாற்றுகிறார்.” என்று புன்னகை ததும்ப கூறுகிறார் புன்னகை அரசி.
(பகிர்வு- படித்ததில் ஈர்த்தது)


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...